Sunday, March 26, 2017

வணக்கம்

நண்பர் நட்புடன் 
தன் குடும்பத்தைச்
செய்துவைத்தார்  அறிமுகம்
வணக்கம் கூறிய 
என் மகளைக் கண்டு
நண்பர்மகள் 
கொண்டாள் சிறுமுகம்
வணக்கம் என்ற வார்த்தை
வழக்கத்தை விட
ஹாய் என்ற 
சொல்லுக்குத்தான்
மவுசும் மரியாதையோ?

வாய்நிறைய வாஞ்சையுடன்
இருகைகள் கூப்பி
இதயம்கனிந்து
அனஹத சக்கிரத்தை
அன்பால் சுழலவிட்டு
பத்து விரல்களும் பக்கம் வந்து
ஒன்றொடொன்று
விரல்பதித்து
ஞாபக சுரப்பிகளை
சுறுசுறுப்பாக்கி
பார்க்கும் மனிதரை
படம்பிடித்துக் கொண்டு
சொல்லப்படும் வணக்கம்
மனிதர்கள் மத்தியில்
இணைபிரியாது இருக்க
எந்நாளும்
ஏற்படுத்திவிடும் 
இணக்கம்!!!

Saturday, March 25, 2017

புதுமைப் பெண்

பொத்திப் பொத்திப்
பாதுகாத்த பாசக்கூட்டினிலே
சிறகுகள் மறந்து  
முட்டைமட்டும் ஈன்றிடும்
பறவையாய் அல்லாது 
பயமறியா பட்சியாய் 
கடலென கல்வி கற்றிடவே
தரணியை வெற்றி பெற்றிடவே
பறந்து சென்றுவா
உலகையே வென்றுவா!!

ஆடல்பாடலென 
ஆயகலைகள்
அறுபத்திநான்கும் கற்று
அழகுப்பதுமையாய்
வலம்வந்தாலும்
தற்காப்புக் கலைகற்று
தனக்கொரு துன்பம்
தீண்டாது
இரட்சிக்க இரட்சகனை 
எதிர்பாராது நீயே 
தேவைக்கேற்ப 
தேவதையாய் 
அவதரித்துவா!

தியாகச் சுடராய்
தன்னைத்தானே
மெழுகுவர்த்தியாய்
வருத்தி உன்னை நீயே 
உருக்கிக்  கொள்ளாமல்

உலகத்து உயிரனைத்தும்
உயிர்வாழ உறுதுணையாய்
உதவும் உதயனாய்
வையத்தோர் வாழ்க்கையில்
கவலைத் துடைக்க
கண்ணீரில் கதிரொளியாய்
விடியல் பரப்பு
வண்ண  வானவில்
கொண்டு வந்தாயென
உச்சிமுகர்ந்து உலகம்
விரித்திடுமே 
சிவப்புக் கம்பள விரிப்பு!!!

முகங்கள்

வழிப்போக்கரும் வழியேவந்து
வாட்டமான முகத்தில்
வருத்தத்தின் காரணமென்ன
எனக்கேட்க வைத்து
அசடுவழிகிறாயே?

அகத்தின் எண்ணங்களை
அகத்திலே வைத்திராயோ?
முகத்திலே கொண்டுவந்து
முன்னாலிருப்பவரிடம்
மாட்டிவிடுகிறாயே?

நகைக்கக் கூடாதென
நிச்சயமாய் நினைக்கையில்
பல்லைக் காட்டிச்சிரித்து
பதிலுக்கு வம்பை 
விலைக்கு வாங்கித்தருகிறாயே?

துக்கம் தொண்டையை
அடைத்து 
தெளிந்த முகமாய்
தெரிவித்துக் கொண்டாலும்
அக்கறையானவருக்கு 
அகக்கண்களின் 
ஆழ்மன குழப்பத்தை
சமிக்ஞையால்
புறக்கண்ணின்வழி 
காதல்தூதனுப்பி
புரியவைத்துவிடுகிறாயே?

சொற்களனைத்தையும் 
செயலிழக்கச்செய்து
உன் முகபாவத்தின் முன்
மண்டியிடவைத்து
ஒய்யாரமாய் ஒப்பனையுடன்
பவனிவருகிறாயே?

நவரசங்களை
நயம்பட நன்றாக 
வெளிப்படுத்தி
நன்மை பல பெற்றுத்தந்தாலும்
இடம் பொருள் ஏவலும் 
பார்த்துக்கொள் !
கொஞ்சம் நடிக்கவும்

கற்றுக்கொள் !!! 

Friday, March 24, 2017

பாயும் வேகத்துடன் பிரம்மாண்ட வாகனம்

சென்ற அத்தியாயத்தில் முன்னுரைக் கொடுத்திருந்த பெராரி வேர்ல்டு பூங்காவிற்குத் திடீரென்று  செல்ல வாய்ப்புக் கிடைத்தது சுவாரஸ்யமான அனுபவமாகவே மனதில் பதிந்திருந்தது. சுற்றுலாப் பயணிகளையும் தற்காலிகமாக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற மக்களைக் கவரும் வகையில் பூங்காவிற்குள் சென்று சவாரிகள் செய்யாது சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும் குறிப்பிட்ட காலத்தில் இலவச அனுமதி அறிவித்திருந்ததால் , ஒரு வாரவிடுமுறை நாளில் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு நண்பர்கள் பட்டாளத்துடன் துபாயிலிருந்து அபுதாபிக்கு இரண்டு வண்டிகளில் ராஜி-சதீஷ் , சுஜி-சதீஷ், பாஸ்கர்-ஸ்ரீதேவி  தம்பதியினர்களுடன் உற்சாகமாகக் கிளம்பியிருந்தோம்.

அனைவரும் ஆர்வமாய் கிளம்பியிருந்தாலும் நான் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது என் கண்களிலேயே மின்னியதைக் கண்டுபிடித்து கணவரும் நண்பர்களும் கிண்டல் செய்ய , உற்சாகமாய் பூங்காவினுள் உள்ளே நுழைந்தோம். சுற்றுலாவிற்கு ராஜிசதீஷின் அம்மா குமாரி அவர்களும் துபாய்  வந்திருந்ததால் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.மாலை ஆறு மணிக்கு மேல்தான் நுழைவு இலவசமென்பதனால்  அதனைக் கணக்கிட்டே சென்றிருந்ததால் சற்று இருட்டி விட்டது. நுழைவு வாயிலிலேயே பேரங்காடியைப்   போன்று பல கடைகளும் ஆங்காங்கே நிற்கவைக்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு நான்கு சக்கர பெராரி வண்டிகள் எங்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளித்தன.


சிவப்பு வண்ண சொகுசு பெராரியின் அருகே தோழி சுஜி தனிபாங்குடன் நின்று விதவிதமாக நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க  அந்த வண்டி 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் வண்டியை எனக்கு ஞாபகப்படுத்த 'அந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி நீங்க தானா? ' என்று  நான் கேட்கச் சுஜி செல்லமாய்க் கோபித்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வந்தார். 
ராஜிசதீஷ் தனது அம்மாவின் வயதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரியில் மட்டும் பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க, எதிர்பாரா விதமாக கணவர் எனக்கும் எல்லா சவாரிகளிலும் எண்ணற்ற தடவை பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

நாம் வாழ்வில் ஒருமுறையேனும் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு போவோமா என்றே ஐயத்தில் இருந்த எனக்கு அதை இலவசமாய் பார்வையிட அனுமதி கிடைத்ததே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கையில் எல்லா சவாரியிலும் பயணம் செய்ய வாய்ப்புகிடைத்தால் ஆனந்தமாகத்தானே இருக்கும். தற்காலிக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை உள்ளவர்கள், யாஸ் தண்ணீர்  பூங்காவிற்கும் சேர்த்து பயணம் செய்பவர்கள், குறிப்பிட்ட வங்கி அட்டை உள்ளவர்களுக்குயென சலுகை விலையில் பல வழிகளில் நுழைவுச் சீட்டைக் கொடுத்தார்கள்.

ஆனால் யாஸ் தண்ணீர்  பூங்காவிலும் , பெராரி பூங்காவிலும் சவாரிகளை சுகமாய் அனுபவிக்க கண்டிப்பாகத் தலா ஒவ்வொரு நாட்கள் தேவை என்பது என்னுடையக் கருத்து .கணவர் நிச்சயமாக  நுழைவுச்சீட்டு வாங்கித்தருவார் என்று தெரிந்திருந்தால் "சற்று முன்னரே வந்திருக்கலாமோ?" நுழைவுச் சீட்டுக்  கட்டணம் சற்று கூடுதலென்பதால் 
பெராரி பூங்காவிலுள்ள அனைத்துச் சவாரிகளிலும் பயணித்துவிடுவோமா? என்ற குழப்பம் என்னை பீடித்திருந்தது.

நானும், குமாரி அம்மாவும் மட்டுமே நுழைவுச்சீட்டு வைத்திருக்க , நேரமும்  குறைவாக இருக்க இரவு பணியாளர்கள் பூங்காவைப் பூட்டுவதற்குள் எல்லா சவாரியிலும் ஒருதடவையாவது பயணம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டோம்.
முதலில் உலகிலேயே வேகமாக ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய அதிவிரைவான சவாரியைத் தேர்ந்தெடுத்து ( formula rossa) நான் பயணிக்க முடிவெடுத்துச் செல்ல, அங்கிருந்த பணியாளர்கள் உலகத்திலுள்ள அனைத்து வியாதிகளையும் குறிப்பிட்டு இவையெல்லாம் இருந்தால் பயணம் செய்ய முடியாது என்று எச்சரித்தார்கள்.அதிலெதுவும் எனக்கில்லையென்று நான் உறுதியளிக்க அதிவேகக்காற்றில் கண்ணிற்கு ஏதும் ஆபத்து நேராமல் இருக்கவும் பூச்சிகள் எதுவும் கண்களை தாக்காத வண்ணம் ஒரு கண்ணாடியைத் தந்தார்கள்.


பெராரி வண்டி போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்தச் சவாரியின் பெட்டியில் மிக தைரியமானவள் என்பது போல நண்பர்கள் நடுவே காட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாலும் மனதின் உள்ளூர இதுபோல சாகச சவாரிகளில் நடந்த விபத்துக்களே நிழலாடியது.
இருக்கைப் பட்டைகளை நன்றாக அணிந்து கொண்டு கதவுகளை மூடிக்கொள்ள கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் பெராரி வண்டியைப் போன்று வேகமாகப் பறந்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு என்ற வாக்கியத்தின் அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.

முகத்திலுள்ள தசைகளனைத்தும் பிய்த்துக் கொள்வது போல காற்று வேகமாக அடிக்க மிக உயரத்திற்குச் சென்று அசுர வேகத்தில் கீழே பாய்ந்தது. பயணிகள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு உற்சாக ஓலமெழுப்ப வளைவுகளிலும் நெளிவுகளிலும் பயணித்து ஒருவழியாக பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தோம். பயத்தில் கண்களைத் திறந்து பார்க்கத் தைரியமில்லாததாலும் நன்றாக இருட்டி விட்டதாலும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதென்றேத் தெரியவில்லை.  விநாயகர் போல வயிறு உடையவர்களும்  எனது கணவரைப் போல ஆறடி உயரத்திற்கும்   மேல் உயரமானவர்களும் ஒன்றரை நிமிட சாகசப் பயணத்தின் போது வயிற்றை உள்இழுத்தும் கால்களை மடக்கிக் கொண்டும் பயணப்பட வேண்டியிருக்கும்.   

பயணம் செய்பவர்களை  ஒளிப்படங்கள் எடுத்துக்கொடுப்பதற்கு ஆங்காங்கே ஒளிப்படக் கருவிகளை பதித்து வைத்திருந்தனர். ஒரு நிழற்படத்தை அச்சிட்டுத் தருவதற்கு  99 திராம்கள் தானென்று அவர்கள் கூறினாலும் அனுபவமே அற்புதமாக இருந்ததுயென்று கூறிவிட்டு நான் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.நண்பர்களனைவரும் மேலிருந்த மாடத்தின் வழி இந்தச் சவாரியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்க நானோ பெருமை பொங்க திரும்பினேன்.

மொத்தம் இப்பூங்காவில் இது போன்று  ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய சவாரிகள் மூன்று உள்ளதென கேள்விப்பட்டிருக்க நாங்கள் சென்றிருந்த சமயம் ஒரு சவாரி பராமரிப்பில் இருந்ததால் இரண்டு சவாரிகளில் மட்டுமே பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
சிறு குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டு உயர வரைமுறைக்குள் இருந்தால் சில சவாரிகளுக்கு அனுமதி இலவசமென்று கூற மஹிதா, சான்வி ஆகிய நண்பர்களின் பிள்ளைகளை குமாரி அம்மாவுடன் கூட்டிச் சென்றேன். என் குழந்தையின் உயரத்தைக் காரணம்காட்டி அந்த குடும்பச் சவாரிக்கு பணியாளர் என் பிள்ளையை அனுமதிக்காததால் மனதில் சிறு வருத்தத்துடனேயே மற்ற பிள்ளைகளை என்னுடன் அழைத்துச் சென்றேன்.

ஒருசிலக் குடும்பச்சவாரிகள் நாம் ஒரு பெரிய பெட்டியில் ஏறிக்கொண்டு கையில் ஒளிமி துப்பாக்கியுடன்(laser gun) திரையில் தெரியும் தீயசக்திகளை சுட்டு வீழ்த்தி மதிப்பு புள்ளிகளைச் சம்பாதிப்பது போல இருக்கும்.ஒரு குகைப் போன்று சுற்றுப்புறத்தை அமைத்து பல பரிமாணங்களில் சிறுவர்களைக் கவரும்  வகையில் ஒலி ஒளியுடன் அவர்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்களும் மிருகங்களும் பேசும் வண்ணம் சூழ்நிலையை அமைத்திருந்ததனால் பிள்ளைகள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர்.

குழந்தைகளுக்கென்று பல சவாரிகள் அமைத்திருந்தாலும் வயதையும் உயரத்தையும் கணக்கிட்டு பெரியோரின் துணையுடனேயே சிலசவாரிகளுக்கு பணியாளர்கள் அனுமதித்தனர்.நண்பர் சதீஷ் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவர்கள்  அம்மா குமாரியையும் அழைத்துக்கொண்டு சில குடும்பச் சவாரிகளைச் சுற்றி வந்தேன். ( bell'italia ) பெல் இடாலியா என்ற சவாரியைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே போனதனால் சவாரி முடியும்வரை அடுத்ததென்ன என்ற ஆர்வம் பற்றிக் கொண்டே இருந்தது. சில சவாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மூடி விடுவார்கள் என்பதால் பறந்து ஓடவேண்டியதாயிற்று.அதில் இத்தாலிக நாட்டைச் சுற்றிக் காண்பிக்கும் இச்சவாரியும் ஒன்று.

மக்கள் இருக்கைகளில் அமர்ந்து பூட்டிக்கொண்ட பின் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் மேலே உயர்ந்து நாம் வானில் பறந்து கொண்டே இத்தாலி நாட்டு மலை, இயற்கை, நகர அழகை இரசிப்பதாய் அமைந்திருக்கும். இவ்வாறு பல வழிகளாய் நான்கு சக்கர பெராரி வண்டியில் அமர்ந்து கொண்டும் அதிவேகமாக காடு, மலை போன்று பலவற்றைக் கடப்பதுபோல சவாரிகளை ஏற்பாடு செய்திருக்க நிஜமாகவே அவற்றின் வழியே பயணம் செய்தது போன்று ஒரு அனுபவம் கிடைத்தது. நமக்கு எதுவுமாகாது , நாம் இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறோமென்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனம் அந்தப் பயணத்தில் லயித்து மலையின் ஓரத்திலே வண்டி சென்றாலோ, சாகசங்கள் புரிந்தாலோ துள்ளிக் குதித்து மயிர்கூச்செரிந்து சிலிர்க்கும்.

உலகிலே போட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர  பெராரி வண்டியை நாம் ஓட்டிச்செல்வது போல மாதிரி வாகனத்தை 
( simulator) அமைத்திருக்க மொத்தம் எட்டுப்பயணிகளை ஒரே நேரத்தில் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருந்தார்கள். நாம் இருக்கும் இடத்திலிருந்தே வண்டியை ஓட்டினாலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாத நான் வண்டியை ஏடாகூடமாக ஓட்ட சாலையோரத்திலுள்ள பலகையை யெல்லாம் இடித்துத்தள்ள உண்மையாகவே வண்டி ஓட்டிப் பெறும் பேரதிர்வுகளையும் அடிகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லோரும் திரையிலே என்னை முந்தி ஒரு வழியில் சென்று கொண்டிருக்க நான் மட்டும் அதற்கு எதிர் வழியில் தட்டுத்தடுமாறிப் போய்க்கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே இப்படித்தான் என்பதனால் கடைசிப் போட்டியாளராய் வந்ததற்கு கவலையேதும் கொள்ளாமல் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.

கையில் பூங்காவின் முழு வரைபடத்தை வைத்துக்கொண்டும் ஆங்காங்கே நின்றிருந்த காவலாளர்களின் உதவியோடும் விடுபட்ட சவாரிகளில் பயணிக்க விரைந்து ஓடிக்கொண்டிருந்தேன்.

கடைசி நேரத்தில் பூங்கா மூடும்சமயம் ( flying aces) ப்ளையிங் ஏசஸ் என்ற சவாரிக்கு கணவர் அவசரஅவசரமாய் என்னை அனுப்பிவைக்க அதுயென்னவென்று தெரியாமலேயே அழகான வித்தியாசமான சுற்றுப்புறச் சூழலை இரசித்துக் கொண்டே அந்தச் சவாரிக்கு செல்வதற்கான  பாதையில் ஓடினேன்.

அணிந்திருந்த அணிகலன்களையும், காலணிகளையும் அவர்கள் கழற்றிவிடச் சொல்ல, "என்ன சவாரியாய் இருக்கும்? எதாவது சாதாரணச் சவாரியாயிருக்கும்" என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து இருக்கைப்பட்டையை நன்றாக அணிந்து கொண்டு கைப்பிடியைப் பிடித்துக்கொள்ள திடீரென்று எதிரிலிருந்து கதவு திறந்தது.  ஏற்ற இறக்கங்கள் வளைவு நெளிவுகளிலே தலைகீழாகச்  செல்லும் சிலிர்ப்பூட்டும்  சவாரியென்று  அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

சில விநாடிகளில் அமர்ந்திருந்த ஊர்தி வேகமாக பாய்ந்து செல்ல முதன் முதலில் சென்ற சவாரியைக் காட்டிலும் இது பயங்கரமாக இருந்தது. அசுர வேகத்தில்  தலைகீழாக சென்று வளைவு நெளிவுகளில் நம்மை தள்ளிவிட்டுவிடுமோ என்ற பயத்திலேயே பயணம் முடிவு பெற சாகசப்பயணம் மேற்கொண்ட அனைவரின் மனதைரியத்தைப் பாராட்டி அந்த சவாரியை இயக்கியப் பணியாளர்கள் கைத்தட்டி எங்களை உற்சாகப்படுத்தினர்.

பல நாள் ஆசை நிறைவவேறிய சந்தோஷத்தில் அப்பொழுது அபுதாபியிலிருந்து வெளியேறினாலும் பின்னொரு நாளில் முதன்முதலாக பிரபல பேச்சாளர்கள் கலந்து கொண்ட  தமிழ் பட்டி மன்றத்தை நேரடியாகப் பார்த்து கேட்க, 11 வருடங்களுக்கு முன் பார்த்திருந்த பள்ளித் தோழியைப் பார்க்க,  தமிழில் புதுக்கவிதைகள், ஹைக்கூ , ஹைக்கூ வகைகள் போன்றவற்றை  எனக்கு திறமையாக எழுத புலனத்திலேயே(whatsapp)  சொல்லிக் கொடுத்த ஆசிரியரென பலரைப் பார்க்க ஆர்வமாய் எங்கள் குடும்பம் மட்டும்  துபாயிலிருந்து அபுதாபிக்கு  பேருந்தில்  சென்றிருந்தோம்.

துபாயிலிருந்து அபுதாபி செல்ல ஒரு நபருக்கு 25 ரூபாய்தான் கட்டணம் என்பதால் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்த அல்குபைபா ( al ghubaibha) பேருந்து நிலையத்திலிருந்தே மதியம் கிளம்பினோம். எப்பொழுதும் நண்பர்களுடன் அவர்கள் வண்டியில் சற்று விரைவாக அபுதாபிக்குச்  சென்றிருந்த எங்களுக்கு மெதுவாகச் சென்ற நீண்ட  பேருந்து பயணம் எனக்கும் என் கணவருக்கும் மனம் விட்டு பேசிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அபுதாபியில்  வீட்டுவாடகை, வாழ்கையை நடுத்துவதற்கான செலவு மற்ற அமீரகத்தைக் காட்டிலும் அதிகமென்பதால் அங்கு வேலைசெய்பவர்களுக்கு  மற்ற அமீரகத்தில் கொடுக்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் கொடுப்பார்கள் என்றும், உலக நாடுகளில் அதிகம் செலவாகும் நாடு பட்டியலில் அபுதாபி 68 வது இடமென்று கேள்விப்பட்டு திகைத்திருந்த எங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

அபுதாபியில் முதலில் என் பள்ளித்தோழி மருத்துவர் கார்த்திகா வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்திலிருந்து வாடகை வண்டியில் செல்லும் பொழுதுதான்  அபுதாபியில்  வாடகை வண்டிகளில் குறைந்தபட்ச கட்டணம் கிடையாதென்பதை கவனித்தோம். துபாயில் 
குறைந்தபட்ச கட்டணம் 12 திராம்களென ஞாபகம் வர இங்கேயோ மொத்தமாக பயணம் செய்த கட்டணமே 7 திராம்கள்தான் ஆகியது என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டோம். 

தோழியின் கணவர் என் ஊரைச் சேர்ந்த உயர்ந்த நிலையிலுள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி (IFS) என்று தெரியவர எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. நாமும் வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பிலுள்ள  அதிகாரியின் வீட்டுக்குச் சென்றோம் என்று பெருமை பட்டுக்கொண்டேன். தோழிக்கும் ஆசிரியருக்கும் என ஆசையுடன் நான் செய்திருந்த காளான் பிரியாணி, நவரத்தின குருமா, பூக்கோசு ( Cauliflower fry) வருவல் போன்ற உணவுகளைச் சுவைத்து விட்டு இருவருமே அருமையென்று பாராட்ட என் மனம் இருப்பு கொள்ளாமல் பறந்து திரிந்தது.

பல வருடங்களுக்குப் பின் தோழியை சந்தித்த சந்தோஷத்துடன் அபுதாபியிலுள்ள தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றத்தில் தொலைக்காட்சியிலேயே பார்த்திருந்த பல பிரபல பேச்சாளர்களான பேராசிரியர் இராமச்சந்திரன், பர்வீன் சுல்தானா, நகைச்சுவைப் பேச்சாளர் மோகன சுந்தரம், ஐயா சண்முக வடிவேல் போன்றோரின் அருமையான பேச்சுக்களைக் கேட்டு அவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.

தொலைபேசியிலும் , பகிரியிலும் (whatsapp)  பாடமெடுத்த ஆசிரியர் கவியன்பன் கலாம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நான் சமைத்த உணவை வழங்க, அவரோ தன் வீட்டிலிருந்து எங்களுக்கு எடுத்த வந்த திண்பண்டத்தை பாசத்துடன் பகிர்ந்து கொண்டார். விழாவில் வியப்பளிக்கும் வகையில் பல தமிழ்பற்று கொண்ட துபாய் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு பட்டிமன்றம் முடிய நேரம்ஆகிவிட  அபுதாபியிலிருந்து துபாயிக்கு செல்லும் கடைசி பேருந்தை தவறவிட்டிருந்தாலும் கவிஞர் காவிரி மைந்தன், ரமணி மற்றும் அவரது நண்பர் தங்கள் வண்டியிலேயே எங்களை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்தனர்.


போகும் வழியில் ' யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம் ' என்பதற்கேற்ப நாங்கள் இரசித்த , மாதிரி எந்திர வண்டிகளை கருப்பொருளாய் கொண்டு அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை அவர்களுக்கும் சுற்றிக் காண்பித்தோம். முதலில் மிகுந்த நேரமாகிவிட்டது மற்றொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் யோசித்தாலும் கணவர் அவர்களைக் கட்டாயப்படுத்தி உணவகத்தைச் சுற்றிக் காண்பிக்க , கடைசியில் "நல்லவேளை! இந்த வித்தியாசமான உணவகத்தைக் காண்பித்தீர்கள்... இல்லையென்றால் இதைப் பார்க்காது தவறவிட்டிருப்போம்" என்று சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

முதலில் கணவர் ஏன் ஆர்வமில்லாதவர்களை வற்புறுத்துகிறார் என்று நான் நினைத்துக் கொண்டாலும் பின்னர் நாம் இரசித்த விஷயங்களை மற்றவர்களிடம் கூறி அவர்களையும் உணரவைத்து  ஆனந்தப் படுத்துவது தவறில்லையென்றே தோன்றியது.

Emirates national auto museum(ENAM) எனப்படும் அமீரக தேசிய வாகன அருங்காட்சியம் அபுதாபியிலிருந்தே  45 தொலை அளவு அலகு  (கிலோமீட்டர் ) இருந்ததால்  பலருக்கும் இந்த வித்தியாசமான பிரமிப்பூட்டும் நான்கு சக்கர எந்திர வண்டிகளின் 
அருங்காட்சியத்தைப் பற்றிப் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 50 திராம்கள் கட்டணம் சற்று அதிகமென்றே தோன்றினாலும் அபுதாபி இளவரசருக்குச் சொந்தமான அரிதான 200 வகையான வண்ண வண்ண பிரம்மாண்டமான வண்டிகளை கண்டிப்பாக ஒருமுறையேனும் பார்த்து இரசிக்கலாம்.


ஆள்ஆரவமற்ற இடமாகத் தோன்றி சிறிது திகிலை ஏற்படுத்தினாலும் வானவில் சின்னம் பொறிக்கப்பட்டு வானவில்லின் ஏழு  வண்ணங்களில் உள்ள  மெர்சிடிஸ் (mercedes) உயர்ரக வண்டிகள் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும். உலகப் புகழ்பெற்ற ஊர்திதயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லும் வகைவகையான மனதை ஈர்க்கும் வண்டிகள் ஒய்யாரமாக அணிவகுத்திருந்தாலும் அங்கு பாலைவன மண்ணில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் வானூர்தி நிச்சயமாய் உங்களது கவனத்தைத் திசை திருப்பும்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கரடு முரடான பாதைகளில் ஓட்டிச் செல்ல ஏதுவாக இருக்கும் சிவப்பு வண்ண இராட்சத  பொறி வண்டியையும்(jeep), காண்பதற்கு அரிதான பழம்பெருமை வாய்ந்த ஊர்திகளையும் பார்த்தால் அனைவரும் ஒரு நிமிடமாவது அதிசயித்து விடுவார்கள். உலகிலேயே மிகப்பெரிய பார வண்டியை(truck) அதாவது சாதாரண ஊர்தியைக் காட்டிலும் 8 மடங்கு பெரிய வாகனத்தை  அங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஏற்படும் வியப்பு,  இந்த அருங்காட்சியம் பிரபல பிபிசி(BBC) தொலைக்காட்சியில்  டாப் கியர் (top gear) நிகழ்ச்சியில் ஒளிபரப்ப பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடன் பன்மடங்காகிவிடும்.

இளவரசர் தனக்குப்பிடித்த வண்டிகளை உலகளவில் பார்த்து பார்த்து சேகரித்து வைத்திருந்தாலும் ஒரு சில ஊர்திகள் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டும், மற்றவை மன்னருக்குப் பிடித்த வகையில் உணவு, குளிர் பானத்தை  வைத்துக்கொள்ளும் வகையில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டியுடன் மாற்றம் செய்யப்பட்டு  தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. வண்டிகளை சரிசெய்து திருத்தியமைக்கப்படும் வகையில் வாகனப்பட்டறையையும் பக்கத்திலேயே வசதியாய் அமைத்திருந்தார்கள்.

ஒரு சில ஊர்திகள் சாலையில் ஓட்டிச் செல்ல வாய்ப்பு இல்லாதவையாக இருந்தாலும் ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளே படுக்கை அறை, மேலே குளிப்பந்தாட்ட மைதானத்துடன் பகுமானமாய் விளங்கியது.பிரசித்திப் பெற்ற லம்போர்கினி ஊர்தி உலகத்தைப் போன்ற அமைப்புடன் அமைந்திருக்க ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்து வசதியுடன் மிடுக்காய் காட்சியளித்தது.பல பந்தயக் கார்கள் , பழைய காலத்து அமெரிக்க ஐரோப்பிய லிமொசென் வண்டிகள் அழகாய் அணிவகுத்து உங்களை ஒருமுறையேனும் அதில் உட்கார்ந்து பயணிக்கத் தூண்டி உசுப்பேற்றி விடும்.

