தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர மற்றும் தவில் இசை வித்வான்களாய் வந்த நடிகர்கள் சிவாஜி கணேசன் , ராஜன், பாலையா போன்றவர்கள் என்றுமே மனதில் நிற்பவர்கள். அதற்குப் பின் என் மனதில் பதிந்தவர்கள் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் நாதஸ்வர வித்வான்கள். பாகவதர் சிகை அலங்காரத்துடன் ஜம்மென்று ஒப்பனையுடன் இருப்பார்கள்.
பெரியப்பாவின் கல்யாணத்தில் இரண்டு பெண்கள் நாயணம் வாசித்ததை அப்பா பெருமையுடன் சொல்லியிருக்கிறார்.என் திருமணத்திற்கும் அவர்களை எப்படியாவது வாசிக்க வைக்கவேண்டும் என்று ஆசை கனவாய்ப் போனாலும் எனது மனதில் பதிந்த அந்த வித்வான்களே எனது திருமணத்திற்கும் வாசித்தார்கள்.
பெரியம்மா அவரது மகளுக்கு நாதஸ்வர இசையுடன் ஜண்டை மேளமும் பதிவு செய்திருந்தார்.அப்பொழுது அந்த நாதஸ்வர வித்வான்கள் தங்கள் இசையை வாசிக்க முடியாமல் எவ்வளவு மனம் வருந்தியிருப்பார்கள். அந்த உணர்வு பக்கிரியும், இரத்தினமும் படும் வேதனையிலிருந்து வாசகர்களுக்கு எளிதாகக் கடத்தப்படுகிறது.
பணம் இருப்பவர்கள் இசைக் கலைஞர்களுக்கு வாசித்ததற்கான ஊதியத்தைக் கொடுக்க அவமானப்படுத்துகிறார்கள். வன்முறையைக் கையாளுகிறார்கள்.சாதிப் பெயரைக்குறிப்பிட்டுத் திட்டுகிறார்கள்.ஆனால் வழி மாறி வேறு ஊருக்கு தவறுதலாய் வந்திருந்தாலும், இசைக்கலைஞர்களை வரவேற்று, பசியாற்றி , வாசிக்கச் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள் சாமான்ய மக்கள். தங்களால் முடிந்த குருணை அரிசி, இரண்டு சுரைக்காய், ஒரு பெட்டி நிறைய கேப்பை, சோளம் எல்லாம் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறவர்கள் நம் ஏழை எளிய மக்கள்.இவர்களே நம் மனதில் இடமும் பிடிக்கிறார்கள்.
நாதஸ்வரத்தில் எதற்கு இத்தனை (பீப்பீக்கள்) சீவாளிகள் தொங்கப்பட்டிருக்கிறது என்று எப்பொழுதும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. எத்தனை சீவாளிகள் தொங்கினாலும் ஏதோ ஒன்று தான் வித்வானுக்கு துணையாய் நிற்குமாம். நாவிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பெயரும் ஊர் பெயராகவே அமைந்திருக்கின்றன.நாதஸ்வர வித்வான்களிடம் அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எந்த ஊரில் வாசித்தோம் , என்ன நடந்தது என்பதை மட்டுமே அவர்களால் நினைவு கூற முடிவதே அதற்கு காரணமாகவும் அமைகிறது.
வெளிநாட்டுக்காரன் ஹாக்கின்ஸையும் மயக்கி அவனைக் கற்றுக்கொள்ளத் தூண்டிய நாதஸ்வர இசை.அவன் நம்மூர் பெண்ணைத் திருமணம் செய்யவும் காரணமாய் அமைந்திருக்கிறது.உண்மையோ , புனைவோ மாலிக்கபூர், கில்ஜி போன்ற வடநாட்டுக்காரனையும் வெறி கொள்ள வைத்ததும் இதே இசைதான். மல்லாரி, தன்யாசி இராகத்தை எப்படியாவது நாதஸ்வரத்தில் கேட்க வேண்டும் என்ற தாகத்தை நமக்குள்ளும் ஏற்படுத்துகிறது. தென்னாட்டில் எத்தனையோ பேர் ஷெனாய், சரோட், சிதார் என்று கற்றுக் கொண்டாலும் , ஏன் வடநாட்டினர் யாரும் நாதஸ்வரத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்வி எழும் போது கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காதுள்ள கடவுளும் கல்யானையும், லட்சய்யாவும் உண்மையிலேயே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்றே மனம் நம்புகிறது.
ஊமை ஐயர் போன்ற இசை இரசிகர்கள் பல நாதஸ்வர வித்வான்களின் சிறந்த இசைக்கும் பக்கிரி போன்ற சிறந்த வித்வான்களையும் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.
தலைக்கனம் கொண்ட ஏஎன்எஸ் போன்ற வித்வான்களின் கர்வத்தையும் கழுதைவிட்டைக் கொடுத்து அடக்கியிருக்கிறார்கள் .நாதஸ்வர வித்வான்களின் அன்றாட வாழ்க்கையோடு கரகாட்டக்காரப் பெண்கள் ரஞ்சி,மல்லிகாவின் வாழ்க்கையும் விவரிக்கப்படும் பொழுது ஒரு வலி ஏற்படுகிறது.பக்கிரியின் பால்ய வாழ்க்கையில் அவர் நண்பனுடன் சேர்ந்து சிகரெட் அட்டை சேகரித்த விளையாடிய அனுபவங்கள், நாதஸ்வரம் கற்றுக்கொள்ள சிறுவர்கள் எடுத்த முயற்சிகள் போன்றவைச் சிறந்த சிறார் கதைகள்.பக்கரிக்கு
கல்லைப் பறக்க வைக்கும் மூச்சு இரகசியத்தை சொல்லிக்கொடுத்த
கழுதை வியாபாரியைப் பார்க்க மனம் படபடக்கிறது.
இரத்தினம் பக்கிரியின் கதை நாவலின் பிரதானமானது என்றாலும் கூட இடையிடையே வரும் நாட்டார்கதைகள், மோகினி கடம்பியின் கதை , வாழ்ந்து கெட்ட ஜமீன்கதைகள், சாதி வேறுபாட்டை மையப்படுத்தி வரும் குன்னன், மாரியம்மன் மதில் கதை, பாம்புக் கடி வைத்தியக்கதை, பசுமை புரட்சி என்ற பெயரில் பருத்தி விவசாயம் நலிந்த கதை, பலவீன குணம் உடைய கலைவித்வான்களான கண்பார்வை இல்லாத தன்னாசி, மதுவின் பிடியில் இருந்த சிறந்த கலைஞர் சாமிநாத பிள்ளை போன்றவர்களின் கிளைக் கதைகள் வேகத்தடையாய் இல்லை.
வெளிநாட்டு பிரவேசத்திலும் கூட கலைஞர்களுக்கு இத்தனை அவமானங்கள் , உடல் உபாதைகள் என்ற தெரிய வரும் போது வருத்தமே மிஞ்சுகிறது. வாசித்த வாசிப்புக்கும் சரியான பணமும் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படும் பொழுது ஆத்திரமே ஏற்படுகிறது. இசைக்கும் கலைக்கும் மதம், சாதி தடையில்லை என்று உணர்த்துகிறது அபுவின் ஆர்வமும் ஞானமும்.
நாதஸ்வர இசையால் மழையைக் கொண்டு வரமுடிந்தது. இது போன்ற கதைகளைக் கேட்கும் பொழுது நாதஸ்வர இசையின் மீது ஒரு காதல் ஏற்படுகிறது. திருமண விழாக்கள், கோவில் விழாக்களில் நாதஸ்வர இசையைக் கேட்க மாட்டோமா என்ற தேடலில் மனம் தொலைகிறது. எந்த இசைக்கலைஞர்கள் அருமையாய் வாசித்தாலும் அவர்களைப் பாராட்டி ஒரு வார்த்தையாவது சொல்ல வேண்டும் என்று மனத்தை ஏங்கவைத்திருப்பது இந்த சஞ்சாரத்தின் வெற்றி.
உயிர்மை பதிப்பகம் , விலை 370, பக்கங்கள் 375.
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
Deleteஅருமையான அறிமுகவுரை
ReplyDeleteமனமார்ந்த நன்றி
ReplyDeleteஅருமை அபிநயா
ReplyDeleteதமிழை காற்றைக்கி நாதஸ்வரத்திற்குள்ளும், மேலத்திற்குள்ளும் செலுத்தி சஞ்சார படுத்திவிட்டீர்கள் ஐயா . அருமை
ReplyDelete