Thursday, November 10, 2016

சிறுதுளியில் சிகரம் - மன்னை பாசந்திசிறுதுளி எழுத்துக்களில் எதை சாதித்து விடமுடியும்  என்பவர்களுக்கு பல சிகரங்களையும் தொடமுடியும் என்று ஹைக்கூ கவிதைகளின் தத்துவத்தை தெளிவாக தெரிவிக்கிறார் துளிப்பா கவிஞர்.
இக்காலத்தில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது சாதாரணமான சூழ்நிலை ஆகிவிட்டதை
'குஞ்சுகளின் கெஞ்சல்
பூனையின் வாயில்
தாய் எலி '
என்று சுயநலம் கருதாது பெற்றோர்மீது இக்காலத்தவர்கள் இன்முகம்மலர எலிகள் வழி வழிகள் காட்டுகின்றார்.

அன்றாட உணவுக்கு அல்லல்படும் உயிரனங்களையும் விஞ்ஞானியாக்கி  உலகில் நமக்குதேவையான நல்ல கருத்துகளை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ளும் பண்பை
'குப்பைகூளம்
தீவிர ஆராய்ச்சி
கோழிகுஞ்சுகள்'  என பறைசாற்றுகிறார்.

பூமியில் பொருள்தேடுவதோடு, நோயையும் தேடிக்கொள்கிறோம்.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வமென்னும் உண்மையை
வாழ்ந்தான் ஏழை
கோடீஸ்வரனாக
நோயே இல்லை! என்று நேரடியாக உறைக்கிறார்.

நம் வருங்கால சந்ததியனருக்கு நாம் கொடுக்கும் உயர்வான
சொத்து ஆரோக்யமான சூழலும்,வளமான வாழ்க்கை முறையும் என்பதை தித்திப்பாக தேன் கலந்து
கேட்காமலே வந்தது
பூர்வீக சொத்து
சர்க்கரை வியாதி என்றுரைக்கிறார்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு என்று திருவள்ளுவர் கூறிய உயரிய உண்மையை இக்காலத்தோடு இணைத்து
மனிதர்களின் உணர்ச்சிகள் மலிவடைந்ததை உணரச்செய்து இன்றியமையாத இயற்கை விற்கப்படுவதைச் சாதாரணமான சாமானியனின் பார்வையில்
கண்ணீரைவிட
அதிகவிலை
தண்ணீர்  என்று சாடியுள்ளார்.

தனிமையின்  துயரங்களை துடைத்து, நல்ல நண்பனைப் போல் நூல்களும் பலவிதமான பாடங்களையும்,உணர்வுகளையும் கற்றுத்தந்து நல்வழி காட்டுவதை
தனிமையில் இனிமை
தந்தது குளுமை
நன்னூல் என்று கூறி புத்தகங்களின் பெருமையை புகழ்பாடுகின்றார்.

இயற்கையின் படைப்பில் அனைவரும் அன்பாய் ஒன்றுபட்டு இருக்க மனிதன் மட்டும் சாதி,சமயம்,மத,இன,மொழியென வேற்றுமையை வெளிப்படுத்தவது ஏன் என்னும் கேள்வியையே
பெருமழை
ஒதுங்கும் மரவட்டை
அரவணைக்கும் நாய்குடை என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

மனித உடல்
நொடியில் சாம்பல்
மின்சார தகனம்
காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்ற உயர்ந்த உண்மைக்கருத்தை தற்காலத்திற்கு தகுந்தார்போல் உடல் எந்நேரமும் அழியக்கூடியது,நிலையான தன்மையற்றது என்பதை தெளிவுரச்செய்கிறார்.

உயரத்தில் இருந்து உதைத்து எறிந்தாலும் வாலை ஆட்டிக்கொண்டு நாயோ நன்றியை வெளிப்படுத்த,மனிதனோ பச்சோந்தியாய் நிமிடத்துக்கு நிமிடம் மாறுவதேனோ எனும் கேள்வியையே
‘நாயென்று திட்டாதீர்
நன்றியுணர்வு உள்ளது
நாய்!’
என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

காதலின் சக்தி மின்சாரத்தைப் போன்று உற்சாகம், வலிமை,
ஆற்றலையும் தரவல்லமை பெற்றதென்று அனைவரும் அறிந்த உண்மையையே
சார்ஜர் இல்லாமலே
ரீசார்ஜ் ஆனான்
காதலி வருகை! என்று காதல்ததும்ப விவரிக்கிறார்.

