Friday, June 15, 2018

நகர்வலம் - அதிக வரவேற்பு பெறும் மெட்ரோ சேவை

பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் காலதாமாதம் ஏற்படாமல் இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு முக்கியமான பங்குவகுப்பவை தொடர் வண்டிகள்.நம் மாநகரத்தின் ஒவ்வொரு இடத்தையும் விரைவு மின்தொடர்வண்டிகளும் , பறக்கும் தொடர்வண்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைக்கின்றன. அவைகள் இணைக்காத பல நிலையங்களை இணைக்க வந்தவை தான் பெருநகர தொடர்வண்டிகள் என்று அழைக்கப்படும் மெட்ரோ ரயில்கள்.
பேருந்து, ஷேர் ஆட்டோக்கள் , தனி வாடகை வண்டிகளின் கட்டணத்தை விட மிகக் குறைவான கட்டணத்தில் தொடர்வண்டிகளில் பயணம் செய்ய எப்பொழுதுமே கூட்டம் அலைமோதும்.



பல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவிபுரிந்தாலும் பயணப்பெட்டிகள், பயண நிலையங்களில் காணப்படும் சில சுற்றுப்புற தூய்மைக்குறைபாடுகள், ஓரிரு இடங்களில் நடக்கும் பொருட்கள் களவாடப்படுதல், சமூக விரோதச்செயல்கள் போன்ற நிகழ்வுகள், விபத்துக்கள் போன்றவை சாதாரண தொடர்வண்டிப்பயணங்களில் சிலநேரங்கள் அச்சுறுத்தல்களாய் இருப்பது மறுக்கமுடியாத யதார்த்தங்கள்.
யாசகம் கேட்கும் மனிதர்களையும், உணவு மற்றும் பொருட்களை விற்பவர்களையும் சிலர் தொந்தரவாக எண்ணுவதுண்டு

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதில் தற்பொழுது 35 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.வெளிநாட்டு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கு இணையாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்பதே பெரும்பாலான‌மக்களின் குரலாக இருக்கின்றது.‌ நம் நாட்டில் மும்பை மாநகரத்தை அடுத்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் கட்டணத்துற்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுவது உண்மைதான்.



குறைந்தபட்ச தொலைவுக்கு நுழைவுச்சீட்டாக 10 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும் அதிகபட்ச தொலைவிற்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது . முதல் வகுப்புப் பெட்டிப் பயணம் இரண்டாம் வகுப்புப் பெட்டிப் பயணத்தை விட இரண்டு மடங்கு கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவாகச் சென்றால் 20 சதவீதம், வாராந்திர, மாதாந்திர அட்டை வாங்கினால் 20 சதவீதம், பயண அட்டை வாங்கினால் 10 சதவீதம் என தற்போதுள்ள கட்டணச் சலுகையை மக்களிடம் எடுத்துரைக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பயண அட்டையின் பணமதிப்பை உயர்த்தி எண்ணற்ற பயணங்கள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதால் கட்டணச்சீட்டிற்கான காகித பயன்பாடும் குறைக்கப்பட்டு இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நற்செய்தி.


கட்டணம் குறைப்பது குறித்து தனி ஆணையம் முடிவு செய்வார்கள் என்பதால் அவர்களின் அறிவுப்புக்காக வெகுஜன மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.மேல்தட்டுமக்கள் மட்டுமே பயணப்படுத்தும் போக்குவரத்து வசதியாக இல்லாமல் அடித்தட்ட மக்களும் மெட்ரோ வசதியைப் பெறுவதற்காகவே புதியதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக திறக்கப்பட்ட சென்ட்ரல்-விமான நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் இடையேயான பெருநகர தொடர்வண்டியில் 5 நாட்களுக்கு இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி குறித்து மக்களுக்கு இருக்கும் அடிப்படையான சந்தேகங்களும் பயங்களும் தீர்க்கப்படவே இந்த நடைமுறை பின்பற்றப் பட்டிருக்கின்றது.மொத்தம் 6லட்சத்து 41 ஆயிரத்து 524 பேர் பயணம் செய்து பயன்பெற்றிருப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இலவச இணைய வசதி, விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பான கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட தொடர் வண்டித்தடங்கள், குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள், எந்திரங்களால் சோதனையிடப்படும் பயண உடமைகள், வரிசையில் நின்று நேரம் செலவழிக்காமல் இணையத்திலேயே பயணச்சீட்டை பெறுதற்கான வசதிகள், கண்காணிப்புக் கருவிகள், வெப்பத்தை உணராமல் இருக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெட்டிகள்,
பெண்கள் பாதுகாப்பிற்கான தனிப்பயணப்பெட்டிகள், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான மின்ஏணி மற்றும் மின்படிக்கட்டு வசதிகள், பயணப்பெட்டிகள் மற்றும் மெட்ரோ நிறுத்தங்களில் சுற்றுப் புறுத்தூய்மைக்காக உணவுப்பொருட்களில் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகள் என நீளும் இணக்கமான வசதிகள் மெட்ரோவிற்கும் மக்களுக்குமான தூரத்தைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தைக் கொடுக்கவே பிரயத்தனப்படுகின்றது.

மக்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பறவைகள் உள்நுழைந்து காயங்கள் ஏற்பட்டு விடாமல் இருக்கத்தடுப்புக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 33 ஆயிரமாக இருந்தது.தற்பொழுது புதிதாகத் தொடங்கியுள்ள மெட்ரோ ரயில் சேவையில் கட்டண முறை அமல்படுத்தப்பட்டபின் பயணிகள் எண்ணிக்கை 55,640 ஆக உயர்ந்துள்ளது. சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையத்தை மெட்ரோ ரயில் சேவை இணைப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து மக்கள் பயன் பெறுவார்கள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தனிநபராய் தொலைதூரம் செல்பவர்கள் மெட்ரோவை அதிகமாக உபயோகிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும் மெட்ரோ பயண அனுபவத்தை இரசிப்பதர்காகவே பலர் குடும்பத்துடன் பயணம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்கள்.தொடர்ச்சியாக பின்பற்றி பழக்கப்பட்ட போக்குவரத்து வசதியிலிருந்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மக்கள் சில காலம் எடுத்துக்கொள்வது இயல்பானதே. மக்களுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தை மக்கள் விரைவில் மாற்றத்தை ஏற்று உபயோகிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment