Tuesday, October 16, 2018

பயணங்களை முடித்துக்கொள்ளும் மீன்பாடி வண்டிகள்

மீன்கள், காய்கறிகள், ஐஸ்கட்டிகளைக் கொண்டு செல்லும்  மூன்று சக்கர மீன்பாடி வண்டிகளை பூக்கடை, கோயம்பேடு , வால்டாக்ஸ் சாலை, ஆவடி , சிந்தாதிரிப் பேட்டை, வட சென்னை போன்ற பல பகுதிகளில் பார்த்திருப்போம். சென்னையில் உழைக்கும் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படும் ரிக்ஷாக்களே மீன்பாடி வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.ஆரம்ப காலங்களில் மீன்களை எடுத்துச் செல்ல உபயோகப்படுத்தப்பட்டதாலேயே இந்த மிதிவண்டிகளுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக மிதிவண்டியாய் பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில் குறைந்த வாடகை, எரிபொருள் சிக்கனத்திற்காக என பல காரணங்களுடன் மிதிவண்டிகளிலிருந்து மோட்டார் வாகனங்களாக வளர்ச்சிப்பெற்றது. குறுகலான தெருக்களில் வளைந்து நெளிந்து பயனப்பட முடிவாதலேயே பலரும் மீன்பாடி வண்டிகளை உபயோகிக்க ஆரம்பத்திருந்தனர்.

மீன்பாடி வண்டிகளின் இயக்கத்திற்கு
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் மோட்டார்கள் திருடி உபயோகப்படுத்தடுவதாக புகார் பதிவிடப்பட்டது. பழைய இருசக்கர வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் இன்ஜின்களைப் பயன்படுத்தியும் மீன்பாடி வண்டிகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டன. இந்த மீன்பாடி வண்டிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் செல்வதால் பலர் விபத்தில் சிக்கி இறக்க நேர்கின்றது . பலர் படுகாயமடைகின்றார்கள். ஆனால் இந்த மீன்பாடி வண்டிகளுக்கு காப்பீடோ, பதிவுச் சான்றிதழோ இல்லை என்பதால் பலியானவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது.



பல விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பறித்ததாலேயே இவை ஆட்கொல்லி வண்டிகள் என்றும் அழைக்கப்பட்டது. மீன்பாடி வண்டிகளை ஓட்டும் 10,000 தொழிலாளர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதனால் இந்த ஆபத்தான பயணங்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 300 ரூபாய் வரை கூலியாகப் பெரும் இந்த மீன்பாடி வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரததிற்கு வேறு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கின்றது.

மீன்பாடி வண்டிகளின் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப் படவில்லை. பல வருடங்களாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ,  அதனை தொழிலாளர்கள் சரியாக பின்பற்றாததனாலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. 25 சிசிக்கு மேல் என்ஜின்கள் பொருத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரை அணுக வேண்டும். மீன்பாடி வண்டியை ஆய்வுக்கு உட்படுத்தி வாகன எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்த பின்னரே அதனை இயக்க அனுமதி கொடுக்கப்படும். முறையான வாகன மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே மீன்பாடி வாகனத்தை இயக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு  வாரியத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாகனம் இயக்கப்பட வேண்டும்.

வாகனத்தை 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது. வாகனத்தின் அனைத்து சக்கரங்களிலும் டிரம் ப்ரேக்குகள் பொருத்தி இருக்க வேண்டும்.
வாகனத்தில் முகப்பு விளக்கு, பின்பக்க விளக்கு, பின்பக்க சிவப்பு விளக்கு, பக்க விளக்குகள், பிரேக் விளக்கு, பின் பார்வை கண்ணாடி , மின் ஒலிப்பான் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும்.வாகனத்தில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் பயணிக்கக் கூடாது. வாகனம் பதிவுசெய்யப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் 20 கி.மீ சுற்றளவுக்குள் மட்டுமே இயக்க வேண்டும்.

இப்படி பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்கள் அவற்றைப் பின்பற்றாததே விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்தது.
மிதிவண்டிகளாகப் பயன்படுத்துவதில் நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் வசதிக்காக மோட்டார் பொறுத்தும் பொழுது அதிக விபத்துக்கள்
ஏற்பட்டதாலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


அதன்  பயணத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் இன்றும் சில மீன்பாடி வண்டிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பொதுமக்களை அச்சுறுத்தி சட்டவிரோதமாக இயங்கி வரும் மீன்பாடி வண்டிகளின் மோட்டார்களை அழிக்க காவல் துறை முணைப்புடன் செயல்பட்டு வருகின்றது.இந்த நடவடிக்கை வெறும் காகித வடிவில் நின்று விடக்கூடாது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மீன்பாடி வண்டிகள் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாலைகளில் தடையை மீறி இயக்கப்படாமல் இருப்பதற்கு காவல் துறையினர், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களாகிய நாமும் நமது ஒத்துழைப்பை கொடுப்பதே நம் கடமையாகும்.

No comments:

Post a Comment