Saturday, March 9, 2019

மணல் பூத்த காடு - முகம்மது யூசுப்

பொறியியல் படிக்கும் பொழுது பக்கத்துத் துறையான பயோ மெடிக்கல் என்ஜினியரிங்க் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். வளைகுடா நாடுகளில் இந்தப் படிப்பிற்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பெருமை பீற்றிக் கொள்வார்கள். ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியர் எந்த மாதிரியான வேலைகளைச் செய்வார், சில சமயம் கூலி ஆள் செய்யும் வேலையையும் செய்ய வேண்டி வரும் என்பதை நாவலின் நாயகன் அனீஸ் எளிமையாகச் சொல்கின்றார். விளக்கங்கள் சுலபமாய் இருந்தாலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு வேலையுமே சவால் நிறைந்தது தான்.


என்ன வேலை, அதற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும், அதை முடிக்க எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் ஆகும், நம்மால் அந்த வேலையை முடிக்கமுடியுமா என்ற எந்த கேள்விக்குமே விடைகள் 'தெரியாது'. பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து அலுவலகத்தில் கொடுக்கும் எந்திரங்களைப் பத்திரமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு அதற்கு உயிர் கொடுக்கும் வேலை அனீசுக்கு. ஒவ்வொரு எந்திரத்தைப் பற்றிய சிறிய முன்னுரை சவுதியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடுகள். ஒவ்வொரு நகரத்திற்குப் பயணம் செய்யும் பொழுதும் அதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைச் சுற்றிப்பார்த்து நமக்கும் அதைச் சுற்றிக் காண்பிக்கின்றார் அனீஸ். நாவல் என்னும் தளம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் பயண இலக்கியங்களில் காணப்படும் ஒளிப்படங்களைக் காணும் வாய்ப்பு வாய்க்கப்படவில்லை. குறிப்பிடும் இடங்களை இணையத்தில் அடித்துப்பார்க்கக் கொஞ்சம் சுணக்கம்.

வளைகுடா பகுதியென்றால் ஒட்டகம் மேய்ப்பது மட்டுமே பிரதான தொழில் என்ற பொதுப்புத்தியை முதல் அத்தியாயத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு, அந்த அப்பா மகன் கதாப்பாத்திரங்களின் வாழ்வில் சிறு மாற்றம் ஏற்பட அனீஸ் ஒரு காரணமாக மாறுவதை கதை சொல்லி பல அத்தியாயங்கள் கடந்து முடித்துப்போடுகின்றார். கடன் பிரச்சனைக்காரணமாக வெளிநாட்டு வேலைக்கு வரும் அனீஸ் சவுதியின் நிலப்பரப்பைச் சுற்றி வர பயோ மெடிக்கல் வேலை உதவி செய்கின்றது. சவுதி என்றால் வெக்கை பரப்பும் பாலையும் பாலை சார்ந்த இடமும் என்று அழுத்தமாக நினைப்பவர்களுக்கு குளிரும் பச்சை மலையும், உப்புக் காற்று வீசும் கடல் சார்ந்த இடங்களும், உலகின் மிகப்பெரிய ஆலிவ் உற்பத்தி செய்யும் தோட்டங்கள், குறிஞ்சி மலர்கள், பேரீட்சைத் தோட்டங்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தும். தலைவெட்டு போன்று கடுமையான குற்றங்கள் கொடுக்கப்படும் என்று நம்பப்படும் சவுதியில்தான், சிறைக்கைதி தன் மனைவியுடன் சில மணி நேரங்களைச் செலவு செய்வதற்கான சிறப்பு அனுமதியும் தரப்படுகின்றது.

எல்லா அலுவலகத்திலும் அரங்கேறும் அரசியல்களை அனீசும் எதிர்கொள்கின்றான். தப்பே செய்திருந்தாலும் தன் நாட்டுக்காரனை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவது, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் முதலாளியிடம் எப்படி புத்திசாலித்தனமாக சீட்டெழுதிக்கொடுத்துப் பணம் சம்பாதித்து எத்தனுக்கு எத்தனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எல்லா சூட்சமங்களும் கற்றுத்தரப்படுகிறது. பொறாமை ஒருவனுள் எப்படி எல்லாம் வன்மத்தை ஏற்படுத்தி நல்ல நட்பை நிலை குலைய வைக்கும் என்பதற்கு சுலைமான் எடுத்துக்காட்டு. அன்பிற்கு முன் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பிரிவுகள் எல்லாம் பறந்து போய் விடுவதற்கு அனீசின் சம்பளத்தை நியாயப்படி வாங்கிக்கொடுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜலால் தாத்தா ஒரு உதாரணம்.

மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தை விதைக்க வருபவர் சொந்தக்காரராய் இருந்தாலும், பக்திப்படமும் பாடலும் போட்டு அவருக்கு சமத்துவத்தைச் சொல்லித்தர தயாராய் இருப்பது ஒரு மதம் கற்றுக்கொடுத்திருக்கும் நல்லிணக்கத்திற்குச்சான்று . சொல்லப் பிரியப்படும் தகவல்களை அலுப்புத்தட்டாமல் வாசிக்க வைப்பது ஒரு திறமை. தான் பகிர நினைக்கும் தகவல்களை, பெரும்பாலும் வார இறுதி நாட்களில் பிரியாணி மற்றும் திரைப்படங்களுடனும் கழியும் இரவுகளின் வழி திரைப்படப் பட்டியல்களாகவும், திரைவிமர்சனங்களாகச் சொல்வது, மனைவிக்குக் கடிதம் எழுதும் முறையில் தான் உணர்ந்ததையும், தன் அனுபவத்தையும் வாசகர்களுக்குக் கடத்துவது, ஒரு நாட்டின் வரலாற்றையும் அதன் பின்னால் நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் அரசியலையும், மாயையும், எண்ணை வளம் கண்டுபிடிப்பதற்கு முன்பே அமெரிக்கர்களும், ஆங்கிலேய ஒற்றர்களும் எடுத்துக்கொண்ட சபதங்களும், நூல்களை திருத்தி எழுத எடுத்த முயற்சிகளும், ஒரு மதத்தைப் பற்றிய தவறான புரிதலையும், வாஹாபியிசம் மற்றும் தீவிரவாதத்தின் அடிப்படையையும், உடையின் தேவையையும், தோழப்பா கதாப்பாத்திரத்தின் வழி நடைபயிற்சியிலேயே ஒரு உரையாடலாய் நிகழ்த்துவது, நமக்கு ஏற்படும் கேள்விகளை அனீசை வைத்தே கேள்வி கேட்க வைத்து அதற்கான பதிலை ஆதாரங்களுடனும் புத்தகங்களின் பெயர்களாகப் பகிர்வது, நாவல் முழுவதும் இழையோடி இருக்கும் நகைச்சுவையும் கதை சொல்லும் வித்தையும் புத்தகத்தை கீழே வைக்காமல் பக்கங்களை விறுவிறுப்பாகப் புரட்ட வைக்கின்றது.


ஒரு பாகிஸ்தான்காரரின் பார்வையில் நம் காலைப் பொங்கல் உணவு எவ்வளவு குழப்பத்தைக் கொடுக்கும் என்பதைக் குறுநகையுடன் கடக்க முடிந்தது. வெளிநாட்டில் வேலை செய்பவனுடைய விடுமுறை காலங்கள், அவன் இடுப்புக்குக்கீழ் உள்ள ஏக்கங்கள், ஒரு நோய் ஏற்பட்டால் அவன் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் என்ற மனஓட்டம் இயல்பாகப் பதியப்பட்டு உள்ளது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் சவுதியில் சில வருடங்கள் பணிபுரிந்த கணவருடன் விவாதித்த பொழுது சில விஷயங்கள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பற்றிய தேடலை அதிகம் ஆக்கியிருக்கிறது.

பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஸ்போர்ட், ஹிஜாரி தேதியின் தவறான கணக்கீட்டால் ஓவர் ஸ்டே ஆகி இரண்டு நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது, ஹலீம் வாங்கப்போய் தொழுகை நேரத்தில் கலாச்சார காவல் அதிகாரியிடம் பிடிபட்டது,'கையில எதுக்கு கருப்புக்கயிறு கட்டியிருக்க? அதெல்லாம் கட்டக்கூடாது', 'கொஞ்ச நேரம் முன்னாடி தான் சார் இங்க ஒரு தண்டனை கொடுத்தாங்க..', 'எந்த ஆண் துணையும் இல்லாமல் வெளியில போனது அந்தப்பெண்ணோட தப்புங்க', மதம் மாறினால் பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி வார்த்தைகளில் இருந்து வெளிவந்தது, அதிக பணம் கொடுத்தால் தான் வண்டியை நிறுத்துவேன் என்று கூறி இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி தூரமாய் கொண்டு விட்ட அரபி வண்டி ஓட்டுநர், வீட்டு வேலைக்காக வந்து பாலியல் தேவைக்காக உபயோகப்படுத்தப்படும் பெண்கள்,
பல வருடங்களாக பாஸ்ப்போர்டைத் தன் முதலாளியிடம் இருந்து திரும்பி வாங்க முடியாமல் நாடு திரும்பக் காத்திருக்கும் உயிருள்ள, உயிரற்ற எளிய மனிதர்களின் கதையைக் கேட்டு சில கசப்பான அனுபவங்கள் பெற்றிருந்தாலும் சவுதியிலிருந்து திரும்பிய பொழுது நிறைய அன்பான உறவுகளைப் பெற்று கனத்த இதயத்துடன் திரும்பும் அனீசின் மனநிலையிலேயே இருந்திருக்கின்றார். இப்பவும் அலுவல் சார்ந்து சவுதி பயணம் என்றால் என்னையும் அழைத்துப் போகத்தயாராய் தான் இருக்கின்றார்.

புத்தகம் படிக்கும் முன்பு இந்த காணொளி கொடுத்தத்தாக்கம் ,
புத்தக வாசிப்புக்குப் பின் அதிகரித்து இருக்கின்றது.


https://m.youtube.com/watch?v=77MahUqafb4

யாவரும் பதிப்பகம்
விலை - 500
பக்கங்கள் - 448

No comments:

Post a Comment