Monday, February 27, 2017

மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிறுவயதில் பெறும்பாக்கியத்தை 
இழந்து தவிப்பு!
மற்றொரு பாக்கியமாய் 
தாரம் தமிழ்செல்வியின் 
தீராக் காதல் அரவணைப்பு!
சிறுபாக்கியத்தை பெற்று
என்றும் நீங்காமல் 
அன்போடு அணைப்பு!

தாயில்லையென்றாலும்
தம்பிகள் தமக்கைக்கு
தாயுமானவர்!
தந்தைப் பொறுப்பை
தந்நலம் கருதாததேற்று
தகப்பனுமானவர்!

உரமிட்டு வளர்த்த ரோஜாசெடி
உள்ளத்தை முட்களால்
கிழித்தாலும்
முகத்திலோ புன்னகை!
எக்குறையும் நிறையாக்கிடுவார்
தொழிலிலும் செயலிலும்!

விடாமுயற்சிக்கு
விடியல் கிடைத்தது
மகனுக்கு முன்மாதிரியாய்
ஒழுக்கம் கற்பிப்பு
மகளைத் தாய்போன்று
திறமையுடன் வளர்ப்பு

மருமகனென்றாலும் மகன்
போன்று பாவிப்பு
மருமகளென்றாலும் மகள் 
போன்று கவனிப்பு
இராசிநட்சத்திரமென்று நமக்குள்ளே
எவ்வளவு ஒற்றுமை
கேலிப்பேச்சுக்களில் மட்டுமே
எள்ளளவு வேற்றுமை

பேரன்களுடனான பிரியம்
முடிவில்லாமல் நீளுமே
பேத்தியுடனான அன்பு 
பெருகிடும் எந்நாளுமே!

பட்டுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பட்டு என்ற பெயருக்கேற்று
மிருதுவானவள்
மருத்துவராய் மற்றோர் மனதிலும்
இடம்பிடித்தவள்

சிறுவயதிலேயே சொக்கவைக்கும்
ஆங்கில உச்சரிப்பு
திறமையிலும் உற்சாகத்திலும்
எல்லையில்லா ஆர்ப்பரிப்பு

இரு பெரும்மருத்துவர்களின்
இருதயமானவள்
ஆகாயபுகழ் கொண்ட அண்ணனுக்கு
ஆர்ப்பாட்டமில்லா
அன்புத்தங்கை ஆனவள்!

பதின்ம வயதில் உன்னால்
கரடிபொம்மையின் மேல் காதல்
திறமைகளில் உன்னை மிஞ்சிட
பொறாமையில் மோதல்

பெற்றோரின் பெயருக்கு 
எட்டுத்திக்கும் சேர்த்திடுவாள்
பெருமை 
கலைவாணியாய் கருவியும்மீட்டி
பாடுவதோ அருமை

இளங்கலைப் படிப்பு நுழைவு
பொருளாதார தேவைக்குப்
பெற்றோரின் இசைவு
முதுகலைப் பட்டப்படிப்புக்கோ
மூழ்கியவளே முத்தெடுத்தாள்

சப்பாத்தியும் தயிரும்
இத்தனைச் சுவையா?
அத்தையின் சுவையை
அம்மைக்கும் சொன்னால்
உன் மருமகள்

இருபாட்டிகளின் இதயங்கனிந்த  
ஆசிர்வாதம் என்றுமே உன் பெயரில்
புகழ்பல பாரில் பெற்றிடுவாய்
பூவுலகில் பலரை அழைத்திடுவர்
உன் பெயரில்!

Friday, February 24, 2017

உலகிலே பெரியது! உயரமானது!

“உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான பேரங்காடிக்குக் கூட்டிச்செல்கிறேன்! கால் வலிக்கிறது என்று கதறக்கூடாது!” என்று எச்சரித்தபின் எங்களைத் துபாய் பேரங்காடிக்குக் கூட்டிச் சென்றார் கணவர். அலுவலக நிமித்தமாக சிலநாட்கள் துபாய் வந்திருந்த கல்லூரித் தோழி செல்வமீனா, என் பெற்றோர், அத்தை, கணவரின் பெற்றோர் என பலபேரை பலதடவை மெட்ரோ இரயில் வழி பிரசித்தி பெற்ற பேரங்காடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம்.

துபாய் பேரங்காடி, 2717 அடி கொண்ட உலகத்திலேயே உயர்ந்த கட்டிடமான புர்ஜ்கலிஃபா ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்வதற்கான மிகச்சுலபமான போக்குவரத்து வழி மெட்ரோ இரயில் பாதைதான்.
துபாய் பேரங்காடி/புர்ஜ்கலிஃபா என்று சிவப்பு வழிப்பாதையில் அமைந்திருந்த மெட்ரோ இரயில் நிறுத்தத்தில் இருந்து துபாய் பேரங்காடிக்குச் செல்ல குளிரூட்டப்பட்ட மூடு நடைபாதையை அமைத்திருந்தார்கள். அந்த நடைபாதையில் கூட நாம் முழுதூரம் நடக்கத்தேவையில்லை. பேரங்காடிக்கு உள்ளே நடக்க நமக்கு தெம்புவேண்டும் என்பதற்காகவே தரையில் இயங்கும் படிக்கட்டு (Walking escalator) பதித்திருந்தினர்.

நாம் அதில் ஏறி நின்றாலே போதும் குறிப்பட்ட தூரத்திற்கு அதுவே நம்மை கொண்டு சேர்த்துவிடும். அவசரமாக செல்ல நினைப்பவர்கள் அதிலும் ஏறி ஓட்டுமும் நடையுமாய்ச் செல்வார்கள்.
மாற்று பாதையாக மெட்ரோ இரயில் நிருத்தத்தின் கீழ்தளத்தில் இருந்து பேருந்து வழியாகவும் மக்களை ஏற்றிக் கொண்டு பேரங்காடிக்குக்கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பேரங்காடிக்குச் செல்வதற்கான மூடுநடைபாதை வழியே நடக்கும் போது வானுயர வெள்ளியானால் ஆன கட்டிடம் சூர்யஒளியில் ஜொலிஜொலிப்பது போன்ற புர்ஜ்கலிஃபாவை அனைவருமே அங்கிருக்கும் பெரியக் கண்னாடிச் சாளரங்கள் வழியே கழுத்து வலித்தாலும் நிமிர்ந்து பார்ப்பார்கள். ஒளிப்படம் எடுத்துக் கொள்வார்கள். மூடுநடைபாதையில் வழி நெடுகிலும் ஒளி டையோடுகளால் உருவாக்கப் பட்டிருந்த பல தொலைக்காட்சியில் (LED) பேரங்காடிக்கு வெளியே நடைபெறும் பிரசித்தி பெற்ற ஒலி ஒளியுடன் நடைபெறும் நீருற்று நிகழ்ச்சி , பேரங்காடியின் சிறப்பை விளக்கும் காட்சிகளை ஆர்வமூட்டும் வகையில் விளம்பரப்படமாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

பேரங்காடியின் நுழைவுவாயிலில், ஒவ்வொரு கடையிலிருந்தும் தங்கள் கடைகளில் மக்கள் சிற்றிடை உணவு உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறுசிறு கிண்ணங்களில் தங்கள் கடைகளின் பிரசித்திப் பெற்ற உணவுகளைச் சுமந்தபடி பணியாளர்கள், மக்கள் எடுத்துச் சுவைப்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். இலவசம் என்பதால் நாம் எடுத்துச் சுவைத்திவிட்டுச் சென்றாலும் ஏதும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அக்கடையில் உணவு ஏதேனும் வாங்காமல் மாதிரி உணவைச் சுவைக்க அனைவரும் ஒருவிதக்கூச்சம் கொள்வார்கள்.

நுழைவுவாயிலின் ஓரத்தில் ஓர் கடையில் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களான சீப்பு, குடை போன்றவற்றையும் அழகுடன் இரசிக்க வைக்கும்படி பொம்மை முகங்களுடன் மனதைக்கவரும் வண்ணம் படைத்திருந்தார்கள். மிகப்பெரிய பேரங்காடியென்பதால் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்று விதவிதமான நீள் சாய்வு இருக்கைப் பலகைகளையும், உயர்தர ஆடம்பர மெத்தை வைத்த ஆசனங்களையும் பல இடங்களில் அமைத்திருந்தார்கள்.
மிகப்பெரிய பேரங்காடியில் தொலைந்துவிட்டாலோ அல்ல சில குறிப்பட்ட இடங்களுக்குச் செல்லவேண்டுமென்று நினைத்தாலோ ஆங்காங்கே இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ , வழிப்பலகைகள் வழியாகவோ வழியைத் தெரிந்து கொண்டு செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றிடலாம்.

(yoghurt land) யோகர்ட்லேண்ட் எனப்படும் ஒருகடையில் விதவிதமான பழச்சுவையையும் நறுமணத்தையும் கொண்ட தயிரை விற்பனைசெய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அது பார்ப்பதற்கோ, சுவைப்பதற்கோ தயிர் போன்றல்லாமல் ஒருவிதமான புளிப்பு குளிர்பாலேடு (ice cream) போல் இருந்தது. விருப்பப்பட்ட வகைவகையான தயிர்களை ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்துக்கொண்டு அதைவிதவிதமாக திராட்சை, முந்திரி போன்றவற்றினால் மேல்புறத்தில் அலங்கரிக்க, அதன் எடையைப் பொருத்து பணம் பெற்றுக் கொண்டார்கள்.

கொடுத்த பணத்தை இந்திய மதிப்பிற்கு நாங்கள் கணக்கிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு வாடிக்கையாளர் ஒரு வாய் ருசித்துவிட்டு அவரது கிண்ணம் முழுதும் நிரம்பியிருந்த வண்ணவண்ணமான தயிரைக் குப்பைத்தொட்டியில் போட அதைப்பார்த்த நானும் என் தமிழ்ச்செல்வி அத்தையும் கண்களாலேயே அதிர்ச்சி அலைகளைப் பரிமாறிக் கொண்டோம்.

உலகிலேயே பேரங்காடியினுள்ளே அமைந்திருக்கும் பெரிய நீர்வாழ்காட்சி சாலையைப் பார்த்தபின் எல்லோருமே மலைத்துத் தான் போயிருந்தோம். பிரமாண்டமான நீர்வாழ்காட்சிசாலைக்கு நடுவே ஒரு குகைப் பாதையை அமைத்து சுமார் நூறு திராம்கள் கட்டணம் வசூலித்து மக்களை உள்ளே அனுமதித்திருந்தார்கள். குகைப் பாதை வழியே சென்றவர்கள் அனுபவம் பிரமாதம் என்று கூறினாலும், எங்களுக்கு நீர்வாழ்காட்சிசாலையைச் சுற்றியிருந்த கண்ணாடி வழியும், அருகிலிருந்த படிக்கட்டில் ஏறி முதல் தளத்தில் உள்ள கண்ணாடிக் கூண்டின் வழியே அனைத்து வகையான மீன்களையும் பார்த்ததே நீர்வாழ்காட்சிசாலையை (aquarium) முழுதாய்ப் பார்த்த மனநிறைவைத் தந்தது.

நீர்வாழ்காட்சிசாலையின் கண்ணாடியைத் தொட்டுத்தட்டிப் பார்த்துவிட்டு “கண்ணாடி வலிமையானதா? கீரல் விழுந்துவிட்டால் என்ன செய்வது?“ என மாரீஸ்வரி அத்தை மிரட்சியுடன் கேட்டார்.ஏற்கனவே ஒரு முறை இப்படி தண்ணீர் கசிந்தது அதனை உடனே நிர்வாகத்தினர் கடைக்காரர்களை வெளியேற்றிவிட்டு சரிசெய்துவிட்டனர் என்று நான் கூற அத்தை கண்ணில் ஒரு பயம் தெரிந்தது.

கட்டணத்திற்கு ஏற்றார் போல் நீர்வாழ்காட்சிசாலையில் கண்ணாடி அடிப்பாகத்தின் வழி மீன்கள், உயிரினங்களைப் பார்வையிடுவது       கொண்ட படகுச்சவாரி (glass bottom ride) ஆழ்கடல் நீச்சல்(scuba diving), ஒரு கூண்டின் வழி உயிரினங்களுக்கு உணவு வழங்குவது போல பல சாகசங்கள் புரிய வாய்ப்பளித்திருந்தனர்.

குழந்தைகள், மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் படி கடல் உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைப் பாதுகாக்கும் எண்ணத்தை மனதில் விதைக்கும் வகையில் நீருக்கடியில் பூங்கா (underwater zoo) அமைத்திருந்தனர். கட்டணத்தின்படி மக்களை நீருக்கடியில் இருந்த பூங்காவிலிருக்கும் முதலை,பெரிய நண்டுகள், பனிப்பாடி எனப்படும் பென்குவின் (penguin), தண்ணீரில் வசிக்கும் எலிகள், ஆபத்தான மீன்கள், கடல் குதிரைகள், நுங்குமீன் (மெதுசா) எனப்படும் ஜெல்லி மீன்(jelly fish) போன்றவற்றைப் பார்வையிட அனுமதித்தார்கள்.

நீருக்கடியில் அமைந்திருந்த பூங்காவிலுள்ள மிக நீளமான முதலையைப்  போன்ற மாதிரி சிலையை நீர்வாழ்காட்சிசாலை அருகே உண்மையான முதலை  போன்று தத்ரூபமாக அமைத்திருந்தனர். 
பேரங்காடிக்கு வெளியே நடைபெறும் பிரசித்தி பெற்ற ஒலி ஒளியுடன் நடைபெறும் நீருற்று நிகழ்ச்சியைக் காணச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துத் தயாராய் உட்கார்ந்து இருந்தோம். நீருற்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து எல்லோரையும் தன் கம்பீரத்தால் சிறைக்குள் அடைத்திருந்த புர்ஜ்கலிஃபாவை எங்கள் ஒளிப்படங்களுக்குள் சிறைபிடித்துக் கொண்டோம். நீருற்று நிகழ்ச்சியுடன் ஒலிபரப்பப்பட்ட இசை உலகத்தர இசையாய் இருந்தாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மனதை வருடும் இசை போலவே எனக்குத் தோன்றியது.

ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வெவ்வேறு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்றாற்போல் எண்ணற்ற நீருற்றுக்கள் வளைந்து நெளிந்து ஆட்டமாடி எல்லோர் மனங்களையும் வசியப்படுத்தியது. ஒலிபரப்பப்படும் பாடல் உச்சஸ்தாயியைத் தொட  நீருற்றுக்களும் விண்ணைத் தொடுவது போல் வானைநோக்கிப் பீறிட்டன. 

நீருற்று நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தி ஏற்பட்டாலும் அடுத்த நீருற்று நிகழ்ச்சியை அரைமணி நேர இடைவேளையில் திரும்பவும் பார்க்க பலர் ஆயத்தமானார்கள்.
கம்பீரமான புர்ஜ்கலிபாவின் மேல் ஒளி,ஒளிமி (laser) வழி விதவிதமான பூ மற்றும் வடிவங்களை விசேஷ காலங்களில் ஒளிபரப்பினர். சில நாடுகளுடனான நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் மற்ற நாடுகளின் சுதந்திர தினம் அல்ல குடியரசு தினத்தை முன்னிட்டு அந்த நாட்டுக்கொடிகளை வண்ணங்களாய் புர்ஜ்கலிபாவின்மேல் படரவிட்டு நட்பு பாராட்டினர்.

பேரங்காடிக்குள் உலகிலேயே மிகப்பெரிய மிட்டாய் கடையான கேண்டி ஸ்டோரில் (candy store) பணியாளர்கள் செய்யும் மிட்டாய்களை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தோம். மேஷ்மலோஷ் (mashmallows) எனப்படும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு போன்ற பலவண்ண மிட்டாயில் பெரும்பாலும் மாட்டிறைச்சியின் பசை(beef gelatin ) கலந்திருப்பாக மிட்டாய்களின் உறையிலேயே குறிப்பிடப் பட்டிருந்ததால் மீன்இறைச்சிப் பசை(fish gelatin) கலந்துள்ள மேஷ்மலோஷ் மிட்டாய்களைக் கணவர் தேர்ந்தெடுக்கலானார். பல வண்ணங்களில் பல வடிவமைப்புகளில் இருந்த மிட்டாய்களைச் சுவைக்க சிறுவர்கள் மனம் மட்டுமல்லாது பெரியவர்கள் மனமும் கண்டிப்பாக ஏங்கும்.

பேரங்காடியினுள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாகசங்களுடன் விளையாடுவதற்கு பனிச்சறுக்கு மைதானம் அமைத்திருந்தார்கள். “உள்ளம் கொள்ளைபோகுதடா” என்றொரு மொழிபெயர்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் இந்த குளிரூட்டப்பட்ட பனிச்சறுக்கு அரங்கில் தான் கதாநாயகி அமர்ந்து தன் குழந்தை பனிச்சறுக்கு விளையாடுவதை இரசிப்பாள் என்று மாரீஸ்வரி அத்தை உற்சாகம் பொங்கக் கூறினார்கள்.
அருவி போல எண்ணற்ற சிறுதுளைகளில் வழி தண்ணீர் வழிய ஏற்பாடு செய்து அதில் பல மனித உருவங்கள் குதித்து நீந்துவது போல சிலைகள் செய்து வைத்திருந்தார்கள்.

 “உலகத்திலேயே 828 மீட்டர் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு செல்வதற்கு ஆசையாக இருக்கிறதா?” என்று என் பெற்றோரிடமும், மாரீஸ்வரி அத்தையிடமும் கேட்க அம்மாவும், அத்தையும் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு விமானத்தில் இருந்தே துபாயின் அழகை இரசித்துவிட்டோம் என்றார்கள்.
அப்பாவோ “இவ்வளவு தூரம் வந்து பெருமைவாய்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடத்தைப் பார்க்காமல் செல்வதா?” என்று தன் ஆசையை வெளிப்படுத்த புர்ஜ்கலிஃபாவில் பணிபுரியும் ஒரு தெரிந்த நண்பரின் உதவியுடன் சில சலுகையுடன் 105 திராம்களுக்கு தனிநபர் நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டோம்.

