அதிவேகம்..அதிக ஆபத்து
பத்து மணி நேரமாகும் ஒரு பயணத்தை 5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என பல பேருந்துகள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இரு வழிச்சாலையாக இருந்த பெரும் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. நான்கு வழிச்சாலையாக மாற்றினாலும் விபத்துக்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும் வேகமும் தான்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் பழுது ஏற்பட்டால், வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டு,பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் வாகனம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த ரீதியில் தான், அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த போதிய நிறுத்தங்கள் இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான லாரி டிரைவர்கள் சிறுநீர் கழிக்கவும், அவசரத்திற்கு செல்லவும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரி நிறுத்தம் இருக்கவேண்டும். அந்த லாரி நிறுத்தத்தில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, ஓய்வு எடுக்கும் அறை கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே,சாலையில் வாகனம் நிறுத்துவது குறையும். விபத்துக்களும் குறையும்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து இருக்கின்றார்கள். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறையைக் குறிப்பிட்டுள்ளது.உதாரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு எத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவிப்பதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் நடக்கும் விபத்துகளில் சிக்குவது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு குளிர்சாதனத்தை இயக்கிச் செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.
இதனை, வேக குருடு அதாவது ஸ்பீடு ப்லைண்டனஸ் Speed blindness என்று கூறுகின்றார்கள். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் நமது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் நமது வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்படும். எதிரே வரும் வண்டி ஓட்டுநர்களை எவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்று நாம்கூறுவோம். அசுர வேகத்தில் செல்லும் பொழுது திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது. தற்பொழுது வேகத்தையோ, சாலையின் பயண அதிர்வுகளை உணராத வகையில் நிறுவனங்களும் வண்டிகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரி வேகம் கொண்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ், லாரி, கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்துமே அதிவேகம் கொண்ட வாகனங்களாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் 50சதவீத கார்கள் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட கட் ரோடு,சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கட் ரோடு,சர்வீஸ் ரோடுகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல், ஜல்லி, எண்ணை போன்றவை படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி வேகத்தைக் கணிக்கும் இயந்திரத்தை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பு இருப்பதில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் நினைத்த இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
கடந்து செல்லும் வண்டிகள் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது என்று கணக்கிடும் கருவி பல காவலர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட வேவகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வண்டிகளின் வேகம் குறித்து வைக்கப்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை பலகைகளில் எழுதிப் போட்டு இருக்கின்றார்கள்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவு எண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து காவலர்களால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்பட இருக்கின்றது. வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சிறந்த ஏற்பாடு. 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் அனைவரும் மிதவேகம் மிகநன்று என்பதை மனதுக்குள் நிறுத்திக் கொள்வது ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் சிறப்பாய் அமையும்.
No comments:
Post a Comment