Thursday, June 27, 2019

நகர்வலம் - ஃபோன்,வண்டி, எதுவுமே கொண்டுவந்துடாதீங்க


நகர்வலம் - அலைபேசிகள் வேண்டாம்… புத்தகங்கள் போதுமே



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தமுறை புதிதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அலைபேசிகள், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உட்பட மொத்தம் 11 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சதா சர்வ காலமும், அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டே சுற்றுவதால், அவர்களின் படிப்பின் மீதான கவனம் சிதறுகிறது என்று பரவலாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. பெற்றோர்களால் ஓரளவுக்கு மேல் பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள், இணைய விளையாட்டுக்கள் மாணவர்கள் அலைபேசிகளுக்கு அடிமையாக்குகின்றது. அலைபேசிகள் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துகின்றது . தேவையில்லாத சைபர் குற்றங்களில் மாணவர்களைச் சிக்க வைத்துவிடுகிறது .


தற்போது உள்ள நவீன வளர்ச்சியில் கல்வியை யாருடைய துணையும் இல்லாமல்கூட படிக்க முடியும். ஆனால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதன் முதன்மை நோக்கமே ஒழுக்கம், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது, கீழ்படிதல் போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதற்குதான். தற்போது உள்ள மாணவர்களிடம் இந்த பண்புகளை காண்பது அரிதாகி வருகின்றது.

பல பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிள்களுக்குப் பதில் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர் . இதை சில பள்ளி நிர்வாகங்கள் தடுப்பதில்லை. உரிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் இப்படி இரு சக்கர வாகனத்தில் வருவது அவர்களுக்கும், சாலைகளில் செல்லும் பிறருக்கும் ஆபத்தாக அமைந்து விடுகிறது.

இரு சக்கர வாகனங்கள் மீதான மோகம் மாணவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
திரைப்படங்களைப் பார்த்து உந்தப்படும் மாணவர்கள், வீட்டில் இரு சக்கர வாகனம் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து இருக்கிறது. இரு ச‌க்கர வாகனங்களில் சாகசம் செய்வதும், அதிவேகமாகச் செல்வதும் மாணவர்களிடம் ஒரு மேலான சாகச மனநிலையை உருவாக்கி இருக்கின்றது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உண்டான தகுதி வயதைக் கூட அடைந்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த உத்தரவு சரியென்றே பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாகத்தான் ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பி உள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும், பள்ளி மாணவர்களுக்கு என பள்ளிச்சீருடைகளில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் பள்ளிச் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமே இப்படிச் சில கட்டளைகளைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அதிகாலை சென்று அந்தி சாய்ந்த பின்னர்தான் வீடு திரும்புகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு இருக்கும்போது மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி அலைபேசி பயன்பாடு, இரு சக்கர வாகன பயன்பாடு என அனைத்து விஷயத்திலும் வீட்டிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வர இயலும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால் அரசே ஆசிரியர்களுக்கு இந்த கட்டளைகள் மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்றுதான் பலரும் கருதுகின்றார்கள்.

வசதியான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான அன்பைக் காட்டும் விதமாக இருசக்கர வாகனங்களையும், அலைபேசிகளையும் பரிசளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடுகின்றார்கள்.

ஆசிரியர்கள் கைகளில் இருந்து கம்பை பிடுங்கிவிட்டார்கள்; அதனால் நாங்கள் லத்தியை அதிகமாக சுழற்ற வேண்டியிருக்கிறது என்று அதிகரித்து வரும் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொள்ளும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள் குறித்து காவல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனால் மாணவர்களை அடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் மாணவர்களிடம் வார்த்தையால் கூட கடுமைகாட்ட இயலாத சூழலில் கட்டுபாடற்ற சுதந்திரம் நிலவுகின்றது . அந்த சுதந்திரத்தை சரியான முறையில் அவர்களுக்குக் கையாளவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக அரசாங்கமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருப்பதால் இனி நாங்கள் போதனையும் செய்ய வேண்டாம், வேதனையும் பட வேண்டாம். பள்ளி வளாகத்தில் இந்தக் கட்டளைகளை எழுதி வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கலாம் என்று ஆசிரியர்கள் நிம்மதி தெரிவுக்கின்றனர்.


முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இருந்தன. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மனம்விட்டு பேசிக் கொள்ள முடிந்தது. பல பிரச்சினைகள் வகுப்பறைகளிலேயே தீர்த்துவைக்கப்பட்டன. ஆனால், இன்று நீதி போதனை வகுப்புகள் மறைந்து வரும் நிலையில் அதன் வழியாகத் திரும்பவும் மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment