Wednesday, November 27, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - துபாய் சிவசண்முகம் அவர்களின் வாசிப்பனுபவம்

புர்ஜ்கலிபாவின் அருகே ஏழு இராஜாக்களின் தேசம்😍

வாசிப்பனுபவத்திற்கும் அழகான புகைப்படத்திற்கும் நன்றி சிவசண்முகம் ❤️

நூல்:ஏழு ராஜாக்களின் தேசம்
எழுத்து: அபிநயாஸ்ரீகாந்த்



எனக்கு அமீரகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்பவரா நீங்கள்?
உங்களுடைய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றக்கூடிய படைப்பு இது.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் இப்புத்தகத்தினைப் படித்தப்பின் அமீரகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும்.

நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதை நிறைவேற்ற ஒரு தேசம் தேவை. அப்படிப்பட்ட கனவுதேசமாக இந்த அமீரகத்தை அறிமுகப் படுத்துகிறார் திருமதி. அபிநயாஸ்ரீகாந்த் அவர்கள்

இவர் பகிர்ந்துகொண்டுள்ள பயண அனுபவங்கள்,அவர் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாறுகள்,அங்கிருக்கும் கலைகள், அம்மக்களுக்கான உணவுப் பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டு நமக்கு ஏற்றார் போல் எளிய நடையில் கொடுத்துள்ளார். பெரிய உழைப்பும், ஆர்வமும் இருந்தாலன்றி இதைச்செய்தல் மிகவும் கடினம்.

அமீரகத்தின் ஏழு பிராந்தியங்களையும் ஒருசேர சுற்றிவந்தது போல் இருக்கிறது இப்புத்தகத்தைப் படித்தப்பின். அதிலும் அவர் கொடுத்திருக்கும் உட்தலைப்புகள் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடத்தினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அதன் நேற்றைய வரலாறு,இன்றைய நிலை அதன் சிறப்பம்சம் மற்றும் அமீரகத்தின் நாளையக் குறிக்கோள் போன்றவற்றை தெளிவாகக் காட்டுகிறார். இவைத் தரும் அனுபவங்களை விவரிக்கும்போது கையாளும் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.
என்னதான் வர்ணனை செய்தாலும் சில கிடைக்காத செயல்களைச் சொல்லி அவர் தனது ஆதங்கங்களையும் பகிர்கின்றார். உதாரணமாக ஹாட் ஏர் பலூனில் சவாரி செய்ய முடியாமல் போனது,கேன்வாஸ் ஆர்ட் பெஃஸ்டிவெல் உணவின் விலைப்பட்டியல் போன்றவை.

நான்கு ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் நான் கேட்டறியாத பல விடயங்களை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. நான் அடிக்கடி செல்லும் MALL OF EMIRATES, IBN BHATTUTA MALL போன்றவற்றின் வரலாறுகளை அறியமுடிகிறது. மேலும் அதில் நான் கவனிக்கத் தவறிய பலத் தகவல்களை தருகிறார். இன்னொரு முறை அந்த இடங்களுக்குச் சென்றால் என் பயணக் கையேடாக இப்புத்தகம் முக்கிய இடம்பெறும்.
எனக்கு பிடித்தவை
தனுரா நடனம்,
ஹாட் ஏர் பலூன்,
சவர்மா, அட்லாண்டிஸ் பனைமரத்ததீவு மேலும் பல...

இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய வா.மணிகண்டன் சொன்னது போல் முன் முடிவில்லா என் வாசிப்பு பிரமாண்டமாய் மாறியிருக்கிறது..

குறள் வழி...
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு..

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Thursday, November 21, 2019

ஏழு ராஜாக்களின் தேசம் - ஷார்ஜா பிரியாவின் வாசிப்பனுபவம்

ஏழு ராஜாக்களின் தேசம் – அபிநயா ஶ்ரீகாந்த்



பெயருக்கு ஏற்றார் போல் இந்த நூல் அமீரகத்தின் ஏழு ராஜாக்களைக் குறித்தும் அவர்களின் தேசம், மக்கள், ஆளுமை குறித்தும் நிறைய விவரத் தரவுகளுடன் விவரித்துக் கொண்டே செல்கிறது.அமீரகத்தின் ஏழு மாநிலங்கள் அங்கே வாழும் பழங்குடியின மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள், மன்னர்களின் குடும்பம், அவர்கள் ஆட்சிக்கு வந்த முறை, ஆட்சி அமைந்த முறை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தளங்கள் பழமையான இடங்கள் என செய்திகள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடிக்கும் போது எழுத்தாளரின் உழைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கான பெரிய வாழ்த்துக்களுடன் இதனைத் தொடங்குகிறேன்.
இத்தனை விடயங்களையும் இவர் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டு காலம் இங்கு இருந்திருப்பார் என்று புரட்டிப் பார்க்கையில் வெறும் இரண்டு வருடங்கள்தான் என்கிறது ஆசிரியர் குறிப்பு. மலைத்துப் போய்விட்டேன். இவர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த நிறைய இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கும் அமைந்தாலும், அது வெறுமனே அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுத் திரும்புவதாக மட்டுமே இருந்தது, ஆனால் அதைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போதுதான் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஃபுஜேராவில் அமைந்திருக்கும் ஸ்தூபிகளற்ற பழைய மசூதி. அந்த மசூதி குறித்து தெரிந்திருந்தாலும் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் அருகில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளது என்பது புதிய செய்தி. அது போலவே ராசல் கைமாவின் கோஸ்ட் வில்லேஜ் என்பதும். அது மட்டுமின்றி நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் பல இடங்களின் உள்ளூர் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் நிலையில் அவற்றிர்கான அலுவலகப் பெயர்களை இவரின் புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டோம்.
அல் எய்ன் மற்றும் துபாயில் அமைந்திருக்கும் மிருகக் காட்சி சாலைகள், பர்துபாய் அருங்காட்சியகம், ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸ் மலைகள், அபுதாபியின் புகழ் பெற்ற தீம் பார்க்குகள், உம் அல் குவைனின் நட்சத்திர விடுதிகள், அஜ்மானின் கடற்கரைகள், ஃபுஜேராவின் விவசாய நிலங்கள், நீருற்றுகள் என்று இவர் எழுதாத விடயங்களே இல்லை.

ஒரு வகையில் இந்த நூல் இந்த நாட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டிபோல அமைந்துள்ளது. மற்றொரு வகையில் இந்த நாட்டின் பழைய வரலாற்றையும், நிகழ்வுகளையும், பழங்குடியின மக்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது. சுற்றுலா இடங்களைப் பற்றிய குறிப்புகள் முடிந்ததும் புத்தகத்தின் இறுதியில்தான் நாட்டின் மக்களைப் பற்றிய குறிப்புகள் தொடங்குகிறது. தக்ரூடா மற்றும் நபாடி என அழைக்கப்படும் அரபு மக்களின் கவிதைகள், மற்ற நாடுகளைப் போலவே இங்கும் நிலவும் நாட்டுப்புற இலக்கியங்கள், நம் ஊர் கதை சொல்லிகளைப் போலவே இங்கும் கதை சொல்லிகளாக விளங்கும் பாட்டிகள் பற்றிய செய்திகள் ஆர்வத்தை அதிகரிப்பதாக இருந்தன.
வெறுமனே இலக்கியம் இருந்தது, கதை சொல்லிகள் இருந்தார்கள் என்று சொல்லிச் செல்லாமல் உதாரணத்திற்கு துபாய் மன்னரின் நபாடி கவிதை ஒன்றையும், இங்கு வழங்கி வரும் பழங்கதைகளில் சிலவற்றையும் கூட கொடுத்திருப்பது இன்னமும் சிறப்பு.

புத்தகத்தின் பின் அட்டையில் எழுத்தாளர் வா.மணிகண்டன் குறிப்பிட்டிருப்பது போல அமீரக அரசாங்கத்தில் உரிய ஆட்களின் கையில் இந்த நூல் சென்று சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் அபிநயாவைக் கொண்டாடி மகிழ்வார்கள். வெறுமனே இரண்டு வருடங்கள் இருந்தோம், சுற்றிப் பார்த்தோம் வந்தோம் என்றில்லாமல் தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஆசிரியருக்கும், அதை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முடிக்கும் முன் ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் இதில் உள்ள தரவுகளில், சில கண்காட்சி அரங்குகளுக்கான நுழைவுக் கட்டணம் குறித்த குறிப்புகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைக் கூற நினைக்கிறேன். அபிநயா இங்கு இருந்த காலத்தில் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருந்த சில இடங்கள் தற்போது 15 திர்ஹாம் வரை நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அடுத்த பதிப்பில் அதை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பது என் சிறு வேண்டுகோள். மற்றபடி மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.
பிரியா. – ஷார்ஜா.