Tuesday, October 8, 2019
நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்
நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்
சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிந்துதான் செல்கின்றார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பலரும் அருகிலிருக்கும் இடங்களுக்குச் சென்றால் கூட எச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து செல்லும் சூழல் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. அது போலவே நான்கு சக்கர வாகனங்களில் பயனப்படுவோர் இருக்கைப்பட்டைகளை அணிந்து செல்கின்றார்களா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.
இருசக்கர வாகனங்களில் இருநபர்களுக்கு மேல் பயணம் செய்கிறார்கள் என்றால் எளிதில் கண்டுகொள்ளலாம். அதுவே நான்கு சக்கர வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், அனைவரும் இருக்கைப்பட்டைகளை அணிந்து இருக்கின்றார்களா போன்றவற்றை அணுமாணிப்பது சிரமம். சமீபகாலங்களில் செயலிகளின் வழி, பலரும் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் பயணப்படுவது அதிகரித்து உள்ளது. குறைந்த எரிபொருள் பயன்பாடு, ஆபத்தில்லா பயணம் என்று பல நன்மைகள் இருந்தாலும் பணத்தைச்சிக்கனமாக்கிக் கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத்தாண்டி மக்கள் ஏற்றப்படுகின்றார்கள். இந்த நடைமுறை ஆட்டோக்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களுக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.
அளவில் பெரிய ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தும் ஓட்டுநர்கள் இருக்கைகளை சற்றுத் தள்ளி பின்னே அமைத்துவிட்டு, மரப்பலகைகளை அடுத்த அடுக்குகளில் அமைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். முதல் அடுக்கில் நான்கு பேர், அடுத்த அடுக்கில் நான்கு பேர், ஓட்டுநர் இருபக்கமும் துவாரபாலகர் போல இருபயணிகள் என்று மேடுகளில் பயணம் செய்யும் பொழுது வண்டி கவிழ்ந்து விழும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றது. சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள், கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் போன்ற யதார்த்தங்களை நாம் புறக்கணித்து விடமுடியாது. சில பேருந்துகள் கூட்டத்தினால் ஒரு பக்கமாய் சாய்ந்து பயணிப்பது பேருந்தில் செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கும் அச்சத்தைக்கடத்தக்கூடியதாக இருக்கின்றது.
இரு சக்கர வாகனங்களில் அலைபேசியில் பேசிக்கொண்டே சென்றால் கண்காணித்து எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அதுவே நான்கு சக்கர வாகனம் என்றால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் அதையும் கடினமாக்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். வயர்கள் இல்லாத ஹெட்போன்களுடன் தலைக்கவசம் அணிந்து பாடல்கள் கேட்டுக்கொண்டோ, அலைபேசியில் பேசிச்செல்வதால் கவனக்குறைவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பொருட்கள் ஏதேனும் கீழே விழுந்து, கூப்பிட்டால் கேட்காதபடி பறந்து சென்று கொண்டிருப்பவர்களால் அவசர காலத்தில் சுற்றுப்புறத்தில் நடக்கும் செயல்பாடுகளை நிச்சயமாக கிரகித்துச் சமயோசிதமாக செயல்பட முடியாது.
மனஅழுத்தங்கள், குழப்பமான மனநிலை, தூக்கமின்மை போன்ற நிலையில்
வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று வாகனத்தில் அமர்ந்து பயணிப்பவர்களும் அவர்களது கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்களை இயக்குவதை நாம் அன்றாடம் பார்க்க நேரிடுகின்றது. பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என்பதற்காக விலைஅதிகமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கிக்கொடுப்பதனால் அவர்கள் மட்டும் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கின்றார்கள்.
சுவாரசியத்திற்காக பலரும் வேகக்கட்டுப்பாட்டை மறந்து ஆள்அரவமற்ற சாலைகளில் மட்டுமல்லாமல் நெரிசல் மிகுந்த தெருக்களிலும் பயணப்படுவதைப் பார்க்க முடிகின்றது. வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தாமல் போவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி விபத்துக்களுக்கு வழி வகிக்கக்கூடும்.
மது அருந்திவிட்டு, கஞ்சா உட்கொண்டுவிட்டு வாகனத்தை இயக்குவது பலருக்கும் இயல்பானதாகி விட்டது. மிதமான போதையோ அளவற்ற போதையோ அனைத்துமே ஆபத்தானதுதான். அச்சூழ்நிலையில் வாகனத்தை இயக்குவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உடன்பயனிப்பவர்களுக்கும் சாலைகளில் செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை குறைப்பதன் வழி ஜன நெரிசல்களையும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும். வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் கடமைகளும் பொறுப்புகளும் என்பதில்லை. பாதசாரிகளும் பொறுப்புகளுடன் செயல்படுவதற்கான அவசியம் அதிகரித்து இருக்கின்றது. மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும். சாலைகளை ஏறிக்குதித்து கடப்பதற்கு பதில் சுரங்கபாதைகளைப் பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாகன ஓட்டுநர்களை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும் தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகின்றது. போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கனரக வாகனங்களுக்குத் தனிப்பாதையும், அதற்கெனக் குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டால் விபத்துக்கள் குறையுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும். சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment