Tuesday, June 25, 2019

நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்


நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்

நாம் அன்றாடம் பொறுமையாய் வரிசையில் நிற்கும் இடங்களுள் எரிபொருள் நிலையங்கள் முக்கியமானவை. 'எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் ' போன்ற
வாசகங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். அதற்காகத்தான் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கின்றனர்.


நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க்கு உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி அழுத்தம் கொடுப்பார்கள். இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்க்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.


சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் வழங்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க்க் இயந்திரம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு நிரப்பும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் நிரப்ப கருப்பு குழாய்பொறுத்தப்பட்டு இருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும் கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல் / டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் / டீசல் பம்புகளில் விற்பனை தடைசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் நிரப்பும் இடங்களில் அலைபேசி உபயோகிப்பதற்கு தடை என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மை கொடுக்கக் கூடியவை தான். எரிபொருள் நிரப்புவதற்கு நிற்கும் பொழுது நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சில சண்டைகளையும் சச்சரவுகளையும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் அரங்கேற்றுவதுண்டு. வண்டியைச்சற்று தள்ளி ஓரமாக நிறுத்துங்கள் என்பார்கள். நாம் அதற்கு தயாராகி எரிபொருளின் அளவு பூஜியத்தில் இருந்ததா என்பதை கவனிப்பதற்குள் எந்திரத்தை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு முதலில் எரிபொருள் நிரப்பியவர் 100 ரூபாய்க்கு நிரப்பியிருந்தால் நமக்கு 100 ரூபாய் நட்டமாக நிறைய வாய்ப்பிருக்கின்றது. அதனால் எரிபொருள் நிரப்பும் முன் பூஜியத்தைக் கவனித்துக்கொண்டால் தேவையில்லாத சண்டைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோலிய எரிபொருள்கள் நிரப்பும் அளவு காட்டி, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அளவினை பயன்படுத்தி விநியோகிக்கப்படும் பெட்ரோல் / டீசல் அளவினை நுகர்வோர் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செ
ய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நாம் தெளிவாக 300 ருபாய்க்கு எரிபொருள் நிரப்புங்கள் என்று குறிப்பிட்டாலும் 100 ரூபாய்க்கோ , 200 ரூபாய்க்கோ தேவையான எரிபொருளை நிரப்பிவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டால் 100 ருபாய் தானே சொன்னீர்கள் என்று நம்மிடமே பரிசீலனைக்கு வருவார்கள். சரியாக கேட்கவில்லை என்று அவர்கள் காரணம் கூறுவதற்கு இடம்கொடுக்காமல் செய்கையில் காண்பிப்பதும், முதலிலேயே பணத்தை செலுத்தியும் நாம் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்று நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்புவதால் நஷ்டம் அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்.


பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் வகையில் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைபேசி செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.
விழிப்புணர்வுடன் இருப்போம்..வீண் விரயத்தைத்தவிர்ப்போம்.

No comments:

Post a Comment