Tuesday, January 23, 2018

மனசெல்லாம் - ஹைக்கூ கவிதைகள் - கா. ந. கல்யாணசுந்தரம்

ஹைக்கூக்கள் ஜப்பானிய மொழியில் இருந்து வந்தவைதான். ஆனால் அந்த வகையில் எழுதப்பட்ட தமிழ் கவிதைகள் ஜப்பானிய மொழியிலேயே மொழி பெயர்க்கப்படுவது பெருமைக்குரியது. சிறந்த படைப்புகள் திசையெங்கும் பரவும் என்பதற்கு சான்று கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் ஹைக்கூக்கள்.அவரின் மிகச் சிறந்த கவிதைகள்ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஹைக்கூ உலகில் மிக முக்கிய கவிஞர்களான மு.முருகேஷ், முதுமுனைவர் மித்ராஅணிந்துரையில் ஹைக்கூவைப் பற்றி குறிப்பிட்டிருப்பவை அனைவரையும் ஒரு ஹைக்கூவாவது எழுதத் தூண்டும்.மனம் தளர்ந்து சோர்ந்திருக்கும் பொழுது ஒரு சிறிய ஹைக்கூ நம்முள் பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணம்.
 ' மூழ்கியும் மலர்ந்தன 
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்'.
சுற்றியுள்ளவர்கள் நம்மைப் பழித்து மூழ்கடித்தாலும் அழகான நீர்வட்டங்களாய் நம்மை நிரூபக்கத்தூண்டுகின்றது இந்த ஹைக்கூ.
'உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்'.பக்கத்தில் இருக்கும்பொழுது மனிதர்களின் அருமை நமக்குப் புரிவதில்லை.ஆனால் அவர்கள் நம்மை விட்டுப்போகும் பொழுதுதான் அவர்களை நாம் தேடுவோம்.சுடும் உண்மையையும் சுவையாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

'அக்கினித் துளைகளை
அரவணைத்தன மூங்கில்கள்
புல்லாங்குழல் பிரசவமானது.'
வலியில்லாமல் வெற்றிக்கிடைக்காது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்களையும் இன்முகத்தோடு சந்திக்கும் வலிமையைத் தருகிறது இந்த ஹைக்கூ.
'கர்நாடகத்துக்குச் செல்லும்
மணல்வழிப்பாதை
காவிரி'.படித்த நொடியில் இதயத்தைக் கனமாக்கும் சக்தி ஹைக்கூவிற்கு உண்டு என்பதை நிரூபிக்கிறது.
'குடமுழுக்கு நடக்கின்ற
கோயிலுக்கு அருகில்
கூரையில்லா பள்ளிக்கூடம்.' என்கின்ற ஹைக்கூவைப் படித்தவுடன் கல்விக்காக நம்மால் முடிந்த ஏதாவது ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் அனைவருக்கும் ஏற்படும்.

நகைச்சுவையுடன், நல்ல கருத்துக்களையும் தருவதுதான் ஹைக்கூ.
'வல்லாரைக் கீரை விற்றவன்
மறந்தே போனான்
காசுவாங்க'. சிரிப்புடன் வல்லாரைக்கீரையைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் விதைக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கும் இன்றியமையாத அழகான இயற்கையை இரசிக்க வைக்கவும் ஹைக்கூவால் முடியும்.
 'தேசத்தின் முதல்
கைவினைப் பொருள்
தூக்கணாங் குருவிக்கூடுகள்.' இத்தனை அழகாய் நுட்பமாய் ஒரு கூட்டினைக்கட்டியது ஒரு குருவி என்று உணரும் பொழுது நம்மால் ஆச்சர்யத்தை அடக்க முடியாது.

'ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள்
முடங்கும் சூரியக்கதிர்கள்.' 
'அலைகளின் மோதல்களில்
பால்குட முழுக்கு
கடலோரப் பாறைகள்'.
உவமை, உருவகங்களுடன் சொல்லப்படும்பொழுது இயற்கையை இரசிக்கும் ஆர்வம் நமக்கும் வந்துவிடுகிறது.

'கொக்கும் தூண்டிலும்
அருகருகே
தடுமாறும் மீன்கள்'.இக்கட்டான சூழ்நிலையில் தடுமாறும் மக்களையே இந்த மீன்கள் நம் கண்முன்னே நிறுத்துகிறது.
'சுடுமணல் காலணிகளுடன்
கடலோரக்கவிதைகள்
சுண்டல் விற்கும் சிறார்கள்'.
'விறகுச் சுள்ளிகள் தேடுதலே
வீட்டுப் பாடங்கள்
ஏழைச் சிறுமி'. வறுமையையும் , சிறார்களின் வலியையும் கடத்துவதற்கு இந்த இரு ஹைக்கூக்களே சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகின்றது.

'கிறிஸ்துமஸ் விடுமுறையில்
இக்பாலுடன் இனிய பயணம்
காசிக்கு'
'பஷீர் வீட்டு
முருங்கைக்கீரை
மாரியாத்தா கூழுக்கு'. மதவேறுபாடு இல்லாமல் மனதால் இணைந்திருக்கும் மக்களின் மனம் நமக்குள்ளும்  மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றது.கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூக்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்குன்றன.இயற்கை, சமூகப்பார்வை, மதநல்லிணக்கம் என்று பரந்து விரிந்த பல தலைப்புகளில் நிறைந்திருக்கும் ஹைக்கூக்கள் நம் மனதை நிறப்பும் ஆற்றல் பெற்றவை.

மனசெல்லாம் பரவும் ஆற்றல் பெற்ற ஹைக்கூக்கள்.
வாசகன் பதிப்பகம் - பக்கங்கள் - 96 - விலை 80 ரூபாய். 


Sunday, January 21, 2018

பெர்ஃப்யூம் - ரமேஷ் ரக்சன்

பெண்களின் உளவியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்து கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.கணவனிடம் தன் அப்பாவின் ஸ்பரிசத்தை ஒவ்வொரு பெண்ணும் தேடுவாள். ஒரு அப்பாவின் அக்கறை, அன்பு, பாசம் என அனைத்தையும் தன் கணவன் வழி பெறுபவள் தன் வாழ்க்கையின் இலக்கை நோக்கி சற்று சுகமாய் பயணிக்கிறாள். சந்தேகம், அடக்குமுறையைக் கூடுதலாகப் பெறுபவள் சிரமத்துடனேயே வாழ்க்கையைக் கொண்டு செல்லுகின்றாள். 

திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு பெண்ணும் அன்றாட வீட்டு வேலைகள், அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என்று இயந்திரத்தனமான வாழ்க்கையை மேற்கொள்ளும் பொழுது ஒரு வெறுமையை உணர்வாள். பிரசவக் கோடுகளும், கீழிறங்கிய வயிறும், தொங்கிப் போன மார்புகளும் கணவன் அருகில் வராமல் போவதற்குக் காரணமாய் அமையும்.பருத்த உடல் , தாய்பால் வாசம், உடலுறவுக்கான ஒத்துழையாமை என்று கணவர் கண்டுக்காமல் இருப்பதற்கு காரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். கணவரிடம் இருந்து காதல் வடிந்து போய் கடனே என்று கலவி நடந்து கொண்டு இருக்கும்.இந்த சூழலின் மனஅழுத்தத்தை கையாள்வது சற்று சிரமும் கூட. இரண்டாம் தேன்நிலவு கொஞ்சம் பயனளிக்கலாம். 

குளிர்பான குடுவைகளின் அமைப்புகூட பெண்ணின் உடலமைப்பை ஒத்து உருவாக்கப் பட்டுருக்கும் சமூகத்தில் தான் ஒரு பெண் வாழ வேண்டியுள்ளது. ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் மீது ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அது நட்பாகவும் காதலாகவும் மாறுகிறது.  ஒரே பாலினத்திற்குள் ஈர்ப்பு ஏற்படும் பொழுது நட்பு என்றும், எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும் பொழுது காதல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஓரினச்சேர்க்கைக்கு அதிகமான ஈர்ப்பே காரணம் ஆகிறது. தேவை ஒரு பெண்ணின் செயல்பாட்டை தீர்மானிக்கின்றது.ஒரு பெண் தன் உடல்தேவைகளைப் பகிர்ந்தால் அவளுக்கு உரியவன் அவளைப் பார்க்கும் பார்வை கூட வேறுபட்டுவிடுகின்றது. 

அடுத்தவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதற்கு குறுகுறுப்பாய் தான் இருக்கும். ஆனால்  அதைவிட சுவாரசியமானது நமது அந்தரங்கம் என்பதை ' திருடப்பட்ட கதை' யில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவாகவே உடல் தேவை, காதல் கலந்த காம உணர்வுகளை எழுதுவதற்கு ஒரு தெளிவும் புரிதலும் தேவைப்படுகிறது. அதைப் படிப்பதற்கும் மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மேலோட்டமாக இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் இதையெல்லாம் எழுதலாமா? இவை தேவையா என்று கேட்கலாம். உளவியல் ரீதியான இந்தக் கதைகள் பெண்களைப் பற்றிய புரிதலை ஆண்களுக்கு மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்திற்கும் ஏற்படுத்தும். 


ஒரு மனிதனின் சிக்கல் பகிரப்படும் பொழுது அதை ஒரு தாய், தந்தை, உறவு என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தனி ஒரு ஆணாகவோ,  பெண்ணாகவோ நின்று பார்க்கும் பொழுதே அவர்களின் சிக்கல்கள் புரியும். அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். பெண்ணின் உளவியல் ரீதியான உணர்ச்சிகளைக் கதைகளாகக் கையாள முயற்சித்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. ரமேஷ் ரக்சன் அவர்களின் முயற்சியும், எழுத்துக்களும் பலருக்கும் மாற்றம் கொடுக்கும் என்று மனதார நம்பலாம்.பெண்கள் எழுதத்தயங்கும் அழுத்தங்களைப் பதிவு செய்ததற்காக நன்றிகள்.சந்தோஷ் நாராயணன் அவர்களின் அட்டைப்படம் புத்தகத்தை வாங்கத் தூண்டியது. பெண்களுக்குப் பிடித்த இளஞ்சிவப்பு பிங்க் நிறம் கூடதல் ஈர்ப்பு. 

பெர்ஃப்யூமின் வாசம் முகம்சுளிக்க வைக்கவில்லை...முகர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. 
யாவரும் பதிப்பகம் 128 பக்கங்கள் விலை 120.

Saturday, January 20, 2018

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் - பா. ஜெய்கணேஷ்

இயற்கையோடு இயைந்து இதயத்தை இறுக்கும் கவிதைகள் பெரும்பாலும் விவசாயம், பழமையை மறந்த பாதை, வெயில், வனம், விலங்குகள் போன்றவற்றையேச் சுற்றி வருகின்றன. பசுமை தொலைத்த வயல்வெளியில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வயிற்றுக்குள் ஏப்பமிடும் பருந்துகளுக்கு மத்தியில் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க  தாழ்வார மொன்றிலிருந்து சிதறிய நெல்மணி எடுத்து சிறகு விரித்து கருமேகத்தின் கூடுதலுக்காக காத்துக் கிடக்கும் ஊர்க்குருவிகள் 'சிட்டுக்குருவியின் செஞ்சோற்றுக்கடன்' கவிதையில் நமக்குள் ஏதோ ஒரு வேதனையை விதைத்துச் செல்லுகிறது 



கூடொன்றில் உடைந்த முட்டையில் இருந்து வழிகின்ற ஆன்மாக்களை ருசிக்க வாய்பிளந்து காத்துக்கிடக்கிறது நரி.மிஞ்சிய ஓட்டுத் துகள்களை ருசிக்கின்றது பாம்பு . ஓரிரு நாட்களில் வேரோடு அறுக்கப்பட காத்திருக்கும் ' மரத்தின் இயலாமை' பல நேரங்களில் அநீதிகளைச் சுலபமாய் கடந்துவிடும் நம் கையாலாகதத்தனத்தையே குத்திக்காட்டுகிறது.

சிறுகாற்றுச் சுழற்சியில் ஒற்றை முறுக்கு முருங்கைமரம் முறிந்து கிடக்கிறது.சாலை அகலப்படுத்துதலில் மனிதச் சங்கிலியாய் முட்டிக்கொண்டிருந்த புளியமரங்கள் தொலைந்து போயிருக்கிறது.இலைகளால் பெரும் சப்தம் போட்ட அரசமரம் கோயில் கட்டுவதற்கு இடைஞ்சல் என்று வேரறுக்கப்பட்டிருக்கிறது.தன்வாசம் சுமந்து அகண்டு விரிந்த இலுப்பை மரம் கல்யாண மண்டபத்தின் மதிற்சுவற்றால் இடம்பெயர்ந்து ஒடிந்திருக்கிறது. அதிர்ந்து பேசினால் அசையாமல் நிற்கும் தூங்குமூஞ்சி மரம் சொத்துத் தகராறில் வெட்டுப்பட்டிருக்கிறது.முறிதலும், தொலைதலும், வேரறுக்கப்படுதலும், இடம்பெயர்தலும் மனிதர்களுக்கு மட்டுமே இருந்திருக்கலாமே என்று ஏக்கத்தை எழுப்புகின்றன இந்த  'தொலைந்த மரங்கள்'.

பலிபீடத்தின் தீட்டப்பட்ட கத்திகளில் இருந்து தலை அசைக்காமல் தப்பித்து வந்து லாரிக்குள் சிக்கும் 'பலி ஆடு',  ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி அதைவிட பெரிய பிரச்சனைக்குள் சிக்கும் சாமான்ய மனிதனையே கண்முன் நிறுத்துகிறது.
மூச்சுவிட மூடியாமல் இருமி உடல் நடுங்கி தெருவோரத்தில் கிடக்கும் கிழவனைக் காணவும் கேட்கவும் பிடிக்காமல் திறந்திருக்கும் சன்னல்களை மனமற்ற கைகளால் இறுக மூடி, நாயொன்றின் அழு ஊளைதான் கிழவனின் இறப்புக்குக் காரணம் என்று சொல்லும்
 'கிழவனும் நாயும்' , நம் சமூகத்தின் அவலப் போக்கைக்குறிப்பிட்டு  அவமானத்தை அதிகப்படுத்துகிறது.
கானகம் தேடியக்காட்டுப் பறவையின் குரலைத் திருடி, வேட்டையாட விழையும் சிறுத்தையின் காலடியைக் களவாடி, மீன் பிடிக்கும் நீலப் பறவையின் அலகினை வெட்டி, குட்டி சுமந்து மரம் தாவும் குரங்கின் தாவலை அறுத்து, பிரபஞ்சம் அழித்து நாம் மட்டும் வாழவா ? என்ற கேள்வி 'சிதைவுகளின வன்மத்தை '  கொடூரமாய் வெளிப்படுத்துகிறது.சாந்தி சித்ரா அவர்களின் நவீன ஓவியங்கள் கவிதைகள் வழி சொல்லப்படாதப்பல கதைகளை நமக்குள் கொண்டுச் சேர்க்கின்றது.மஞ்சள் வெயிலும் மாயச்சிறுமியும் அகத்திற்குத் தேவையான ஒளிபரப்புவதுடன், மாய உலகில் பயணம் செய்ய வைத்து மாற்றத்தைத் தருகிறார்கள்.

பரிசல் வெளியீடு பக்கங்கள் 96 விலை 90ரூபாய்

Thursday, January 18, 2018

மானுடப் பண்ணை - தமிழ் மகன்

ஒரு எழுத்தாளருக்குத் தொலைநோக்கப் பார்வை இருத்தல் மிகச்சிறப்பு.80 களில் பல தொழில் நுணுக்கங்களைக் கற்பிக்கும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் அதிகரித்திருந்தது. தற்பொழுது  பொறியியல் கல்லூரிகள் அதிகரித்து, அதில் பயின்று வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையே அந்தச் சூழ்நிலையுடன் நம்மால் ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது. 'பொறியியல் படித்துவிட்டு ஏன்  சம்பந்தில்லாமல் இந்த வேலை செய்கிறாய் ' என்ற கேள்வியை தற்பொழுது பல பொறியியல் பட்டதாரிகள் எதிர்கொண்டிருப்பார்கள். அதையே தான் கதாநாயகனும் எதிர்கொள்கிறான்.

அந்த மனநிலையை நடராஜின் வழியாக பல ஆண்டுகளுக்கு முன்னே  வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர் தமிழ்மகன் அவர்கள் ஒரு தீர்கதரிசி தான்.கிடைத்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான் கதாநாயகன். உணவு உண்பதைவிட தேநீர் குடித்தும், புகைபிடித்தும் பசியைத்தாங்கிக் கொள்ளும் நட்ராஜின் வாழ்வியல் நமக்கு அதிர்ச்சி தருகிறது. பல இளைஞர்களின் சூன்யமான வாழ்க்கையையே நம் கண்முன்னே நிறுத்துகிறது.

கல்லூரி நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பின்மையால் தனது பட்டச் சான்றிதழைப் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படும் கதாநாயகன் நடராஜ். ஆசைகளையும் ஏக்கங்களையும் மனதில் பூட்டி வைத்திருக்கும் சராசரிப் பெண் நீலா.தபால் முறையிலாவது பி.ஏ. படித்துவிட வேண்டும். டி.வி. பார்க்க வேண்டும். ரேடியோ கேட்க வேண்டும். மனதற்கு விருப்பமானவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சாதாரண ஆசையைக் கொண்டிருப்பவள். அப்பாவை எதிர்த்து பேச துணிவில்லாததால் இரண்டாம் தாரமாய் கண்கலங்கி வாய்பொத்தி வாக்கப்படுகிறாள்.அதுவே துணிந்து முடிவெடுக்கும் அவள் தங்கை சுமதி மனதிற்குப் பிடித்தவனுடன் மங்களமாகவே வாழுகின்றாள்.