காலை மற்றும் இரவு வேளைகளில் புர்ஜ்கலிஃபாவிற்குச் சென்று  வெளியுலக அழகை இரசிக்க 130 திராம்களென்றும், மாலை வேளையென்றால் காலை, இரவு என்ற இருவேளையிலும் துபாயின் எழில், புர்ஜ்கலிஃபாவிலிருந்து நீருற்று நிகழ்ச்சி, சூரியன் மறையும் அழகு போன்ற பல விஷயங்களைப் பார்க்க வாய்ப்புள்ளது என்பதால் 180 திராம்களென்றும் கேள்விப்பட்டிருந்தோம்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகப் பிரசித்து பெற்ற வண்ண பட்டாசு வேடிக்கையை வானில் ஏற்படுத்தாமல் வித்தியாசமாக புர்ஜ்கலிஃபாவைச் சுற்றி ஏற்பாடு செய்வார்கள்.  இந்த கட்டிடத்தைச் சுற்றி வண்ண பட்டாசு வேடிக்கையை ஒவ்வொரு வருடமும் நடத்துவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னேயே ஏற்பாடு செய்வார்கள் என்று கேள்விபடும் அனைவருமே ஆச்சர்யபடுவார்கள். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைக் முன்னிட்டு இந்த வண்ண பட்டாசு வேடிக்கையைப் பார்வையிட லட்சக்கணக்கானோர் திரண்டு வருவார்கள்.

2016  புத்தாண்டுக்கான பட்டாசு நிகழ்ச்சியைக் காண கணவரும், தமிழ்செல்வி அத்தையும் சென்றிருந்த பொழுது தான் புர்ஜ்கலிஃபாவிற்கு அருகே இருந்த நட்சத்திர தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசு நிகழ்ச்சி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்த வேளையில் புர்ஜ்கலிஃபாவில் நடைபெற்ற பட்டாசு நிகழ்ச்சியைப் பார்த்தபின்னரே கணவரும், அத்தையும் வீடு திரும்பினர்.

எங்களுக்குக் காலை 11.00 மணிக்கு புர்ஜ்கலிஃபாவிற்குச் செல்ல அனுமதி கிடைத்திருந்ததால், காலை வேளை பரபரப்புடன் ஓடும் மெட்ரோ இரயிலில் மக்கள் கூட்டத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக துபாய் பேரங்காடி வழியாக  புர்ஜ்கலிஃபாவிற்கு உள்ளே செல்லும் வாயிற்கதவு (at the top@burj khalifa) அருகே சென்றோம். பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து, வழியில் அமைந்திருந்த மாதிரி புர்ஜ்கலிஃபாவிற்கு அருகே ஒளிப்படம் எடுத்துக் கொண்டு, 124 வது மாடியை அடையக் கூடிய மின்தூக்கியை (lift) நோக்கி ஆர்வத்துடன் நடக்கலானோம்.

துபாய் அரசுக்கு பொருளுதவி செய்த அபுதாபி அரசரை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரைச் சூட்டி புர்ஜ் துபாய் புர்ஜ் கலிஃபாவாக மாறிய நிகழ்ச்சியைப் பெற்றோருக்கு விளக்கினேன்.
வழிநெடுகில் அந்த மிகப்பெரிய கட்டிடத்தை எவ்வாறு கட்டினார்கள், எந்தெந்த வருடம் எத்தகைய உயரத்தை அடைந்தது, அதன் அடித்தளமான Y வடிவமைப்பு போன்றவற்றை காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

போகும்வழியில்  ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நின்று பார்த்தோமானால்  புர்ஜ்கலிஃபாவில் எத்தனையாவது மாடிக்குச் செல்கிறோம் என்பதைப் பார்க்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.
வழிநெடுகிலும் பாதுகாவலர்கள் விரைப்பாக நன்றாக உடையணிந்து நம்மை சிரித்தமுகத்துடன் வரவேற்று சிறப்பாக வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

 கட்டிடத்தில் 124வது மாடியை 1 நிமிடத்திற்கும் குறைவாக 58 நொடியில் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த    இயங்கும்ஏணி(lift)  எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மின்தூக்கியிலும் அந்த 58 நொடியும் அலுக்காமல் இருக்க அங்கும் ஒலிஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அப்பா ”மொத்தம் எத்தனை மாடிகள்?” என்று ஆர்வமாய் வினவ மொத்தம் 163 மாடிகள் இருந்தாலும் 154 மாடிகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. 9 மாடிகள் பராமரிப்பு காரணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்று விளக்கினேன்.

124, 125வது மாடிகளில் இருந்து கண்ணாடிகளால் மூடப்பட்ட முகப்புகளின் வழியே பார்த்த பொழுது சாலைகளில் போகும் வண்டிகள் அனைத்துமே குழந்தைகள் விளையாடும் பொம்மை வண்டியைப் போலவே காட்சி அளித்தன. அங்கே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வழி பல வருடங்களுக்கு முன், இரவில் என்பது போன்ற பலகாலநிலைகளில் துபாயின் வளர்ச்சியையும், அழகையும் கண்டுகளிக்க ஏற்றவாறு ஏற்பாடு செய்திருந்தார்கள்.   

10திராம்கள் கொடுத்தால் புர்ஜ்கலிஃபாவின் உருவத்தைப் பதித்த நினைவுசின்னங்கள் நமக்குக் கையில் கிடைக்கும்படி தரும் இயந்திரத்தை நிறுவியிருந்தார்கள். அது மட்டுமல்லாது புர்ஜ்கலிஃபாவின் உருவம் பதித்த குவளைகள், சட்டைகள் போன்ற பல பொருட்களை ஞாபகச் சின்னமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.
இப்பெருமைவாய்ந்த கட்டிடத்தில் அலுவலகங்கள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்களென அனைத்துமே அமைந்திருந்தன.

சாலைகளில் கழுத்துவலிக்க தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்த கட்டிடங்களை தலை குனிந்து தேடிப் பார்ப்பது வித்தியாசமாய் இருந்தது. துபாயில் ஒரு கட்டிடம் மற்றொரு கட்டிடம்போல் இல்லாமல் தனித்தன்மையுடன் காட்சிதர அவைகளை கட்ட உதவிபுரிந்த அனைத்து நாட்டைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர்களையும், கட்டிடப் பணியாளர்களையும் எண்ணி வியந்தோம்.


திரும்பி வருகையில் பெருமை வாய்ந்த புர்ஜ்கலிஃபா தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அந்த கட்டிடத்தின் வளர்ச்சிக்கு உழைத்த அனைத்து துறையைச் சேர்ந்த மக்களும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்த கானொளியை சொகுசான மெத்தை இருக்கையில் அமர்ந்து காண நேர்ந்தது. அதில் புர்ஜ்கலிஃபாவின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளி நேர்காள்ளும் ஆபத்துகளைக் கண்டு நடுங்கிவிட்டோம்.கின்னஸ் சாதனைகளில் இடம்பெற்றிருந்த கட்டடத்தை நாமும் சென்று பார்வையிட்டோம் என்ற பெருமையுடன் வீடு திரும்பினோம்.

Wednesday, February 22, 2017

ஓங்கிலுடன் ஓடி விளையாடிடுவோமே!

புதிதாய் துபாய் வந்திருந்த பொழுதே, சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை இணையத்தில் மேய ஆரம்பித்திருந்தேன். ஓங்கிலும்(dolphin),  நீர்நாயும்(seal) பங்குகொண்டு நம்மை இரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று கேள்விப்பட்டிருந்ததில் இருந்து கணவரைக் கூட்டிச்செல்லுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தேன்.

குழந்தை சற்று பெரியதாகட்டும்,  உறவினர்கள் யாரேனும் சுற்றுலாவிற்கு வருகைத் தரும் வேளையில் அவர்களுடன் செல்லலாம் என்று கணவர் பல காரணங்கள் கூறியும் கேட்காமல் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று  அடம்பிடித்தேன். மத்தியகிழக்கு நாடுகளிலேயே ஆரம்பிக்கப்பட்ட முதல் உட்புற குளிரூட்டபட்ட ஓங்கில்நீர்நாய்க்காட்சிசாலைக்கு செல்ல யாருக்குத்தான் ஆசைஇருக்காது?

என் தொல்லை தாங்க முடியாமல் கணவர், நண்பர் பாஸ்கர் அவர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டைவழி நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டைவழி முன்பதிவு செய்யும் பொழுது அது சில பரிசுகளுக்கோ , சிக்கனத்திற்கோ வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்.

திங்கள் மற்றும் வெள்ளி காலை 11மணி காட்சிகள் என்றால் 70 திராம்களுக்கு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். அதுவே மற்ற நாட்கள் என்றால் 100 திராம்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். கேரிபோர் (Carrefour) எனும் பிரசித்தி பெற்ற பலபொருள் அங்காடியில் பொருள்கள் வாங்கியிருந்தோமானால் அந்த இரசீதின் பின்பக்கத்தில் ௐங்கில் நீர்காட்சிசாலையின் சலுகை விளம்பரத்தை  உபயோகப்படுத்தி எந்த  நாட்களிலும் செல்வதற்கான 75 திராம்கான  நுழைவுச்சீட்டை பெற இயலும்.

முதன் முதலில், சமீபத்தில் துபாய் வந்திருந்த சுஜி-சதீஷ் தம்பதியனருடன் கிரீக் பூங்காவிற்கு( creek ) பயணப்பட்டோம். கடற்கழி எனப்படும் சிற்றோடை அமைந்திருந்ததால் அப்பூங்கா அப்பெயர்பெற்றிருந்தது. அப்பூங்காவில் தான் ௐங்கில் நீர்காட்சிசாலையும், வண்ண வண்ணப் பறவைகளின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
வாடகை வண்டியில் அப்பூங்காவிற்குச் செல்வதே மிகச்சிறந்த போக்குவரத்து வழியாகும்.சுஜி-சதீஷ் தம்பதியனர், பெற்றோர், அத்தை-மாமா, அத்தை மகன் இராம்-உமா தம்பதியனருடன் என்று நான்கு தடவை ௐங்கில் நீர்காட்சிசாலைக்கு சென்றிருந்தாலும், ௐங்கிலும் நீர்நாயும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சாகசங்கள் செய்து ஆச்சர்யமூட்டின.
இரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுக்கும் 70 திராம்களுக்கு நுழைவுச்சீட்டு வாங்கவேண்டும். என் குழந்தையின் இரண்டாம் பிறந்தநாளுக்கு முந்திய தினம் சென்றிருந்த பொழுது பாதுகாவலப் பெண்மணி , உயரமான என் குழந்தையின் வயதைக் கேட்க நான் ஒன்றரைவயது என்று அடித்துவிட , வயதை நிரூபிக்கும் வகையில் தற்காலிக அமீரகக் குடியுரிமை அட்டையைக் கேட்டார். அட்டையைப் பார்த்து விட்டு ஒன்றரைவயது அல்ல இரண்டு என்று முறைத்து விட்டு உள்ளே அனுப்பினார். பிறந்தநாள் அன்று என்றால்கூட நுழைவுச்சீட்டு எடுக்க வைத்திருப்பார்.

திங்கள்கிழமை தள்ளுபடி விலை என்பதனால் 1250 பேர் அமர்ந்து இரசிக்கக்கூடிய ஓங்கில் நீர்காட்சிசாலை அரங்கத்தினுள்ளே பள்ளி சிறுவர் சிறுமியர் கூட்டம் நிரம்பியிருந்தது. நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்த நேரம் முதல் அரங்கில் உற்சாகக்குரல்கள் ஓங்கியிருந்தது. விருப்பமானவர்களுக்கு சில திராம்களை கட்டணமாகப் பெற்று சில எண் பதித்த பந்துக்களை அரங்கத்தில் கட்டணம் செலுத்தியவர்களிடம் கொடுத்திருந்தார்கள். அனைவரும் ஒரே நேரத்தில் பந்தை தண்ணீருக்குள் எறிய ௐங்கில் எடுத்துத்தரும் பந்தின் உரிமையாளருக்கு நிர்வாகத்தினர் பரிசு கொடுத்தனர்.

பள்ளிச் சிறுவர் சிறுமியரின் உற்சாகம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நமக்கும் கடத்தப்படும். ஓங்கில்களும் நீர்நாய்களும் செய்யும் சேட்டைகளைக் கண்டு  பெரியவர்களும் குழந்தைகளாவது நிச்சயம்.
பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் தங்கள் ஆசிரியரிடம் பணம் கொடுத்து அரங்கத்தினுள்ளே  விற்றுக்கொண்டிருந்த திண்பண்டங்கள் வாங்கித்தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்


ஓங்கில்கள் ஆடி, பாடி, சாகசங்கள் பல செய்து மக்களின் மனதில் நண்பனாய் இடம் பிடித்திருந்தது. பயிற்சியாளருக்கும் ௐங்கிலுக்கும் இரகசிய மொழி உள்ளதை எல்லாராலும் உணர முடிந்தது. எதிர்பாராத உயரத்தை அசாத்தியமாகத் தாவி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


நீர்நாய்கள் பந்துவைத்து விளையாடி, ஆடி ஒவ்வொரு சாகசம் முடித்த பின் அந்த ஆண்பயிற்சியாளரிடமிருந்து பரிசாக தன் உணவை ஆர்வமாய் வாங்கிக்கொண்டது . அங்கிருந்த பெண்பயிற்சியாளரும் ஓங்கிலுக்குத் தேவையான உணவை தாய் தன் குழந்தைக்கு உணவைத் தயாராய் வைத்திருப்பது போல் வைத்து ஒவ்வொரு சாகசம் முடித்த பின்னும் வழங்கினார்.

ஓங்கில்கள் வரைந்த புதுவகை ஓவியங்கள் எவ்வளவு விலையாயினும் ஏலம் நடைபெற்று கண்சிமிட்டும் நேரத்திற்குள் விற்றுத்தீர்ந்தன.கட்டணத்திற்கு ஏற்றார் போல் ஓங்கில்களைத் தொட்டுப்பார்த்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ஒளிப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.

ஓங்கில்களையும் நீர்நாய்களையும் அழகான பெயர்கொண்டு அழைத்து சாகசங்கள் செய்யவைத்தனர். பெரிய பெரிய பந்துகள் வைத்து அரங்கத்திலுள்ள அனைத்து மக்களுடன் ஓங்கில்கள் விளையாடி வலுவலுப்பு பாதையெல்லாம் தண்ணீர் தெளித்து வைத்ததனால் கவனமாகப் பார்த்து நடக்க வேண்டியதாயிற்று. 
ஓங்கில்நீர்நாய்காட்சி சாலையில் நிகழ்ச்சி காலை 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் நிறைவுபெற்றுவிட, 12.15க்கு உடனே பறவைக்கான நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும்

ஓங்கில்நீர்நாய்காட்சிசாலை நுழைவுச்சீட்டைக் காட்டினோமானால் பறவைகள்சாகச நிகழ்ச்சிக்குப் பத்து திராம்கள் சலுகை செய்து 40 திராம்களுக்கு நுழைவுச்சீட்டு தருவார்கள். இந்நிகழ்ச்சிக்கு ஒரே ஒருமுறை சுஜி-சதீஷ் தம்பதியனருடன் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடனே எங்களனைவரையும் கையைநீட்டச் சொல்லி இயற்கைக்காட்சிகளின் பின்புலத்தில் ஒளிப்படம் எடுத்தனர்.

எதுவும் புரியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட எங்களுக்கு நிகழ்ச்சி முடிந்தபின் தான் விஷயம் விளங்கியது. பெரியவர்களின் கைகளிலும் , குழந்தைகளின் தலையிலும் பறவைகள் இருப்பது போல மாற்றிய ஒளிப்படத்தை இயற்கைக்காட்சியும் பறவைகளும் நிறைந்த மேலுறைக்குள் வைத்துக் கொடுத்தார்கள். நல்ல நினைவுகளை சேமிப்பதற்காக சற்று விலை அதிகமென்றாலும் ஒளிப்படத்தை வாங்கிக்கொண்டோம்.

ஒளிப்படம் எடுத்துமுடிக்க எங்களை யாரோ அழைப்பதாய்க் கூறினார்கள். யாரும் தெரியாத ஊரில் யாரடா நம்மை அழைக்கிறார்கள் என்று நினைத்து திரும்பிய போது எங்களை அழைத்தது ஷார்ஜாவில் வசிக்கும் என் பள்ளிகால கணினி ஆசிரியைக் குடும்பத்தினர் தான். 13வருடம் கழித்து என் பிரியமான ஆசிரியரை சந்தித்ததால் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அவர்களுடன் சேர்ந்து பறவைகளின் சாகச நிகழ்ச்சிகளை இரசிக்கலானோம்.


விதவிதமான அழகிய வண்ணவண்ண பறவைகள் அறிவுக் கூர்மையுடன் சாகசங்கள் செய்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. பறவைகள் அதன் பயிற்சியாளருடன் பேசிக்கொண்டும், அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டும் நம்பமுடியாத பல அற்புதங்களை அரங்கேற்றியது.

இதுவே எங்களுக்கு நம்ப முடியாமல் இருக்க சிங்கப்பூரில் இதைவிட பிரமாதமாக இருந்தது என்று என் கணினி ஆசிரியைக் கூற அசந்துவிட்டோம். பறவைகள் மிதிவண்டி ஓட்டியும், புதிர்களுக்கு சரியான விடையைக் கண்டுபிடித்தும் எங்கள் புருவங்களை உயரச் செய்தன.

அரங்கத்தின் வெளியே ஓங்கில் போன்று வேடமிட்ட கலைஞர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். ஓங்கில் மற்றும் பலகடல்வாழ் உயிரனங்களைப் போன்று மிருதுவான பொம்மைகளும், ஓங்கில் நீர்நாய்கள் படம்பதித்த சட்டைகளும், குவளைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தினால், உள்ளே சென்று சரியான வழி தெரியாமல் மிகுந்த குழப்பத்துடன் வழிகண்டுபிடித்து வரும்படி ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்திருந்தார்கள்.

பலமுறை அங்கிருந்த விஞ்ஞான கூடத்தை பார்வையிட வேண்டுமென்ற ஆசை கடைசியில் அத்தைமகன் இராம்-உமா தம்பதயினருடன் வந்த பொழுதுதான் நிறைவேறியது. மிகவும் தரமான அறிவியல் கூடத்திற்கு 15 திராம்கள் கட்டணம் கூடுதலாகத் தெரியவில்லை. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் இரசிக்க வைக்கும்படி எளிய வகையில் அறிவியல் கூற்றுகளை ஆர்வமூட்டும் வகையில் எடுத்துரைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சலிப்பு ஏற்படாமல் சுவாரசியமான வகையில் அமைந்திருந்த இயந்திரங்கள் இதயத்தில் இடம்பிடித்தது. உலகத்தில் உள்ள புகழ்பெற்ற கட்டிடங்களை தொட்டு இயக்கினால் அதைப்பற்றிய  முழு விவரங்களையும் ஆர்வமூட்டும் வகையில் தெரிந்து கொள்ளுமாறு அமைந்த கருவி நெஞ்சில் நின்றது.

அங்கிருந்த உட்புற அரங்கம் சென்னையில் இருக்கும் பிர்லா கோளரங்கத்தை நினைவுபடுத்துவது போல பிரபஞ்சம் தோன்றியது பற்றிய சுவையான தகவல்களை ஆங்கிலத்தில் ஒலிஒளிவடிவில் ஒளிபரப்பியது.. 12.30க்கு ஆங்கிலத்தில் கோளரங்கத்தில் கோள்கள் பற்றிய காணொளியுடன் விளக்கப்படம் ஒளிபரப்பப்படும்.ஒவ்வாரு கிழமையும் ஒவ்வாரு மணியளவில் ஒவ்வாரு மொழியில் காணொளியுடன் விளக்கப்படம் ஒளிபரப்பப்படும் என்று விளம்பரப்படுத்தியிருந்தனர்.

என் மாமா அத்தையுடன் வந்திருந்த பொழுது ஓங்கில்நீர்நாய் காட்சிசாலை பார்த்தபின் கொண்டு வந்த புளியோதரையை பூங்காவின் சிற்றோடை அருகே புல்தரையில் அமர்ந்து சாப்பிட்டபொழுது சுற்றுலாவில் கிடைக்கும் இன்பத்தை முழுவதுமாகப் பெற்றோம். அதிலும் என் புளியோதரைக்கு மாமா அத்தை தந்த பாராட்டில் சற்று மிதந்துதான் போயிருந்தேன்.

பூங்காவில் கட்டணம் செலுத்தினால் குதிரை மற்றும் ஒட்டகச் சவாரி செய்ய வாய்ப்பளித்தனார்.சில நேரம் நண்பர்கள் குடும்பத்துடன் காலை உணவுடன் வந்து குழந்தைகளை அவர்களுக்கான விளையாட்டுத் திடலில்  விளையாடவிட்டு  விட்டு உணவு உண்டு கதைகள் பேசிப் பொழுதை மகிழ்ச்சியாய்க் கழித்திருக்கிறோம். பெரும்பாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் பூங்காக்கள் குறிப்பாகக் குளிர்காலங்களில் நிரம்பி வழிந்தோடும். கோடைகாலமென்றால்  பேரங்காடிகளில் பொழுதைக்கழிக்கலாம்.

அழகாகப் பராமரிக்கப்பட்ட பூங்காவிற்கு 5 திராம்கள் கட்டணம் அதிகமில்லை.அமீரகத்தில் வாழும் அனைத்து நாட்டுமக்களும் குளிர்காலத்தில் தங்கள் வீட்டிலிருந்து பாய், தலையணை, சிறு கூடாரங்கள், தேநீர் கொதிகெண்டி(kettle), பழங்கள், குளிர்பானங்கள் , மடக்கு நாற்காலி, அசைவ உணவில் மசாலா தடவிய கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சி,மீன் , இறால் போன்றவற்றையும் சைவ உணவில் மசாலா தடவிய பாலாடைக் கட்டியான பன்னீர் (paneer), காளான், காய்கறி ஆகியவற்றை எடுத்து வந்துவிடுவார்கள்.

அருமையான காலநிலையில் கபாப் (kebab) எனப்படும் தந்தூரி வகைகள் போன்று மசாலா தடவப்பட்ட சைவ, அசைவ உணவுகளை அடுப்பில் வாட்டிச் சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு பூங்காவில் சாப்பிடுவதற்காக அடுப்பு, உணவு சமைப்பதற்கும் உண்பதற்கும் ஏற்றவாறு பூங்காவில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. அடுப்பு மூட்டுவதற்கு தேவையான அடுப்பு, அடுப்புக்கரி, அதைத் தூண்டுவதற்காக  தேவைப்படும் திரவம் போன்ற பல சாமான்களை பலபொருள் அங்காடியில் சரியான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

பெரும்பாலான மக்கள் சொந்த வண்டியில் வரும்பொழுது தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அடைத்தவாறு எடுத்து வந்துவிடுவார்கள். வாடகை வண்டியில் வருபவர்கள் முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்து வருவார்கள். மக்கள் அனைவரும் தந்தூரி உணவு வகைகளை உண்டு, தேநீர் அருந்தி, ஒலிபெருக்கியில் விருப்பமான பாடல்கள் கேட்டு, மனதின் கவலை தீர ஆட்டம் ஆடி விடுமுறைகளை கொண்டாடுவது வழக்கம்.

பூங்காவில் தந்தூரி வகைகளைப்போன்று உணவுகளை வாட்டும் பொழுது கிளம்பும் மணம் போவோர் வருவோரின் பசியை தூண்டிவிடும். என் அப்பாவையும், மாமாவையும் பூங்காவில் அழைத்துவரும் பொழுது அவர்கள் இருவருமே “நாம் கேட்டால் நமக்கு சுவைக்க ஏதேனும் இறைச்சித்துண்டு தருவார்களா என்று கேட்டு என்னை அதிர்ச்சியுடன் சிரிக்கவும் வைத்தார்கள். எங்கள் நண்பர்கள் குழுவில் என் கணவர் தந்தூரி வகைகளை சமைப்பதில் நளபாகன். அதனால் அவரது உதவியுடன் விருந்தினர்களுக்கு வீட்டிலேயே விருந்துடன் தந்தூரி வகைகளும் சமைத்துக் கொடுத்தோம்.

பூங்காவில் அமைந்திருந்த சிறிய உபநதியில்(creek) பலவகையான மீன்களைப் பார்க்கலாம்.  ஆஸ்திரேலியாவில் காணப்படும் மெல்போன் கோபுரத்தைப் போன்ற ஒரு மாதிரி கோபுரத்தை சிறிய உபநதியில் காணலாம். தண்ணீரில் இறங்கிப் புறப்படும் சிறிய விமானத்தை அந்நீரோடையில் காண நேர்ந்தது.


திருகுவிட்டம் (winch) உதவியுடன் அந்தரத்தில் ஒரு கூண்டின் வழியே அப்பெரும் பூங்காவை பார்க்க வசதி செய்திருந்தார்கள். ஆனால் அந்த எந்திரம் பழுதாகியிருந்ததால் எங்களால் அந்தப் பயணத்தை இரசிக்க முடியவில்லை அங்கு அமைந்திருந்த பலகைகளில் அமர்ந்து பறவைகள், மீன்களைப் பார்ப்பதுடன் குளிர்காற்றை அனுபவிப்பது சுகமான ஒன்று.

பூங்காவிலிருந்து சிறிது தூரம் வாடகைவண்டியில் சென்றோமானால் எகிப்திய கூர்ங்கோபுரம் போன்று காட்சியளிக்கும் வாஃபி பேரங்காடியை அடைந்து விடலாம். கோடை காலங்களில் குளிரூட்டப்பட்ட புதுப்புது பேரங்காடிகளை இரசித்தவண்ணம் பொழுதைக் கழிக்கலாம்.நண்பர்கள் குடும்பத்துடனும், மாமா அத்தையை அழைத்துக் கொண்டு என்று இரண்டு தடவை இப்பேரங்காடிக்கு வந்திருக்கிறோம்.


முதல் தடவை வந்திருந்த பொழுது இங்கு நடைபெறும் ஒலி,ஒளி,ஒளிமி கண்காட்சியைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. பின்பு இணையத்தின் வழி குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட மணியளவில் கட்டணமில்லாமல் கண்டுகளிக்கலாம் என்று தெரிந்து கொண்டோம். பிரம்மாண்ட எகிப்திய சிலைகள் மேல் வண்ண வண்ண கண்கவர் காட்சிகள் நடத்தப்பட்டன.

பேரங்காடியுடன் ராபல்ஸ் துபாயெனப்படும் ஐந்துநட்சத்திர விடுதியும் இணைந்திருந்தது. அங்கு அமைந்திருக்கும் தங்கும் விடுதியின் அறையின் அளவு துபாயிலேயே பெரியது என்று தெரிந்து ஆச்சர்யம் கொண்டோம். பேரங்காடிக்குள் சென்று உட்கூர கூர்ங்கோபுரத்தை பார்த்தோமானால் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய எகிப்திய ஓவியக்கலையைக் கண்டு வியக்கலாம். பல விதமான உலக இஸ்லாமிய கட்டிடத்தின் தாக்கம் கொண்டு கண்ணாடி மேற்கூரையும் அங்காடியும் அமைக்கப்பட்டிருந்தது 


பேரங்காடிக்குள்ளே நடந்து செல்கையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கிடார்(guitar), வயலின்(violin) போன்ற நரம்பிசைக்கருவிகளை வாசிப்பது போன்று பாவணை செய்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். கணவரும், அவரது நண்பர்களும் நரம்பிசைக்கருவிகளை வாசிக்கையில் திரைப்பட நாயகர்கள் போன்று உடல்மொழி செய்து தத்தமது மனைவியரிடம் காதல் சொல்வது போல நின்றார்கள்.


