Sunday, June 30, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - ராம்கி விமர்சன பேச்சு




அனைவருக்கும் வணக்கம் .


துபாயில் சுமார் 16 ஆண்டுகள் இருந்த ஒரே தகுதியைக்கொண்டு இங்குப் பேச வந்திருக்கிறேன் ஒரு வாசகனாய்.அபுதாபி , துபாய், ஷார்ஜா ,அஜ்மான் , உம் அல் குவின் , ராஸ் அல் கைமா ,பியூஜைரா உள்ளிட்ட 7 அமீரகங்களைக் கொண்டது ஐக்கிய அரபு நாடுகள். 9 மாதங்கள் தீவிர கோடையும், மிச்சம் 3 மாதங்கள் இதமான கோடையும்தான் தட்ப வெப்ப நிலை.

69 ல் எண்ணெய் கண்டுபிடித்த பின்னும சுதந்திரம் கிடைத்த பிறகு ஷேக் சையது மற்றும் ஷேக் ரஷீத் அவர்களின் முயற்சியால் பிரிந்துக் கிடந்த இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இன்று உலகே வியக்கும் வண்ணம் ஒரு கனவு தேசமாய் திகழ்கிறது. ஆதியில் ஓமானும், பஹ்ரைனும் சேர்வதாக இருந்தது. இங்கே வருமான வரி கிடையாது , வானளாவிய கட்டடங்கள், கண்ணைக் கவரும் சுற்றுலா தளங்கள், இதெல்லாம் போக இங்கு வசிப்பவர்களின் ஆன்மா வை த் தெரிந்துக்கொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் உதவும்.

அபிநயா துபாயில் தங்கியிருந்த போது தான் கேட்ட, பார்த்த, இணையங்களில் கண்டடைந்த விஷயங்களை ஒரு சுற்றுலா பயணியின் நோக்கில் எழுதியுள்ளார். நல்ல விரிவான எழுத்து. ஒவ்வொரு இடத்தையும் பற்றிய நுண்ணிய விவரங்களை பதிவு செய்திருக்கிறார். அவர் என்ன என்ன இடங்களை விட்டிருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும் . ஒவ்வொரு அமீரகத்தையும் பூர்வகுடியில் ஆரம்பித்து தற்போதைய மன்னர்களின் வாழ்க்கை வரை படம் பிடித்துள்ளார் .

அபுதாபியில் மூத்தக் குடிகள் பெடோய்ன் இனத்தைச் சேர்த்தவர்கள் ,அல் நஹ்யான் குடும்பத்தினர் நாடோடிகள் என்றுத் தொடங்கி , எமிரட்ஸ் பேலஸ் ஹோட்டல் , ferari world , லூவர் மியூசியம் , கிராண்ட் mosque , கார்னிஷ், கார் மியூசியம் போன்ற இடங்களைக் கண்டு தெளிவாக எழுதியிருக்கிறார்.

அல் அய்னில் fun சிட்டி, zoo , jebel hafeet குன்று, வெந்நீர் சுனைகள், நிறைய கால்நடை மற்றும் விவசாய பண்ணைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். இங்கு மழையும் நிலத்தடிநீர் உண்டு என்பது சுவாரசியமான விஷயம்.

துபாயில் exit என்ற உணவு விடுதியில் ஆரம்பித்து, இபின் batuta மால் , மெரினா ,பாம் ஐலணட்,பாரா க்ளைடிங், புர்ஜ் அல் அராப், ஜுமய்ரா ஹோட்டல், பங்கி ஜம்பிங், மால் of எமிரேட்ஸ், புர்ஜ் கலீஃபா, துபாய் மால்,ட்ரேட் சென்டர், ஸபீல் பார்க், த ஃப்ரேம், வாஃபி மால், லேம்ஸி ப்ளாசா, அல் நாசர் லெஷர் லேண்ட்,மியூசியம் , கோவில்கள் , மெட்ரோ , அப்ரா என்கிற படகுத்துறை , ஜூ ,மிராக்கில் கார்டன், கார்டன், butterfly கார்டன், ஐஸ் skating , கிரிக்கெட் ஸ்டேடியம் , ரோடுகள், போலீஸ் -இத்யாதிகளை விவரமாக சொல்லியிருக்கிறார். மன்னர்கள் Maktoum குடும்பத்தினர்.

ஷார்ஜா - கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா விமான நிலையம்,, ஜூ, அமெரிக்கன் யூனிவர்சிட்டி, உலக புக் fair , corniche , மிகப்பெரியலைப்ரரி., ஷார்ஜா ஐ, கட்டியாள்வது Al qassimi மன்னர் குடும்பத்தினர் என்பது வரை விபரங்கள் தொடுத்திருக்கிறார். துபாய் அபுதாபிக்கு முன் பெயர் பெற்றது ஷார்ஜா.

Ajman - மியூசியம், beaches , சிட்டி center

உம்மால் quinn - போர்ட் அண்ட் மியூசியம் , வாட்டர் பார்க்,
rasalkhaima - தீம் பார்க் , களிமண்ணால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் ,பங்கி ஜம்பிங், cement factory போன்றவற்றை விவரித்திருக்கிறார். குளிர் காலத்தில் இங்கு பனிப்பொழிவு இருக்கும்.

பியூஜைரா - மலைகள் , இங்கிருந்துதான் கட்டிடங்களுக்கு சரளை கற்கள் வினியோகிக்கப்படுகிறது.
ஓமான் எல்லையில் இருக்கும் முசண்டம் இதில் டால்பின் உணவூட்டுதல் , படகு சவாரி உண்டு.

இதையெல்லாம் தவிர மால்கள், பூங்காக்கள், கடற்கரைகள்

திகட்ட திகட்ட மக்கள் பொழுதுபோக்கும் இடங்கள்.

அபிநயா எழுதியிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு தனி புத்தகமே போடலாம். அபிநயா எழுதியதில் ஒரு துளியைத்தான் சொல்லியிருக்கிறேன்

அபுதாபியின் எண்ணை வளம் . அபுதாபியில் கிடைப்பது மிகவும் அரிய சுத்தமான எண்ணெய். ஒரு பேரல் உற்பத்தி செய்ய 16 டாலரே செலவு . இன்னும் 100 வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் தாய் கிணறுகள் இங்கு உள்ளது. மற்ற 6 இடங்களிலும் எண்ணெய் வளம் சொல்பம் அல்லது இல்லவே இல்லை.

பாதுகாப்பு - மிகவும் பாதுகாப்பான நாடு. தர வரிசையில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.

அரசியல் / அரசாங்கம் -
ஃபெடரல் முறையில் அபுதாபியை சேர்ந்த மன்னர் பரம்பரை ஜனாதிபதியாகவும், துபாய் மன்னர் பிரதம மந்திரியாகவும், மற்ற அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மந்திரியாகவும் இருப்பார்கள். பரம்பரை ஆட்சி முறை.
சவூதி யோடு சேர்த்துக்கொண்டு கத்தாரை சமீபத்தில் ஒதுக்கி வைத்தது .
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கிடையாது. இப்பொழுது இந்தச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாடு - உங்களுடைய விமர்சனங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது
இந்திய தொழிலதிபர்கள் - ஏராளம் ,
இந்திய தொழிலதிபர்கள் இங்கு கொடிக்கட்டி பறக்கிறார்கள் . லூலூ யூசுப் அலி , லாண்ட்மார்க் மிக்கி , ஜெஷன்மால் , நியூ மெடிக்கல் சென்டர் ஷெட்டி, ஸுலேகா ஹாஸ்பிடல் ..Dr ஸுலேகா ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு பிரசவம் பார்க்க ஒட்டகத்தில் சென்றிருக்கிறார் ஒரு காலத்தில். கேரளாவை சேர்ந்தவர்கள் அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் எத்தனை கிராமங்கள் இருக்கிறதோ அத்தனை சங்கங்கள் இங்கே உண்டு.
உள் கட்டமைப்பு - சாலையாகட்டும், மெட்ரோவாகட்டும், தொலை தொடர்பாகட்டும், மின்சாரம் (தேவையை விட இரண்டு மடங்கு உற்பத்தி செய்கிறார்கள்) , நீர் , வடிகால்கள், போன்றவைகள் உலகத்திலேயே முன்னணியில் இருக்கும் நாடுகளுக்கு சவால் விடுமளவுக்கு கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். சிறை முதற்கொண்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

தொழிலாளர்களின் வாழ்க்கை -
இங்கிருக்கும் ஜனத்தொகையில் 60 சதவிகிதம் வெளி நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். அதில் 60 % தொழிலாளர்கள். அதிலும் 60 விழுக்காடு இந்தியர்கள் . தொழிலாள ர்கள் வசிப்பதற்கென்றே தனி இடங்கள் உண்டு. அபுதாபி முஸாபா ,துபையில் சோனாப்பூர் என்று. அதிக வெப்பத்தில் , சொந்த பந்தங்களை விட்டு அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வெள்ளிக்கிழமைகளைப் பற்றியே தனியாக எழுதலாம். எழுத்தாளர் மீரான் மைதீன் சவுதியைப் பற்றி எழுதியுள்ளார். எல்லா தொழிலாளர்களின் வாழ்க்கையைப் போல் இன்பம் துன்பம் கலந்தே இருக்கும். ஒரு ஓட்டுநர் இங்கே சம்பாதித்து அமெரிக்காவில் செட்டிலான ஆன கதையும் உண்டு, நல்ல வேலையில் இருந்து கடன் வாங்கி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடியவர்கள் கதையும் உண்டு.


பல்வேறு நாட்டினர்

அபுதாபியில் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கமும், துபாயில் இந்தியர்களின் ஆதிக்கமும், ஷார்ஜாவில் எகிப்தியர்களின் ஆதிக்கமும் பரவலாக உண்டு.

வணிகம் மற்றும் வாணிபம்..
இம்போர்ட் ரீ எக்ஸ்போர்ட் - இதுதான் அன்றையிலிருந்து இன்று வரை எண்ணைக்கடுத்தபடியான தொழில். முத்துகுளித்தல் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலமாக இருப்பதால் உலகின் அத்தனை பெரிய கம்பெனி களின் அலுவலகங்களும் இங்கு உண்டு..அனைத்துவித கார்களும் இங்கு கிடைக்கும்.
மிகக்குறைந்த காலத்தில் உலக பிரசித்தம் பெற்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இங்குதான் இருக்கிறது. பயணிகளை கவனிப்பதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு அடுத்து எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. லாபம் பார்க்கும் வெகு சில விமான நிறுவனங்களில் ஒன்று.
சூரிய ஒளியில் மின் ஆற்றலை (sustainable energy)எடுப்பதில் மிக முனைப்போடு ஈடுப்பட்டு வருகிறது. அணு ஆராய்ச்சியும் செய்து வருகிறது.



பொழுது போக்கு
உலகிலேயே மிக அதிகமான பரிசுத்தொகை கொண்ட குதிரை பந்தயம் இங்கு நடக்கிறது. குதிரை வளர்ப்பது எமிராட்டிகளுக்கு ஒரு passion. அதற்கான செலவு கோடிகளில் இருக்கும். ஒட்டகப் பந்தயங்களும் உண்டு. க்ராண்ட் ப்ரீ கார் பந்தயம்,டென்னீஸில் துபாய் ஓபன் உண்டு. கால்பந்து தேசிய விளையாட்டு.
கிரிக்கெட் பரவலாக ஆசியர்களின் பொழுதுபோக்கு. ஒரே டீமில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் , இலங்கையினர் பங்களாதேஷியர்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள்.

ராணுவம். சமீபமாக இந்த நாட்டின் ராணுவ வீரர்கள் யேமனில் போராடி , உயிரிழந்து, நாட்டின் பெருமதிப்பை அடைந்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் அரபு நாடுகளுக்கும் பண்டைய காலம் தொட்டே தொடர்பு இருந்திருக்கிறது. சிந்தி சமூகம் 1950 களில் அங்கே சென்று வணிகம் செய்து இன்று வரை நான்காவது ஐந்தாவது தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்த அளவிற்கு வசதியில்லை.. குளிர் சாதனங்கள் இல்லாமல் கடும் வெப்பத்தில் ஒரு தலைமுறை முன்பு வரை காலம்கழித்திருக்கிறாரகள். அதை யோசிக்கும் பொழுது இன்றைய நல்ல நிலைமை ஒரு மிகச்சிறந்த poetic justice .

எமிராட்டிகளுக்கு வீடு, கல்வி, வேலை என்று எல்லாமே இலவசம். கூடவே வரும் அகந்தையும் உண்டு



ஒரு சின்ன நாடு எண்ணெய் வளத்தால் முன்னேறி லட்சோப லட்சம் மக்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது . அந்த நாட்டுக்கு எத்தனையோ பேர் நண்பர்களின் வாயிலாகவும், உறவினர்களின் வாயிலாகவும் வருடா வருடம் சென்று வருகிறார்கள். ஆனால் அபிநயாவிற்குத்தான் இதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு இடத்திற்குப் போனால் கைபேசியால் தான் பார்த்து வருகிறோம். அந்த இடத்தை ரசிப்பதற்கு முன்னால் அதை காமெராவில் பதிவு செய்து விடும் அவசரத்தில் இருக்கிறோம். ஆனால் அந்த இடத்தைப் பார்த்து, பின்னர் அதன் வரலாறை அறிந்து எழுத்தின் மூலம் பதிவிடுவதற்கு நல்ல உழைப்பும் , அர்ப்பணிப்பும் தேவை . இதுவே அபிநயாவின் பலம் என்று கருதுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் அந்த இடத்திற்கு செல்லவில்லையென்றாலும் ,சென்ற மாதிரி சொல்லிக்கொள்ள முடியும். மிக அருமையான முயற்சி . மென்மேலும் எழுத வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் . நன்றி .

Thursday, June 27, 2019

நகர்வலம் - ஃபோன்,வண்டி, எதுவுமே கொண்டுவந்துடாதீங்க


நகர்வலம் - அலைபேசிகள் வேண்டாம்… புத்தகங்கள் போதுமே



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தமுறை புதிதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அலைபேசிகள், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உட்பட மொத்தம் 11 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சதா சர்வ காலமும், அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டே சுற்றுவதால், அவர்களின் படிப்பின் மீதான கவனம் சிதறுகிறது என்று பரவலாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. பெற்றோர்களால் ஓரளவுக்கு மேல் பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள், இணைய விளையாட்டுக்கள் மாணவர்கள் அலைபேசிகளுக்கு அடிமையாக்குகின்றது. அலைபேசிகள் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துகின்றது . தேவையில்லாத சைபர் குற்றங்களில் மாணவர்களைச் சிக்க வைத்துவிடுகிறது .


தற்போது உள்ள நவீன வளர்ச்சியில் கல்வியை யாருடைய துணையும் இல்லாமல்கூட படிக்க முடியும். ஆனால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதன் முதன்மை நோக்கமே ஒழுக்கம், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது, கீழ்படிதல் போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதற்குதான். தற்போது உள்ள மாணவர்களிடம் இந்த பண்புகளை காண்பது அரிதாகி வருகின்றது.

பல பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிள்களுக்குப் பதில் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர் . இதை சில பள்ளி நிர்வாகங்கள் தடுப்பதில்லை. உரிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் இப்படி இரு சக்கர வாகனத்தில் வருவது அவர்களுக்கும், சாலைகளில் செல்லும் பிறருக்கும் ஆபத்தாக அமைந்து விடுகிறது.

இரு சக்கர வாகனங்கள் மீதான மோகம் மாணவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
திரைப்படங்களைப் பார்த்து உந்தப்படும் மாணவர்கள், வீட்டில் இரு சக்கர வாகனம் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து இருக்கிறது. இரு ச‌க்கர வாகனங்களில் சாகசம் செய்வதும், அதிவேகமாகச் செல்வதும் மாணவர்களிடம் ஒரு மேலான சாகச மனநிலையை உருவாக்கி இருக்கின்றது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உண்டான தகுதி வயதைக் கூட அடைந்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த உத்தரவு சரியென்றே பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாகத்தான் ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பி உள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும், பள்ளி மாணவர்களுக்கு என பள்ளிச்சீருடைகளில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் பள்ளிச் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமே இப்படிச் சில கட்டளைகளைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அதிகாலை சென்று அந்தி சாய்ந்த பின்னர்தான் வீடு திரும்புகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு இருக்கும்போது மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி அலைபேசி பயன்பாடு, இரு சக்கர வாகன பயன்பாடு என அனைத்து விஷயத்திலும் வீட்டிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வர இயலும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால் அரசே ஆசிரியர்களுக்கு இந்த கட்டளைகள் மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்றுதான் பலரும் கருதுகின்றார்கள்.

வசதியான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான அன்பைக் காட்டும் விதமாக இருசக்கர வாகனங்களையும், அலைபேசிகளையும் பரிசளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடுகின்றார்கள்.

ஆசிரியர்கள் கைகளில் இருந்து கம்பை பிடுங்கிவிட்டார்கள்; அதனால் நாங்கள் லத்தியை அதிகமாக சுழற்ற வேண்டியிருக்கிறது என்று அதிகரித்து வரும் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொள்ளும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள் குறித்து காவல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனால் மாணவர்களை அடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் மாணவர்களிடம் வார்த்தையால் கூட கடுமைகாட்ட இயலாத சூழலில் கட்டுபாடற்ற சுதந்திரம் நிலவுகின்றது . அந்த சுதந்திரத்தை சரியான முறையில் அவர்களுக்குக் கையாளவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக அரசாங்கமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருப்பதால் இனி நாங்கள் போதனையும் செய்ய வேண்டாம், வேதனையும் பட வேண்டாம். பள்ளி வளாகத்தில் இந்தக் கட்டளைகளை எழுதி வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கலாம் என்று ஆசிரியர்கள் நிம்மதி தெரிவுக்கின்றனர்.


முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இருந்தன. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மனம்விட்டு பேசிக் கொள்ள முடிந்தது. பல பிரச்சினைகள் வகுப்பறைகளிலேயே தீர்த்துவைக்கப்பட்டன. ஆனால், இன்று நீதி போதனை வகுப்புகள் மறைந்து வரும் நிலையில் அதன் வழியாகத் திரும்பவும் மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது.

Wednesday, June 26, 2019

நகர்வலம் - இரயில்வே நிலையங்களில் குப்பைகளை போட்டதற்கு வசூலித்த அபராதத்தொகை மட்டும் 3.75 லட்சம்...

நகர்வலம்

விரைவாக பயணிக்க நாம் அன்றாடம் தேர்வு செய்யும் போக்குவரத்து முறைகளில் முக்கியமானவை இரயில் வண்டிகள்.
இந்தியாவில் உள்ள 6,853 ரயில் நிலையங்களில் சராசரியாக தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கின்றார்கள்.
பயணிகளால் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தி ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை பயணிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் போதிய ஒத்துழைப்புடன் ரயில்வேத்துறை சமாளித்து வருகிறது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த துறைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகிறார்கள். 31 இரயில் நிலையங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்து துறையும் பராமரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோட்டங்கள் வாரியாக மதுரையில் 922 பெட்டிகள், பாலக்காட்டில் 344 பெட்டிகள், சென்னையில் 230 பெட்டிகள், திருவனந்தபுரத்தில் 253 பெட்டிகள், சேலத்தில் 146 பெட்டிகள், திருச்சியில் 149 பெட்டிகள் என மொத்தம் 2044 ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வே நவீன இயந்திரங்களின் உதவியுடன் சுத்தம் செய்கிறது. இவற்றை மெக்கானிக்கல் துறை மேற்கொள்கிறது. ஓடும் ரயில்களை சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும் , கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் அரசாங்கம் சுத்தம் செய்து வருகிறது.

முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு இருக்கின்றது. எனவே நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் வசதிக் காக துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த தனித்துறை ஒன்றை ரயில்வே வாரியம் உருவாக்க வேண்டுமென பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால், வளாகம் மற்றும் ரயில் பாதையில் சிறுநீர் கழித்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. பின்பு ரயில் நிலையங்களிலோ அல்லது இரயில் பாதைத் தண்டவாளங்களிலோ குப்பை கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நிலையத்தில் துாய்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாமல் தவிர்க்கவே, இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்த 1600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.75 லட்சம் அபராதம் வசூலித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், தாம்பரம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை கழிவறை வசதிகள் முறையாக இருப்பதில்லை. இதில் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் பயணிகள் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிப்பதுடன் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் அதிகரித்து உள்ளது. நாம் கழிப்பறைகளை முறையாக உபயோகித்தால் தானே நமக்கு முன்னால் உபயோகித்தவர்கள் சுத்தமாய் உபயோகித் திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.

ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், பல ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதியில் குப்பை, கழிவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் அருகே வீடுகள் அமைந்திருப்பதால், மேற்கண்ட வீடுகளில் இருந்து பலர் குப்பை, கழிவுகளை தண்டவாள பகுதியில் வீசி வருகின்றனர். பாலித்தீன் பைகள் உப யோகம் தடை செய்ப்பட்டதில் குப்பைகள் சற்று குறைந்தும் இருக்கிறது.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், ஆவடி ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதேபோல், புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், ரயில் தண்டவாளத்தில் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது நிறுத்தங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே. குழந்தைகள் 'இந்த குப்பைகளை எங்கே போட வேண்டும்' என்று கேட்டால் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் போன்ற நற்பண்புகளைச் சொல்லிக் கொடுத்து , அவர்கள் அவ்வாறாக அந்த நல் ஒழுக்கங்களைப் பின்பற்றும் நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்தோ பாராட்டியோ உற்சாகப்படுத்த வேண்டியதும் நமது பொறுப்பு தான். ஓடும் இரயிலில் குப்பைகளை எரிவதும், தண்ணீரை ஊற்றுவதும் நம்முடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு எவ்வளவு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை
நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்ற எண்ணம் நம் அனைவரது உள்ளத்தில் பதிந்தாலே இரயில் நிலையங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் இயல்பான செயல்பாடாகி விடும்.

Tuesday, June 25, 2019

நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்


நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்

நாம் அன்றாடம் பொறுமையாய் வரிசையில் நிற்கும் இடங்களுள் எரிபொருள் நிலையங்கள் முக்கியமானவை. 'எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் ' போன்ற
வாசகங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். அதற்காகத்தான் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கின்றனர்.


நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க்கு உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி அழுத்தம் கொடுப்பார்கள். இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்க்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.


சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் வழங்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க்க் இயந்திரம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு நிரப்பும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் நிரப்ப கருப்பு குழாய்பொறுத்தப்பட்டு இருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும் கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல் / டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் / டீசல் பம்புகளில் விற்பனை தடைசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் நிரப்பும் இடங்களில் அலைபேசி உபயோகிப்பதற்கு தடை என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மை கொடுக்கக் கூடியவை தான். எரிபொருள் நிரப்புவதற்கு நிற்கும் பொழுது நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சில சண்டைகளையும் சச்சரவுகளையும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் அரங்கேற்றுவதுண்டு. வண்டியைச்சற்று தள்ளி ஓரமாக நிறுத்துங்கள் என்பார்கள். நாம் அதற்கு தயாராகி எரிபொருளின் அளவு பூஜியத்தில் இருந்ததா என்பதை கவனிப்பதற்குள் எந்திரத்தை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு முதலில் எரிபொருள் நிரப்பியவர் 100 ரூபாய்க்கு நிரப்பியிருந்தால் நமக்கு 100 ரூபாய் நட்டமாக நிறைய வாய்ப்பிருக்கின்றது. அதனால் எரிபொருள் நிரப்பும் முன் பூஜியத்தைக் கவனித்துக்கொண்டால் தேவையில்லாத சண்டைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோலிய எரிபொருள்கள் நிரப்பும் அளவு காட்டி, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அளவினை பயன்படுத்தி விநியோகிக்கப்படும் பெட்ரோல் / டீசல் அளவினை நுகர்வோர் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செ
ய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நாம் தெளிவாக 300 ருபாய்க்கு எரிபொருள் நிரப்புங்கள் என்று குறிப்பிட்டாலும் 100 ரூபாய்க்கோ , 200 ரூபாய்க்கோ தேவையான எரிபொருளை நிரப்பிவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டால் 100 ருபாய் தானே சொன்னீர்கள் என்று நம்மிடமே பரிசீலனைக்கு வருவார்கள். சரியாக கேட்கவில்லை என்று அவர்கள் காரணம் கூறுவதற்கு இடம்கொடுக்காமல் செய்கையில் காண்பிப்பதும், முதலிலேயே பணத்தை செலுத்தியும் நாம் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்று நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்புவதால் நஷ்டம் அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்.


பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் வகையில் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைபேசி செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.
விழிப்புணர்வுடன் இருப்போம்..வீண் விரயத்தைத்தவிர்ப்போம்.