Friday, October 4, 2019

நகர்வலம் - இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….

நகர்வலம் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பைக் குறைக்கும் பாஸ்டேக் பயணங்கள்

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….



சில வருடங்களுக்கு முன்னால் நாம் மேற்கொள்ளும் பயணங்களின் கால அளவை சாலைகளின் தரம், வண்டிகளின் வேகஆற்றல் , வாகன நெரிசல், ஓட்டுநரின் திறமையைக்கொண்டு கணிக்கும் சூழல் தான் நிலவியிருந்தது. ஆனால் தற்பொழுது நமது பயணங்களின் கால அளவைத் தீர்மாணிப்பது நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அங்கு நாம் காத்திருக்கும் நேரமும் தான். குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பரபரப்பான குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 45 முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். பெருகி வரும் வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் சாலைப் பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனுங்கள், இலகு ரக வாகனங்கள், பேருந்துகள்,
'ஃபாஸ்டேக்’ என்று பல பிரிவுகள் வரிசைகள் இருந்தாலும், அதிகரித்து இருக்கும் வாகனங்களினால் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விடுமுறைகாலங்களில் 'ஃபாஸ்டேக்’ வரிசையில் மற்ற வாகனங்களை அனுமதிப்பதால் 'ஃபாஸ்டேக்’ பயனாளர்கள் காத்திருக்க வேண்டிய அசௌகரிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை 'ஃபாஸ்டேக்’ (FASTAG) எனும் மின்னணு முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வில்லாமல் பலரும் வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தாமல் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் சுமார் 52 லட்சம் பேர் மட்டுமே பாஸ்டேக் சிப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பாஸ்டேக் சிப்புகளைப் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள், மற்றும் சில வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்டேக் பெறுவதுக்குச் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் , சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் , பாஸ்போர்ட் அளவிலான உரிமையாளரின் புகைப்படம், வீட்டின் முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவற்றை வழங்கி ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கரைப்’ பெற்றுக்கொள்ளலாம்.


இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம். இதனால் வாகனங்கள் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்துவிட முடியும். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை நெருங்குவதற்கு 100 மீட்டருக்கு முன்பு அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டணத்தை, வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் வாகன எரிபொருள் விரயம், கால விரயம் தவிர்க்கப்படுவதோடு, சில்லறை பிரச்சனை, டோல்கேட் ஊழியர்களுடனான வாக்குவாதங்கள், இரவு நேரங்களில் நெடுந்தூரம் பணத்தைக்கையில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமே போன்ற தேவையற்ற மன உளைச்சல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டத்தை வடமாநிலங்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்தி வருகின்றனர்.



வரும் டிசம்பர் 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதால் இதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ஓரிரு தடங்களில் ரொக்கம் செலுத்தி பயணம் செய்யும் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் பல நாடுகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது பலருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.

1 comment:

  1. WOW! Long expectation, come at-last. Thanks for sharing. Rv.

    ReplyDelete