Monday, February 12, 2018

நகர்வலம் - திருநங்கைகளுக்குத் தோள் கொடுப்போம்.

https://drive.google.com/file/d/17XmQt5-xDe1w1U7zLA0Tc6SvhgDheneq/view?usp=drivesdk

பேருந்து, தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் பொழுது நாம் கேட்கும் சத்தமான கைதட்டல்கள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். கைதட்டல்கள் கேட்டவுடன் நமக்கு எதற்கடா வம்பு என்று வேறு திசைகளிலோ அல்லது வேறு வேலை செய்வதிலோ நம் கவனத்தைத் திருப்பியிருப்போம்...அல்லது திருப்பியது போலவாவது நடித்திருப்போம். உதவி செய்யுங்கள் என்று நம்மிடம் கைநீட்டுபவர்களை மூன்றாம் பாலினத்தவர் என்று வகைப்படுத்த நாம் யார்?. திருநங்கைகளை மூன்றாம் பாலினம், நான்காம் பாலினம் என்றெல்லாம் வகைப்படுத்திக் கொண்டிருக்காமல், அவர்களை சக மனிதர்களாக நடத்தும் எண்ணம் உருவாக வேண்டும். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தன்னுள் மாற்றத்தை உணர்ந்த நம் சகோதர சகோதரிகளை ஆணாகவோ பெண்ணாகவோ ஏற்றுக்கொள்வது தானே நம் கடமை.

மிகச்சிறிய பணத்தை உதவியாய்க்கொடுத்தாலும், முகம்சுளிக்காமல் அதை வாங்கிக் கொண்டு தலையில் கைவைத்து மனமாற ஆசிர்வதிக்கும் பண்பு அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.இன்றும் குழந்தைகளுக்கு திருநங்கைகளைக் கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்யச் சொல்லும் பழக்கம் பல சமுதாயங்களில் இருக்கத்தான் செய்கிறது.கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரரை சிவனும் சக்தியும் இணைந்த அவதாரம், ஆற்றல் பொருந்தியவர் என்று மனமுருகி வணங்கும் நாம், வெளியே திருநங்கைகளைக் கண்டு முகம் சுழிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.




பாலியல் தொழில் செய்கிறார்கள் , உதவிக்கு பணம் கொடுக்க மறுத்தால் சாபம் கொடுக்கிறார்கள், திட்டுகிறார்கள் என்று பலக்குற்றச்சாட்டுகள் திருநங்கைகள் மீது வைக்கப்படுகிறது. ஆனால் எல்லா திருநங்கைகளும் அப்படி இருப்பதில்லை. ஊடகங்களில், காவல் துறையில் என்று பலதுறைகளில் தங்கள் திறமைகளால் முத்திரைப் பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
சமுதாயத்தால் கேலி, கிண்டல் செய்யப்படும் பொழுது மன அழுத்தத்தில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை சிலரைப் பாதிக்கலாம்.அரசு திருநங்கைகளின் சமுதாய வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

  • திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,
  • தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
  • சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,
  • அடையாள அட்டை
  • இலவச பட்டா வழங்குதல்,
  • வீடு  வழங்கும் திட்டம்,
  • சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
  • ரேஷன் கார்டு  வழங்குதல் ஆகிய பல  உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.


சமூகத்தில் திருநங்கைகளாக இருப்பவர்களை அங்கீகரத்து அவர்களை நம்முள் ஒருவர்களாய் அங்கீகரிக்கும் பண்பு தற்பொழுது மக்களுள் அதிகரித்து உள்ளது. சிறுவயதிலேயே வித்தியாசமான நடவடிக்கைகள், உடல் ரீதியான மாற்றம் , உளவியியல் ரீதியான மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறுவர் சிறுமியர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று அவர்களது மாற்றங்களுக்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படவேண்டும். சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்றால் மருந்துகள், அறுவை சிகிச்சை, மனநல மருத்துவரின் ஆலோசனை போன்ற வழிகளின்படி அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். கேலி, கிண்டல்கள், அவமானப்படுத்துதல், வீட்டை விட்டு வெளியேற்றுதல் போன்றவற்றால் அந்த சிறுவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களே தோன்ற வாய்ப்பிருக்கிறது. இத்தகைய கொடுமைகளால் ஆளாக்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்களின் வாழ்வு சமூக விரோத தீய சக்திகளால் சீரழிக்கப்படுகிறது.


புராணங்களில் திருநங்கைகள் அனைவரும் திறமைசாலிகளாக இருந்தது நாம் அறிந்தது தான். மகாபாரதத்தில் சிகண்டி, அர்ஜீனன் சில காலகட்டங்களில் ஆற்றல் பெற்ற திருநங்கைகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுதும் கூட பூப்பெய்தாத பெண்கள், உடல் உறுப்புகள் சரியான வளர்ச்சியடையாத ஆண்கள், பெண் தன்மை கொண்ட ஆண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். பலவிதமான மருந்துகள், மருத்துவச் சிகிச்சைகளால் அவர்களது உடல்கள் வருத்தி எடுக்கப்படுகிறது.  பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சிறப்பான திறமையைத் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். அவர்களது திறமையை வெளிகொண்டு வர வாய்ப்பு கொடுத்து,  அன்பால் அரவணைத்து புறக்கணிக்கப்பட்டவர்களை புரிந்து கொள்வது நம் கடமை தானே. 

No comments:

Post a Comment