Wednesday, April 1, 2020

ஏழு இராஜாக்களின் தேசம் - தம்பிதுரை வாசிப்புஅனுபவம்


கொரானோ ஊரடங்கு நாட்களில் பொழுது போக்க மிகவும் கடினமாக இருந்தது . என்ன செய்யலாம் ? சரி.‌‌... என் மகள் அபிநயா எழுதிய 'ஏழு ராஜாக்களின் தேசம்' புத்தகம் படிப்போம் என்று படிக்க ஆரம்பித்தேன். 140 பக்கம் படிக்கும் வரை ஆர்வம் அதிகம் இருந்தது. பிறகு சிறு தொய்வு ஏற்பட்டது. காரணம் ...அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தகவல்கள் தான். ஆனால் அதில் அவள் உழைப்பும் அர்ப்பணிப்பு தெரியவும் மீண்டும் ஆவலாக படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் வரலாறு மிகவும் பிடிக்கும் என்பதால், ரசித்து புத்தகத்தில் பயணம் செய்தேன்.



அபி துபாய்க்கு அழைத்த போது மிகவும் தயக்கமாக இருந்தது.. காரணம்.. விமான அனுபவம் கிடையாது... மனைவியுடன் போகிறோம் அக்காவையும் அழைத்து செல்கிறோம் . சரியாக அவளிடம் போய் சேர்வோமா என்ற பயம் வேறு…துபாய் பயணத்தின் போது மதுரை விமான நிலையத்தில் என்னை அழுத்திய ஒரு வித பதட்டத்தை வெளிகாட்டவில்லை . விமானம் இயங்க ஆரம்பித்த உடன் நானும் பறக்க ஆரம்பித்தேன். நான் துபாய்க்கு போகிறேன் என விமான கழிவறையில்
கத்தினேன்😃. பணிப்பெண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மகள், மாப்பிள்ளையை, அமிர்தவாணியுடன் வரவேற்பில் கண்ட பிறகு தான் மனம் நிம்மதி அடைந்தது. துபாய் விமான நிலையம் அடைந்தவுடன் பிரமித்து போனேன். அப்போது தான் எங்களை எந்த இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை
அவளிடம் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. புர்ஜ் கலீபா, டெஸர்ட் சபாரி , டால்பின் ஷோ, மிருகக்காட்சி சாலை, அவள் ஆசிரியர் ஜெயசித்ரா குடும்பம், ரேவதி சண்முகம் அண்ணி மகள் சிவகாமி குடும்பத்தினர் வெளிப்படுத்திய விருந்தோம்பல், டி.வி யில் மட்டுமே பார்த்திருந்த ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் பஸ் நிலையம், மால் அனைத்தும்
துபாய் பயணத்தில் மறக்க முடியாதது.
👏🏻👏🏻👌🙏.

இதனை பயணக்கட்டுரையாக தொகுப்பு செய்வேன் என அவள் கூறிய போது ஆச்சரியமாக இருந்தது. பயணம் நிறைவு ஆகி அவர்கள் சென்னை வந்தவிட்ட போதும் அவள் ஆர்வம் குறையவில்லை. புத்தகம் முதல் வடிவம் எடுக்க அவள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகமாகவே தோன்றியது. அழைத்துச் சென்ற அனைத்து இடங்களையும், சாப்பிட்ட உணவு மற்றும் பயண அனுபவத்தை அழகாக புத்தகத்தில் இடம் பெற வைத்திருக்கின்றாள். அருமை..

எல்லோரும் புத்தகத்தை விமர்சிக்கும் போது, பிறகு படித்து பார்த்து நானும் விமர்சிக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்கு இப்போது தான் காலம் கிடைத்தது. ஏகப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதனை மேம்படுத்த அவள் நினைத்தது என அத்தனை உழைப்பும் புத்தகத்தில் தெரிந்தது. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌
அய்யா உண்டு.

- தம்பிதுரை

#ஏழுஇராஜாக்களின்தேசம்