Saturday, February 23, 2019

பதிலடி - அரிசங்கர்

புதிதாக ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் பொழுது, சில கதைகள் ரொம்பவே சிறப்பானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்து விடும். சில கதைகள் புரியவே இல்லையே.. திரும்பிப்படித்தால் தான் புரியுமோ என்றும் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லா கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. அதுற்குக் காரணமாக அரிசங்கர் அவர்களோட இயல்பான மொழிநடை , யதார்த்தமான கதாபாத்திரங்கள், கதைக்களங்களைச் சொல்லலாம்.



ஒரு பெண் என்றாலே பலவிதமான எதிர்பார்ப்பை வைக்கும் இந்தச் சமூகம் அவளின் சிறு எதிர்பார்ப்புக்குக் கூட தலைசாய்க்கத் தயாராய் இல்லை. பெண் என்றாலே அவள் அழகாகத்தன்னைச் சிங்காரித்துக்கொள்ள வேண்டும். சுகந்தத்துடன் சுற்றித் திரிய வேண்டும் என்ற இந்த சமூகத்தின் கட்டமைப்பு சரி என்றால் ஒரு பெண் தன் இணையிடம் விரும்புவதை அவன் நிறைவேற்றுவது தானே மரபு.
பெரும்பாலும் பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்குத்தான் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. சமூகத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்போம். பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பதட்டம் 'மௌனம் கலையட்டும்'  சிறுகதையைப் படித்ததும் ஏற்பட்டது. நான்கு வயது மகளிடம் சென்று , 'பாப்பா , உன்னை யாராவது தொந்தரவு செய்றாங்களா?' என்று  கேட்க மனம் படபடத்தது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.



உடலளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியான மாற்றத்தை உணரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அன்புடன் அணைத்துக்கொள்ளும் மனநிலையையும், சக மனிதராக பாவிக்கும் பக்குவத்தையும் 'நிழல் தேடும் பறவைகள்' கதை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையையும், கொடுமைகளையும் சுட்டிக்காட்டும் 'பிணந்தின்னிகள்', 'புதுச்சட்டை' சிறுகதைகள் நம்முள் இருக்கும் மனிதத்தை உரசிச்செல்கின்றன. 
செஞ்சிறை கதை முழுவதும் பயணித்து வந்த பயமும் அச்சமும் பிறந்த பிள்ளையின் அழுகையை அடக்க, பால் சுரக்காத தன் முலைகளை அம்மா அதன் வாயில் புகட்டியபொழுது உச்சம் பெற்றது.

குக்கூ படத்தை பார்த்த பொழுது ஏற்பட்ட ஒருநெகிழ்வை 'தொடுதல்' சிறுகதையில் உணரமுடிந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சீண்டல்களையும், பிரச்சனையையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தொடரும் நிலைமை, எத்தனை பெரிய மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்திருப்பதால் ' விடுவிப்பு ' கதையின் நாயகிகளுடன் எளிதாகவே ஒன்றிவிட முடிந்தது. பிரச்சனைகளை வெளியே சொன்னால் அதற்கு காரணமாக பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லவும், அதில் இருந்து விலகி ஓடுவதற்கும் அறிவுரை சொல்லத்தான் எத்தனை பேர் தயாராய் இருக்கின்றார்கள். ஒரு பெண் என்றால் அவளுக்குப் பிரச்சனையே வரக்கூடாது என்பதில் தான் அனைவரது கவனமும் இருக்கின்றது. அதை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித்தர பெற்றோரும், கணவரும், குடும்பமும், சமூகமும் கிஞ்சித்தும் முயற்சி எடுப்பதே இல்லை.


நமக்கு பிரியமானவர் இறந்து விட்டார் என்பதை விட அவர் எங்கேயோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம்மை வாழ்க்கை ஓட்டத்தில்  வெகுதூரம் அழைத்துப்போகும் ஆற்றல் பெற்றது. அதுதான் 'புயல்' கதையும் கருவும் கூட.அரிசங்கர் அவர்களின் முதல் புத்தகம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. தன் எழுத்தைப் பரிகாசம் செய்தவர்களுக்குத்தான் இந்த பதிலடி என்று தனது நூல் வெளியீட்டில் குறிப்பிட்டு இருந்தார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது 16 சிறுகதைகளுமே சிறப்பா இருந்து விடுமா என்ன? என்று நினைத்த எனக்கு தான் இந்த பதிலடி.

யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 136 
விலை - 150

Thursday, February 21, 2019

நகர்வலம் - அதிவேகம்..அதிக ஆபத்து

அதிவேகம்..அதிக ஆபத்து


பத்து மணி நேரமாகும் ஒரு பயணத்தை  5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என  பல பேருந்துகள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இரு வழிச்சாலையாக இருந்த பெரும் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. நான்கு வழிச்சாலையாக மாற்றினாலும் விபத்துக்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும் வேகமும் தான்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் பழுது ஏற்பட்டால்,  வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டு,பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் வாகனம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த ரீதியில் தான், அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த போதிய நிறுத்தங்கள்  இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான லாரி டிரைவர்கள் சிறுநீர் கழிக்கவும், அவசரத்திற்கு செல்லவும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரி நிறுத்தம் இருக்கவேண்டும். அந்த லாரி நிறுத்தத்தில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, ஓய்வு எடுக்கும் அறை கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே,சாலையில் வாகனம் நிறுத்துவது குறையும். விபத்துக்களும் குறையும்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து இருக்கின்றார்கள். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறையைக் குறிப்பிட்டுள்ளது.உதாரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு எத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவிப்பதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் நடக்கும் விபத்துகளில் சிக்குவது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு குளிர்சாதனத்தை இயக்கிச் செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.


இதனை, வேக குருடு அதாவது ஸ்பீடு ப்லைண்டனஸ் Speed blindness என்று கூறுகின்றார்கள். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் நமது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் நமது வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்படும். எதிரே வரும் வண்டி ஓட்டுநர்களை எவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்று நாம்கூறுவோம். அசுர வேகத்தில் செல்லும் பொழுது திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது. தற்பொழுது வேகத்தையோ, சாலையின் பயண அதிர்வுகளை உணராத வகையில் நிறுவனங்களும் வண்டிகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரி வேகம் கொண்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ், லாரி, கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்துமே அதிவேகம் கொண்ட வாகனங்களாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் 50சதவீத கார்கள் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட கட் ரோடு,சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கட் ரோடு,சர்வீஸ் ரோடுகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.  
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல், ஜல்லி, எண்ணை போன்றவை படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி வேகத்தைக் கணிக்கும் இயந்திரத்தை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பு இருப்பதில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் நினைத்த இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 
கடந்து செல்லும் வண்டிகள் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது என்று கணக்கிடும் கருவி பல காவலர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட வேவகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வண்டிகளின் வேகம் குறித்து வைக்கப்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை பலகைகளில் எழுதிப் போட்டு இருக்கின்றார்கள்.


தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவு எண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து காவலர்களால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்பட இருக்கின்றது. வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சிறந்த ஏற்பாடு. 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் அனைவரும் மிதவேகம் மிகநன்று என்பதை மனதுக்குள் நிறுத்திக் கொள்வது ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் சிறப்பாய் அமையும்.

Wednesday, February 20, 2019

நகர்வலம் - அலைபேசிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்



இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும், மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும், குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.


