விரைவாக பயணிக்க நாம் அன்றாடம் தேர்வு செய்யும் போக்குவரத்து முறைகளில் முக்கியமானவை இரயில் வண்டிகள்.
இந்தியாவில் உள்ள 6,853 ரயில் நிலையங்களில் சராசரியாக தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கின்றார்கள்.
பயணிகளால் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தி ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை பயணிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் போதிய ஒத்துழைப்புடன் ரயில்வேத்துறை சமாளித்து வருகிறது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த துறைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகிறார்கள். 31 இரயில் நிலையங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்து துறையும் பராமரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோட்டங்கள் வாரியாக மதுரையில் 922 பெட்டிகள், பாலக்காட்டில் 344 பெட்டிகள், சென்னையில் 230 பெட்டிகள், திருவனந்தபுரத்தில் 253 பெட்டிகள், சேலத்தில் 146 பெட்டிகள், திருச்சியில் 149 பெட்டிகள் என மொத்தம் 2044 ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வே நவீன இயந்திரங்களின் உதவியுடன் சுத்தம் செய்கிறது. இவற்றை மெக்கானிக்கல் துறை மேற்கொள்கிறது. ஓடும் ரயில்களை சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும் , கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் அரசாங்கம் சுத்தம் செய்து வருகிறது.
முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு இருக்கின்றது. எனவே நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் வசதிக் காக துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த தனித்துறை ஒன்றை ரயில்வே வாரியம் உருவாக்க வேண்டுமென பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால், வளாகம் மற்றும் ரயில் பாதையில் சிறுநீர் கழித்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. பின்பு ரயில் நிலையங்களிலோ அல்லது இரயில் பாதைத் தண்டவாளங்களிலோ குப்பை கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நிலையத்தில் துாய்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாமல் தவிர்க்கவே, இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்த 1600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.75 லட்சம் அபராதம் வசூலித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், தாம்பரம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை கழிவறை வசதிகள் முறையாக இருப்பதில்லை. இதில் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் பயணிகள் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிப்பதுடன் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் அதிகரித்து உள்ளது. நாம் கழிப்பறைகளை முறையாக உபயோகித்தால் தானே நமக்கு முன்னால் உபயோகித்தவர்கள் சுத்தமாய் உபயோகித் திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.
ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், பல ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதியில் குப்பை, கழிவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் அருகே வீடுகள் அமைந்திருப்பதால், மேற்கண்ட வீடுகளில் இருந்து பலர் குப்பை, கழிவுகளை தண்டவாள பகுதியில் வீசி வருகின்றனர். பாலித்தீன் பைகள் உப யோகம் தடை செய்ப்பட்டதில் குப்பைகள் சற்று குறைந்தும் இருக்கிறது.
குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், ஆவடி ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதேபோல், புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், ரயில் தண்டவாளத்தில் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது நிறுத்தங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே. குழந்தைகள் 'இந்த குப்பைகளை எங்கே போட வேண்டும்' என்று கேட்டால் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் போன்ற நற்பண்புகளைச் சொல்லிக் கொடுத்து , அவர்கள் அவ்வாறாக அந்த நல் ஒழுக்கங்களைப் பின்பற்றும் நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்தோ பாராட்டியோ உற்சாகப்படுத்த வேண்டியதும் நமது பொறுப்பு தான். ஓடும் இரயிலில் குப்பைகளை எரிவதும், தண்ணீரை ஊற்றுவதும் நம்முடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு எவ்வளவு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை
நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்ற எண்ணம் நம் அனைவரது உள்ளத்தில் பதிந்தாலே இரயில் நிலையங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் இயல்பான செயல்பாடாகி விடும்.
No comments:
Post a Comment