Saturday, December 17, 2016

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் - லிமரைக்கூ (ஹைக்கூ வகைகள்)

மரியாள் மகனாய்ப் பிறப்பு
மரித்தும் மீண்டு(ம்) வந்த அற்புதம்
வியத்தகு உந்தன் சிறப்பு
 
பெத்தலகமில் பிறந்த பாலகன் 
பணிவுடன் பிரபஞ்சத்தை வந்து இரட்சிக்க
அன்பை அள்ளிதந்த காவலன்

சாண்டா தந்திடும் பரிசுகள் 
சகோதரத்துவ சமத்துவப்  பாடம் பறைசாற்ற
சண்டைத் தீர்த்திடும் வழிகள்

அழகாய் அலங்கரிக்க மரங்கள்
அகிலத்தில் அனைவரையும் பாசத்தை பகிர
ஒன்றாய்ச் சேர்த்திடும் கரங்கள்

புத்துணர்ச்சிப் பூத்திடப் புத்தாடை
தீமை எண்ணம் சிந்தையில் அகற்ற
அகசுத்தம் செய்யும் நீரோடை

அதிகாலை தேவாலயப் பிரார்த்தனை
பலன் எதிர்பாராப் பண்பை பாரில்பரப்ப
அகத்தில் அழித்திடும் மனவேதனை

எல்லோர் வீட்டிலும் மின்(னும்)நட்சத்திரம்
வேற்றுமை விடுத்து எழில் கொஞ்சும்
ஒற்றுமை ஒளிவீசும் விசித்திரம்

தேவனைத் துதித்திடும் தேவகானம்
இறைத்தேனைப் பருக தேனீயாய் ரீங்காரம்
இதயத்தை இதமாக்கும் இனியகானம்

மத்தாப்பூப் பூத்திடும் வானவேடிக்கை
நிறங்களாய் நிஜ வாழ்க்கையில் வர்ணம்
மகிழ்ச்சிப்பூ மன(ண)த்திலே வாடிக்கை

பாசத்தைப் பகிர்ந்திடும் விருந்து
தண்ணீர் திராட்சை இரசமான மாயத்துடன்
வறியவரின் வறுமைக்கு மருந்து

Friday, December 16, 2016

பறந்து செல்வோமா - ஒரு பக்க சிறு கதை


அனுவுக்கு மிகவும் படபடப்பாக இருந்தது.குடும்பத்தினர் அனைவரும் விமான நிலையத்திற்குச் செல்ல நேரமாயிற்று,சித்தியிடம் கொடுத்து வைத்திருந்த நவீனப்புகைப்படக்கருவியை வாங்க வேண்டாமென்றுக் கூறியும், இல்லை இல்லை.... அதில் தான் புகைப்படம் பிரமாதமாக வரும் என்று கூறி அதை வாங்கிவிட்டுவருகிறேன் என்றுக் கிளம்பிச்சென்ற காதல் கணவன் கிருஷ்ணனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் அனு.எதிர்பார்த்ததைவிட சென்னையின் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்ததால் சித்தியின்வீட்டிலிருந்து புகைப்படக்கருவியைவாங்கி வீடுவந்துச் சேர்வதற்கே கிருஷ்ணனுக்கு நேரமாக விட்டது.இனிமேலும் தனிவண்டியில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமானத்தைக் கோட்டைவிட்டுவிடுவோமென்ற பயத்தில் மின்சார இரயிலில் பயணம்செய்ய ஆயத்தமானார்கள். 

தேனிலவுப்பயணம் திகில்நிறைந்த பயணமாய் மாறுமென்று அனுவும்,கிருஷ்ணனும் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.கிருஷ்ணனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பிள்ளைகளின் திருமணத்திற்குப்பின்னான முதல் கடல்கடந்த பயணம் நல்லபடியாக அமையவேண்டுமென்ற பதட்டம் பற்றிக் கொண்டிருந்தது.மின்சார இரயில் பயணத்தின் போது அனு கிருஷ்ணனிடம் நாம் விமானத்தைப்பிடித்துவிடுவோம் தானே என்று கேட்ட கேள்விக்கு கிருஷ்ணனின் அமைதி அனைவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தியது.கிருஷ்ணனின் அம்மா பேசாதே என்று சைகைச் செய்தார்.கிருஷ்ணன் கைக்கடிகாரத்தைப் அவ்வப்போதுப் பார்த்துக்கொண்டும் ஒருவேளை விமானத்தைத்தவர விட்டால் என்ன செய்வது என்று பயத்துடன் இறுக்கமான முகத்துடன் காட்சியளித்தான். பயணத்திற்கு முன் புகைப்படக்கருவி வாங்கச் சென்றிருக்க வேண்டாம்.கண்டிப்பாக வேண்டுமென்று கூறியிருந்தால் நானே சென்று வாங்கிவந்திருப்பேனே என்றங்கலாய்த்தார் கிருஷ்ணனின் அப்பா.

திரிசூலம் இரயில்நிறுத்தம் வந்தவுடன் கிருஷ்ணனும் அனுவும் ஓட்டமும் நடையுமாக விமானநிலையத்திற்குள் தலைதெரிக்க ௐடினார்கள். கிருஷ்ணனின் பெற்றோரும் பிள்ளைகள் எப்படியாவது விமானத்துக்குள் நுழைந்துவிடவேண்டுமென்ற பதைபதைப்புடன் பின்தொடர்ந்தார்கள்.வேகமாகச்சென்று பயண உடைமைகளை ஒப்படைத்தபின் கிருஷ்ணனின் பெற்றோருக்கு கண்ணாடிச்சாளரம் வழியே கையசைத்த சந்தோஷம் சிறிது நேரமே நீடித்தது.தனிமனித பாதுகாப்பச் சோதனையின் போது பெண்கள் வரிசை மிகவும் நீளமாக இருந்ததால், சிறிய ஆண்கள் வரிசையில்தன் பாதுகாப்புச் சோதனையை விரைவாக முடித்துவிட்டு கிருஷ்ணன்மட்டும் அனுவின் வருகைக்காகக் காத்திருந்தான்.

அனுவிற்குப் பதட்டத்தில் வரிசையில் முன்னே சென்று அங்குள்ள பெண்ணிடம் முன்னே செல்ல அனுமதி கேக்கும் எண்ணமும் வரவில்லை.விமான ஒலிபெருக்கியில் அனுவும்,கிருஷ்ணனுக்குமான கடைசி அழைப்பு வரவும்,இருவரும் கைப்பிடித்து விமான நுழைவுவாயிலருகே திரைப்பட இறுதி காட்சியில் வருவது போன்று ஓடிச்சென்று பயணச்சீட்டைக் காண்பிக்கவும் நேரம் சரியாக இருந்தது.அவசரமாக பயண இருக்கையில் அமர்ந்தபின் அந்தமான் அனுபவம் ஆரம்பமே அதிரடியாக இருக்கிறதே என்று அதிரச் சிரித்தாள் அனு.

Wednesday, December 14, 2016

புரட்சித் தலைவி - ஜெ.ஜெயலலிதா

கோமலவள்ளியே கோமகள் ஆனாய்
காண்பவர் கவரும் பேரழகியானாய்
கலைகளிலும் சகலகலா வல்லியானாய்
வில்லாதி வில்லருக்கும் வில்லியானாய்
 
ஜெயலலிதாவாய் ஜெயம் கண்டாய்
செயல்அளித்துச் செழுமை சேர்த்தாய்
இசைக் கருவிகளையும் மீட்டினாய்
தேனிசைக் குரலிலும் பாடினாய்

மொழிகளிலோ பெரும் புலமை 
ஆடற்கலையிலோ  சொக்கும் திறமை
பெண்ணினத்துக்கு  முன்மாதிரியாய் பெருமை
திட்டங்களும் வளர்ச்சியுமோ அருமை
 
தனிமை துயர்துடைக்கும் கரங்கள்
அறிவாற்றல் பெருக்கும் நூல்கள்
அகங்காரமும் ஆணவமும் அரண்கள்
அழகுத்திறமையை அதிசயக்கும் கண்கள்

கூடாநட்பு கேடாய் துரோகம்
இளவயதிலும் இறுதியிலும் சோகம்
அரசியலில் குருவாய் எம்.ஜி.ஆர்
அன்பிலே இவரைமிஞ்ச வேருயார்
 
வழக்குகளால் நிரம்பிய வாழ்க்கை
வீழ்வதும் எழுவதுந்தரும் நம்பிக்கை
அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கி
அம்மாவாய் மக்களுக்கு மனமிறங்கி
தங்கமங்கையாய் நிறைந்தாய் நெஞ்சில்
மக்களுக்காகவே நானென்ற சொல்லில்!

Thursday, December 8, 2016

சொல்லிட்டாளே!!!! - ஒரு பக்க சிறு கதை

வேலு நான்கு நாட்களாக நிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருந்தான்.  பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதே,தலைமை ஆசிரியரின் அறையில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கு வேலு ஏச்சு வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்,மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டையும்,பரிசையும் பெற்றுக்கொள்ள வந்தவள்தான் அதிதி.அவளை முதல்முதலில் பார்த்தபொழுதே வேலுவிற்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது.பள்ளி வளாகத்தில் கண்ணாடி அணிந்து சற்றே பூசினார்ப்போல் இருந்த அதிதியை கண்டாலே வேலுவின் நெஞ்சம் பரவசமடைந்தது.

கல்லூரி காலங்களிலும்,அவளை ஒருமுறையேனும் பார்ப்பதற்காக,நெடுந்தொலைவிலுள்ள   அதிதி படிக்கும் கல்லூரிக்குக் காரணமேதும் இல்லாமல் நண்பனின் உதவியுடன் சென்றது அவனின் காதலை அவனுக்கே உணர்த்தியது.மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அவளின் அலைபேசி எண்கள் கிடைத்தது ஆனந்தத்தைக் கொடுத்தாலும்,அவள் நண்பர்கள் அவள் மிகவும் கண்டிப்பானவள்,காதலையெல்லாம் காதுகொடுத்தும் கேட்கமாட்டாளென்றது கிலியை ஏற்படுத்தியது.

அவளிடம் காதலைச் சொல்வதற்காகவே குவிந்து கிடந்த தோல்வியுற்ற பாடங்கள் அனைத்தையும் ஒரே முயற்சியில் தேர்ச்சிப் பெற்றதும்,உயர்கல்விப் படிப்பை முடித்ததும்,புகழ் பெற்ற அலுவகத்தில் இயந்திரப்பொறியாளராகப் பணிபுரிவதையும் அதிதியின் மீது கொண்டிருந்த அதீதமான காதல் செய்யும் மாயயைதான் என்று எண்ணிச் சிரித்துக்கொண்டான். முகப்புத்தகத்தில் அவனது நண்பர்களாவதற்கான கோரிக்கையை அவள் ஏற்றுக்கொண்ட பொழுது காதலையே ஏற்றுக் கொண்டதுபோல் குதூகலம் கொண்டான்.

அவளது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து பலமணிநேரம் பார்த்துக் கொண்டிருப்பதிலும் உற்சாகம் கொண்டான். பிறந்தநாள் வாழ்த்து போன்று ஏதேனும் காரணங்கள் கொண்டு அதிதியிடம் பேசமுயற்சித்தான்.தெரிந்த பள்ளிநண்பரிடம் பேசுவதைப் போன்றே இருந்த அலைபேசி உரையாடல் சிறிதுவருத்தத்தை தந்தாலும்,அவள் பேசுவதை கேட்கும்பொழுது கிடைத்த இனிமை சிலிர்ப்பையும் சேர்த்தே தந்தது.காதலைச் சொல்வதற்குத்தான் நான்குநாள் ஒத்திகை. 

அதிதியின் கண்களை பார்த்து பத்துவருட ஒருதலைக்காதல்கதையையும், உன்னைத்தவிர வேறுப்பெண்ணிற்கு இதயத்தில் இடமில்லை,என் வாழ்கையின் தேவதை,அதிதியின் கணவன் வேலு என்பதிலேயே எனக்கு பெருமிதம் போன்றவை திரைப்படவசனமாய் தெரிந்தாலும் வேலுவின் கண்களில் காதல் தெரித்தது.அனைத்தையும் கேட்டபின்பு ’இப்பொழுதாவது காதலைச்சொன்னாயே?’உன்னைப்போன்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.நான் உன்மேல் கொண்ட காதல்தான் உயர்ந்ததென்று உணர்த்துகிறேன் பாரென்று கண்சிமிட்டினாள் அதிதி.

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கண்விழித்து நாட்டைகாத்தவருக்கும்
அகக்கண்விழிக்கவைக்கும் ஆசிரியருக்கும்
பாசப்புதல்வனாய்ப் பிறந்தவனே!
தம்பிக்குமட்டுமல்ல தரணியிலனைவருக்கும்
சகோதரியானவளை தமக்கையாய் கொண்டவனே!
பண்புமிகுந்த பேராசியரையும்
தமயனாய் தவமாய்பெற்றவனே!

உதகையிலிருந்து உதித்து வந்து
முருகனின்பெயர்போலவே மனங்களை கவர்ந்தவனே!
முதல்மதிப்பெண்களுடன்
மதிப்பான எண்ணங்களையும் பெற்றவனே!
நெஞ்சினிலேயென்ற பாடலுடன்
பலநெஞ்சங்களிலும் இடம்பிடித்தவனே!
பால்வடியும்முகத்தினில் கள்ளம்கபடமில்லா
குழந்தைச்சிரிப்பைக் கொண்டவனே!

வாழ்க்கையில் வகைவகையாய்
இலட்சியங்கள் இலட்சம் தொட்டாலும்
இலட்சியவானில் இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சுதந்திரபறவையானவனே!
தோழியின் உணர்வுக்கும் ஊக்குத்துடன்
உற்சாகமும் ஊட்டியவனே!
வெண்மதியாய் வாழ்க்கைத்துணை
வானில் ஒளிவீச இரவாகவும்
இறங்க இதயம்கொண்டவனே!
சந்தோஷச் சாரல் வாழ்வில்
செழுமையை சேர்க்க பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பனே!

மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



தொலைக்காட்சியில் தொலைந்தவளை
நெடுந்தொடரின் நெடியிலிருந்து
அன்னையின் அடையாளத்தை
தமிழன்னையால் மீட்டவளே!
என்சோம்பலை முறிக்கும்
துறுதுறு தோழியே!


உபத்திரவங்கள் பல செய்தாலும்
உதவிகள் சில செய்ய உத்வேகம்கொண்டவளே!

கோபக்கனல் உச்சம்தொட்டாலும்
முத்தமழையால் உச்சிமுகரச்செய்பவளே!

ஆடல்பாடல் தாகத்தை – உன்
தமிழ்பாடல்களால் தீர்த்தவளே!
கணவனின் காதலையும்
பெற்றோரின் பாசத்தை
பறித்துக் கொண்டவளே!


உன் பொம்மைக்கும், அன்னைக்கும்
அம்மையப்பன் ஆனவளே!
அன்னையிடம் அமுதுண்ணும் ஆசையை

அறிந்து அமிர்தமாய் அமுதூட்டியவளே!

நியூட்டனின் மூன்றாம் விதியாய்
நற்பண்புகளுடன் நான்நடக்க

நன்றாய் நினைவூட்டியவளே!
அத்திப்பழத்தில் தோன்றிமறையும்
கொசுக்களைப் போலல்லாமல்
வண்ணத்துப்பூச்சியாய் வலம்வந்து
வாகைசூட வாழ்த்துக்கள்!