Sunday, September 9, 2018

காடோடி - நக்கீரன்

சரவணன் சந்திரன் அவர்களின் 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கும் இந்த நாவலுக்கும் பெரிய இடைவேளை இல்லை என்றே தேன்றியது. அங்கு வந்த மல்பரோ சிகரெட் , ஆண்மையை அதிகரிக்கும் பறவைக்கூடு சூப் இங்கேயும் இடம்பெற்றிருக்கின்றது. அந்த தைமூர் நாட்டின் நிலப்பரப்பை , இந்தோனேசிய எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த போர்னியோ காடுகளின் கதைகளம் வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. அந்த நாவலைப் படித்தவர்களுக்கு இதில் வரும் பறவைக்கூடு சூப்பின் பின்புலக்கதை ஒரு சுவராசியமான நீட்சியாகவே தெரியும்.அங்கு அந்த நாட்டின்  செல்வங்களான கடல் அட்டை , இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டது .இங்கு வீரத்தை நிரூபிப்பதற்காக, வன அழிப்பின் எதிர்வினையாக  என்று அரிய பிரைமேட் மூதாதை விலங்குகளுடன், பல வகையான மீன்கள், மான்கள், காட்டுமாடு, பாம்புகள் வேட்டையாடப் படுகின்றன. வெட்டாதீர்கள் என்று  கேட்டுக்கொண்ட மூதாய் மரத்துடன் , காட்டுக்கொடி சுற்றிய உயரமான மரங்களும் இரக்கமில்லாமல் வெட்டி வீழத்தப்பட்டு அலங்காரப் பொருட்கள் செய்வதற்காக  கொண்டு செல்லப் படுகின்றன. ஒரு மரத்தை வெட்டி அதனை எடுத்துச் செல்வதற்கான ஆபத்து நிரம்பிய கடுமையான செயல்முறைகள், வரமாட்டேன் என்று கதறும் குழந்தைகளை கதற கதற இழுத்துச் செல்வதையே ஞாபகப்படுத்துகின்றன.
அந்த நாவலின் கதைசொல்லி வெற்றிபெற்ற வணிகனாய் திரும்பாவிட்டாலும் கூட்டு வணிகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்து வருவான். இதில் நிர்வாகத்தினால் ஏமாற்றப்பட்ட கதைசொல்லி இயற்கை மொழியான அன்பையும் அதன் கருணையையும் பிலியவ் வழி தெரிந்து வருகின்றான். 





கதை சொல்லிக்கும் மேலாளர் ஓமர் மற்றும் வண்டி ஓட்டுநர்  ஜோஸ் உடனான நட்பு, மலைப்பெண் ரலாவுடனான காதல், சமையல் வேலை செய்யும் அன்னாவுடனான நட்பு நெகிழ வைத்தாலும் , குவான், பார்க் போன்றவர்களின் மரத்தை டாலர்களாக பார்க்கும் விதம் நமக்கு நல்ல பாடத்தைக் கற்பிக்கத் தவறவில்லை. மனிதர்கள் இறந்தபின்
மம்மிகளாக மாற்றப்படுவது , எதிரியின் தலையை வெட்டி வீரத்தை நிலைநாட்டுவது , திருமணத்திற்காக கொடுக்கப்படும் சீர்வகைகள் , போர் நடனம் போன்ற பல விநோத சடங்குகளுடன் , நிலவை விழுங்கிய ராஜகுமாரன், முதலை செய்த சத்தியம் , தேனியாய் மாறிய பெண், மூக்கினால் ஊதப்படும் புல்லாங்குழல் என்று பல நாட்டுப்புற கதைகள் சுவாரசியத்தைக் கூட்டுகின்றது. ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் கூறப்படும் அரிய பறவை மற்றும் விலங்குகள் பற்றிய வர்ணனை, மரங்கள் பற்றிய குறிப்புகள், கதைகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் காட்டிற்குள் தொலைந்துவிடாமல் கைபிடித்து இழுத்துச் செல்கின்றன.

கோடானகோடி வண்ணப் பூக்களை ஒரே பள்ளத்தாக்கில் பார்த்த கதை சொல்லியின் பிரமிப்பு வாசிப்பவற்கும் கடத்தப்படுகிறது. மிதமான சூட்டில் காய்ச்சினால் நஞ்சாகும் மரப்பால் சுண்ட காய்ச்ச இனிப்பாய் மாறுவது, மரப்பிசினில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது போன்றவை இயற்கையின் படைப்புகளை வியக்க வைக்கிறது. பாம்பு சூப், ஆண்மை அதிகரிக்கும் ரசோங் குரங்கின் இறைச்சி , உயிருடன் உள்ள குரங்கின்  மூளையைச் சமைக்கும் முறை அறுவறுப்பை ஏற்படுத்தினாலும் பல மக்களின் விருப்ப உணவாக இருப்பதுடன் அதிகவிலை உடையது என்ற தகவல்  ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.



காட்டுக்கொடியில் இருந்து கிடைக்கும் தண்ணீர், பாறையில் இருந்து கிடைக்கும் சுவையான நீரூற்று, நன்னீர் கிளிஞ்சல் கறி, கவாங் வெண்ணெய் கலந்து சமைத்த சோறு, மாட்டிறைச்சி ரெண்டாங், அரிசித் தேறல் மது என்று எச்சிலை ஊற வைக்கும் உணவுகளைச் சாப்பிட ஆசைவருகிறது. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது நாவலின் கதைசொல்லி சுற்றுலா செல்வதுபோலவே காட்டிற்குள் செல்வோம். வாசித்து முடிக்கும்  தருணத்தில் காடோடி பிலியவ்  போலவே ஒரு தொல்குடியாய் கேவலுடன்  திரும்புவோம்.

அடையாளம் பதிப்பகம் - பக்கங்கள் 340 - விலை 270