'இனிமையான தூக்கம்
இரவு முழுவதும்
கனவில் காதலி!'

‘இரவிலும்
தூக்கம் வரவில்லை
கனவிலும் மனைவி!’
காதலியாக கனவில் வந்தபொழுது தூக்கலாக வந்த தூக்கம், மனைவியாக மாறிய பின் தூக்கமும் துக்கமாய் மாறிய இரகசியத்தை கவிஞரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஏட்டுக்கல்வியை படிக்கும் பொழுது மட்டுமல்ல, நடைமுறைக் கல்வியையும் பயிற்சி செய்யும் பொழுது மட்டுமே ஒருவன் கற்றறிந்த திறமைசாலியாகவும் புத்திமானாகவும் மதிக்கப்படுகிறான் என்பதையே
‘அறிவாளியைக்கூட
ஆச்சரியப்படுத்திவிடும்
அனுபவ அறிவு’ 
 
'படிப்பாளியையும்
பிரமிக்கவைக்கும்
பட்டறிவு - பகுத்தறிவு!' என்கிறார்.
முறையாக ஏட்டுக்கல்விகற்காத பலரும் பயிற்சியை கொண்டு வாழ்வில் முன்னேறியது உலகம் உணர்ந்தஒன்று!

பத்துமாதங்கள் பாசமாய் சுமந்தாலும் பாரமாய் தோன்றாத அம்மாவிற்கு,பண்புமிக்க பிள்ளையாய் வளர்ப்பதில் தான் எத்தனை பிரச்சனைகள் என்பதயே
‘பாரம் குறைந்தது
பொறுப்பு கூடியது
பிரசவம்’
என்று தாயின் தவிப்பை தெளிவுபெறச் செய்கிறார்.

‘கடுகளவு
சுடுசொல்
வெடித்தது இதயம்’
உணர்ச்சி வசப்பட்டு உதிர்க்கப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அள்ளமுடியாதவை.கடுகளவு சொல்லேயாயினும்,ஏற்படுத்தும் காயங்களோ மறையாத வடுவாகும் என்று திருவள்ளுவரின் கருத்தை தெளிவுப்படுத்துகிறார்.தேனீக்கள் தேனைப் பலவகைப்பூக்களிலில் இருந்து  தேனடையாய் சேர்த்து தருவது போல் பலவகையான நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை,உருத்தும் உண்மைகளை சேர்த்து தித்திக்கும் பாசந்தியாய் பரிமாறுகிறார்.

பலவகையான பூக்களை பறித்து, அதை அழகாக அடுக்கி, தன் தனித்திறமைகளால் நெருக்கமாக தொடுத்து, மனதை பறிக்கும் மாலையாய்ச் செய்வது போன்று, மனம் கவர்ந்த துளிப்பாக்களை பறித்து ,அதை வகைகளாக பிரித்து, அகம்மகிழ்ந்த கருத்துக்களால் அதைத் தொடுத்து,மனம் மகிழ்விக்கும் மாலையாக்கி கவிஞர் மன்னை பாசந்திக்குச் மனதாரச்சூடியுள்ளார் திரு.கோ.நடராசன் அவர்கள்!

மலர்தோட்டம் அமைத்து துளிப்பா(பூ)க்களை விதைத்து,வளர்த்து வளமான,வண்ணமயமான பூந்தோட்டமாக மாற்றி, மின்மனிப்பூச்சியாய் வெளிச்சம் பரவச்செய்த மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவுக்கு மன(ண)ம் நிறைந்த பூங்கொத்துக்கள்!

3 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான விமர்சனம். வாழ்த்துகிறேன் தோழி

    ReplyDelete