Thursday, July 5, 2018

கொம்மை - பூமணி

'மகாபாரதக்கதை என்றாலே எங்கோ ஒரு மூலையில் ஆரிய நாட்டில் நடந்தது.நூற்றுக்கு மேற்பட்ட கதைமாந்தர்கள் உண்டு.ஆர்ய பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். கதை மாந்தர்களுக்கு தெய்வத்தன்மை பூசப்பட்டிருக்கும்.அவர்களின் செய்கைகள் அனைத்தும் கொண்டாடப்பட்டிருக்கும்.நியாயம் கற்பிக்கப்பட்டு இருக்கும்.

சமஸ்கிருத மொழியில் நடுநடுவே பாடல்கள் எடுத்துக்காட்டாய் கொடுக்கப்பட்டு இருக்கும். சுத்தத்தமிழில் உரையாடிக் கொண்டு இருப்பார்கள்.பெரிய பத்தியாய் பெரிய வாக்கியங்களாய் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.கூறவரும் நீதிகளும், வாழ்க்கை முறையும் புரிந்து கொள்வதற்கு முதிர்ச்சி தேவைப்படும்'.இது போன்ற அத்தனை கருத்துக்களுக்கும் மாற்றாக இருக்கிறது சாகித்திய அகாதமி விருதுபெற்ற பூமணி அவர்களின் சமீபத்திய படைப்பான கொம்மை.

பாரதியார், இராஜாஜி தொடங்கி எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன் வரை பிரபல எழுத்தாளர்கள் பாரதக் கதையை தங்களுக்கான எழுத்துநடையின் வழி ஈன்று எடுத்திருந்தாலும், பூமணி அவர்களின் எழுத்துநடை மண்மணம் சுமக்கும் எளிமையான மனிதர்களுக்கானது.அவரது படைப்பில் அர்ஜீனனும் கிருஷ்ணனும் 'ஏல, மச்சான்,  டேய் கருப்பா ,மாட்டுக்காரப்பய மண்டையில நெறையத்தான் மூளையிருக்கு' என்று தான் சாமான்ய மனிதர்கள் போல பேசிக்கொள்வார்கள்.' வாடி
எஞ் சக்களத்தி.பசப்பி..என் அடிமடியிலயே கைவச்சிட்டயா' என்று தான் பாஞ்சாலியும் சுபத்ரையும் குறும்பாகப் பேசிக் கொள்வார்கள்.
அட்டைப்படத்தில் அத்தனையையும் அடக்கிய சந்தோஷ் நாராயணனின் அட்டைப்படம் புத்தகத்தை வாங்க வைக்கும். 
தானியத்தை உதிர்த்து கதிரில் எஞ்சியிருக்கும் கொம்மை போல் அபலைகளாய்  பாரதக்கதையில் அலைக்கழிந்த பெண்களுக்கு
 முக்கியத்துவம் கொடுத்து அவர்களது அழுத்தங்களும் மனநிலையையும் எந்தவொரு பீடிகையும் இல்லாமல், வண்ணமும் பூசப்படாமல்  சொல்லப்பட்டு இருக்கின்றது.விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்ப வாரிசுக்காக , கணவன், அத்தையின்‌ விருப்பத்திற்காக என்று முனிவர்களுக்கு பணிவிடை செய்து குழந்தை வரம் பெரும் முறை , ஈடுபாடில்லாத கலவி,
கணவனுடன் உடன்கட்டை ஏறும் முறை, அவர்களின் மீதான‌ பரிதாபத்தை பலமடங்கு ஆக்குகின்றது. அதற்குக்காரணமான கதாபாத்திரங்களையும் வெறுக்க வைக்கின்றது.

பாரதக்கதை உண்மையில் நடந்ததா இல்லையா என்ற‌ சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், நமக்குத் தேவையான அறிவுரைகளை பிரித்து எடுத்துக் கொள்ள முடியும்.மையக்கதை ஒன்றாக இருந்தாலும், கிளைக்கதைகள் எதுவுமே விடுபடாமல் பூமணி அவர்களின் நாற்பது மாத உழைப்பில் உருவாகியிருக்கும் மகாபாரதம் சிறுவர்களுக்கும் எளிமையான நடையில் சொல்லக்கூடியவை.பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை அந்நியப்படவில்லை.


தினமும் ஒரு அத்யாயம் என்று படித்தாலும் பாரதக்கதையை 180 நாட்களில் கற்றுத்தேர்ச்சி பெற்றிட முடியும்.குடும்பச்சங்கிலியையும் வரைபடமாய் வரைந்திட முடியும்.சாதாரண மனிதர்கள்  அனைத்து உணர்ச்சிகளையும் பாடல்களாகவும் ஒப்பாரிகளாகவும் வெளிப்படுத்துவதற்கு அபிமன்யு இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரி , பீமக்குட்டன் தன் தகப்பனைப்பார்க்கச்செல்லும் பொழுது வனமே அவனை வாழ்த்திப் பாடும் பாடல் சில எடுத்துக்காட்டுக்கள்.

பக்கங்கள் - 600, பதிப்பகம்-டிஸ்கவரி புக் பேலஸ், விலை - 555

No comments:

Post a Comment