தந்திரமாய் கசியவிடப்பட்ட போபால் யூனியன் கார்பைடு விஷவாயு , பரிசோதனை எலியாய் உபயோகப்படுத்தப்படும் மக்கள், உடல் உறுப்பு திருட்டு, சூழ்நிலைக்கேற்ப பகிரப்பட்ட பெரியார்,விவேகானந்தர் கருத்துக்கள், கம்யூனிசம் என்று அன்றைய கால சூழ்நிலைக்கேற்ப விவரித்து விவாதிக்கப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களும் இப்பொழுது உள்ள வாழ்வியல் முறைகளுக்கும் பொருந்திப்போவது  ஒரு விதமான அச்சத்தையும் பயத்தையும் மனதிலே ஏற்படுத்துவிடுகிறது.நாம் இன்னும்
முன்னேறவே இல்லை...பின்தங்கிதான் இருக்கிறோம் என்ற உண்மையே ஊசியாய் குத்துகிறது.நாவலின் கடைசி அத்யாயம் நமக்குள் புது அத்யாயம் தொடங்க காரணமாகிறது.

இந்த நாவல் 1985 களில் எழுதப்பட்டு 1989 களில் வெளியிடப்பட்டது. 1996ல் தமிழக அரசின் விருது பெற்றது. தற்பொழுதுள்ள அரசியல் சூழல் , சமூக வலைதளங்களில் ஜாதி,மதத்தை மையமாக வைத்து  நடக்கும் சண்டைகள்,  பெண்களின் மீது திணிக்கப்படும் முடிவுகள் எல்லாவற்றையும் அன்றைய காலக்கட்டத்திலேயே பாலக்கிருஷ்ணன் , கட்டிட மேலாளராக வரும் ஐயர்,  நீலாவின் தந்தையாய் வரும் பரமசிவம் ,நடராஜின் அம்மா கதாப்பாத்திரங்களில் வழி சொல்லியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

'அகலிகை மாதிரி கல்லாய் மாறியிருந்த கைக்கடிகாரம் ராமர் போல ஒரு தட்டுத்தட்டினால் மறுபடி உயிர் வரும்.'கதாநாயகன் நட்ராஜின் ஏழ்மை இப்படியாக விவரிக்கப்படுகிறது. உடைந்த குழாயின் இந்தியன் ஆயிலை சேகரித்து வைக்கச் சொன்னவர், சட்டத்திற்குப் பணம் கொடுத்தவுடன் நல்லவர் ஆகிறார். அதனை வேத வாக்கியமாய் எடுத்து நிறைவேற்றிய தொழிலாளி பழனி திருடனாய் நீதிமன்றம் முன்பு நிற்கிறான்.காலகாலமாய் முதலாளி தொழிலாளியின் நிலைப்பாடு முகத்தில் அறையும் படி சொல்லப்பட்டிருக்கிறது.

உயிர்மை பதிப்பகம் விலை 130, பக்கங்கள் 152

Tuesday, January 16, 2018

செம்மாரி - சமுர

ஆடு புலி ஆட்டம்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.இப்பொழுது chinese checkers (சைனீஸ் செக்கர்ஸ்) என்ற பெயரில் விளையாடிக்  கொண்டிருக்கிறோம்.அந்த சிறப்பான தமிழ் விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை. முதலில் கதை சற்று தொய்வாய் போவதாய் உணரலாம்.எதற்காக இத்தனை விவரங்கள் என்று கூட சலித்துக் கொள்ளலாம். கதை வேகமெடுத்து செல்லச் செல்ல எதற்காக அந்த விவரங்கள் கூறப்பட்டது என்பதை சுலபமாய் புரிந்து கொள்ள முடியும்.

ஆடு மேய்க்கும் சிறுவன் செம்மாரிக்கு ஆடு புலி ஆட்டத்தால் வாழ்க்கையே புரண்டு விடுகிறது.ஆடு புலி ஆட்டத்தில் இருக்கும் மூன்று புலிகள், பதினைந்து ஆடுகளை மையமாய் வைத்தே கதை நகருகிறது.சிறந்தத் திரைப்படமாய் உருவாக்குவதற்கான கதைக்களம், கதாப்பாத்திரங்கள் என்று நாவலின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.கதாப்பாத்திரங்களின் பெயர், எதிரிகளை வீழ்த்துவதற்காக போடப்படும் சதித்திட்டத்தின் பெயர், பாதிக்கப்பட்டவர்களை வைத்தே பகைவர்களை அழிக்கும் யுத்தி, நிராயுதபாணியாய் நிற்கும் ஒருவன் பஞ்ச பூதங்களைத் துணைகொண்டு எதிரிகளை வெல்வது என்று கதை முழுவதும் ஆசிரியர் சமுரவின் மதிநுட்ப முயற்சி விளங்குகிறது.

கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கருங்கற்களை எளிதாய் உடைப்பதற்கான அறிவியல் ஏற்பாடு எப்படி செய்யப்பட்டது? சிற்பிகளுக்கு உயர்ந்த கோபுரத்தின் உயரத்தையும், பாறைகளின் உயரத்தையும் அளவுக்கல் வழி மூலமாக அளக்காமல் , நிழலை வைத்து அளக்கும் அறிவியல் என்று தமிழரின் அறிவாற்றல் விவரிக்கப்படுகிறது.நேரத்தைச் சரியாக கணக்கிட மணல் கடிகாரம் உருவாக்கப்பட்ட விதம் என்று பெருமைப்பட வைக்கின்றன சில கண்டுபிடிப்புகள்.


ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னுரையாக அந்த கதையைச் சுருக்கமாக கவிதைவடிவில் அதற்கு உரிய அணிகலன்களான எதுகை, மோனையுடன் குறிப்பிட்டிருப்பது அழகு. எந்த ஒரு சூழ்நிலையிலும் தளராமல் நம்பிக்கையுடன் நம் கடமைகளையும் பொறுப்புகளையும் செய்வதற்கான எண்ணங்கள் துளிர்க்கக் காரணமாக இருக்கின்றன கதையும் கதாப்பாத்திரங்களும் . கதாப்பாத்திரங்களின் வடிவமைப்புகள், செம்மாரி குடும்பத்திற்குள் இருக்கும் பாசம் , செம்மாரிக்கும் நதியாழுக்கும் இருக்கும் காதல், சடாயுதருக்கும் நகலனுக்கு நடுவே இருக்கும் குரு சிஷ்யன் உறவு, நண்பனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் புகழேந்தி , அண்டை நாட்டுக் கலையின் மீது பொறாமை கொள்ளும் போக்கு, தன் உழைப்பாளி தன்னை விட்டு வெளியை சென்று விடக்கூடாது என்ற அதிகாரவர்கத்தின் ஆதிக்கம் என்று அனைத்துவிதமான உணர்ச்சிகளும் இந்த நாவலில் நிரம்பியே இருக்கிறது.

ஆடுகளுக்குள் நடத்தப்பட்ட அதிவேககடா போட்டி போன்றவை ஒரு காரணத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வரும் பொழுது நமது பாரம்பர்ய விளையாட்டுக்களின் முக்கியத்துவமும் தேவையும் புலப்படுகிறது.இந்த நாவலைப் படித்து முடித்து ஆடு புலி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை உணர்ந்திருக்கும் வேளையில் தரையில் கோடுகள் வரையப்பட்டு ஆடு, புலி காய்கள் நம்மாளேயே உருவாக்கப்பட்டிருக்கும்.மின்னனு இயந்திரம் இல்லாமலும் சுறுசுறுப்பாக அறிவுத் திறமைக்கு தீனி போடும் ஆடு புலி ஆட்டத்தை  விளையாடியும் பார்க்கலாம்.வாசித்தும் பார்க்கலாம்.

notionpress.com பக்கங்கள் 284 விலை 280 

Monday, January 15, 2018

ஆடாத நடனம் - ஆத்மார்த்தி


14 ஆத்மார்த்தமான சிறுகதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பு.மதுரை மாவட்டத்தைச் சுற்றி உள்ள இடங்களே பெரும்பாலான கதைக்களங்கள். 'பைத்திய நிசப்தம்', மதுரையின் இருண்ட  பக்கமான போதை, உடல் ஒத்தாசை செய்யும் பெண்களின் வாழ்க்கை போன்ற நிகழ்வுகளைக் கிருட்ணன், வாணி, ஆஷா, ராமநாதன் போன்றவர்களின் பார்வையில் விவரிக்கிறது. 'கூரை' - உடலை விற்கும் பெண்தானே என்று ஏளனமாய் நினைப்பவர்கள் கூட அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்னே அவள்  நிறுத்தி வைத்திருக்கும் தட்டியின் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது மனம் கனத்துவிடுவார்கள்.ஒரு நண்பனிடம் கதை சொல்லுவது போன்று, நகைச்சுவை கலந்து சொல்லும் யுத்தியை ஆத்மார்த்தி அவர்களின் சிறுகதைகளில் காண முடிகிறது.

மனதில் வலியை மட்டும் ஏற்படுத்தும் சிறுகதைகள் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கக்கூடிய சிறுகதைகளையும் தந்திருக்கிறார் ஆத்மார்த்தி. நம் அன்றாட வாழ்வில் கடந்து போகும் அல்லது நம் நினைவிலேயே இருக்கும் கதாப்பாத்திரங்களை ஞாபகப்படுத்தும்  மனிதர்களை பிரதிபலிக்கிறார்கள் மாடி வீட்டு சந்தானமும், கவிதாகோபாலும்.தனக்கு நடக்கும் எல்லா சம்பவங்களையும் ஒரு கவிஞனின் மனநிலையில் கவிதையாய் பார்க்கும் கண்ணோட்டத்தை ராஜகோபால் இல்லை இல்லை கவிதகோபால் பல கவிஞர்களின் எண்ணமாய் வெளிப்படுகிறார்.
ஒரு காதல் விவகாரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையை அவர்களின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது 'மழை...மேன்ஷன்...காயத்ரி...' சிறுகதை.எல்லா மனிதனும் தனது செயலைச் சரி என்று வாதிடுவதையே இந்த சிறுகதை 
நமக்குள் ஒரு புன்னகையை வரவழைத்தபடி வாசிக்க வைக்கிறது.
ஆண் நண்பர்களுக்குள் ஏற்படும் அன்பு, பொறாமை, நட்பு போன்ற உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது 'டயமண்ட் ராணி' சிறுகதை. சிறுபிள்ளைத்தனமாய் இருந்தாலும் சில சம்பவங்கள் நமக்குள் வருத்தத்தை ஏற்படுத்தி மனப்புழுக்கம் கொண்டுவரும். முத்தண்ணன், கனகுக்கு நடுவே உள்ள நட்பால் நம் கதையின் நாயகன் கடுகடுத்திருப்பார். நமக்குப் பிடித்தவர் வேறொருவருடன் நட்பாய் இருந்தால் வரும் கடுகடுப்பை கதை சிறப்பாகவே விவரித்திருக்கும்.கதையைப் படித்தவுடன் என் wa
கல்லூரித் தோழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

' இரண்டு செய்திகள்...ஒரு தொடர்புமில்லை ' சிறுகதை தேவையில்லாத சந்தேகம், கோபம்,  வார்த்தைகள் எப்படி நால்வரின் வாழ்க்கையை உருகுலைக்க முடியும் என்பதைச் சொல்லி நம் வாழ்க்கைக்கான பாடமாய் அமைகிறது.நம்மை தேவைக்காக உபயோகித்துக்கொண்டு பிரச்சனைகளை மட்டும் பரிசாய் வழங்கும் நண்பர்களைக் கண்முன்னே நிறுத்துகிறான் 1/2 அறை நண்பன் தேவராஜன்.தலைப்பு சிறப்பாய்ச் சிந்திக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள்.

உறவாய் இல்லாமல் உறவாகிப்போன பல சித்தப்பாக்களை ஞாபகப்படுத்துகிறார் 'ஆடாத நடனம்' சந்துரு சித்தப்பா.'தேவதை மகன் ' கதையில்நாடக நடிகர்களாக இருந்து பின் திரைப்படத்துறை துணை  நடிகர்களான கலைஞர்களின் ஏக்கத்தையும் ஆசையையும் விவரிக்கிறார்கள் அம்மாவும் பிள்ளையுமான பஞ்சவர்ணமும் கோதண்டமும்.'நிழல் பிம்பம்' சிறுகதை பிரபலமான கதாநாயகர்களைப் போல உருவ ஒற்றுமையும், அவர்களைப் பிரிதியாய் பிரதிபலிக்கும் சாதாரண கலைஞர்களின் வாழ்வின் ஏக்கங்களை நமக்குள் கடத்துகிறது.கற்பனா சிறுகதை கற்பனையாய் இல்லாமல் இருந்தால் நன்றாய் இருக்குமே என்ற எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. 

