Wednesday, January 3, 2018

வெக்கை - பூமணி

1982ல் வெளிவந்த நாவல். அன்றைய காலக்கட்டங்களில் கிராமங்களில் நடைபெற்ற சம்பவமாய் குறிப்பிட்டிருந்தாலும், இன்றைய காலக்கட்டங்களில் கூட எளிய மக்களின் மீதான வன்மங்கள் வேறு வகையில் வெளிப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் சரணடையச் செல்லும்  சிதம்பரத்திற்கும் அவனது அப்பாவிற்கும் என்ன ஆனதோ என்று நினைக்க, அதிகாரவர்க்கம் சாமான்யமனிதர்களின் மீது நடத்தும் அடக்குமுறையை உணர,கவலையும் கோபக்கனலும் ஒரு சேர ஏற்பட்டு மனதில் ஒரு வெக்கையுணர்வும் மனபுழுக்கமும் ஏற்படுகிறது.நீதிமன்றம், நீதி, காவல்துறை, சட்டம் போன்றவற்றின் பாகுபாடான செயல்கள் எளிய மனிதர்களின் பார்வையில் விரிகிறது.

மூத்தமகனின் இறப்பிற்குப் பதிலாக இளைய மகன் பழிதீர்க்க, சிதம்பரம் குடும்பத்தார் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ள நேரிடுகிறது.அட்டை வடிவமைப்பில் சந்தோஷ் நாராயணன் கதையைக் கடத்துகிறார். தெளிவாய் ஓவியமாய் பயணித்துக்கொண்டிருந்த குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையின் நிம்மதி பறிக்கப்பட்டதே கிறுக்கல்களாய் வெளிப்படுத்தப் 
பட்டிருக்கிறதோ என்று எண்ணம் தோன்றுகிறது. ஒரு பதின் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிறுவனைக் கொலைசெய்யத்தூண்டும் கதைக்களத்திற்கு யாரைக் காரணமாய் குறிப்பிட என்று தெரியவில்லை.


அண்ணனைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்க அரிவாள் தூக்கி, கைக்குண்டாய் வெடிகுண்டு செய்திருந்தாலும், குளிக்கும் பொழுது அவன் குழந்தைத் தனம் வெளிப்பட்டுவிடுகிறது. அவனது அம்மாவுக்கும், அத்தைக்கும் மட்டுமல்ல நமக்கும் சிறுவனாய்த்தான் தெரிகின்றான். ஆலமரத்தின் அடியில் கோலிக்காய் விளையாடுவது, கிட்டி விளையாடுவது என்று சிறுவனாய்தான் சிதம்பரம் நம் மனதில் பதிகின்றான்.அத்தைக் கொடுத்த அரிசியில் சோறு பொங்குவது, காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ரசம் வைப்பது, முயல் கறி சமைப்பது, மஞ்சணத்திமரத்தின் பழங்களை  சாப்பிடுவது, ஆலமரத்தில் பதுங்கி இருப்பது என்று காட்டில் அப்பாவும் மகனும் வாழும் தலைமறைவு வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாய் இருந்தாலும் அவர்களை யாரேனும் பிடித்து விடுவார்களோ என்ற பயம் நம்மையும் கவ்விக்கொள்கிறது.

கிராமத்து வாழ்க்கையை அங்கு வாழும் மனிதர்களின் இயல்பும்  உணவுகளும் எளிதாய் உணர்த்துகிறது. காய்ச்சல் வந்து சிதம்பரத்தின் அத்தை மகள் ஜானகியும், பகை காரணமாக கொடூரமாக கொலையுண்ட அவன் அண்ணன் இறக்கும் பொழுது மனம் கனத்து விடுகிறது. சிதம்பரத்தை செலம்பரமாக உச்சரிப்பது அவர்களின் பேச்சுவழக்கை நமக்குள் விதைக்கிறது.சுடுகாட்டில்  ஏன் மரங்கள் அதிகம் இல்லை என்று நமக்குள்ளும் கேள்விகள் எழுந்திருக்கும்.குளிர்ச்சியாய் இருந்தால் அதிக உயிர்பலி கேட்கும் என்ற பதில் கிடைப்பதுடன் பயமும் பற்றிக் கொள்கிறது.


சாயங்காலப் பதினியில் இளநுங்குகளைத் தோண்டிப் போட்டு பிசைந்துகுடிப்பது, நகக்கண் வலிக்காமல் பன்றிகளை வைத்து இனிப்பாயிருக்கும் சிந்தாமணிக்கிழங்குகளை சேகரித்து கொள்வது, தேன் , கள் எடுப்பது பற்றிய குறிப்புகள்,  என்று கதை நெடுகிலும் கிராமத்துமனம்.வடக்கூரான் என்று அப்பா விளையாட்டாக என் தம்பியை அழைப்பதுண்டு.ஆனால் இந்த நாவலைப் படித்தபின்பு அந்தப் பெயரைக் கேட்டால் ஒரு வெறுப்பு வந்து சேர்ந்து கொள்கிறது. 

No comments:

Post a Comment