பிரபல பாடகி ஆஷாபோன்ஸ்லேவிற்குச் சொந்தமான ஆஷாஸ் உணவகத்தைப் பார்த்த பொழுது அவர்களையே பார்த்ததுபோன்று மகிழ்ச்சி அடைந்தோம். வாபி பேரங்காடிக்குப் பாத்தியப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பேரங்காடியில் அமைந்திருந்த ஆரோக்கிய நீரூற்றுக்கு (spa) எண்ணற்ற அனுமதி வழங்கியிருந்தார்கள். அழகி கிளியோப்பட்ராவின் பெயரில் அமைந்திருந்த ஆரோக்கிய நீரூற்று (spa) எங்களைக் கவர்ந்தது.

கடந்த கால எகிப்திய கட்டடக்கலையை நினைவூட்டும்படி   பேரங்காடியின் சுவர்கள் இளம்பழுப்பு (light brown) வண்ணத்தில் கட்டப்பட்டிருந்தன. பேரங்காடிக்கு அருகிலேயே நிலப்பரப்பிற்கும் கீழே இருந்த சந்தை (souq) உண்மையாகவே அரபிய பாரம்பர்யத்தை  எடுத்துரைப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.

ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கென்று பல அருமையான இடங்களும் உருவச்சிலைகளும் இருந்ததால் தம்பதியனர்களாக, குடும்பங்களாக, நண்பர்களாக என எண்ணற்ற ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டு எகிப்து நாடு சென்றவந்தது போல ஆனந்தத்துடன் வீடு திரும்பினோம்.வாபி பேரங்காடியைப் பார்த்தபின்பே நீங்களும் துபாயிலிருந்து திரும்புங்கள்....

Monday, February 20, 2017

உலகம் சுற்றலாம் வாங்க

உலகமே ஒரு கிராமமாய் (Global village) மாறி துபாயில் ஒரு கடைக்கோடியில் ஒளிந்திருந்ததை கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! முருகன் சிரமப்பட்டு உலகையே வலம்வந்ததைக் காட்டிலும், பெற்றோரை வலம் வந்து கணேசன் மாங்கனியைத் தட்டிச்சென்றது போல பெரும் பொருட்செலவும், அலைச்சலும் இல்லாமல் உலகைச் சுற்றிப் பார்க்க உடனே போக வேண்டிய இடம் குளோபல் வில்லேஜ். உலகச் சுற்றுலா சென்று வாங்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சுலபமாக இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்.  .

வருடத்தில் ஆறு மாதங்களான நவம்பர் முதல் ஏப்ரல் வரை தான் இந்த மாபெரும் பொருட்காட்சி திடல் திறந்திருக்கும்.   என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை, அத்தை மகன் இராம் அவனது மனைவி என அனைவருமே அத்திடல் மூடியிருக்கும் சமயம் சுற்றுலா வந்ததால் யாரையும் இங்குக் கூட்டிவரமுடியாத வருத்தம் இன்றும் எனக்கு உண்டு.

இவர்களாவது பொருட்காட்சி திடல் திறக்காத பொழுது சுற்றுலா வந்திருந்தார்கள். ஆனால் என் அத்தை, மாமா பொருட்காட்சி திடல் திறந்திருந்த பொழுது ஒரு மாதகாலம் சுற்றுலா வந்த போதிலும் பல காரணங்களால் அவர்களைக் அங்குக்கூட்டிச்செல்ல முடியவில்லை என்ற பெரும் மனக்கவலை இப்பொழுதும் எனக்கு உண்டு.

கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் இரண்டு வண்டிகளில்  மாபெரும் பொருட்காட்சி திடலுக்குச் செல்ல ஆயத்தமானோம். கணவர் சிலமாதங்கள் துபாயில் தனியாக தமிழ், கன்னட நண்பர்களுடன் தங்கியிருந்ததன் பயனாகவும், அனைவரும் ஒருசில மாதங்களில் தங்கள் மனைவி, மக்களைக் கூட்டிவர நாங்கள் அனைவருமே குடும்பத்துடன் மொழி பேதமின்றி நண்பர்கள் ஆகியிருந்தோம்.

பொருட்காட்சித் திடல் நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் சொந்த வண்டியிலோ, நண்பர்களுடன் அவர்களது வண்டியிலோ செல்வது வசதியாய் இருக்கும். போக்குவரத்துச் செலவைப் பற்றி கவலைப்படாதவர்கள் வண்டிகளை ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்டு பயணத்தை தொடங்கியும், முடித்தும் கொள்ளலாம்.

பேருந்து வசதிகள் மதியம் 3.15 முதல் இரவு 11.15 மணிவரை அரைமணிநேர பயண தூரத்தை கடக்கும் வகையில் குறிப்பிட்ட காலநேரத்திற்கு ஒருமுறை செய்துகொடுக்கப் பட்டிருந்தன. ஒரு சமயம் அல்குபைபா(al ghubiaba) பேருந்து நிறுத்தத்தில் ஒரு நீண்ட வரிசையைப் பார்த்து ஆர்வத்தில் கணவரின் நண்பர் பாஸ்கர் அவர்கள் “எங்கே செல்வதற்கான வரிசையென்று?”  வினவ “குளோபல் வில்லேஜ்” என்று வந்த பதில் சிறிய அதிர்வலையைத் தந்தது.(union) யூனியன் நிறுத்ததிலிருந்தும் மக்களின் வசதிக்காக  பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நண்பர்கள் குழுவில் சொந்தமாக வண்டிவைத்திருந்த இருநண்பர்கள் பெயருமே சதீஷ்.அடையாளத்திற்காக அவரவர் மனைவி பெயரைக் கொண்டு சுஜி சதீஷ், ராஜி சதீஷ் என்று அழைப்போம்.மாலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருக்கும் அனைத்து வாயிற்கதவுகளும் வார இறுதிநாள் மற்றும் பண்டிகைநாட்கள் என்றால் இரவு 1 மணிவரை திறந்திருக்கும்.

முதன் முறை மாபெரும் கண்காட்சித் திடல் செல்கிறோம் என்பதாலும், ஒரே நாளில் அனைத்துக் கூடாரங்களையும் பார்க்க முடியாது என்று கேள்விபட்டதாலும் வாயிற்கதவு திறக்கும்முன்னே ஆர்வமாய்ச் சென்று தனி நபர் கட்டணமாக 15 திராம்களுக்கான நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிக் காத்திருந்தோம். சீக்கரமே வந்திருந்ததால் வண்டிகளை வாயிற்கதவு அருகிலேயே நிறுத்த வாய்ப்பு கிடைத்திருந்தது.

கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் சென்றால் நமக்கு விருப்பமான அனைத்து விதமான பொருட்கள், கம்பளிச் சட்டைகள் போன்றவற்றை பேரம்பேசி மிகக்குறைந்த விலைக்கு வாங்லாம் என்று ஏற்கனவே பலமுறை இங்கு வந்திருந்த ராஜி-சதீஷ் தம்பதியினர் கூறியிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் கடைசி நாட்களில் பொருட்களைத் திரும்பி எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் வந்த வரைலாபம் என்று விற்றிடுவார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தோம்.

அதனால் பின்னொரு நாளில் கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் நாங்கள் வந்திருந்த பொழுது மிகுந்த கூட்டம் இருந்ததால் வண்டியைத் தொலைதூரத்தில் தள்ளி நிறுத்திவிட்டு நடக்க வேண்டியதாயிற்று. உந்துவண்டி நிருத்தும் இடத்திலிருந்து  வாயிற்கதவு வரை செல்வதற்கு கட்டணமளித்தால் நமது நாட்டுப்பாரம்பர்யத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதனை ஓட்டுபவர்களும் இராஜஸ்தானியர்கள் போன்று நம்நாட்டு கலாச்சாரத்தை எடுத்துரைக்கும்  வகையில் உடை உடுத்தியிருந்தார்கள். கட்டணம்சற்று அதிகமென்றாலும் சுற்றுலாப்பயணிகள் அந்த மூன்று சக்கர மிதிவண்டி பயணத்தை வெகுவாக இரசித்தது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

பெருங்கூட்டத்தில் சிறுவர்கள் தொலைந்துவிடும் வாய்ப்பு அதிகமென்பதால் அவர்கள்  மணிக்கட்டில் கட்டிக்கொள்ள ஒரு காகிதபட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று அவர்களைப் பற்றிய விவரங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.

முதலில் அது என்னவென்று தெரியாமல் நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிய அனைவரும் கையில் கட்டிக்கொள்வது என்றெண்ணி எனக்கு எனக்கு என்று நான் கேட்க “நீயும் என் குழந்தைதான் எங்கும் தொலைந்து விடாதே என் காதல் கண்மணி” என்று கூறி என் கணவர் என் கையில் கட்டிவிட நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்.   .

கண்காட்சித் திடல் ஆரம்பித்த முதல் வாரமே நாங்கள் சென்றிருந்ததால், பல நாடுகளை எடுத்துக் காட்டும் கூடாரங்களும் , பொருட்களும் தயார்நிலையில் இல்லை. கடைக்காரர்கள், பணியாளர்கள் என அனைவருமே தங்கள்கடையை அழகாய் முறைபடுத்த மும்மரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சீன கூடாரங்கள் மட்டுமல்லாது எல்லா நாட்டு கூடாரங்களிலும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பெருமை வாய்ந்த பிரத்யேக மின்னணுசார் பொருட்களை எப்படி உபோயிகிப்பது என்று மாதிரிவிளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

அதே சீனக்கூடாரத்தில் சுஜி தனது குழந்தை மஹிதாவுக்கென்று இளஞ்சிவப்பு நிறத்தில் கம்பளிச்சட்டை வாங்கி அணிவித்து மகிழ்ந்தார்.

பல கூடாரங்களில் சந்தைக் கடை போன்று கூவிகூவி அழைத்து விற்றுக் கொண்டிருந்தனர். பொருட்களை அடுக்கி வைத்திருந்த அழகைப் பார்க்கையிலேயே அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டுமென்ற பேராசை எங்கள் தோழிகள் அனைவரின் மனதுக்குள்ளும் எழுந்தது.

சுமார் 75 தனிநாடுகளையும் அதன் சிறப்பையும், புகழைக்குறிக்கும் தரமான பொருட்களையும், நாட்டின் பெருமையை உணர்த்தும் கட்டிடங்களை மாதிரி வடிவங்களாய் தத்ரூபமாய் காட்சிப்படித்தியிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் கூடாரத்திற்குச் செல்லும் பொழுதும் உண்மையாகவே அந்நாட்டுக்கேச் செல்வது போல பெருமிதம் கொண்டோம்.

நடந்து நடந்து கால்கள் வலித்தாலும், புதிதுபுதிதாய் வெவ்வேறு நாட்டு மனிதர்கள், வித்தியாசமான அமைப்புடைய  அனைத்து நாட்டு கூடாரங்கள், விந்தையான அழகுப் பொருட்களைப் பார்ப்பதில் மனம் மயங்கி உற்சாகத்துடன் நேரவிரயத்தைத் தடுக்க ஓட்டமும் நடையுமாய் தோழிகள் அனைவரும் ஒன்றாய்ப் பயணபட்டோம்.

வாங்கியப் பொருட்களையும் , குழந்தைகளையும் சுமந்து இழுத்துச் செல்வதற்காக கட்டணமுறைப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு என்று இழுபெட்டி தருவதற்கான ஏற்பாடு செய்திருந்தார்கள். 

உலகத்தையே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற என் பேராசையை அறிந்திருந்த கணவர் “பார், ஒரு காதல் கணவனாய் மனைவியின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.எல்லா நாட்டுக்கும் சென்று வா” என்று கண்ணடித்தார். எவ்வளவு விரைவாகச் சுற்றிவந்தும் முதல் தடவை சென்றிருந்த பொழுது பாதிநாட்டுக் கூடாரங்களையே சுற்றிப்பார்க்க முடிந்தது.

இந்திய நாட்டுக்கூடாரத்தைப் பார்த்த பொழுது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி ஏற்பட்டது. தாஜ் விடுதி, தாஜ்மஹால் போன்று பல பெருமைப்பெற்ற மாதிரி கட்டடங்கள் பிரம்மாண்டமாக வரவேற்றன. அங்கு ஓர் தொகுப்பாளினி பார்வையாளர்களுடன் உறையாடி பாடச்சொல்ல, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியிருந்தது இந்திய அரங்கம்.

கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் ஆளுயுர மென்மையான பல பொம்மைகளை சுமக்கமுடியாமல் சுமந்து சென்றது, எங்கள் குழந்தைகளை விட எங்கள் பெண் தோழிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது.

வாழைப்பழம், இதய வடிவம், விலங்குகள் போன்ற மாதிரி பொம்மைகளின் அழகு எங்களுக்கும் அது போன்ற பொம்மைகளை வாங்க வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தியது. கொடுக்கப்பட்ட வாய்ப்புக்குள் அடுக்கிவைத்திருக்கும் பொருட்களை களைப்பது, கூடைக்குள் பந்துகளை குறிபார்த்து எறிவது போன்ற போட்டிகளுக்குப் பரிசுகளாக பொம்மைகளை தருகிறார்கள் என்று பின்பு தான் தெரிந்து கொண்டோம் .

ஆரம்பத்தில் தோழிகள் அனைவருமே தத்தமது கணவர்களுக்கு, பொம்மைகளை பரிசாய் வெல்வதற்கான கோரிக்கைகளை வைக்க , அதனை ஆண்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காசுகொடுத்து வளையங்களையும், பந்துகளையும் வாங்கி மனதை ஒருமைப்படுத்தி போட்டிகளில் வென்று இந்த பொம்மைகளை வாங்குவதற்கு பதிலாக பணம் கொடுத்து பொம்மைகளே வாங்கித்தருகிறோம் என்று ஆசைவார்த்தைக் கூறினார்கள்

பின்னர் திராட்சைக் கிடைக்காத நரி “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று கூறியது போல இவ்வளவு பெரிய பொம்மைகளை வீட்டுக்குக்கொண்டு செல்வது கடினம், வீட்டில் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்று பற்பல காரணங்களைச் சொல்லி நாங்களே சமாதானம் செய்துகொண்டோம்.

நண்பர்களுள் அனைத்து தம்பதியினருக்குமே ஒவ்வொரு பெண் குழந்தைகள் இருந்ததால் அவரவரது குழந்தைகளுக்கான இழுபெட்டியில் அமரவைத்து சிலநேரம் கணவன்மார்கள் சிலநேரம் மனைவிமார்கள் என்று மாறி மாறி அழைத்து இல்லை இல்லை  இழுத்துச் சென்றோம். ராஜி கருவுற்றிருந்ததாலும், ஏற்கனவே பலமுறை சுற்றிப் பார்த்திருந்ததாலும் அத்தம்பதியினரை சிரமப்படுத்தாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இருக்கைப் பலகைகளிலும், புல்தரைகளிலும் அமரச் செய்துவிட்டு ஒவ்வொரு நாடாகச் சுற்றிப்பறந்தோம்.

ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் இருந்த அருமையான இயற்கையோடு ஒன்றிய மரப்பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், பொம்மைகள் வெகுவாக இதயத்தைக் கவர்ந்தன. இயற்கை மற்றும் மனித வளத்தை மிகவும் திறம்பட உபயோகித்திருப்பதாக உணர்ந்தோம். ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் கிடைக்கும் ஆப்ரிக்க கருப்பு சவர்க்காரம்( African black soap), உடல் வலுவலுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெய் (shea butter) , சிகைக்கும் தோலுக்கும் பொலிவு சேர்க்கும் ஆர்கன் எண்ணெய் (argan oil) உலக பிரசத்தி பெற்றவை.

சுஜியும், நந்தினியும் ஒவ்வொரு கடையாக பேரம்பேசி கடைசியாக ஓர்கடையில் மலிவுவிலைக்கு (coco butter)உடல் மினுமினுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெயை வெற்றிகரமாக 10 திராம்களுக்கு வாங்கினர். ஆப்ரிக்கர்களிடம் அடித்து பேரம்பேசினால் எங்கே நம்மை அடித்துவிடுவார்களோ என்ற சிறிய பயம் எங்களுக்குள்ளும் இருந்தது.

ஶ்ரீதேவியும், சுஜியும்  குச்சியாலான நாகரிக அணிகலன்களை பேரம்பேசி வாங்க நான் மட்டும் என் குழந்தை தன் சுட்டித்தனத்தால் அதை பாழ்படுத்திவிடுவாள் என்று பயந்து வாங்கவில்லை. ஆப்ரிக்க மலைவாழ் மக்கள் போன்று ஒப்பனை செய்திருந்தவர்களுடன் போட்டிபோட்டு அருகே சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

பல வகையான வாய்பிளக்க வைக்கும் இராட்சத இராட்டினங்களில் மக்களின் உற்சாக கூக்குரல்கள் விண்ணைப் பிளந்தன. எவ்வளவு நுழைவுக்கட்டணம் என்றாலும் எல்லா இராட்டினங்களில் பயணம் செய்ய எல்லா நாட்டு மக்களும் சாரசாரையாய் எறும்புபோல் அணிவகுத்திருந்தனர். இராட்டினங்களில் சாகச அனுபவங்கள் பெற ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோ, உறவினர்களோ அமைந்துவிட்டால் அதுவே உற்சாகத்தின் உச்சக்கட்டம்.

ராஜி-சதீஸ் தம்பதியினர் சென்ற முறை வந்திருந்த பொழுது தாங்கள் புதிதாகக் தமிழ்நாட்டில் கட்டிய வீட்டிற்கு துனிசியா,எகிப்திய கூடாரங்களிலிருந்து தரமான வீட்டு அலங்காரப் பொருட்களை மலிவுவிலைக்கு வாங்கியதை பெருமையுடன் கூறினர். பிரான்ஸ் நாட்டு கூடாரத்திற்குச் சென்ற உடனேயே பலவகையான சுகமான சுகந்தங்கள் மனதை மயக்கின. 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கூடாரங்களைக் கடந்து வந்த பொழுது பேரம்பேசி எனக்கு ஒரு கம்பளிச் சட்டையும் , கைப்பையும் வாங்கினோம். அமீரகத்தில் கோடை காலத்தில் இரவு 12மணி ஆனாலும் அனல்காற்று வீசும். குளிர்காலமென்றால் மின்விசிறிக்கும், குளிரூட்டிக்கும் நல்ல ஓய்வு கொடுத்துவிடுவோம். பல நண்பர்கள் சேர்ந்து நிறைய கம்பளிச் சட்டை வாங்கியபொழுது எதிர்பாராத வகையில் மிகமிக குறைந்த விலைக்கு கம்பளிச் சட்டை வாங்கிய தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் ராஜி-சதீஸ் தம்பதியினர்.

ஓமன் மற்றும் ஏமன் கூடாரங்களில் ஏகப்பட்ட வகைவகையான தேன்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழகான குச்சியில் சுவைத்து பார்க்கக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் சில வகையான தேன்கள் ஆண்களுக்கானது என்று விற்பனையாளர் கூற அப்பொழுது எனக்கு புரியவில்லை. பின்பு கணவர் தனியே எனக்கு சற்று விளக்கமாகக்கூற வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

ஏமன் நாட்டு கூடாரங்களில் தரம்வாய்ந்த பட்டை, ஏலக்காய் போன்று வாசனை சாமான்களை அழகான குடுவைகளில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.கமகமக்கும் விதவிதமான குங்குமப்பூக்களை குவைத்நாட்டு அரங்கங்களில் பார்த்தபொழுது திருமணத்திற்கு முன்னேயே கணவர் எனக்காக  ஆசையாய் வாங்கிவைத்திருந்த குங்குமப்பூ ஞாபகம் வந்தது.

செளதி நாட்டுக்கூடாரத்திற்கு சென்றிருந்த பொழுதுதான் பேரிச்சை பழங்களில் இத்தனை வகைகளா என்று ஆச்சர்யமடைந்தோம். பலவகையான அரபுநாட்டு பேரிச்சைகளைக் குவித்து வைத்திருந்தார்கள். புது வகையான (dates biscits) பேரிச்சை உரொட்டிகளின் விலை 30 திராம்கள் என்பது கூடுதல் ஆச்சர்யத்தை தந்தது.

 

நடந்து நடந்து எல்லோருக்கும் சற்று பசித்திருந்த வேளையில் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சுவையான ஹைத்ராபாத் பிரியாணியை  ராஜி-சதீஸ் தம்பதியினர் எல்லோருக்கும் பரிமாறினார்கள் .

நாங்களனைவரும் அதைச் சிற்றிடை உணவாக பகிர்ந்து உண்டு சற்று களைப்பைப் போக்கிக் கொண்டு அடுத்த அடுத்த நாட்டுக்குச் சுற்றுலா செல்ல தயாரானோம். அடுத்த முறை வருகை தந்திருந்த பொழுது நாங்கள் மற்ற இரு குடும்பத்திற்கும் சேர்த்து பிரியாணி சமைத்து எடுத்து வந்திருந்தோம்.

பெரிய புல்தரையில் அனைவருமே தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கேலி கிண்டலுடன் கதைபேசி உணவு உண்டோம். பொருட்காட்சித் திடல் உள்ளே உணவு, திண்பண்டம், தண்ணீர், குளிர்பானமென அனைத்துமே சற்று விலை அதிகமென்பதால் அனைத்து குடும்பத்தினரும் தங்களுக்குத் தேவையான திண்பண்டம் மற்றும் தண்ணீரை குழந்தைகளின் இழுபெட்டியில் வைத்து இழுத்து வந்திருந்தோம்.

எல்லோரும் ஏதோ வேலையில் மூழ்கிஇருக்க சுஜி-சதீஸ் தம்பதியினரின் குழந்தையான மஹிதாவைச் சிலநிமிடங்கள் காணாது தவித்து விட்டோம். ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த கூட்டத்தில் ஒரு மூன்று வயது குழந்தையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பயந்திருந்தோம். கடைசியாக எங்களருகேதான் அக்குழந்தை உட்கார்ந்திருந்ததால், நாங்கள் சரியாக கவனிக்கவில்லையென்று எனக்கும் என்கணவருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ராஜி-சதீஸ் தம்பதியினருடன் மஹிதாவைப் பார்த்தபின்தான் அனைவருக்கும் மூச்சு வந்தது.

அப்பொருட்காட்சித்திடல் நடுவே சிறிய நீரோடை போன்று உருவாக்கி அதில் படகுகளை விட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்திருந்தனர். பயணம் செய்தவர்களுக்கு ஐரோப்பாவில் இருக்கும் வெனிஸ் நகரத்தில் கட்டடங்களுக்கு நடுவே படகுசவாரி செய்தது போன்ற ஒரு  உணர்வு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.

வாரஇறுதியென்றால் அனைவரையும் குதூகலப்படுத்தும் வகையில் அற்புதமான வண்ண வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு நாட்டுக் கூடாரத்திற்கென்று பிரத்யேக மேடை அமைத்திருந்தனர். அதில் அந்நாட்டு பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், கலை நிகழ்ச்சிகள், நடனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தந்த நாட்டிலிருந்து பல கலைஞர்களை தினமும் அழைத்துவந்து அவர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பளித்திருந்தனர்.  .

பொருட்காட்சித்திடலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பல நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் தங்கள் திறமையை, இசை, நடனம், சாகசங்கள் வழி வெளிபடுத்தி மொழிபேதமில்லாமல் கூட்டத்தை வசியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

நமக்கு பரிட்சயமான பிரபலங்கள் என்றால் ஷ்ரேயா கோஷல், பேரிகைக் கலைஞர் (drums) சிவமணி, மலையாள நடிகர் மம்மூட்டி, நிவின் பாலி போன்ற பல நட்சத்திரங்கள் அந்த மேடையை அலங்கரித்துள்ளனர்.

துருக்கி நாட்டுக்கூடாரமருகே புகழ்பெற்ற குனாபாவை (kunafah) சூடாக வாடிக்கையாளருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். வளைகுடா நாடுகளில் வேலை செய்திருந்த காலம்தொட்டே குனாபாவின் மேல் கணவருக்கு தீராத காதலிருந்ததால், தான் மட்டும் உண்ணாது “யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம்” என்பதற்கேற்ப நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களையும் அவ்வினிப்பை சுவைக்கச் செய்தார்.

உலகப்பிரசித்தி பெற்ற (Dondurma) டொன்டூர்மா எனப்படும் ஒருவகையான கூம்புப்பனிகத்தை (coneicecream)  துருக்கி நாட்டுக்கூடாரத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வித்தைகாட்டி விற்றுக்கொண்டிருந்தார்கள். கூம்புப்பனிகத்தை கொடுப்பதுபோல் பாவணை செய்து கொடுக்காமல் சிறுவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதுவே பெரியோர்களிடம் பலவிதமான ஏமாற்று வித்தையைக் காட்டும்பொழுது “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்பது போன்ற உணர்வுதான்  வாடிக்கையாளர்களின் முகத்தில் தெரிந்தது. பலர்அந்த ஏமாற்றுவேலையை வெகுவாக இரசித்தாலும், சிலர் கோபம் கொண்டு அவர்களுடன் சண்டைபோட ஆரம்பித்தனர்.

இங்கிலாந்து நாட்டுக் கூடாரத்தில் ஒப்பனை செய்து கொள்வதற்குத் தேவையான பிரசித்திப்பெற்ற பெயர்களுடைய உதட்டுச்சாயம் (ipstick) , நகச்சாயம்(nailpolish) , முககளிம்பு (face cream )  போன்ற சாமான்களுடன் நறுமணம் வீசும் வாசனை திரவியங்கள்  குறைந்தவிலையில் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்தவுடன் பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் சுஜியும், நந்தினியும் வாங்கலானார்கள்.

தாய்லாந்து நாட்டுக்கூடாரத்தில் ஆண்கள் பெண்களுக்கென உடல்வலியைக் குறைப்பதற்கான பிரத்யேக (massage)உருவு மையம் நிறுவப்பட்டிருந்தது. உடல்உருவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அமோகமாகக் கிடைத்தது. கொரிய கூடாரத்திற்குச் சென்றிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நந்தினியின் காலணிகள் பிய்ந்துவிட்டதால், பேரம்பேசி அவர் அங்கு ஒரு மிருதுவான காலணிகள் வாங்க நானும் அதே போன்று மற்றொரு வண்ணத்தில் காலணிகள் வாங்கினேன்.

எனக்கும், என் கணவருக்கும் பேரம்பேச தெரியாததால் அவ்வப்பொழுது நந்தினி-மகேஷ் தம்பதியினரைத் துணைக்கு அழைத்துக் கொண்டோம். அங்கு ஓர் கடையில் கைப்பை அழகாய் இருப்பதைக் கண்டு விலைபேச, அது கொஞ்சம் தூசியாய் இருந்ததால் குறைவான விலைக்கு தர கடைக்காரர் சம்மதித்தார். தூசியை நன்றாகத் துடைத்தபின் கைப்பை புதிதுபோல மின்னியது.

இரவு 12மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும், பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே அடித்திப் பத்திவிடுவார்களோ என்ற நினைப்புடன், கிளம்புவதற்கே மனதில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நெடுந்தூரம் நடந்திருந்தாலும் உடலுக்கு மட்டுமே சோர்வு ஏற்பட்டிருந்தது. மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியில் உற்சாகம் குறையாமல் வீடு திரும்பினோம்.