ஹைக்கூக்கள் ஜப்பானிய மொழியில் இருந்து வந்தவைதான். ஆனால் அந்த வகையில் எழுதப்பட்ட தமிழ் கவிதைகள் ஜப்பானிய மொழியிலேயே மொழி பெயர்க்கப்படுவது பெருமைக்குரியது. சிறந்த படைப்புகள் திசையெங்கும் பரவும் என்பதற்கு சான்று கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் ஹைக்கூக்கள்.அவரின் மிகச் சிறந்த கவிதைகள்ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஹைக்கூ உலகில் மிக முக்கிய கவிஞர்களான மு.முருகேஷ், முதுமுனைவர் மித்ராஅணிந்துரையில் ஹைக்கூவைப் பற்றி குறிப்பிட்டிருப்பவை அனைவரையும் ஒரு ஹைக்கூவாவது எழுதத் தூண்டும்.மனம் தளர்ந்து சோர்ந்திருக்கும் பொழுது ஒரு சிறிய ஹைக்கூ நம்முள் பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணம்.
' மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்'.
சுற்றியுள்ளவர்கள் நம்மைப் பழித்து மூழ்கடித்தாலும் அழகான நீர்வட்டங்களாய் நம்மை நிரூபக்கத்தூண்டுகின்றது இந்த ஹைக்கூ.
'உவர்க்கும் உறவுகளும்
இனிக்கும் பலாச்சுளையாய்
பிரிவின் நிழலில்'.பக்கத்தில் இருக்கும்பொழுது மனிதர்களின் அருமை நமக்குப் புரிவதில்லை.ஆனால் அவர்கள் நம்மை விட்டுப்போகும் பொழுதுதான் அவர்களை நாம் தேடுவோம்.சுடும் உண்மையையும் சுவையாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.
'அக்கினித் துளைகளை
அரவணைத்தன மூங்கில்கள்
புல்லாங்குழல் பிரசவமானது.'
வலியில்லாமல் வெற்றிக்கிடைக்காது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்களையும் இன்முகத்தோடு சந்திக்கும் வலிமையைத் தருகிறது இந்த ஹைக்கூ.
'கர்நாடகத்துக்குச் செல்லும்
மணல்வழிப்பாதை
காவிரி'.படித்த நொடியில் இதயத்தைக் கனமாக்கும் சக்தி ஹைக்கூவிற்கு உண்டு என்பதை நிரூபிக்கிறது.
'குடமுழுக்கு நடக்கின்ற
கோயிலுக்கு அருகில்
கூரையில்லா பள்ளிக்கூடம்.' என்கின்ற ஹைக்கூவைப் படித்தவுடன் கல்விக்காக நம்மால் முடிந்த ஏதாவது ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் அனைவருக்கும் ஏற்படும்.
நகைச்சுவையுடன், நல்ல கருத்துக்களையும் தருவதுதான் ஹைக்கூ.
'வல்லாரைக் கீரை விற்றவன்
மறந்தே போனான்
காசுவாங்க'. சிரிப்புடன் வல்லாரைக்கீரையைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் விதைக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கும் இன்றியமையாத அழகான இயற்கையை இரசிக்க வைக்கவும் ஹைக்கூவால் முடியும்.
'தேசத்தின் முதல்
கைவினைப் பொருள்
தூக்கணாங் குருவிக்கூடுகள்.' இத்தனை அழகாய் நுட்பமாய் ஒரு கூட்டினைக்கட்டியது ஒரு குருவி என்று உணரும் பொழுது நம்மால் ஆச்சர்யத்தை அடக்க முடியாது.
'ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள்
முடங்கும் சூரியக்கதிர்கள்.'
'அலைகளின் மோதல்களில்
பால்குட முழுக்கு
கடலோரப் பாறைகள்'.
உவமை, உருவகங்களுடன் சொல்லப்படும்பொழுது இயற்கையை இரசிக்கும் ஆர்வம் நமக்கும் வந்துவிடுகிறது.
'கொக்கும் தூண்டிலும்
அருகருகே
தடுமாறும் மீன்கள்'.இக்கட்டான சூழ்நிலையில் தடுமாறும் மக்களையே இந்த மீன்கள் நம் கண்முன்னே நிறுத்துகிறது.
'சுடுமணல் காலணிகளுடன்
கடலோரக்கவிதைகள்
சுண்டல் விற்கும் சிறார்கள்'.
'விறகுச் சுள்ளிகள் தேடுதலே
வீட்டுப் பாடங்கள்
ஏழைச் சிறுமி'. வறுமையையும் , சிறார்களின் வலியையும் கடத்துவதற்கு இந்த இரு ஹைக்கூக்களே சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகின்றது.
'கிறிஸ்துமஸ் விடுமுறையில்
இக்பாலுடன் இனிய பயணம்
காசிக்கு'
'பஷீர் வீட்டு
முருங்கைக்கீரை
மாரியாத்தா கூழுக்கு'. மதவேறுபாடு இல்லாமல் மனதால் இணைந்திருக்கும் மக்களின் மனம் நமக்குள்ளும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றது.கொண்டாடப்படவே ண்டிய ஹைக்கூக்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்குன்றன.இயற்கை, சமூகப்பார்வை, மதநல்லிணக்கம் என்று பரந்து விரிந்த பல தலைப்புகளில் நிறைந்திருக்கும் ஹைக்கூக்கள் நம் மனதை நிறப்பும் ஆற்றல் பெற்றவை.
மனசெல்லாம் பரவும் ஆற்றல் பெற்ற ஹைக்கூக்கள்.
வாசகன் பதிப்பகம் - பக்கங்கள் - 96 - விலை 80 ரூபாய்.
சிறப்பான விமர்சனம். மிக்க நன்றி.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
Delete