இப்பொழுதெல்லாம் சாலைகளில் பயணம் செய்பவர்கள் தனியாகப் பேசிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் எல்லோரும் அறிந்தது தான். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஹெட்செட் வழியாகவோ, ப்ளூடூத் ஹெட்செட் வழியாகவோ அல்லது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் தலைக்கவசங்களின் காதோர இடுக்குகளில் அலைபேசிகளைச் சொறுகிக்கொண்டும், காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசிக்களை அமுக்கி கழுத்தைச் சாய்த்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை, மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசி பயன்படுத்துவோரின் அலைபேசிகளை பறிமுதல் செய்யலாம் என்ற யோசனையையும் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அலைபேசிகளில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் போன்றவர்களால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நேர்கின்றன. இது போன்ற தவறான செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகின்றது.

சாதாரணமாகவே, நெருக்கமான மாநகரச் சாலைகள் என்றில்லாமல் ஆளில்லா சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள், கற்கள், சிந்தியிருக்கும் எண்ணைகள், ஜல்லிகள் போன்றவை வாகனங்களை எளிதில் கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்று இருக்கிறது. போக்குவரத்துச் சமிஞ்கைகளைக் கவனித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாய்ச் சென்றாலே மற்ற பயணிகளின் அஜாக்கிரதையால் பலரும் விபத்தைச் சந்திக்க நேர்கின்றது. அப்படி இருக்கும் பொழுது சாலைப்பயணங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில நொடிகள் காத்துநிற்கும் போக்குவரத்துச் சமிஞ்கைகளின் மிகச் சிறு இடைவெளியின் பொழுதும் பலரும் தங்கள் அலைபேசிகளை எடுத்து உபயோகிப்பதைப் பார்க்க முடிகின்றது.


பச்சை சமிஞ்கை காண்பிக்கப்பட்ட பின்னும் வாகனத்தை இயக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. அலைபேசிகள் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சாலை பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் காண்பிக்கும் பொழுது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்படும் பொழுது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

சாலை போக்குவரத்து விதிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படும் பொழுது மாணவர்களும் இளைஞர்களும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தற்பொழுது குழந்தைககளுக்கும் சிறுவர்களுக்கும் சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையான பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளைப் பற்றிய புரிதல் இருப்பதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது என்பது ஆச்சர்யமான உண்மை. சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது தங்கள் பெற்றொர்கள் வண்டியை இயக்கினால் சத்தம் போட்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக ஒளிர்கின்றார்கள்.

Tuesday, February 19, 2019

நகர்வலம் - பெருகி வரும் விபரீத இணைய விளையாட்டுக்கள்

அலைபேசி, ஐபேட், டாப்லெட் இதில் ஏதாவது ஒன்றை பெரியவர்களின் கையில் மட்டுமல்லாமல் இன்றைய இரண்டு வயதுக் குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளாகவே நாம் பார்க்க முடிகிறது. தம் குழந்தையை அதிபுத்திசாலியாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பெருமையாகவே எண்ணத் தொடங்கிவிட்டனர். அலைபேசி மற்றும் டாப்லெட்களில் விளையாடும் விளையாட்டுக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கும். இதனால் பலமுறை நம்மை அறியாமலே நம் அலைபேசியில் உள்ள விவரங்கள் இணையத்தில் போவதற்கான சாத்தியம் அதிகம். அதே சமயம் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் வேறு சில இணையப் பக்கங்கள் பற்றிய விளம்பரங்கள் வருவது வழக்கம். விளையாட்டு சுவாரசியத்தில் அதை அழுத்தி செய்துவிட்டால் அது நம்மைத் தேவையில்லாத இடத்துக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கே இதைத் தவிர்க்க முடியாதபோது மாணவர்கள் தம்மை அறியாமல் வேண்டாத வலைத்தளங்களுக்குச் சென்றுவிடலாம்.த ங்கள் பணியில் பிள்ளைகளின் இடையூறைத் தவிர்க்க அவர்கள் கையில் அலைபேசியைத் திணித்துவிட்டுக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.


முன்பெல்லாம் மக்கள் அமைதியாய் அலைபேசியிலும், மடிக்கணினிகளிலும் மூழ்கிக்கிடக்கின்றார்கள் என்றால் இணையம் விழி யாரிடமாவது அளவளாவிக்கொண்டு இருக்கின்றார்கள்...முக்கிய அலுவல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் தற்பொழுது அலைபேசி, மடிக்கணினியை முன்னே வைத்துக் கொண்டு மூர்க்கமாக அவனை அடிடா, இந்தா துப்பாக்கி...அவனைக் கொன்றுவிடு ..போன்று திகிலூட்டும் பேச்சுக்களைக் கேட்கும் பொழுது ஒருவிதமான பயமும் அச்சமும் வந்து மிரட்சியை ஏற்படுத்துகின்றது.

சாப்பிடவா என்று அழைத்தால் கூட அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லும் இளைஞர்களின் பசியையும், தூக்கத்தையும் பறித்து அவர்களை தனக்கு அடிமையாக்கிருக்கும் பெருமை இந்த இணையதள விளையாட்டுக்களையேச் சேரும். முன்பின் தெரியாதவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடி இணைய எதிரிகளைத் தோற்கடிக்கின்றார்களோ இல்லையோ தங்கள் நேரம், ஆற்றல் என அனைத்தையும் தேவையில்லாமல் செலவழித்து தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணிகளின் முன் தோற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

விட்டுத்தரும் மனப்பான்மை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, புத்திக்கூர்மையை அதிகரிப்பது, ஞாபகசக்தியை மேம்படுத்துவது, தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்று அறிதல்தான் ஒரு விளையாட்டின் அடிப்படை. ஆனால் தற்பொழுது பெருகி வரும் இரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சியுடனான விளையாட்டுக்களின் வழி வன்மம், கோபம், பொறாமை, பழிவாங்கும் உணர்வு, மனஅழுத்தம், வெறி , வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தேவையில்லாத உணர்வுகளும் செயல்களும் தான் தூண்டப்பட்டு வருகின்றது.

சில தேசங்களிலும், மாநிலங்களிலும் இது போன்ற இணைய விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும்,  இணையத்தில் உள்ள ஓட்டைகளையும், செயலிகளையும் பயன்படுத்தி பல மாணவர்களும், இளைஞர்களும் தங்களை அடிமையாய் வைத்திருக்கும் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆபத்தான விளையாட்டுக்களால் பல உயிர்கள் பறி போய் இருப்பது இது போன்ற விளையாட்டுக்களின் தீவிரத்தையும் ஆபத்தையும் எளிதாகக் கடத்தி விடுகின்றது.



இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யோகா, உடற்பயிற்சி மற்றும் மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க செய்து மாணவர்களின் உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவதே சிறந்த நடவடிக்கை.

மாணவர்களை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமை. நாம் நேரில் ஒருவரிடம் பேசத் தயங்கும், பகிர்ந்துகொள்ள முடியாத எந்தத் தகவலையும் இணையத்திலும் பகிரக் கூடாது என்பதைக் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். பிள்ளைகளுடன் அமர்ந்து அவ்வப் போது அவர்கள் உபயோகிக்கும் செயலிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்து, அவர்கள் இல்லாதபோது அலைபேசி, டேப்லெட்டை அலசுவது ஒரு பெற்றோரின் முக்கிய வேலை. வயதுக்குத் தேவை இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய இயலாத வண்ணம் பிளாக் செய்யலாம். முக்கியமாக புகைப்படம், வசிக்கும் இடம் பற்றிய தகவலைப் பகிர முடியாதபடி கட்டுப்படுத்த செட்டிங்க்ஸில் மாற்றம் செய்வது நல்லது. முடிந்தவரை மாணவர்களை தனியாக இணையத்தை உபயோகிக்க அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் எவரேனும் தவறாகவோ, அத்துமீறியோ செயல்பட்டால் அதைப் பற்றி உடனடியாகத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லி வைக்க வேண்டும். இத்தனை ஆபத்து நிறைந்த இணையம் தேவையே இல்லை என்றும் கண்மூடித்தனமாக நிறுத்தக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். பிள்ளைகள் அருகில் நிழல்போல் இருந்து அன்புடன் அறிவுரை கூறினாலே அவர்களும் தங்கள் செயலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களாலும் அறிவியல் வளர்ச்சியாலும் நன்மைகள் பெருகி இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டாலும், நேரத்தை விரையம் செய்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இணையதள விளையாட்டுக்கள் பெருகிக்கொண்டு  இருக்கத்தான் செய்கின்றன. இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது மக்களை காக்கும் என்றாலும் நிரந்தரத்தீர்வாகக் கருத முடியாது. பாடத்திட்டங்களிலேயே ஒரு தொழில்நுட்பத்தின் வருகையின் சாதக, பாதகங்களை அலசும் அறிவையும், கல்வியையும் தந்துவிட்டால் இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை மீட்டுக்கொள்ள முடியும்.


