பெண்களின் உளவியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்து கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.கணவனிடம் தன் அப்பாவின் ஸ்பரிசத்தை ஒவ்வொரு பெண்ணும் தேடுவாள். ஒரு அப்பாவின் அக்கறை, அன்பு, பாசம் என அனைத்தையும் தன் கணவன் வழி பெறுபவள் தன் வாழ்க்கையின் இலக்கை நோக்கி சற்று சுகமாய் பயணிக்கிறாள். சந்தேகம், அடக்குமுறையைக் கூடுதலாகப் பெறுபவள் சிரமத்துடனேயே வாழ்க்கையைக் கொண்டு செல்லுகின்றாள்.
திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு பெண்ணும் அன்றாட வீட்டு வேலைகள், அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என்று இயந்திரத்தனமான வாழ்க்கையை மேற்கொள்ளும் பொழுது ஒரு வெறுமையை உணர்வாள். பிரசவக் கோடுகளும், கீழிறங்கிய வயிறும், தொங்கிப் போன மார்புகளும் கணவன் அருகில் வராமல் போவதற்குக் காரணமாய் அமையும்.பருத்த உடல் , தாய்பால் வாசம், உடலுறவுக்கான ஒத்துழையாமை என்று கணவர் கண்டுக்காமல் இருப்பதற்கு காரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். கணவரிடம் இருந்து காதல் வடிந்து போய் கடனே என்று கலவி நடந்து கொண்டு இருக்கும்.இந்த சூழலின் மனஅழுத்தத்தை கையாள்வது சற்று சிரமும் கூட. இரண்டாம் தேன்நிலவு கொஞ்சம் பயனளிக்கலாம்.
குளிர்பான குடுவைகளின் அமைப்புகூட பெண்ணின் உடலமைப்பை ஒத்து உருவாக்கப் பட்டுருக்கும் சமூகத்தில் தான் ஒரு பெண் வாழ வேண்டியுள்ளது. ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் மீது ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அது நட்பாகவும் காதலாகவும் மாறுகிறது. ஒரே பாலினத்திற்குள் ஈர்ப்பு ஏற்படும் பொழுது நட்பு என்றும், எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும் பொழுது காதல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஓரினச்சேர்க்கைக்கு அதிகமான ஈர்ப்பே காரணம் ஆகிறது. தேவை ஒரு பெண்ணின் செயல்பாட்டை தீர்மானிக்கின்றது.ஒரு பெண் தன் உடல்தேவைகளைப் பகிர்ந்தால் அவளுக்கு உரியவன் அவளைப் பார்க்கும் பார்வை கூட வேறுபட்டுவிடுகின்றது.
அடுத்தவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதற்கு குறுகுறுப்பாய் தான் இருக்கும். ஆனால் அதைவிட சுவாரசியமானது நமது அந்தரங்கம் என்பதை ' திருடப்பட்ட கதை' யில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவாகவே உடல் தேவை, காதல் கலந்த காம உணர்வுகளை எழுதுவதற்கு ஒரு தெளிவும் புரிதலும் தேவைப்படுகிறது. அதைப் படிப்பதற்கும் மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மேலோட்டமாக இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் இதையெல்லாம் எழுதலாமா? இவை தேவையா என்று கேட்கலாம். உளவியல் ரீதியான இந்தக் கதைகள் பெண்களைப் பற்றிய புரிதலை ஆண்களுக்கு மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்திற்கும் ஏற்படுத்தும்.
ஒரு மனிதனின் சிக்கல் பகிரப்படும் பொழுது அதை ஒரு தாய், தந்தை, உறவு என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தனி ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ நின்று பார்க்கும் பொழுதே அவர்களின் சிக்கல்கள் புரியும். அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். பெண்ணின் உளவியல் ரீதியான உணர்ச்சிகளைக் கதைகளாகக் கையாள முயற்சித்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. ரமேஷ் ரக்சன் அவர்களின் முயற்சியும், எழுத்துக்களும் பலருக்கும் மாற்றம் கொடுக்கும் என்று மனதார நம்பலாம்.பெண்கள் எழுதத்தயங்கும் அழுத்தங்களைப் பதிவு செய்ததற்காக நன்றிகள்.சந்தோஷ் நாராயணன் அவர்களின் அட்டைப்படம் புத்தகத்தை வாங்கத் தூண்டியது. பெண்களுக்குப் பிடித்த இளஞ்சிவப்பு பிங்க் நிறம் கூடதல் ஈர்ப்பு.
பெர்ஃப்யூமின் வாசம் முகம்சுளிக்க வைக்கவில்லை...முகர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.
பெர்ஃப்யூமின் வாசம் முகம்சுளிக்க வைக்கவில்லை...முகர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.
யாவரும் பதிப்பகம் 128 பக்கங்கள் விலை 120.
No comments:
Post a Comment