புகழுக்கும் இறுதி உண்டோ?
ஒருவரது புகழும்,சாதனையுமானது கதிரவனிடம் இருந்து வருகின்ற கதிரொளி போன்றது.அவர்
பூதஉடலைவிட்டு புகழுடம்பு எய்தினாலும்,வேறொருவர் அவரின் சாதனைகளையும், சாமர்த்தியங்களையும் செய்துகாட்டினாலும், அவரது தனித்தன்மையும், திறமையையும் தரணி
தன்நினைவில் வைத்துக் கொள்ளும்.யாருடைய புகழையும் யாராலும் மறைக்கவோ, மறக்கப்படவோ,மறுக்கப்படவோ
செய்ய இயலாது!
புகழ் மயக்கம்:
பிறரை புகழ்பாடுவது வேண்டுமானால் எல்லோருக்கும் பிடிக்காமல்
இருக்கலாம் ஆனால் புகழப்படுவது பூமியில் அனைவருக்கும் பிடித்ததொன்றே! புகழுக்கு
மயங்காதோர் தான் இப்பூவுலகத்தில் இல்லையே!
ஒருவன் இமாலய சாதனைகளை
எட்டும் பொழுது தென்றலாய் தீண்டும் புகழ் காற்று, அவனே கர்வகீரீடத்தை சூட்டிக்கொண்டு
உச்சத்தில் இருமாப்புடன் அமர்ந்திருக்கும் பொழுது சூறாவளியாய் சுழற்றி எட்டாத
தூரத்திற்கு எட்டிஉதைத்துவிடும் வலிமை கொண்டது.புகழ்ச்சி – நம் கண்ணோட்டம்:
வானில் தோன்றும் வெண்மதிபோல் அழகாய் காட்சி தந்து உள்ளத்தில்
உற்சாகத்தையும், உவகையையும் ஏற்படுத்தும் பெருமை கொண்டது புகழ்.புகழ் நிலையான இடத்தில்
நின்று கொண்டு நெஞ்சில் குதூகலத்தையும் கொண்டாட்டத்தை
ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.
புகழானது, நிலாபோன்று நிலையான தன்மையுடன் நிலவொளியை
நில்லாது நிறைவாக தந்தாலும், தேவையான நேரத்திற்கு ஆற்றலை அனுதினமும் பெருக்கிக்கொள்பவனே
வானில் வளர்பிறை வெண்மதியைக் காண்பது போல் வாழ்வில் புகழ் வெளிச்சம் பௌர்ணமயாய் பெற்றுக்கொள்கிறான்.
செயல்திறனை செம்மையாய் செயல்படுத்தாதவன் தேய்பிறை
வெண்மதியைப் காண்பது போல் தேய்ந்து அமாவாசையாய் வாழ்வில்
புகழ் வெளிச்சம் குன்றப்பட காணாமல் போகும் நிலையற்ற தன்மைக்கு தள்ளப்படுகிறான்.
புகழின் புகலிடம்:
நிகழ்கால வாழ்க்கை நிலையற்ற தன்மை கொண்டது.அத்தகைய
வாழ்க்கையில், அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் பதினாறு செல்வங்களுள்
திருத்தமாக ’தாழாத கீர்த்தியும் ....’ என்று குறிப்பிட்டு புகழின்
முக்கியத்துவத்தை மொழிகின்றார். வெற்றியையும், தோல்வியையும் சமமாக
எடுத்துக்கொள்பவனிடமே புகழ் புகலிடம் கொள்கின்றது.
புகழின் நற்பயன்கள்:
ஒருவரை
புகழ்ந்து போற்றி உற்சாகம் ஊட்டுவது,ஒரு
மரத்திற்கு தண்ணீர்
பாய்ச்சி அதற்கு ஊட்டமளிப்பது போன்றதாகும்.நாம் ஒருவரை
உள்ளத்திலிருந்து
உண்மையாய் பாராட்டும் பொழுது.