Monday, February 18, 2019

கொரங்கி - மு.வெங்கடேஷ்

படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில இந்த சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதை கேட்டவுடனேயே கண்ணுல இருந்து தண்ணீர் தார தாரயாய் கொட்ட ஆரம்பிச்சிருந்தது.மொத்தம் 12 கதையில அக்கா தம்பி உறவப் பத்தி தான் 5 கதை (கொரங்கி, கூலிக்காரன்,சீருடை, டவுண்காரர், காக்கா குஞ்சு).ஆனா வேற வேற சூழல்ல.வேற வேற வயசுல ஏற்படுற ப்ரியங்கள். அவ்வளவு நாள் அடிச்சுக்கிட்டு கிடந்த அக்கா தம்பிய, அக்கா ருதுவானவுடனே பிரிச்சுவிடுறது...அக்கான்னு கூப்புடுன்னு சொல்றது எல்லாமே எல்லா குடும்பத்திலயும் நடக்குற திகில் மாற்றந்தான்..அக்கா, தம்பின்னா கூடப்பிறந்தவங்களாத்தான் இருக்கனும்னு எந்தக்கட்டாயமும் இல்லையே. மனசார அக்கா, தம்பின்னு கூப்பிட்ட எல்லாருமே கண்ணு முன்னாடி வந்து போறாங்க..(கூலிக்காரன்)


எனக்கும் ஒரு தம்பி இருக்கிறதுனால கதைகளோட நல்லாவே ஒட்ட முடிஞ்சது. எனக்கு அப்புறம் ஒரு தம்பி பிறந்து கொஞ்ச நேரத்திலேயே இறந்ததுனால அடுத்து பிறந்த தம்பிமேல நிறைய அக்கறையும் பாசமும் உண்டு . எட்டுவருஷம் வித்தியாசங்கிறதுனால அப்பா எப்பவுமே அவன் தான் உன்னோட முதல் பிள்ளைன்னு சொல்வாங்க..தம்பி நல்லபடியா பிறக்கனும்னு கோவில்ல தலையெல்லாம் முட்டி சாமி கும்பிட்டு இருக்கேன்..உன் தம்பி வந்துட்டா, உங்க அம்மா உன்ன கவனிக்க மாட்டாங்க..உன் தம்பிக்கு உன் பொருள் எல்லாம் குடுப்பியான்னு நிறைய பேர் சிண்டு முடிஞ்சுருக்காங்க..உன் தம்பிக்கு எல்லாக் கெட்டப்பழக்கமும் சொல்லிக்கொடுப்பேன்னு  முத்து சித்தப்பா பயங்காட்டுனப்ப தம்பி நல்ல பையனா வளரனுமேன்னு அழுகையே வந்துட்டு..