அதிகபட்சம் இரண்டு மணிநேரம் சுற்றிப்பார்த்து விட்டு அமீரக மிருக காட்சி சாலைக்கு சென்றோமானால் (emirates zoo) 30 திராம்கள் கட்டணமாகக் கொடுத்து 1700 மிருகங்களுடன், ஜோடி வெள்ளைப் புலிகள், 31 வயதான 300 கிலோ எடையுள்ள  சைபீரிய கரடி, சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரையென வரிசைகட்டி நிற்கும் விலங்குகளை பார்த்து  ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வரலாம். 

ஒட்டகங்கள், வரிக்குதிரை, முயல் மற்றும் சில செம்மறியாடுகள் வகைகளுக்கு நாமே  தொட்டுப் பார்த்து உணவு கொடுக்கலாம் என்ற விதிவிலக்கின்படி  மற்ற மிருககாட்சிசாலையைக் காட்டிலும் இந்த மிருககாட்சிசாலை சுற்றுலா பயணிகளின் மனதில் இடம் பெற்றிருந்தது. காட்டு விலங்குகளனைத்தையும்  கண்ணாடிக் கூண்டுக்குள் உலவு விட்டுப் பக்கத்திலே இருந்து பார்ப்பதைப் போன்று உற்சாகம் கொண்டிருந்தாலும் கோடை காலத்தில் அந்த மிருகங்களுடன் சேர்த்து நமக்கும் இதமாய் இருக்கும் வண்ணம் குளிர்ந்த சீதோஷ்ணநிலையை செயற்கையாய் அமைத்திருந்தார்கள்.


ஒருமுறை புதிதாய் பிறந்த புலிக்குட்டியை நண்பர் குடும்பத்தினரின் கையில் மிருககாட்சிசாலைப் பணியாளர்கள் கொடுத்ததாகச் சொல்ல எனக்கோ உடல் நடுங்கிவிட்டது. புலிக்குட்டியென்றாலும் கடித்துக் குதறிவிடுமோ என்ற பயம் எனக்குள் இருக்கத்தான் செய்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்  நடத்தப்படும் 20 நிமிட துள்ளலான கடற்சிங்க  வேடிக்கைக் காட்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. கானா எனும் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க ஆடிபாட சில சமயம் விலங்குகளும் சேர்ந்து ஆடிபாடி நம் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்புள்ளது.


வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் முதலைகள் உணவுஉண்ணுவதைத் தைரியமுள்ளவர்கள் பார்த்து இரசிக்கலாம்.1200 கிலோ எடையுடன் 5 மீட்டர் உயரமுள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு ஏணியில்ஏறி  கை நிறைய தாவரங்களை அள்ளியும் கொடுக்கலாம்.மது , இராதாயென பெயர் கொண்ட இந்திய யானைகள் நீங்கள் கொடுக்கும் உணவிற்காகவே உங்கள் கைகளை ஆவலாய்ப் பார்த்தபடி காத்திருக்கும்.செந்நாரைப் பறவைகளும் மகிழ்ச்சியாய் இருந்தால் உங்களுடன் வந்து ஒளிப்படும் எடுத்துக்கொள்ளும். வாகன அருங்காட்சியத்தையும் , அமீரக மிருககாட்சிசாலையைப் பற்றி கேட்கவும் படிக்கவும்தான் என்னால் முடிந்தது....நீங்களாவது போய்ப்பார்த்துவிட்டு வருகிறீர்களா?

Monday, March 20, 2017

அத்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்காளிரண்டு தங்கையிரண்டு
அண்ணனும் தம்பியும்
அளவாய் ஒன்றொன்று!
அத்தனை பேரிடமும்
அன்பை பகிர்வதில்
அளவுதாண்டும் கடலென்று!

உடன் பிறந்தோரில் 
எல்லா உறவுகளுடன்
செல்வங்கள் அனைத்தும்
பெற்ற செல்வியே!
தமிழில் தாகங்கொண்ட 
தமிழ் குடும்பத்தின்
தமிழ் செல்வியே!

அறியாதோர் ஆயிரமாய் வந்தாலும்
அனைவருக்கும் இன்முகத்துடன்
அறுசுவையுணவை பாசத்துடன்
பரிமாறும் அன்னபூரணியே!

தையல்கலையின் மீதான 
தீராக்காதலினால் தான் நீ
தையல்நாயகியோ?
மருமகளை மகளாய் 
கவனிக்கும் பொறுமை
மகளே கொண்டிடுவாள் உங்கள்
கவனிப்பில் பொறாமை!

உங்களால்   அழகாய் 
தேர்ந்தெடுக்கப்படும்  உடை
ஊரார்போற்றப் பெற்றிடுமே
நேர்த்தியான தனிநடை

கணவருக்கு கண்ணின் 
இமைபோல் 
கணம்தவறாது காவல்
கவனிப்பில் கலந்திருக்கும்
களங்கமில்லா காதல்

பேரன் பேத்திகளிடம்
என்றுமில்லை 
பாசத்தில் பேதம்
வாழ்வில் வசந்தம் வீசி
வாழ்த்திடுமே சந்தோஷ கீதம்!

Friday, March 17, 2017

நட்சத்திரத்துடன் ஒரு பிரார்த்தனை

என் அப்பாவின் அக்காவான மாரீஸ்வரி அத்தையின் மகன் இராம் தன் மனைவி உமாவுடன் புதுமணத் தம்பதியராய் துபாய்க்கு சுற்றாலா வருகை தந்திருந்த பொழுது அவர்களின் குடும்ப நண்பர்களான சிவகுமார்-சிவகாமி தம்பதியினர் விருந்திற்கு அவர்களை அழைக்க, பக்கத்து இலைக்கும் பாயாசம் கிடைப்பது போல, எங்கள் வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததால் எங்களையும் அவர்கள் வரவேற்க, அவர்களுடன் விருந்தில் பங்கேற்று அபுதாபியைச் சுற்றிப்பார்க்கும் அற்புத வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது.

சிவகாமி அக்கா பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம் அவர்களின் மகள் மற்றும் வானளாவியப் புகழ் கொண்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேத்தியென்று பல பெருமைகள் பெற்றிருந்ததால் 'பிரபலங்களுடன் ஒரு நாள்’ என்பது போல அவர்கள் வீட்டிற்குச் சென்று, விருந்துடன் உரையாடி உல்லாசமாக ஊர் சுற்றப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை.

சிவகாமி அக்கா செய்த ருசியான காலை உணவை வயிராற உண்டுவிட்டு அபுதாபியைச் சுற்றிப்பார்க்க உற்சாகமாய் கிளம்பினோம். துபாயிலிருந்து அபுதாபி சற்றுதொலைவு என்பதால் பொழுதுபோக்கிற்காக நான் சிவகாமி அக்காவையும் அவரது கணவரையும் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சரமாரியாகக் கேள்விகேட்டு பேட்டியெடுக்க ஆரம்பித்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மிகுந்த பொறுமையுடன் சிரித்த முகத்துடன் பதிலளித்து வந்தார்கள்.


வழியில் புகழ்பெற்ற ஒருகடையில் குங்குமப்பூ போடப்பட்ட தேநீரை வாங்கிச் சுவைத்துக்கொண்டே துபாயிலிருந்து அபுதாபிக்கு செல்லும்  நீண்ட நெடும்பாதையை பயணகளைப்பில்லாமல் கடந்தோம்.

பிரசித்திபெற்ற ஒரு இடையீட்டு(sandwich) சாண்ட்விச் ரொட்டி கடையில் பல வகையான ரொட்டி, காய்கறிகள், பழவகைகள், இறைச்சி, மீன்வகை போன்றவற்றில் நமக்கு பிடித்தமானவற்றை தேர்ந்தெடுத்து நமது சுவைக்கு ஏற்றவாறு, விருப்ப உணவை வடிவமைத்து உண்டு மகிழ்ந்திடும் வாய்ப்பை வழங்கியிருந்தனர்.

ஒவ்வொரு வாடிக்கையாளரின் சுவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பணியாளர்கள் இடையீட்டு ரொட்டியை தயார் செய்து கொடுக்க அவர்கள் ”இதுவேண்டுமா? அது வேண்டுமா?” என்று கேட்கும் நுனிநாக்கு உச்சரிப்பு ஆங்கிலத்தில் மின்னல் வேகக் கேள்விக்கு குழப்பமில்லாமல் பதிலளிக்க நான் சற்று திணறித்தான் போயிருந்தேன்.



அங்கு மதிய உணவை முடித்துவிட்டு அபுதாபி நகரக்குள் பயணமாக ஆரம்பிக்க, நாணயம் போன்ற கட்டிடத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்தோம். சிவகுமார் அண்ணன் அவர்கள் அந்த அல்தார் (aldar) தலைமைச் செயலகம் கட்டிடம் தான் ஐக்கிய அரபு அமீரகத்திலே வட்டவடிவிலிருக்கும் முதல் கட்டடம் என்றும் மனிதனின் உடலை ஒரு பஞ்சகோணத்தில்(pentagon) மையப்படுத்தி நிற்க வைத்தோமாயின் அதன் சுற்றளவு கட்டிடத்தின் வட்டஅளவை குறிப்பதாகவும், தரையோடு அமைந்திருக்கும் அடித்தளம் பஞ்சகோணத்தின் அடிப்பகுதியை குறிப்பதாகும் என்றார். இதனை ஆங்கிலத்தில் கோல்டன் ரேசியோ (golden ratio) தங்க சதவீதம்  என்று கூறுவார்களென படம் வரைந்தும் விவரித்தார்.


இந்த கட்டிடத்தை வடிவமைப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எதிர்கோணங்களைச் சேர்க்கும் கம்பிச் சட்டம்(grid) கொண்ட உருக்கு இரும்புகள்(steel) பயன்படுத்தப் பட்டதாகக் கூற, இவ்வளவு முயற்சிகள் எடுத்ததால் தான் ஸ்பெயினில் நடைபெற்ற மாநாட்டில் “ எதிர்காலத்தின் சிறப்பான கட்டடம் “ என்ற விருதை வாங்கியிருக்க முடியுமென்று பேசிக்கொண்டோம்.

சிவகுமார்-சிவகாமி அக்கா தம்பதியினர்கள் பல வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கிடுகிடு வளர்ச்சியை கண்முன்னே கண்டிருந்ததனால், அவர்களால் பல ஆர்வமூட்டும் முக்கியச் செய்திகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலேயே பெரிய மசூதியான பிரம்மாண்டமான சேக் ஷாயித் (sheik Zayed grand mosque) மசூதிக்குச் செல்வதற்கு உடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் பெண்கள் அனைவரும் நிர்வாகத்தினர் வழங்கிய கருப்பு பர்தாவை அடையாள அட்டையைக் கொடுத்து பெற்றுக்கொண்டோம்.    சிறுமிகளையும் பர்தா அணியச் சொல்லியதிலேயே மசூதியில் அணியும் ஆடைகளில் அவர்கள் பின்பற்றும் உடைக் கட்டுப்பாட்டை நன்றாக புரிந்து கொண்டோம்.

மசூதியினுள்ளே ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும்பொழுது தலையிலிருக்கும் முக்காடு சிறிது விலகினால் கூட அங்கிருக்கும் பாதுகாவலர் அதைச் சரிசெய்யுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தார். 2013இல் பிரபல அமெரிக்க பாடகி ரெஹானாவும், சமீபத்தில் செலீனா கோம்சும் மசூதி தெரியுமாறு ஒளிப்படம் எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளில் எப்படி சிக்கிக் கொண்டார்கள் என அப்பொழுது தான் புரிந்தது.

மசூதிஉள்ளே சென்று அதன் பெருமைகளையும், கட்டிடக்கலையின் நுட்பத்தையும் தெரிந்து கொண்டபின் இதை 1996 ஆம் ஆண்டு முதல் 2007 வரை கட்டிமுடிக்க 11 வருடங்கள் ஆனது சரியென்றே தோன்றியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையென்று அழைக்கப்பட்ட சேக் ஷாயித் பின் சுல்தான் அல் நஹியான்  (sheik Zayed bin sultan al nahyan) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய கட்டிடக் கலையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஒன்றினைக்கும் விதமாக இம்மசூதி அமைய வேண்டுமென்று எண்ணியதாலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பூதஉடல் மசூதிக்கு பின்னேயே புதைக்கப்பட்டு இருந்தது.

உலகத்தில் உள்ள பிரசித்தமான பொருட்களையும் திறமையானவர்களையும் கொண்டு பல இஸ்லாமிய கட்டிடம் மற்றும் மசூதிகளின் கட்டமைப்பின் தாக்கத்தையும் மனதில் வைத்து பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டிருந்த மசூதியைப் பார்த்து அதிசயிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.



மசூதியினுள் அழகிய வேலைப்பாடு கொண்ட மிகப்பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருக்க , அதுதான் இரண்டுவருடங்களாக ஒரு இரானிய நிறுவனத்தால் நியுசிலாந்து மற்றும் இரான் நாட்டிலிருந்து பிரத்யேகமான கம்பளி கொண்டுவரப்பட்டு பின்னப்பட்ட உலகத்திலேயே பெரிய கம்பளி என்று தெரியவர அதனை ஒரு முறை தடவிப்பார்த்துக் கொண்டேன். சுமார் 1300 கம்பளி செய்யும் பணியாளர்கள் இணைந்து தயாரித்த கம்பளியின் எடை 35 டன் எனக்கேட்டு புருவம் உயர்த்தினோம். சிவகுமார் அண்ணன் அவர்களுக்குப் போட்டியாக அவர்களது மனைவி சிவகாமியும் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த மசூதியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

மசூதியிலிருந்த ஏழு சரவிளக்குகளுமே எங்கள் கவனத்தை ஈர்க்க அவையனைத்தும் ஜெர்மனியிலிருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் (crystals) ஆனவையென்றும், அங்கிருந்த பெரிய சரவிளக்குதான் உலகத்திலேயே மூன்றாவது பெரிய சரவிளக்கு , மசூதியிலிருக்கும் சரவிளக்குகளில் உலகத்திலேயே இரண்டாவது இடமென ஆச்சர்யங்களை அடுக்கிக் கொண்டே போனார் சிவகுமார் அண்ணன்.

இறைவனின் 99 பெயர்களை அழகான கையெழுத்துகளுடன் சுவற்றில் இடம்பெற ஐக்கிய அரபு அமீரகத்தின் திறமை வாய்ந்த கையெழுத்து நிபுணர்கள் மட்டுமல்லாது  சிரியா , ஜோர்டானைச் சேர்ந்த நிபுணர்களும் காரணமாக இருந்தார்கள். இரவிலும் பெயர்கள் தெரியும் வண்ணம் கண்ணாடி இழை விளக்கு தொழில்நுட்பம்(fibre optic lighting) வழி ஏற்பாடு செய்திருந்தார்கள்.





மசூதியில், மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதை அருகே தண்ணீர் நிரப்பிய குளத்தை வடிவமைத்திருக்க குளத்தில் மசூதியின் அழகிய பிம்பம் பிரதிபலிப்பது காலை வேளையைக் காட்டிலும் இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் அட்டகாசமாய் இருக்கும். நிலவொளியின் அழகு வெளிப்படுவதற்கு ஏற்றவாரு சுவரில் நீலச்சாம்பல் நிறத்தில் மேகம் போல பிரகாசம் கூடியும் குறையும் வண்ணம் மின்விளக்குகளால் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மசூதியின் முற்றத்தில் பூவேலைப்பாடு கொண்டு பெரிய நிலப்பரப்பில் உலகிலேயே மிகப்பெரிய மொசைக் பளிங்கு சலவைக்கல்லை பதித்திருந்தார்கள். பெண்களுக்கென தனிதொழுகை அறையுடன், 40,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து தொழுகை செய்யக்கூடிய வசதியுள்ள மசூதியின் மெல்லிய உயர்ந்த கோபுரமாக நான்கு உயர்ந்த ஸ்தூபிகள் நான்கு மூலையில் நிறுவப்பட்டிருந்தது.


7 வகையான அளவுகளில் 82 குவிமாடங்கள் அழகுக்கு அழகு சேர்த்திருந்தன. மசூதியின் பிரமிப்பு விலகாமலே அபுதாபி என்றவுடன் நினைவுக்கு வரும் பெர்ராரி  வேல்டை (ferari world) வெளியிலிருந்து பார்க்க ஆவலாய்ச் சென்றோம். லிங்கா படத்தில் அறிமுகப் பாடலில் மேலிருந்து காட்டப்படும் சிவப்பு வண்ணத்தில்  இருந்த கேளிக்கைப் பூங்காதான் உலகத்திலேயே பிரத்யேகமாக பெராரி வண்டியை கருப்பொருளாகக் கொண்டு கட்டப்பட்டிருந்தது.

அத்தைமகன் இராம் இந்த பூங்காவைப் பார்வியிட மிகுந்த ஆர்வமாய் இருந்த போதிலும் அச்சமயம் நான் இந்த சாகசப்பூங்காவை பார்வயிடாததால் எனக்கு இதன் சிறப்பு புரிந்திருக்கவில்லை. ஏற்கனவே சென்ற நண்பர் ஒருவரும் அந்த  பூங்காவிற்கு போய் வந்த அனுபவத்தை சுமாராக விவரிக்க சற்று குழம்பி அவனது சுற்றுலா அட்டவணையிலிருந்து அந்தபூங்காவை விலக்கியிருந்தேன்.

பின்னொரு நாள் நண்பர்களுடன், சலுகைச்சமயம் அனைத்து மக்களும் இலவசமாக உள்ளே வந்து அனைத்து சாகச இராட்டினங்களையும் வந்து பார்வையிடலாமென அறிவித்திருந்த   சமயம் சென்ற பொழுது தான்  இங்கு அவனைக்கூட்டிவராமல் போய்விட்டோமென மிகவும் வருந்தினேன். அந்த அனுபவத்தைப் பற்றி நான் அடுத்த அத்யாயத்தில் உங்களுக்கு விவரமாக விவரிக்கிறேன்.

சிவகுமார் அண்ணன் பூங்காவிற்கு அருகே வண்டியை ஒட்டிச் சென்று பூங்காவை காண்பிற்க முற்பட்ட பொழுது மிகஉயரத்திலிருந்து பல ஏற்றங்கள் இறக்கங்களுடனான உலகத்திலேயே மிக வேகமாக போகும் சாகச சவாரியில்(roller coaster) மக்களின் உற்சாகக்கூக்குரலைக் கேட்டு நாங்களும் ஆர்வமானோம்.

இப்பூங்காவிற்கு அருகிலேதான் பிரசித்தி பெற்ற பெராரி பந்தய வண்டிகளின் பார்முலா ஒன் (formula one) போட்டி நடைபெறும் மைதானமும் அமைந்திருக்க, அதனருகே இருந்த யாஸ் தண்ணீர் பூங்காதான் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தலைசிறந்த சாகசத்தண்ணீர் பூங்காயென முன்னுரை கொடுத்தார்கள்.



5.5 கிமீ கொண்ட யாஸ் மரினா சுற்றுப்பாதை தான் உலகத்திலேயே எல்லா வகையான எந்திர வண்டிகளின் பந்தயம் நடுத்தவும், வழி முழுவதும் இரசிகர்கள் அமர்ந்து இரசிக்கும் அமைப்பும் கொண்டிருந்தது

பெஃராரி பந்தய மைதானத்தின் நடுவே ஒரு ஐந்து நட்சத்திர விடுதி அமைந்திருக்க, உலகத்திலேயே பந்தய மைதானத்திற்குள் அமைந்திருக்கும் முதல் நட்சத்திர விடுதியென்ற பெருமையை அந்த சொகுசு விடுதி தட்டிச் சென்றிருந்தது. யாஸ் தீவிலுள்ள சில சொகுசு விடுதியிலும் இந்த ஐந்து நட்சத்திர விடுதியிலும் விடுமுறை நாட்களில் நண்பர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக செலவிட்ட நாட்களை மலரும் நினைவுகளாக சிவகாமி அக்கா பகிர்ந்து கொண்டார்கள்.

இயற்கையாய் உருவாகாமல் செயற்கையாய் வடிவமைக்கப்பட்ட யாஸ் தீவில் குழிப்பந்தாட்டம் (golf) ஆடுவதற்குத் தேவையாக அமைக்கப்பட்டிருந்த சொகுசு மைதானம் அனைத்து வசதி கொண்டு உலகப்புகழ் பெற்றதென அறிந்து கொண்டோம். வான்குடை மிதவை வழி (parachute) சாகச விரும்பிகள் பறந்தும், கீழே படகுகள் வேகமாக சீறிப் பாய்கின்ற காட்சிகளைப் பார்த்துக் கொண்டும் யாஸ் தீவில் பயணித்தோம்.

பேரங்காடிகள், வீட்டுக்குத்தேவையான தரமான பொருட்கள் வாங்க பிரசித்தமான அய்கியா IKEA கடை போன்றவை அமைந்திருக்க, உலகத்திலேயே பெரிய மூன்றாவது புகழ்பெற்ற வார்னர் சகோதரர்களின் கதாப்பாத்திரங்களைக் கொண்டு அமைக்கப்படும் பூங்காவை யாஸ் தீவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

பின்னொரு நாளில் கணவர் எனக்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு தண்ணீர் பூங்காவிற்கு அழைத்துச்செல்வேன் என  அளித்திருந்த உறுதிப்படி அட்லாண்டிஸ் அக்வாவெஞ்சர் தண்ணீர் பூங்கா(Atlantis aquaventure), யாஸ் தண்ணீர் உலகம் (yas waterworld), புர்ஜ் அல் அராப் அருகேயிருந்த வொயில்வாடி தண்ணீர் பூங்கா (wildwadi) என்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று சிறந்த தண்ணீர் பூங்காக்களில், துரதிஸ்டவசமாக அட்லாண்டிஸ் அக்வாவெஞ்சர் தண்ணீர் பூங்காவும், யாஸ் தண்ணீர் உலகமும் நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் பராமரிப்பு காலத்தில் இருந்ததால் சில சவாரிகள் இயங்காது என கேள்விப்பட வொயில்வாடி தண்ணீர் பூங்காவிற்குச் சென்றிருந்தோம்.

யாஸ் தண்ணீர் உலகத்தில் கிட்டத்தட்ட எல்லா சவாரிகளும் வொயில்வாடி தண்ணீர் பூங்காவிலிருப்பது போல இருந்தாலும் பலவகையான வண்ண சறுக்குகளில் நாம் மட்டும் வழுக்கி வருவது, சறுக்கு பலகையின் மேல் படுத்துச் சறுக்குவது போன்றவை மட்டுமே விடுபட்டிருந்தது.


யாஸ் தண்ணீர் பூங்காவில் தண்ணீர் வழி மிக உயரத்திலிருந்து பல ஏற்றங்கள் இறக்கங்ளுடனான மிக வேகமாக போகும் புதிய,பெரிய சாகச சவாரி(roller coaster) உலகப் புகழ்பெற்றதென கேள்விபட எனக்கோ அதில் பயணம் செய்யும் ஆசை தொற்றிக் கொண்டது.

உலகத்திலேயே செயற்கை கடல் அலைகளை ஏற்படுத்தி அதில் சாகசச்சவாரி செய்யும் பெரிய விளையாட்டு அரங்கமிங்கு உள்ளதென தெரியவர ஒரு முறையாவது அச்சவாரியை செய்து கடலலையில் நாமும் சாகசம் செய்து பார்க்க வேண்டுமென ஆர்வம் தோன்றிற்று.



சாதாரணமாக ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு அதிகபட்சம் 185 திராம்களென்றாலும் தண்ணீர் பூங்காவைப் பராமரிக்கும் காலங்களில் அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடியுரிமை வைத்திருப்போருக்கு 95 திராம்கள் தானென விளம்பர அறிவுப்புகளைப் பார்க்க எனக்கோ ஆசை அதிகமானது.

இணையத்தில் யாஸ் தண்ணீர் பூங்காவைப் பற்றிய சில காணொளியைப் பார்த்தபின் ஓரளவு எல்லா சவாரியும் செய்தாகி விட்டதென மனம் சற்று ஆறுதலடைந்தாலும் ஓரிரு சவாரியின் அனுபவம் கிடைக்கவில்லையோயென மனிதமனம் சிறிது குறைபட்டுக் கொண்டது. என்ன செய்தாலும் உன்னை திருப்தி அடையச் செய்ய முடியாது என்று கணவர் கூறுவது உண்மைதானோ என குறைபட்டுக்கொண்டேன்.

சிவகுமார்-சிவகாமி தம்பதியினர் அவர்கள் எங்களுக்கு அபுதாபியில் எல்லா இடங்களையும் பெருமையையும் விவரித்துக்கொண்டிருக்க இங்கே அமைந்திருக்கும் எல்லாமே உலகப்புகழ் பெற்றதுதானா என்று அலுத்துக்கொண்டோம்.

அபுதாபியில் முக்கியமான பாலம், சாலைவழியே என்று ஓரளவு எல்லா இடங்களையும் சுற்றிபார்த்துவிட்டு துபாயை நோக்கிப் புறப்பட, துபாய் நகரின் நுழைவுவாயிலில் இருந்து சிறு தொலைவில் பழைய உயர்தர பெருமை வாய்ந்த பாரம்பர்ய நான்கு சக்கர வண்டிகளைக் கொண்டு அதைக் கருப்பொருளாக்கி திறந்த வெளி உணவகத்தை (last exit) நிறுவியிருந்தார்கள்.

ஒன்றின் மீது ஒன்றாகயென்று பலவண்ணங்களில் எந்திர ஊர்திகளை நிறுத்திவைத்தும், எந்திர வண்டிகளுக்குள்ளே உணவகத்தை அமைத்தும் சுற்றுலா பயணிகளை ஈர்த்திருந்தனர். எங்களுக்கு இயற்கை உபாதை ஏற்படாவிட்டாலும் எங்களை சிவகாமி அக்கா அங்குள்ள கழிவறைக்கு போய்வாருங்களென்று சிரித்தபடி கூற அங்கு கழிவறையையும் வித்தியாசமாக சிந்தித்து எந்திர வண்டிகளின் உதிரி பாகங்களைப் போல வடிவமைத் திருந்தார்கள்.


கைகழுவுமிடத்தில் தண்ணீர் வருவதற்கு எந்திர வண்டியின் வேகத்தை விரைவுபடுத்தும் பொறியை காலால் அமுக்குவது போல அமைத்திருந்தது ஓர் உதாரணம். உதிரி பாகங்கள், எந்திர வண்டிகளை சரிசெய்ய உதவும் கருவிகள் போன்றவற்றை கொண்டு சுற்றுப்புறத்தை அலங்கரித்திருந்தனர். உணவு விலை எல்லாம் சற்று அதிகமென்றாலும் உணவகத்தைப் பார்க்கவாவது அவ்வுணவு விடுதிக்கு நிச்சயமாகப் போய் வரலாம்.


வாகன எரிபொருளை நிரப்ப உதவும் கருவியை விளையாட்டாக வாயினருகே வைத்து நிழற்படம் எடுத்துக் கொண்டு நாங்கள் கிளம்பலாம் என்று நினைக்க பல விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் போட்டியில் கலந்து கொள்வதுபோல இளைஞர்கள் கும்பலாக வந்திருந்தார்கள். என் கணவரும் இதுபோல விலையுயர்ந்த இருசக்கர வண்டி வைத்திருந்தாலும் வந்தவர்களின் வண்டி அதைவிட பல இலட்ச ரூபாய் அதிகமிருக்குமென்றே தோன்றியது.

இளைஞர் கூட்டம் ஆரவாரத்துடன் கிளம்பியதும் நாங்களும் துபாயிலுள்ள ஒரு பழைய பிரபல கதாநாயகியின் பெயரில் அமைந்த ஆப்பக்கடைக்குச் சென்று இரவு உணவு முடித்து வீடு திரும்பலாமென முடிவு செய்திருந்தோம். ஆப்பக்கடை அந்த பிரபல கதாநாயகியோடதா ? இப்பொழுது ஏன் ஆப்பக்கடை என்று மட்டும் வைத்திருக்கிறார்கள் என்று பல முக்கிய கேள்விகளைக் கேட்டு எங்களுக்குள் நக்கலாக விவாதித்து வந்தோம்.

இதை கவனித்துக் கொண்டிருந்த சிவகுமார் அண்ணன் அது  தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் கடைதானென்றும், உங்களைப் போன்று நாலுபேர் இவ்வாறு நாலுவிதமாக பேசுவதனால் தான் தன்னுடைய மகளின் பெயரை நீக்கிவிட்டார் என்றுகூறி சிரிக்க நாங்கள் அனைவருமே நன்றாக அசடு வழிந்தோம். 



ஆப்பக்கடையில் காளைமாட்டின் கண் என்று புல்ஸ் ஐயை (bulls eye)உணவாகச் சிலர் கொண்டுவரச் சொல்ல நான் மிகவும் குழப்பத்துடன் எதிர்பார்த்திருந்தது ஆப்பத்தில் ஊத்தப்பட்ட அரை வேகாத முட்டை தான் என்று தெரிந்தவுடன் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.


நிறைவான இரவு உணவை உண்டுவிட்டு நல்ல நினைவுகளைச் சுமந்து சிவகாமி-சிவகுமார் தம்பதியினர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகூறி பிரியாவிடை கொடுத்து, அவர்கள் என் மகளுக்கு பரிசாய் கொடுத்த அழகு உடையுடன் வீடு வந்து சேர்ந்தாலும், இன்னும் அபுதாபியில் பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்துக் கொண்டு தூங்கிப்போனேன்.