14 ஆத்மார்த்தமான சிறுகதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பு.மதுரை மாவட்டத்தைச் சுற்றி உள்ள இடங்களே பெரும்பாலான கதைக்களங்கள். 'பைத்திய நிசப்தம்', மதுரையின் இருண்ட பக்கமான போதை, உடல் ஒத்தாசை செய்யும் பெண்களின் வாழ்க்கை போன்ற நிகழ்வுகளைக் கிருட்ணன், வாணி, ஆஷா, ராமநாதன் போன்றவர்களின் பார்வையில் விவரிக்கிறது. 'கூரை' - உடலை விற்கும் பெண்தானே என்று ஏளனமாய் நினைப்பவர்கள் கூட அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்னே அவள் நிறுத்தி வைத்திருக்கும் தட்டியின் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது மனம் கனத்துவிடுவார்கள்.ஒரு நண்பனிடம் கதை சொல்லுவது போன்று, நகைச்சுவை கலந்து சொல்லும் யுத்தியை ஆத்மார்த்தி அவர்களின் சிறுகதைகளில் காண முடிகிறது.
மனதில் வலியை மட்டும் ஏற்படுத்தும் சிறுகதைகள் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கக்கூடிய சிறுகதைகளையும் தந்திருக்கிறார் ஆத்மார்த்தி. நம் அன்றாட வாழ்வில் கடந்து போகும் அல்லது நம் நினைவிலேயே இருக்கும் கதாப்பாத்திரங்களை ஞாபகப்படுத்தும் மனிதர்களை பிரதிபலிக்கிறார்கள் மாடி வீட்டு சந்தானமும், கவிதாகோபாலும்.தனக்கு நடக்கும் எல்லா சம்பவங்களையும் ஒரு கவிஞனின் மனநிலையில் கவிதையாய் பார்க்கும் கண்ணோட்டத்தை ராஜகோபால் இல்லை இல்லை கவிதகோபால் பல கவிஞர்களின் எண்ணமாய் வெளிப்படுகிறார்.
ஒரு காதல் விவகாரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையை அவர்களின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது 'மழை...மேன்ஷன்...காயத்ரி...' சிறுகதை.எல்லா மனிதனும் தனது செயலைச் சரி என்று வாதிடுவதையே இந்த சிறுகதை
நமக்குள் ஒரு புன்னகையை வரவழைத்தபடி வாசிக்க வைக்கிறது.
ஆண் நண்பர்களுக்குள் ஏற்படும் அன்பு, பொறாமை, நட்பு போன்ற உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது 'டயமண்ட் ராணி' சிறுகதை. சிறுபிள்ளைத்தனமாய் இருந்தாலும் சில சம்பவங்கள் நமக்குள் வருத்தத்தை ஏற்படுத்தி மனப்புழுக்கம் கொண்டுவரும். முத்தண்ணன், கனகுக்கு நடுவே உள்ள நட்பால் நம் கதையின் நாயகன் கடுகடுத்திருப்பார். நமக்குப் பிடித்தவர் வேறொருவருடன் நட்பாய் இருந்தால் வரும் கடுகடுப்பை கதை சிறப்பாகவே விவரித்திருக்கும்.கதையைப் படித்தவுடன் என் wa
கல்லூரித் தோழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
' இரண்டு செய்திகள்...ஒரு தொடர்புமில்லை ' சிறுகதை தேவையில்லாத சந்தேகம், கோபம், வார்த்தைகள் எப்படி நால்வரின் வாழ்க்கையை உருகுலைக்க முடியும் என்பதைச் சொல்லி நம் வாழ்க்கைக்கான பாடமாய் அமைகிறது.நம்மை தேவைக்காக உபயோகித்துக்கொண்டு பிரச்சனைகளை மட்டும் பரிசாய் வழங்கும் நண்பர்களைக் கண்முன்னே நிறுத்துகிறான் 1/2 அறை நண்பன் தேவராஜன்.தலைப்பு சிறப்பாய்ச் சிந்திக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள்.
உறவாய் இல்லாமல் உறவாகிப்போன பல சித்தப்பாக்களை ஞாபகப்படுத்துகிறார் 'ஆடாத நடனம்' சந்துரு சித்தப்பா.'தேவதை மகன் ' கதையில்நாடக நடிகர்களாக இருந்து பின் திரைப்படத்துறை துணை நடிகர்களான கலைஞர்களின் ஏக்கத்தையும் ஆசையையும் விவரிக்கிறார்கள் அம்மாவும் பிள்ளையுமான பஞ்சவர்ணமும் கோதண்டமும்.'நிழல் பிம்பம்' சிறுகதை பிரபலமான கதாநாயகர்களைப் போல உருவ ஒற்றுமையும், அவர்களைப் பிரிதியாய் பிரதிபலிக்கும் சாதாரண கலைஞர்களின் வாழ்வின் ஏக்கங்களை நமக்குள் கடத்துகிறது.கற்பனா சிறுகதை கற்பனையாய் இல்லாமல் இருந்தால் நன்றாய் இருக்குமே என்ற எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆடாத நடனத்தை ஆடிப்பார்க்கலாம்...
பரிதி பதிப்ப கம் - 119 பக்கங்கள், விலை - ரூபாய் 100
No comments:
Post a Comment