திருச்செந்தூருக்கு அப்பா நடயா நடந்தாங்க..அய்யா வைகுண்டர் பிறந்தநாள்லயே பிறந்தது நாள அப்பாக்கு ரொம்பத்தான் பெருமை.. . அம்மா திருச்செந்தூர் முருகன் கோவிலையே அங்கப்பிரதட்சணம் செஞ்சாங்க...தவம் இருந்து பெத்ததுனால அவனத்தான உங்களுக்கு பிடிக்கும்..சரியா பத்தாவது மாசத்தில பிறந்த நான் இளக்காரமா போயிட்டனான்னு நிறைய நேரம் கடுப்பா வரும்..ரிமோட்டுக்கு சண்டை போட்டா அம்மா வந்து சீப்பு, ஈக்கு குச்சிய உருவி என்னையதான் அடி வெளுப்பாங்க..  அவன் காலேஜ் ஹாஸ்டல் போனப்ப, இப்போ ஒரு ஆறு மாசம் எங்க வீட்டுல இருந்துட்டு வேலைக்காக தனியா போனப்ப எல்லாம் ஏங்கி ஏங்கி கண்ணீர் வந்துச்சு..

என்னய கல்யாணம் கட்டிக்கிட்டவரே எங்க அக்கா என்னய இப்படி கவனிக்க மாட்டிக்காளேன்னு பெருமூச்சு விடுவாரு...தம்பிய மட்டும் எப்படி கவனிக்கா பாருன்னு சொல்றப்ப அவர் முகத்தில அவ்வளவு கடுப்பு தெரியும்.... புத்தகத்தோட வாசிப்பு அனுபவத்தை எழுதலாம்னு பாத்தா ...என் கதை ஞாபகம் வந்திருச்சு...பரவாயில்லை ..மார்ச் 3 அவனோட பிறந்த நாள் பதிவா போட்டுக்குறேன்."அவ ஏன் கோவிலுக்கு வரல...".."ஏல பேசாம கெட..அவள இன்னைக்கு பன்னி முட்டிட்டாம்...அதனால வரமாட்டா"  இந்த பதிலுக்கு ரொம்பவே சிரிச்சேன்."கழுதவிட்டைல முன் விட்டை வேற பின் விட்டை வேறயா...எல்லாம் ஒன்னுதான்" ..அம்மா இப்படி அடிக்கடி சொல்லுவாங்க..


எங்க அம்மாவோட தாலிய கொஞ்சம் தங்கம் சேர்த்து செய்ய சொன்னப்ப ஆசாரி ஒருத்தர் அவர் குடும்பப் பிரச்சனையில பாதி தங்கத்தை எடுத்துட்டு மீதி தங்கத்தைதான் கொடுத்தார். அதை திருப்பி வாங்குறதுக்குறள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு.
'பட்டறை ' சிறுகதைல வர்ற ஆசாரி கதைய படிச்சஉடனே இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு. 'தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது'. நான் தினமும் ஃபோன் பண்ணாட்டியும், தினமும் ஃபோன் பன்ற அப்பாவோட தவிப்பு இனிமேயாவது எனக்கு புரியும்னு நினைக்கிறேன். 'முறுக்கு' சிறுகதை படிச்சப்போ மாமாவோட தியேட்டர்ல படம் பார்க்கும் போது முருக்கீ முருக்கீன்னு தட்டநீட்டிட்டு வரும் அண்ணன் ஞாபகம் வந்தார். இப்போ மாமாவோட தியேட்டரும் இல்ல.. இனிமேல் எந்த தியேட்டர்ல அப்படி முருக்குத்தட்டு தூக்கிட்டு வருவாங்கன்னு தோனுச்சு.கூலிக்காரன் கதையில வர்ற சரசக்கா எங்க பக்கத்து வீட்டு வசந்தா அக்காவ ஞாபகப்படுத்திடுச்சு...இப்போ எங்க இருக்காங்களோ..

ஆக மொத்தத்தில இந்த கொரங்கியே நான் தான்னு உணர வெச்சுட்டீங்க..

ஜீவா படைப்பகம் - விலை 140 ரூபாய்