Monday, October 30, 2017

வெண்கடல் - ஜெயமோகன்

பிரபல எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் ஜெயமோகன் அவர்களின் ஏதேனும் ஒரு படைப்பையாவது வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக்கடையின் பெயரில் கிடைத்தப் பரிசுச்சீட்டில்  11 சிறுகதைகள் கொண்ட வெண்கடல் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன்.



எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின்  பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல்  .....கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் 
சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது.

விசாரணை படித்தின் மற்றொரு பரிணாமமாய் இருந்த கைதிகள் கதையில், சுட்டு விதைக்கப்பட்ட  அப்பு கடைசியாய் என்ன கூறினான் என்பதைக் கேட்டபின் கொஞ்சம் திகலுடன் சிறிது நேரம் உறைந்திருந்தேன்.பெரியப்பா பையனான  அருண் தம்பி என் அம்மாவிடம் ' சித்தி ...ஓட்டப்போட்ட இட்லி தாங்க'  என்று கேட்பான். அம்மா இட்லி வெந்ததா இல்லையா என்று பார்ப்பதற்காக குத்திப்பார்க்கும் இட்லியை மிகவும் ஆசையாய் அவன் கேட்டு வாங்கிச்செல்வதே அம்மையப்பம் கதையைப் படித்துக் கொண்டிருந்த போது நினைவில் நிழலாடியது.


பிறந்த குழந்தை இறந்த வேதனையைவிட அதிக துன்பம் தரும் பால்கட்டினை வைத்தியர் அட்டையால் சரிசெய்யும் பொழுது, பிறந்தவுடன் இறந்த என் முதல்  தம்பியால்  அம்மா பட்ட வேதனையுடன், தன்னிடம் பால் குடித்த அட்டைகளை கோழிக்கு உணவாக்காமல் தடுத்த தாயின் தவிப்பும் சேர்ந்து என்னை ஏதோ செய்தது. பிள்ளை இல்லாத வலி இராமலட்சுமிக்கு ஒரு வகையில் வெளிப்பட, நிலத்தின் மீது ஈர்ப்பு கொண்ட பெருமாளுக்கு வேறு வகையில் வெளிப்படுவதை, ' எல்லாச் செடியும், மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு...விட்டா காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல..'  என்ற பண்டாரத்தின் வார்த்தைகள்  எவ்வளவு உண்மையானது அப்படின்னே என் மனசுல பட்டுச்சு.

சேத்துக்காட்டார், நிலத்தோட முக்கியத்துவத்தையும் பெருமையையும் சுடலைக்கு மட்டும்  முகத்தில் அறைஞ்சு சொன்ன மாதிரி தெரியல்லை....நம்ம கன்னத்திலையும் அறை வாங்கின வலி தெரியும் பொழுது நமக்கும் சேர்த்து சொன்ன மாதிரித்தான் இருந்துச்சு.எங்க பேச்சியம்மன் கோவில்ல கிடா வெட்டி பொங்கல் வெக்கிற காட்சி கண்ணுமுன்னாடி வந்து, எல்லாரும் நல்லா இருக்கனுங்கிறதுக்காகத்தான் தன்னோட உயிரத் தியாகம் செய்யிற கெடா மேல வர்ற அதே இரக்கம்  , தம்பியோட காதலுக்கும் காதலியோட காதலும் ஜெயிக்கனும்ங்கிறதுக்காக  தன்னோட காதல தியாகம் செய்ஞ்ச அண்ணன் மேலயும் வர்றத தவிர்க்க முடியலை.....


பேச்சுவழக்கு மொழிகளால் கதைகளுக்கு பல உணர்வுகள் சேர்த்து மனதிலே ஒரு ஆழமான அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெண்கடல்.

2 comments:

  1. மிகவும் ரசித்து படித்துள்ளீர்கள் .. அருமையான பதிவு..

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete