Friday, October 27, 2017

(கி.ராஜநாரயணன்) கி.ராவின் கதை சொல்லி - தொகுப்பாசிரியர் கழனியூரன்

சிறுகதைகள், கட்டுரைகள், சுவை சேர்க்கும் சம்பவங்கள் என்று கி.ரா அவர்கள் நடத்திய சிற்றிதழான கதை சொல்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு . 'ராஜாவீட்டுக் கல்யாணத்துக்குப்  பூசணிக்காய்' நாட்டுப்புறக்கதை தற்போது உள்ள அரசியல் வாழ்வியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாய் அமைந்திருப்பது கவலை.



கி.ராஜநாராயணன் அவர்கள் மட்டுமல்லாது, கழனியூரன்,இரட்டை எழுத்தாளர்கள் பிரேம்: ரமேஷ், இரா.கோதண்டராமன் போன்ற பலரது படைப்புகளைப் படிக்கையில் கதைசொல்லி சிற்றிதழை வாசிக்க முடியாத குறை களையப்படுகிறது. கதை சொல்லி, தாத்தாவாய்த் தான் இருக்க வேண்டுமா? பாட்டியாக இருக்கக்கூடாதா?அட்டைப்படத்தில்மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை  பேரனாகத்தான் இருக்க வேண்டுமா ?  என்ற அம்பையின் கேள்விகள் கி.ராவுடன் 
சேர்ந்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

அலியுடன் ஒரு பொழுது, அலிகள் : மர்மங்களும் தெளிவுகளும் படைப்புகள் மருத்துவ ரீதியான பல வகையான விளக்கங்களுடன் , சட்டரீதியான விழிப்புணர்வும் தந்து, மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியத்தை வெகுவாக குறைக்கிறது.பல கிராமத்து கதை சொல்லிகளிடம் இருந்து கிடைத்த நாட்டுப்புறக் கதைகள் ஒரு சில இடத்தில் நம்பகத்தன்மைக்கு அப்பாற்ப்பட்டாலும் நெஞ்சத்தைக் கணக்கச் செய்கின்றன.


செவத்தம்மாவின் கருகிய கால்களுக்கும், இறப்புக்கும்  பலனாய் சாபம் பெரும் நொண்டிக் குடும்பம், கணவனைக்காப்பாற்ற இளவட்டக்கல்லைத்தூக்கிய சுந்தரம் போன்று பெண்களை மையமாய் கொண்டு உலா வரும் நாட்டார்க்கதைகள் என்றுமே நினைவில் நிற்கக்கூடியவை.

பரமபத பாதைகள் கதை திகில் கலந்து மிரட்டுகிறது.இன்று நடக்கும் உலகளவிலான உடல் உறுப்பு தான மோசடிகள் அன்றே பேசப்பட்டுவிட்டதா? இன்றும் அதற்கு சரியான முடிவு கிடைக்கப்படவில்லையா என்று எண்ணும் பொழுது மனம் பதை பதைக்கிறது. வெளிநாட்டு நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்ப்பு கதைகளாகப் படைத்திருப்பது எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் எதுவுமே தடையில்லை , வரையறையும் இல்லை  என்பதையே உணர்த்துகிறது.

நாட்டுப்புறப் பாலியல் கதைகளை சேகரிக்க கழனியூரன் மேற்கொண்ட முயற்சிகளே கதையாகி இருப்பது அந்தக் கதைகளைக் கேட்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது.நாசரின் தேவதைப் படத்தைப் பற்றிய கலந்துரையாடல், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகையின் பேட்டி போன்றவை நமக்கு கலையுலகின் மீது வேறொரு கண்ணோட்டத்தைக் கொண்டு சேர்க்கிறது.


இலக்கியத்தில் மொழி வழக்குகள் என்று செவ்வியல்வழக்கு, பொது வழக்கு, வட்டார வழக்கு, நெல்லை வழக்கு, நாஞ்சில் வழக்கு, இலங்கைத்தமிழ் என்று வகைப்படுத்தி அதனை விளக்கிய விதம் நமது பேச்சு வழக்கு வார்த்தைக்களுக்கு உயிர் ஊட்டுகிறது.கழனியூரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் கதை சொல்லியின் இணைஆசிரியராய்  செயல்பட்டு , இந்த தொகுப்பு நூலை வெளியிட்டிருப்பது பலகாலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் ஆக்கப்பூர்வமான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

2 comments:

  1. இன்றைய வாழ்க்கைக்கு தேவையான புத்தகம்..

    ReplyDelete
  2. நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete