Saturday, October 28, 2017

உடையார் ( 1- 6 பாகங்கள்) - பாலகுமாரன்

ஆறு பாகங்கள் அதிகபட்சம் 3000 பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துமுடித்து விடுவேனா என்ற எனது எண்ணம், 1000 வருடத்திற்கு முந்திய மக்களின் வாழ்வியலையும் , பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயில் உருவான வரலாற்றையும் பதிவு செய்த முயற்சிகளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லாமல் போனது. ராஜ ராஜ சோழன் கும்ப ராசி சதய நட்சத்திரம் என்ற குறிப்பைத் தாண்டி என்  வாழ்வின் முக்கிய ஆண்களான அப்பாவும் , கணவரும் அதே ராசி நட்சத்திரம் என்று தெரிய வர இனம்புரியாத ஈர்ப்பு ஒட்டிக்கொண்டது.



ஏதோ ஒரு மூலையிலிருந்து , எங்கேயோ எந்த நூற்றாண்டிலோ நடந்த  ஒரு நாகரிகத்தை வெறும் கற்பனையாய் எழுதியிருந்தால் , நம்மால் அதனோடு ஒன்றியிருக்க முடியாது.களப்பணி செய்து, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடுகள் என்று ஆராய்ச்சி செய்து, 
கோயிலிலும், அதன் சுற்றுவட்டாரத்தையும் பித்தனாய் சுற்றி வந்து
ஒரு ஆய்வு நூலாய் எழுதியிருந்தாலும் சுவாரஸ்யம் குறைந்து வரலாற்றைத் தெரிந்திருக்க முடியாது. இவை இரண்டுமே கலந்து புதினமாய் படைத்ததால் வாசிப்பில் எந்த சோர்வும் ஏற்படவில்லை.அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு கதைசொல்லியின் வாயிலாக நடந்த கதையைக் கேட்டது போன்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படுகின்றது.

கல்கியின்  பொன்னியின் செல்வன் படித்தபின் ராஜ ராஜன் கட்டிய பெரிய கோவிலையும் , ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்து பிரஹதீஸ்வரர் கோவிலையும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த புத்தகங்களின் அனைத்துப் பாகத்தைப்படித்தபின் எழுத்தாளரைப் போல் ஒரு இரு சக்கிர வாகனத்தின் வழியாய் குதிரை சவாரி செய்வது போலவே சோழ சாம்ராஜ்யத்தை சுற்றி வர வேண்டும் என்கிற ஆசை மேலோங்குகிறது .

மறுபடியும் கோவிலைச் சுற்றி வந்து, பேராற்றல் பெற்ற கருவூர்த்தேவர் , ஒற்றர்களையே ஒற்று வேலைப் பார்த்த பிரம்மராயர்,
அவரது புதல்வன் அருண்மொழி , அறிவாற்றல் பெற்ற ஈசான சிவபண்டிதர், இந்த கோவில் கட்டுவதையே தன் கனவாகக் கொண்டிருந்த இராஜ இராஜர் இவர்கள் அனைவரும் எங்கெல்லாம் நின்றிருந்து தற்பொழுது கோவில் முழுவதும் நிறைந்திருப்பார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

அக்காலத்திலேயே திருமணம் செய்து கொள்ளாமல் தான் விருப்பப்பட்டவனுக்கு நல்ல அனுக்கியாய்( தோழி) வாழ்ந்த கதைகளுக்கு உதாரணம் அருண்மொழி-இராஜராஜி உறவு.நித்த வினோதப் பெருந்தச்சன், குஞ்சரமல்லப் பெருந்தச்சன், சீராளன் , இலத்தி, குணவன்  போன்றோர்கள் தான் நம் கலைக்கும், பொறியியல் நுட்பங்களுக்கும் முன்னோடியாய் இருந்தார்கள் என்று உணரும் பொழுது பெருமைப் பட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.


தலைவர்களுக்கும், பொறுப்புள்ள அதிகாரிகளுக்கும் இருந்தத் திறமைகளை மட்டும் வெளிப்படுத்தாமல் சாதாரண குடிமக்களான கணபதி - அம்மங்கை  போன்றோர்களின் ஆற்றலையும்  வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. 

அதிகாரிச்சி (பெண் அதிகாரிகள்) முத்தான பொன்நங்கை , குதிரை ஏற்றம் போன்று பல வீரச் செயல்களை அநாயாசமாகச் செய்யும் இராஜ இராஜரின் மனைவி பஞ்சவன்மாதேவி, ஆதூரச் சாலைகள் ( வைத்தியசாலை) பல நிறுவி யானை மேல் ஒய்யாரமாய் வலம் வரும் குந்தவை, ஒற்று வேலையுடன் இராஜ இராஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நாட்டிய நாடகமாய் அரங்கேற்றிய ராஜ ராஜி போன்று அறிவும் , மேலாண்மைத்திறமையும் பெற்றிருந்த பெண்களின் செயல்பாடுகள் வாசிகர்களுக்கு புதுத்தெளிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

பொன்னியின் செல்வனில் இளமையாய் மனம் கவர்ந்திருந்த வந்தியத்தேவரையும், அதிகாரமும் ஆற்றல் நிறைந்த குந்தவை 
பிராட்டியாரை இங்கே சற்று வயது முதிர்ந்தவர்களாய்ப் பார்த்தாலும் மனநிறைவு.அருண்மொழியாய் இருந்து இராஜ இராஜ சோழனாய்  மாறிய பரிணாமம் , ஆதித்ய கரிகாலனின் இறப்புக்கு பழிவாங்கல், பஞ்சவன்மாதேவிக்கு  கிடைக்கும் ஆன்மீகத் தெளிவு என்று அனைத்துமே நம்முள் மாற்றத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது.

தொழில் நிமித்தமாகவே சாதிகள் தோன்றியிருந்தாலும், ஒவ்வொரு சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வாழ்க்கை முறையான தங்குமிடம், உணவு, தொழில் போன்றவை மிக விவரமாக விவரித்துள்ளது, யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை, யாருடைய தொழிலும் தரம் குறைந்தவை அல்ல என்பதையே நம் மனதில் நிறுத்துகிறது.

ஒரு கற்கோவில் கட்டப்படும் பொழுது நடக்கும் சமுதாய மாற்றங்கள் மக்களின் நாகரீகத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைத் தெளிவாய் உணரமுடிகிறது. போக்குவரத்திற்காக கற்களைக் கொண்டு செல்வதற்காகப் போடப்படும் தரமான சாலைகள் தொடங்கி, குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளைக் கண்டுபிடிப்பது, உணவு வகைகள் உற்பத்தி, ஆடை ஆபரணங்கள் பயன்பாடு, கலைகள் வளர்த்தல் வரை எத்தனை பரிணாமங்கள்?

ஒரு போரின் ஆயத்தம், அதற்காக ஆகும் பொருட் செலவு, துணிச்சல் மிகுந்த வீரர்கள், முதுகில் குத்தும் துரோகிகள் என்று படையெடுப்புக்களின் மற்றொரு பக்கமும் உறையவைக்கிறது. சைவச் சமயத்தை வளர்க்க சிவனுக்குக்  கோயிலை கட்டும் இராஜ ராஐர், அவருக்கு வலது கையாய் விளங்கும் பிரம்மராயர் வைணவத்தைச் சேர்ந்தவர், அரசரின் மகள் சமண மதத் துறவி மாதேவியடிகள்.சமய மத நல்லிணக்கத்திற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் வேண்டுமா என்ன?


எதிரிகளின் ஆயுதங்களையும் உருக்கி நேர்த்தியான ஆயுதங்கள் செய்யும் கருமார்கள், உழைத்துக் களைத்தவர்களுக்கு கலைகளினால்  ஊக்கம் கொடுக்கும் தேவரடியார்கள், அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்யும் வேளாளர்கள்,  மனதை ஒன்றுபடுத்தி இறைவனை வேண்டி நாட்டுக்கே நல்லவை வேண்டும் அந்தணர்கள் , காலத்தால் அழியாத சிற்பங்களைச் செய்த சிற்பிகள் என்று ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து நபர்களின் மீதும் நமக்கு மரியாதை ஏற்படுகின்றது.

கைது செய்யப்பட்ட  மேல், கீழ் சாலுக்கிய வீரர்கள் , குணசீலன் போன்ற திறமையான  பாண்டிய நாட்டுப் போர் வீரர்கள், மற்ற நாட்டு வீரர்கள் என்று அனைத்துச் சமூக மக்களையும் இறைபணியில் ஈடுபட வைத்து , என்றும் நம் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்த தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை அகிலத்திற்கு எடுத்துரைத்த பாலகுமாரன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல.

2 comments:

  1. Historical importance, but people's r unaware about it.. Gud work

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்... எனக்கும் மிகவும் நெகிழ்த்திய புத்தகம்...

    ReplyDelete