Friday, July 6, 2018

அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு - இரா.ஜெயப்பிரகாசம்

அமெரிக்கா என்றவுடன் பலருக்கும் மலையின் முகத்தை திரையாய் மறைக்கும் bridal falls நயாகரா நீர்வீழ்ச்சி, நம் திருவள்ளுவர் சிலையைவிட 18அடி உயரமான தாமிரத்தால் ஆன சுதந்திர தேவி சிலை, திரைப்படங்களில் பார்த்த கோல்டன் கேட் பாலம், கார்டூன் கதாப்பாத்திரங்கள் உலாவும் டிஸ்னிலேண்ட் கேளிக்கைப் பூங்காக்கள் மனதில் தோன்றும்.இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் புவி ஈர்ப்பு விசையுடன் விளையாடும் 45 டிகிரி சாய்ந்து நிற்கவேண்டிய the mystery spot, திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுதே தொடர்ச்சியாக வொயின் உபசரிக்கும் நா‌‌ப்பா பள்ளத்தாக்கு, இனப்புணர்ச்சி கல்விக்கான அருங்காட்சியகம் , 1950களில் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடனான  ஒற்றர்களுக்கான அருங்காட்சியகம் என்று பல இடங்கள் நம் பயண அட்டையில் சேர்ந்து கொள்ளும்.



காவலர்களிடம் வழி கேட்டால் அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என்ற தகவல் சுற்றுலா செல்பவர்களுக்கு நிச்சயமாய் உதவும்.வண்டியில் பயணம் செய்வதே உயர்வானது என்று நினைக்கும் நம்மவர்களுக்கு,  பாதசாரிகள் சாலையைக் கடக்கக் கொடுக்கப்படும் முன்னுரிமை ஸ்தம்பிக்க வைக்கும்.பல வெளிநாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவதால் சிலருக்கு சகஜமாய்த் தோன்றலாம்.சோர்வாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அக்கறையுடன் நலம் விசாரிக்கும் பணியாளர்கள் ஆச்சர்யம் கொடுக்கிறார்கள்.மூன்று மாதத்திற்கு முன்பே தங்கும் இடம், சுற்றுலா தளங்களுக்கான நுழைவுச்சீட்டு,  பேருந்துகளை முன்பதிவு செய்வது, தனிவண்டி,நெரிசலில் சிக்கும் பேருந்தை விட  இரயில், மெட்ரோ, மோனோரயில், டிராம் பயணம் நம் பயணச் செலவுகளைச் சிக்கனப்படுத்தும் போன்றவை அவசியமான தகவலாகின்றது.


சுற்றுலா நிறுவனத்தின் உதவியில்லாமல் தனியாகவே ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து பயணிக்கும் முறை நமக்குள்ளும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. பயணக்கட்டுரையில் தூய தமிழ் வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்டு இருப்பது நல்ல தமிழ் சொற்களைக் கற்பிக்கின்றது. நாட்டிற்கு புதிதாய் வந்திருப்பவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்கும் பண்பு நம்மையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.
வெகுதூரம் நடப்பதைப் குறைக்கும் மின்சார ஸ்கூட்டர் பயணம் , சுழல் நயாகரா நதியின் த்ரில்லான படகுசவாரி, பயணங்களின் சுவாரசியமான பரிணாமங்கள்.


தற்பொழுது துபாய் போன்ற பல நாடுகளில் நடக்கும் டால்பின் நிகழ்ச்சி, கோளரங்கங்கள் ,முறையாகக் காட்சிப்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள், பல நாடுகளின் அரங்கங்கள் அமைத்து சுற்றுலாவை வளர்க்கும் திட்டங்கள், வான வேடிக்கைகள், 
பல பரிமாணங்களில் காட்சிகளை உணரும் வகையில் இருக்கையில் இருந்தபடியே  பல தூரம் பயணம் செய்ய வைக்கும் சிமுலேசன் சவாரிகளுக்கு முன்னோடிகள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.நயாகாரா நதியரசியின் கதை, பேஸ்பால் மட்டை தயாரிக்கும் தொழிற் சாலைக்கு பின்னால் உள்ள சம்பவங்கள், முதுகில் கோடில்லாமல் உலாவும் அணில்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பாதை கொண்ட குகையின் பயண அனுபவம் , ஹேலோவீன் டே கொண்டாடப் படுவதற்கான காரணங்கள் , உலகின் மிகப்பெரிய நூலகம் என்று ஒவ்வொரு இடத்திற்குப் பின்னால் இருக்கும் வரலாறு அந்த இடத்திற்கான மதிப்பையும் தரத்தையும் கூட்டுகின்றது.

பொற்செல்வி பதிப்பகம்,183 பக்கங்கள்,விலை - 100.

No comments:

Post a Comment