Sunday, October 15, 2017

முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு -அகரமுதல்வன்

திண்டுக்கல் தமிழ் பித்தன் வரைந்திருக்கும்  அட்டைப்படத்திலே இருக்கும் சிவப்புநிறத்து  நவீன வரைபடத்தில் எனக்கு மட்டும் தான் கொன்றுகுவிக்கப்பட்ட மனிதர்கள், கூர்மையான கோடாரிகள், கொடூரமான கண்கள் என தெரிகின்றதோ....



தொகுப்பில் இருக்கும் பத்து கதைகளிலும் காதல், அன்பு, நட்பு,நம்பிக்கை, நாட்டுப்பற்று என்று பலவகையான உணர்ச்சிகள் இழையோடி இருந்தாலும் போர், மரணம், வதை போன்று வலியும் வேதனையும் ஏற்படுத்தும் உணர்ச்சிகளே மேலோங்கி நம் மனதை கனக்க மட்டுமல்ல கண்களையும் பனிக்க வைக்கும்.

ஆசிரியர் அகரமுதல்வனின் சிறுகதை தொகுப்பே கவித்துவமாக இருப்பதை உணர்ந்த பொழுது, அவரின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்கும் ஆர்வம் அனிச்சையாய் ஏற்படுகின்றது.



'இருட்டிய வானத்தில்  சிறுசிறு காயங்களைப்போல நட்சத்திரங்கள் முந்திக்கொண்டு மின்னின'. இரவு நேரத்தில் வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உடம்பில் ஏற்பட்ட புண்களாகவும்  காயங்களாகவும் தெரிவது இரணம்.

'அவளின் பிம்பம் சினைப்பர் ஒளியைப் போல என் மீது படர்கிறது'. காதலையும் துப்பாக்கிச்சூடு வழியாய்த்தான் போரை எதிர்கொண்டவனால் வெளிப்படுத்த முடியும் என்று உணர்கையில் ஏற்படும் மின்அதிர்வு, நடுக்கத்தை நமக்கு எளிதாய் கடத்திவிடுகிறது.
'அவனின் கண்கள் வெடிக்காத கைக்குண்டைப் போல இறுகிக் கிடந்தது'. இவர் கூறும் உவமைகள் அனைத்தும் போர்,யுத்தத்தையே சுற்றியே வருவது வாசகர்களை மிரட்டத் தவறவில்லை.

'அலைகள் ஒன்றன்மீது ஒன்றுவிழுந்து கரைக்கு வருகிற பொழுது தழுவலின் முத்தங்கள் நுரைபொங்கி இனிக்கத் தொடங்கியிருக்கும்.'
கடல்அலைகளைக் கொண்டு காதலை இதைவிடச் சிறப்பாய் சொல்லிவிட முடியுமா என்ன?


குசினி,சப்பாத்துக்கள்,தேத்தண்ணி, போன்று அர்த்தங்கள் தெரிந்து கொள்ளத் தூண்டும் வார்த்தைகள் புத்தகம் முழுவதும் விரிவிக்கிடக்கின்றது.கதைகளில் வரும் அழகான தமிழ்பெயர்களை
வாசிக்கும் பொழுது நாவில் தித்திப்பு தானாய் ஏற்பட்டுவிடுகிறது

மரணத்தை எதிர்பார்க்கும் ஆர்வம், அதனை விடுதலையாக எடுத்துக் கொள்ளும் மனம், மகன் இராணுவத்தின் பிடியில் இருப்பதைவிட போரில் உயிர்துறத்தல் மேல் என்று எண்ணும் தாய்மார்கள், மரணம் சம்பவித்தால் மொத்தக்குடும்பத்துக்கும் சம்பவிக்க வேண்டும் என்ற வேண்டுதல் நமக்குள் பதட்டத்தையும், பயத்தையும் அதிகரிக்கின்றது.

முஸ்தபா யாரென்று தெரியும் பொழுது நமக்கும் இனம்புரியாத அன்பு ஏற்படுகின்றது.மிக்-27 விமானங்களை இந்தியாதான் வழங்கியது என்று தெரிந்தவுடன் 'உன் மூதாதயர்கள் வாலின் மூலம் இந்தத் தேசத்தை எரித்ததைப் போன்று இன்றும் வானிலிருந்து எரிக்கிறார்கள்' என்ற கூற்று நமக்குள் அவமானத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

தெரிந்து கொள்ளப்படாத நம் சகோதர சகோதரிகளின் வலியைத் தெரிந்து கொள்ளும் பொழுது தடுக்கமுடியாத குற்ற உணர்வில் இருந்து நம்மால் நிச்சயம் தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.

4 comments:

  1. Nice summary...ill try to read the book

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம்.. கட்டடாயமாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete