Tuesday, February 13, 2018

தலைக்கவசம் உயிர்க்கவசம்

https://drive.google.com/file/d/1_VSWrR5n4JJBhsr8bAsTQbRzqz6PVcXo/view?usp=drivesdk

'தலைக்கவசம் உயிர்க்கவசம் ' என்ற போக்குவரத்துத்துறையின் விழிப்புணர்வு வாசகம் நம்மில் பலருக்குள் வெறும்  வார்த்தைகளாக மட்டும் இடம்பெற்று சிந்தையிலும் செயலிலும் இடம்பெறாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் ஆபத்துக்களை நாம் தான் சந்திக்கவும் வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலர் அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் அதைக் காற்றோடு கரைத்துவிட்டு வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றுவிடுகிறார்கள்.

இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள் நம் மாநகரத்தில் தற்பொழுது அதிகரித்து உள்ளனர்.அரசு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இரு சக்கரவாகனங்கள் கொடுத்த பிறகு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஆனால் பெண்கள் அனைவரும் தலைகவசம் அணிகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வசதிக்காக என்று எளிமையான வடிவமைப்பில் அவர்கள் அணியும் தலைக்கவசம் பலசமயங்களில் அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிடுகின்றன.தங்கள் சிகை அலங்காரங்கம் கலைந்துவிடுகிறது.பூ வைக்கமுடியவில்லை. கசங்கி விடுகிறது. கொண்டை போடுவதனால் தலைக்கவசம் அணிவதற்கு அசௌகரியமாக இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்கின்றனர். அப்படிக்குறைகள் கூறி தலைக்கவசம் அணியாமல்போவதனால் , விபத்துக்கள் ஏற்படும் பொழுது அதிக ஆபத்துக்களுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். தலை அலங்காரங்கள் கலைந்து விட்டால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அந்த தலைக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பதும் நம்கடமைதானே.

தலைக்கவசம் அணிந்திருக்கும் பொழுதே பெரும் விபத்துக்களினால்  தலையில் காயம் பட வாய்ப்பு  இருக்கிறது. இந்நிலையில் அந்தத் தலைக்கவசமும் இல்லாமல் விபத்தில் சிக்கிக் கொள்வோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. விதிமுறை விதித்துவிட்டார்களே என்பதற்காக  தரம் குறைந்த  தலைக்கவசத்தை வாங்கி அணிபவர்கள் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். தரமான தலைக்கவசம் என்றால் நம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். அதுவே தரம் குறைந்த  தலைக்கவசம் என்றால் அதுவே நம் உயிரைப் பறித்துவிடும். ஐ.எஸ்.ஐ முத்திரையும் சான்றும் பெற்ற தலைக்கவசங்கள் அணிவதே நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.
அது சுலபமாக உடையாது. நம் தலைக்கும் சரியான பாதுகாப்பு கவசமாக இருக்கும்.


தலைக்கவசம் வாங்கும் பொழுது நம் தலைக்கு பொருத்தமான அளவில் சரியான அளவில் வாங்க வேண்டும். விலை குறைந்தது என்பதற்காக சிறிய  தலைக்கவசங்கள் அணியும் பொழுது தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.பல லட்ச ரூபாய்களில் இரண்டு சக்கர வாகனங்களை பகட்டாய் வாங்குபவர்கள் , தரமான  தலைக்கவசம் வாங்க யோசிப்பது யானை வாங்கிவிட்டு அங்குசம் வாங்க யோசிக்கும் கதையே ஆகும்.தரம் குறைந்த  தலைக்கவசத்தின் உடைந்த துண்டுகள், கண்ணாடித் துகள்கள் பல ஓட்டுநர்களைக் காயப்படுத்தி உயிரைப் பறித்து இருக்கின்றன.

சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் நம் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வருத்தம் அளிக்கக் கூடியது. அதிலும் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது.பல இளைஞர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது முகத்தில் குளிர்காற்று படவேண்டும் என்பதற்காகவே தலைக்கவசம் அணியாமல் வேகமாக வண்டியைச் செலுத்து கின்றனர். இரவு நேரங்களில் மாநகரத்தின் முக்கியமான சாலைகள், கிழக்குக் கடற்கரைச் சாலைகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனப் போட்டிகள்  நடத்தப்படுகின்றன.அதில் பலத்த காயம் அடையும் இளைஞர்களை காப்பாற்றும் முக்கிய கவசமாக இருக்கின்றன இந்தத் தலைகவசங்கள்.

ஒரு குடும்பம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கையில்பெற்றொர்கள் தலைக்கவசம்
அணிந்தால் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியம் புரியும்.ஒரு தெளிவும் ஏற்படும்.இருக்கைப் பட்டைகளை போடவில்லை என்றால் நான்கு சக்கரவாகனங்கள் இயங்காது. அது போல  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் இயக்க முடியாத வகையில் வாகனங்களைத் தயாரிக்க வாகன நிறுவனங்கள் முன்வந்தால் சிலர் மாறக் கூடும்.
தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் போன்ற விதிமுறைகள் சில மாநிலங்களில்  நடைமுறைத்தப்பட்டிருக்கிறது. தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் போன்ற கடுமையான விதிமுறைகள் வெற்றிபெறுவதற்கு அதைப் பின்பற்றும் மக்களே காரணமாகின்றன. விதிமுறைகளைப் பொறுப்புடன் பின்பற்றினால் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் போக்குவரத்துத் துறை காலவர்களுக்குப் பயப்படும் அவசியமும் இருக்காது. லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தமும் ஏற்படாது.

கண்டிப்பான விதிமுறைகளுக்காக என்பதைக்  காட்டிலும், நம் நலனுக்காக நம்முள் ஏற்படும் மாற்றங்களும் நாம் பின்பற்றக் கூடிய நல்ஒழுக்கங்களுமே  நிரந்தரமானவை ஆகின்றன.தர்மம் தலை காக்கும்; தலைகவசம் உயிர் காக்கும். விதிமுறைகளைசிரத்தையுடனும் விழிப்புணர்வுடனும் தலைக்கவசத்துடனும்
பின்பற்றினால்,  நம் தலைவிதியையும் மாற்றலாம்.நம் வருங்காலத்தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கலாம்.நம் உயிர் நமக்கு மட்டுமன்றி, நம்மை பெற்ற பெற்றோருக்கும், நம் குடும்பம், பிள்ளைகள் என்று அனைவருக்கும் முக்கிய தேவைதானே?

No comments:

Post a Comment