வெயிலில் விளையாடாதே
வசீகரம் வீணாகுமென்றாள் அம்மா!
எடைக்குஎடை சீர்செய்ய
சிரத்தை கொண்டார் அப்பா!
திருமணம் சந்தையென்று திகைப்பூட்டினார் மாமா!
கண்ணாடியைக் கழற்றி கண்சிகிச்சைக்கு ஏற்பாடு!
பொறியியல் படிப்பும் பொதுவாய்போனது!
தரகருக்கு தட்சணை தந்தும்
இணையக்கடலில் வலைவீசியும்
முகப்புத்தகத்தில் முகம்கண்டும்
சுற்றத்தினரிடம் சுற்றியும்
வரன்களை வடித்தெடுத்தார்கள்!
படையோடு பாய்ந்துவந்தபின்
உருவமைப்பு உருத்துகின்றது
நிறம் நிறைவாயில்லை
கோள்களில் கோளாறு
பொருளாதாரம் பொருந்தவில்லையென்று
பலப்பீடிகை புரிந்தார்கள்!
பொழுதுபோக்கு எப்பொழுதும் கூடாது!
ஆண்நண்பர்கள் அறவேகூடாது!
விருப்பஆடைக்கு விதிமுறை!
வேலைக்குபோகின்ற வேலையில்லை,
வேலைக்குச்சென்றாலும் வங்கிக்கணக்கு அவன்வசமாம்!
மதுவும்,புகையும் நாகரிகமாம்!
கட்டளைகள் கலவரத்தைக் கொடுத்தாலும்
கனவுகளை காதல்செய்யும் கணவனை
கடவுளிடம் கேட்கிறேன்!!
No comments:
Post a Comment