Saturday, July 7, 2018

சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன்

60களில் ஆனந்தவிகடனில் வெளியான நவீன தமிழ் இலக்கிய வகையில்  ' நான் இருக்கிறேன்' என்ற  குறுநாவல் அதன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்திருக்கிறது. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கதாநாயகனாக தன்னை நினைத்துக் கொண்டு அவர் இந்த கதையைப் படைத்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.

கால்கள் செயலிலந்த மாற்றுத்திறனாளியாய் கண்ணன். அவரின் பள்ளி செல்லும் தங்கையாய் சித்ரா. அவளது பள்ளி ஆசிரியரான சாந்தி, சித்ராவின் இளைய அண்ணனான ராஜாவைத் திருமணம் செய்து கொண்டு சித்ராவிற்கே அண்ணி ஆகின்றார். கண்ணனின் குறைதீர்க்க மருத்துவ செலவிற்காக இளைய மகன் ராஜாவிடம் பண உதவி எதிர்பார்க்கும் அம்மா.குஷ்டரோக உடல் வியாதியால் சக்கர வண்டியில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் வீரப்பன். இவர்கள் அனைவரும் தான் கதை மாந்தர்கள்.

மரணத்தின் வாயிலில் வீரப்பனுக்கும் கண்ணனுக்கும் நடைபெறும் உரையாடல்கள் பலரது முடிவுகளை திசை திருப்புவதாய் இருந்தாலும் , ஒருவர் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.அவர் யார் என்பதுதான் திருப்புமுனை.பல கதைகள் திரைக்கதையாய், குறும்படமாய், திரைப்படமாய் மாற்றம் பெறும் பொழுது,  அதன் முக்கியமான உணர்வுகளையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கடத்தத் தவறி விடுவதுண்டு. 

திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குநர்களுக்கு திரைக்கதைகளை எப்படி அமைப்பது என்பதற்கான உதாரணத்தை, இந்திய 
சுதந்திரத்திற்குப்பின் தமிழ்த்திரையுலகில் , முதன்முதலாக சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ஜனாதிபதி விருதை 32 வயதில் வாங்கிய ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தால் சிறப்பாகவே 
கற்றுக்கொடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைக்கதையே சான்று.

'உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி.. நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளை ஞாபகப் படுத்துவதுடன், கால்கள் இல்லையென்றால் என்ன கைகளால் உலகையே வளைக்க முடியும் என்று சொல்வது வீரப்பன் கதாப்பாத்திரம் அல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது அவரது படைப்புகளை தொடர்ந்து வாசித்த அவரது வாசகர்களுக்குத் தெரியும்.' தூங்குறது மிகவும் சுகம் ..நல்லா தூங்கு..செத்தா தூங்க முடியாது' என்ற வாக்கியம் வாழ்க்கையின் தத்துவம்.


எங்கு குளோசப்,லாங் ஷாட் வைக்க வேண்டும் என்று சொல்கின்ற ஒளிப்பதிவாளராய், காட்சிகளின் அணிவகுப்பை வரிசைப்படுத்தும் படத்தொகுப்பாளராய், எங்கு எந்த வசனம் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதை வரையருக்கும் ஒலிப்பதிவாளராய் , பன்முகத்திறமை காட்டியிருக்கும் இயக்குனர் ஜெயகாந்தன் அவர்களின் திரைக்கதை, காட்சி அமைப்பில் படமாக்கப்படும் பொழுது எழுத்தின் வெற்றியை நிர்ணயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தன் குழந்தை இரயில் தண்டவாளத்தில் சிக்கி இறந்தாலும் பரவாயில்லை  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று‌ உறுதியுடன் நோயாளி வீரப்பனைத்திட்டும்‌ தம்பதியினரைவிட , தன் நோய் தன் குழந்தைக்கு வந்துவிடக்கூடாது என்று இரயிலில் விட்டு வரும் வீரப்பனின் செயல் மனதைக்கனக்கச் செய்கிறது.  கண்ணனின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு காரணம் வீரப்பனின் சக்கர வண்டி மட்டுமல்ல அவனது வார்த்தைகளும் என்பதை வாழ்க்கையின் ஏதோ ஒரு நொடியில் நம்பிக்கைத் தளர்ந்த 
அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - பக்கங்கள் 172 விலை 160

1 comment:

  1. வாசிக்கத் தூண்டும் அழகான விமர்சனம்

    ReplyDelete