காய்ந்த நிலையில் உள்ள சிறு செடியானது இயற்கை உரத்திலிருந்து
இயல்பாக பலவகையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொண்டு சத்தான தரம் மிகுந்த
சிறந்த காய்கனிகளை அள்ளித்தருவது போல சோர்ந்திருந்த படைப்பாளரும் பயனுள்ள படைப்புகளை படைப்பார்.அதுவே செயற்கையாக
வஞ்சப்புகழ்ச்சி செய்யப்படும் பொழுது,செயற்கை உரத்திலிருந்து திணிக்கப்
படும்பொழுதும்,தண்ணீரை அளவுக்கு அதிகமாய் வாரிஇரைக்கும் பொழுது பெருமை கொண்டு மரம் தன் சிறப்புனை இழப்பது
போன்று தன் படைப்பின் தகுதியையும் இழக்கின்றான்.
புகழின் இலக்கு:
ஒருவர்
நம்மை புகழும் பொழுது கும்மாளத்துடன் புகழேணியில் ஏறும் மனது நம் குறைகளை
சுட்டிக்காட்டும் பொழுது தாழ்ந்து இறங்கி வந்து
தவறான
படிக்கட்டுக்களான படைப்புகளை திருத்திக் கொள்ளவேண்டும்.
புகழ்ச்சியின்
மீது இச்சைகொண்டும்,இகழ்ச்சியின் மீது அச்சம்கொண்டும் இருத்தல் கூடாது.பாரின்
பாராட்டுக்களால் திளைக்கும் பொழுது, படைப்பாளரின் படைப்புக்கள் புத்துணர்வு
பெறுவதுடன்,தகுதிபெற்றதாகவும் தரம்உயரத்தப்படுகின்றன.
கம்பர்,வள்ளுவரின் கருத்துகளும்
வார்த்தைகளும்:
உள்ளுவது எல்லாம்
உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
என்ற குறளில் நாம் நினைப்பவை எல்லாம் உயர்வாய் உச்சத்தை
தொடுவதாக அமைந்திருக்க வேண்டும்.அதற்கான பயிற்சியையும்,முயற்சியையும் மிகுந்த சிரத்தையுடன்
செய்தும்,விதியின்வசத்தால் கைகூடாமல் போனாலும் கைகூடியதற்கு ஒப்பாகக் கருதப்படும்
என்கிறார் வள்ளுவர். புகழின் பெருமையை அறிந்ததனாலேயே திருவள்ளுவர் புகழுக்கென்று
ஓர் அதிகாரத்துக்கு பத்து குறள்கள் விகிதம் படைத்துள்ளார்.
இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? என்ற
பாடல்வரியில் இராமன் வெற்றிப்பெற்று சரித்திரத்தில் அவர் பெயர்
இடம்பெற்றாலும் அவருக்கு ஈடுகொடுத்து சக்தியை வெளிப்படுத்தியவரின் பெயரும்
இடம்பிடிக்கும்.நிலையற்ற வாழ்க்கையில் நிலையானது புகழே என்று நினைவுகூறுகிறார்
கம்பர்.
முடிவுரை:
அத்திப்பழத்தில் தோன்றி மறையும் கொசுக்களை போல் அல்லாமல்
'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.'
என்ற வள்ளுவரின் வாக்குப்படி பூமியில் பிறந்தவர்கள்
புகழ்பெறும்படி தங்கள் வாழ்க்கையில் தேர்ந்த இடங்களில் திறமைகளை திறம்பட
தெரிவிப்பது போன்று வாழ வேண்டும். தங்கள் திறனை தரணியறியச் செய்யாது,புகழ் பெறாது
வாழ்பவர்கள் இவ்வுலகத்தில் தோன்றியதற்கு தோன்றாமல் இருத்தலே நல்லது
என்றுரைக்கிறார்.
எந்த துறையில் கால்பதித்தாலும் முழுஈடுபாட்டுடனும்,தங்கள் திறமையை வளர்த்துக்
கொண்டு பட்டைத்தீட்டி வைரமாய் மின்னிஒளிவீச வேண்டும்.
இம்மண்ணில் பூத உடலுக்கு இறுதி உண்டே தவிர புகழ் உடலுக்கு
இறுதியில்லை என்பது நிதர்சனம்
No comments:
Post a Comment