ஆடாத நடனத்தை ஆடிப்பார்க்கலாம்...

பரிதி பதிப்ப கம் - 119 பக்கங்கள், விலை - ரூபாய் 100

Thursday, January 11, 2018

சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர மற்றும் தவில்  இசை வித்வான்களாய் வந்த நடிகர்கள் சிவாஜி கணேசன் , ராஜன், பாலையா போன்றவர்கள் என்றுமே மனதில் நிற்பவர்கள். அதற்குப் பின் என் மனதில் பதிந்தவர்கள் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் நாதஸ்வர வித்வான்கள். பாகவதர் சிகை அலங்காரத்துடன் ஜம்மென்று ஒப்பனையுடன் இருப்பார்கள்.



பெரியப்பாவின் கல்யாணத்தில் இரண்டு பெண்கள் நாயணம் வாசித்ததை அப்பா பெருமையுடன் சொல்லியிருக்கிறார்.என் திருமணத்திற்கும் அவர்களை எப்படியாவது வாசிக்க வைக்கவேண்டும் என்று ஆசை கனவாய்ப் போனாலும் எனது மனதில் பதிந்த அந்த வித்வான்களே எனது திருமணத்திற்கும் வாசித்தார்கள்.

பெரியம்மா அவரது மகளுக்கு நாதஸ்வர இசையுடன் ஜண்டை மேளமும் பதிவு செய்திருந்தார்.அப்பொழுது அந்த நாதஸ்வர வித்வான்கள் தங்கள் இசையை வாசிக்க முடியாமல் எவ்வளவு மனம் வருந்தியிருப்பார்கள். அந்த உணர்வு பக்கிரியும், இரத்தினமும் படும் வேதனையிலிருந்து வாசகர்களுக்கு எளிதாகக் கடத்தப்படுகிறது.

பணம் இருப்பவர்கள் இசைக் கலைஞர்களுக்கு வாசித்ததற்கான ஊதியத்தைக் கொடுக்க அவமானப்படுத்துகிறார்கள். வன்முறையைக் கையாளுகிறார்கள்.சாதிப் பெயரைக்குறிப்பிட்டுத் திட்டுகிறார்கள்.ஆனால் வழி மாறி வேறு ஊருக்கு தவறுதலாய் வந்திருந்தாலும், இசைக்கலைஞர்களை வரவேற்று, பசியாற்றி , வாசிக்கச் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள் சாமான்ய மக்கள். தங்களால் முடிந்த குருணை அரிசி, இரண்டு சுரைக்காய், ஒரு பெட்டி நிறைய கேப்பை, சோளம் எல்லாம் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறவர்கள் நம் ஏழை எளிய மக்கள்.இவர்களே நம் மனதில் இடமும் பிடிக்கிறார்கள்.

நாதஸ்வரத்தில் எதற்கு இத்தனை (பீப்பீக்கள்) சீவாளிகள் தொங்கப்பட்டிருக்கிறது என்று எப்பொழுதும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. எத்தனை சீவாளிகள் தொங்கினாலும் ஏதோ ஒன்று தான் வித்வானுக்கு துணையாய் நிற்குமாம். நாவிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பெயரும் ஊர் பெயராகவே அமைந்திருக்கின்றன.நாதஸ்வர வித்வான்களிடம் அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எந்த ஊரில் வாசித்தோம் , என்ன நடந்தது என்பதை மட்டுமே அவர்களால் நினைவு கூற முடிவதே அதற்கு காரணமாகவும் அமைகிறது.

வெளிநாட்டுக்காரன் ஹாக்கின்ஸையும் மயக்கி அவனைக் கற்றுக்கொள்ளத் தூண்டிய நாதஸ்வர இசை.அவன் நம்மூர் பெண்ணைத் திருமணம் செய்யவும் காரணமாய் அமைந்திருக்கிறது.உண்மையோ , புனைவோ மாலிக்கபூர், கில்ஜி போன்ற வடநாட்டுக்காரனையும் வெறி கொள்ள வைத்ததும் இதே இசைதான். மல்லாரி, தன்யாசி இராகத்தை எப்படியாவது நாதஸ்வரத்தில் கேட்க வேண்டும் என்ற தாகத்தை நமக்குள்ளும் ஏற்படுத்துகிறது. தென்னாட்டில் எத்தனையோ பேர் ஷெனாய், சரோட், சிதார் என்று கற்றுக் கொண்டாலும் , ஏன் வடநாட்டினர் யாரும் நாதஸ்வரத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்வி எழும் போது கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காதுள்ள கடவுளும் கல்யானையும், லட்சய்யாவும் உண்மையிலேயே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்றே மனம் நம்புகிறது.

ஊமை ஐயர் போன்ற இசை இரசிகர்கள் பல நாதஸ்வர வித்வான்களின் சிறந்த இசைக்கும் பக்கிரி போன்ற சிறந்த வித்வான்களையும் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.
தலைக்கனம் கொண்ட ஏஎன்எஸ் போன்ற வித்வான்களின் கர்வத்தையும் கழுதைவிட்டைக் கொடுத்து  அடக்கியிருக்கிறார்கள் .நாதஸ்வர வித்வான்களின் அன்றாட வாழ்க்கையோடு கரகாட்டக்காரப் பெண்கள் ரஞ்சி,மல்லிகாவின் வாழ்க்கையும் விவரிக்கப்படும் பொழுது ஒரு வலி ஏற்படுகிறது.பக்கிரியின் பால்ய வாழ்க்கையில் அவர் நண்பனுடன் சேர்ந்து சிகரெட் அட்டை சேகரித்த விளையாடிய அனுபவங்கள், நாதஸ்வரம் கற்றுக்கொள்ள சிறுவர்கள் எடுத்த முயற்சிகள் போன்றவைச் சிறந்த சிறார் கதைகள்.பக்கரிக்கு
கல்லைப் பறக்க வைக்கும்  மூச்சு இரகசியத்தை  சொல்லிக்கொடுத்த
கழுதை வியாபாரியைப் பார்க்க மனம் படபடக்கிறது.

இரத்தினம் பக்கிரியின் கதை நாவலின் பிரதானமானது என்றாலும் கூட இடையிடையே வரும் நாட்டார்கதைகள், மோகினி கடம்பியின்  கதை , வாழ்ந்து கெட்ட ஜமீன்கதைகள், சாதி வேறுபாட்டை மையப்படுத்தி வரும் குன்னன், மாரியம்மன் மதில் கதை, பாம்புக் கடி வைத்தியக்கதை, பசுமை புரட்சி என்ற பெயரில்  பருத்தி விவசாயம் நலிந்த கதை, பலவீன குணம் உடைய கலைவித்வான்களான கண்பார்வை இல்லாத தன்னாசி,  மதுவின் பிடியில் இருந்த சிறந்த கலைஞர் சாமிநாத பிள்ளை போன்றவர்களின் கிளைக் கதைகள் வேகத்தடையாய் இல்லை.

வெளிநாட்டு பிரவேசத்திலும் கூட கலைஞர்களுக்கு  இத்தனை அவமானங்கள் , உடல் உபாதைகள் என்ற தெரிய வரும் போது வருத்தமே மிஞ்சுகிறது. வாசித்த வாசிப்புக்கும் சரியான பணமும் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படும் பொழுது ஆத்திரமே ஏற்படுகிறது. இசைக்கும் கலைக்கும் மதம், சாதி தடையில்லை என்று உணர்த்துகிறது அபுவின் ஆர்வமும் ஞானமும்.


நாதஸ்வர இசையால் மழையைக் கொண்டு வரமுடிந்தது. இது போன்ற கதைகளைக் கேட்கும் பொழுது நாதஸ்வர இசையின் மீது ஒரு காதல் ஏற்படுகிறது. திருமண விழாக்கள், கோவில் விழாக்களில் நாதஸ்வர இசையைக் கேட்க மாட்டோமா என்ற தேடலில் மனம் தொலைகிறது. எந்த இசைக்கலைஞர்கள் அருமையாய் வாசித்தாலும் அவர்களைப் பாராட்டி ஒரு வார்த்தையாவது சொல்ல வேண்டும் என்று மனத்தை ஏங்கவைத்திருப்பது இந்த சஞ்சாரத்தின் வெற்றி.

உயிர்மை பதிப்பகம் , விலை 370, பக்கங்கள் 375.

Wednesday, January 3, 2018

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

நண்பர் ஒருவர் ரோலக்ஸ் வாட்ச் புத்தகத்தைப் பற்றி பல முறை கூறியிருந்ததால் ஆர்வம் தாங்க முடியாமல் வாங்கிப் படித்தேன்.கதையின் நாயகனாய் வரும் கதை சொல்லியைக் கெட்டவன் என்று வகைப்படுத்துவிட முடியாது. அவன் செய்யும் பல செயல்களை நாமும் வாழ்வின் ஏதாவது ஒரு இடத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.சிறு வயதில் ஆங்கிலப் படம் பார்க்கும் பொழுது யார் நல்லவன்? யார் கெட்டவன் என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருப்பேன்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் வாழ்க்கையை யாருமே முழுவதுமாய் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கழித்து விட முடியாதென்று.


நாம் வரையறைக்கும் வரைமுறைகளிலும் வகைப்படுத்துதலிலும் தானே இருக்கிறது நல்லதும் கெட்டதும்.ஒருவருக்கு சரி என்று படுவது மற்றொருவருக்கு தவறாய்ப் படுகிறது.நாவலில் கதை தொடர்ச்சியாக இல்லாமல் சில மனிதர்களையும் சம்பவங்களையும் மையமாய் வைத்து நகர்கிறது.சிங்கப்பூரில் உள்ள லேடிபாயும், பிரியாணி வாங்கிக் கொடுக்கும் திருநங்கை அக்காவும் வெளிப்படுத்துவது ஒரே அன்பாய்தான் தெரிகிறது.பிறன் மனை நோக்கி திவ்யாவுடன் இருக்கும் காதலை ரசிப்பவனால் மாதங்கி, சஞ்சனாவுடனான நட்பையும் பிரித்துக் கொண்டாட முடிகிறது.

அரசியல் , வணிகம், கலைத்துறை என்று பல துறைகளில் பிண்ணனியில் இயங்கும் சூதாட்டங்களும் இருண்ட உலகமும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.இதை முதன்முறையாய்த் தெரிந்து கொள்ளும் பலருக்கு இந்த வாசிப்பு அனுபவம்  புதுமையானதாய் இருக்கும்.லஞ்சம், ஊழல், மது, மாது,போதை என்று இயங்கும் உலகில் பணம் சம்பாதிப்பையே முதன்மையாக கொண்ட இடைத்தரகனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. உழைத்து முறையாய்ச் சம்பாதிக்கும் முனைப்புடன் இருக்கும் கதைசொல்லியின் நண்பன் சந்திரனுக்கு பெல்ஸ் பால்ஸி நோய் என்றவுடன் நமக்கும் வருத்தமாய்த்தான இருக்கிறது.

பட்டயா கடற்கரை ஓரத்தில் 1000 டாலர் வாடகைக்கு ஒரு வார காலம் அறை எடுத்து, பெயர் தெரியாத பெண்ணுடன் படுத்திருக்கும் பொழுது, யாருக்காக நாம் இதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்? யார் முன்னால் நம்மை நிரூபிக்க ஆசைப்படுகிறோம்? யாருக்கு முன்னால் சவால் விட விரும்புகின்றோம்? என்று கதை சொல்லி யோசித்து பெறும் தெளிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது.பல நேரங்களில் நாம் செய்யும் பகட்டுகளும் ஞாபகம் வருகிறது.ஒரு பெண்ணைத் தேவதையாக நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறான் ஒரு ஆண். அவளும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வதால் அவள் உள்ளங்கை சொரசொரப்பாகத்தான் இருக்கும். அவளும் எல்லா பெண்களைப்போல் தான்  என்ற புரிதல் ஒரு ஆணுக்குள் விதைக்கப்படுகின்றது.


ரோலக்ஸ் வாட்ச் தயாரிப்பவர்கள் அதில் கிடைக்கும் வருவாயை நலத்திட்டங்களுக்கும் உபயோகிப்பார்கள் என்பதால் பெரும்பாலானோர் அதனது பிரதியான போலிக் கைக்கடிகாரங்களைத்தயாரிக்க மாட்டார்கள். ஆனாலும் ஓரிரு இடங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கத்தான் செய்கிறது. அசலையும் நகலையும் பிரித்தெடுப்பது மிகவும் கடினமும் கூட. நம்முடன் வாழும் மனிதர்கள் மட்டுமல்ல நாமும் இந்த ரோலக்ஸ் வாட்ச்களைப் போலத்தான்.அசல் யார் , நகல் யார் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கிழக்கு பதிப்பகம் விலை 160 , பக்கங்கள் 168

வெக்கை - பூமணி

1982ல் வெளிவந்த நாவல். அன்றைய காலக்கட்டங்களில் கிராமங்களில் நடைபெற்ற சம்பவமாய் குறிப்பிட்டிருந்தாலும், இன்றைய காலக்கட்டங்களில் கூட எளிய மக்களின் மீதான வன்மங்கள் வேறு வகையில் வெளிப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் சரணடையச் செல்லும்  சிதம்பரத்திற்கும் அவனது அப்பாவிற்கும் என்ன ஆனதோ என்று நினைக்க, அதிகாரவர்க்கம் சாமான்யமனிதர்களின் மீது நடத்தும் அடக்குமுறையை உணர,கவலையும் கோபக்கனலும் ஒரு சேர ஏற்பட்டு மனதில் ஒரு வெக்கையுணர்வும் மனபுழுக்கமும் ஏற்படுகிறது.நீதிமன்றம், நீதி, காவல்துறை, சட்டம் போன்றவற்றின் பாகுபாடான செயல்கள் எளிய மனிதர்களின் பார்வையில் விரிகிறது.

மூத்தமகனின் இறப்பிற்குப் பதிலாக இளைய மகன் பழிதீர்க்க, சிதம்பரம் குடும்பத்தார் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ள நேரிடுகிறது.அட்டை வடிவமைப்பில் சந்தோஷ் நாராயணன் கதையைக் கடத்துகிறார். தெளிவாய் ஓவியமாய் பயணித்துக்கொண்டிருந்த குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையின் நிம்மதி பறிக்கப்பட்டதே கிறுக்கல்களாய் வெளிப்படுத்தப் 
பட்டிருக்கிறதோ என்று எண்ணம் தோன்றுகிறது. ஒரு பதின் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிறுவனைக் கொலைசெய்யத்தூண்டும் கதைக்களத்திற்கு யாரைக் காரணமாய் குறிப்பிட என்று தெரியவில்லை.


அண்ணனைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்க அரிவாள் தூக்கி, கைக்குண்டாய் வெடிகுண்டு செய்திருந்தாலும், குளிக்கும் பொழுது அவன் குழந்தைத் தனம் வெளிப்பட்டுவிடுகிறது. அவனது அம்மாவுக்கும், அத்தைக்கும் மட்டுமல்ல நமக்கும் சிறுவனாய்த்தான் தெரிகின்றான். ஆலமரத்தின் அடியில் கோலிக்காய் விளையாடுவது, கிட்டி விளையாடுவது என்று சிறுவனாய்தான் சிதம்பரம் நம் மனதில் பதிகின்றான்.அத்தைக் கொடுத்த அரிசியில் சோறு பொங்குவது, காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ரசம் வைப்பது, முயல் கறி சமைப்பது, மஞ்சணத்திமரத்தின் பழங்களை  சாப்பிடுவது, ஆலமரத்தில் பதுங்கி இருப்பது என்று காட்டில் அப்பாவும் மகனும் வாழும் தலைமறைவு வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாய் இருந்தாலும் அவர்களை யாரேனும் பிடித்து விடுவார்களோ என்ற பயம் நம்மையும் கவ்விக்கொள்கிறது.

கிராமத்து வாழ்க்கையை அங்கு வாழும் மனிதர்களின் இயல்பும்  உணவுகளும் எளிதாய் உணர்த்துகிறது. காய்ச்சல் வந்து சிதம்பரத்தின் அத்தை மகள் ஜானகியும், பகை காரணமாக கொடூரமாக கொலையுண்ட அவன் அண்ணன் இறக்கும் பொழுது மனம் கனத்து விடுகிறது. சிதம்பரத்தை செலம்பரமாக உச்சரிப்பது அவர்களின் பேச்சுவழக்கை நமக்குள் விதைக்கிறது.சுடுகாட்டில்  ஏன் மரங்கள் அதிகம் இல்லை என்று நமக்குள்ளும் கேள்விகள் எழுந்திருக்கும்.குளிர்ச்சியாய் இருந்தால் அதிக உயிர்பலி கேட்கும் என்ற பதில் கிடைப்பதுடன் பயமும் பற்றிக் கொள்கிறது.


சாயங்காலப் பதினியில் இளநுங்குகளைத் தோண்டிப் போட்டு பிசைந்துகுடிப்பது, நகக்கண் வலிக்காமல் பன்றிகளை வைத்து இனிப்பாயிருக்கும் சிந்தாமணிக்கிழங்குகளை சேகரித்து கொள்வது, தேன் , கள் எடுப்பது பற்றிய குறிப்புகள்,  என்று கதை நெடுகிலும் கிராமத்துமனம்.வடக்கூரான் என்று அப்பா விளையாட்டாக என் தம்பியை அழைப்பதுண்டு.ஆனால் இந்த நாவலைப் படித்தபின்பு அந்தப் பெயரைக் கேட்டால் ஒரு வெறுப்பு வந்து சேர்ந்து கொள்கிறது.