Sunday, March 12, 2017

கணையம் - pancreas

வாழையிலையாய் விரிந்து
வைக்கப்பட்ட விருந்துணவை 
சுவைத்து செரித்து
சத்தாய் கல்லீரலிடம் 
சேர்த்திடுவான்

இரட்டைவேட கதாப்பாத்திரமேற்று
காதலன்  நாளமுள்ள சுரப்பியாய்
செரிமானத்திற்கு தேவையென
சுரக்கப்படும் காதல்நீரை
ஓரிடத்திலிருந்து வேரிடம் சேர்ப்பான்

காதலன் நாளமில்லாச் சுரப்பியாய்
ஊக்கிகளை உற்பத்திசெய்து
காதலி சமிக்ஞை கிடைத்தவுடன்
காதல்நீராய் இரத்தத்தில்
கரைந்திடுவான்.

தேனடைக் கணையத்தில்
செரிமானச் சாற்றை
சுரக்கிறான்
அசினார் உயரணுக்கள்

ஆழ்கடல் கணையத்தின்
நடுவே பனிப்பாறைகளாய்
லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்

முப்பெரும் சிகரங்களை எண்ண
கிரேக்க நெடுங்கணக்கின்
ஆல்ஃபா பீட்டா
கணைய இயக்குநீராய்  
ஆல்ஃபாவின் குளுக்ககான்
கணைய சுரப்புநீராய்
பீட்டாவின் இன்சுலின்
மூன்றாவது செழிப்பான சிகரமாய்
கழிமுகத்தெதிர் நிலமாய்
டெல்டா

இட்லிவைத்தால் அமைலேசெனும்
மாப்பொருணொதி
மனதாரச்  சுவைத்திடுவான்
பருப்புச்சோறு பரிமாறினால்
டிரிப்சின் நொதி 
உண்டுகழித்திடுவான்
அசைவ உணவென்றால் 
லைபேசெனும்
கொழுப்புப்பிரிநொதி 
கொண்டாடித் தின்றிடுவான்

கணையத்தாயாய் மாறி
கல்லீரல் குழந்தைக்கு
தான்சுவைத்த 
மாவுச்சத்தை குளுக்கோசெனும்
கொடு முந்திரிப்  பழச்சர்க்கரையாய்
கொடுத்து மகிழ்ந்திடுவாள்
புரதச்சத்தை அமினோவமிலமாக
மாற்றி போஷாக்கு படுத்திடுவாள்
கொழுப்புச்சத்தை கொழுப்பமிலமாக
கொண்டு சேர்த்து 
குதூகலமடைந்திடுவாள்

மண்புழுபோல் நண்பனாய்
நன்மை பயப்பவன்
மதுவைத் தெளித்தவுடன்
நாகப்பாம்பாய்ச் சீறி
உயிர்பறிப்பான்

13 comments:

  1. Replies
    1. நெஞ்சார்ந்த நன்றி

      Delete
  2. உயிரியல் கலந்து
    அன்பு/காதலென அளந்து
    கணையமும்(pancreas) செயலும்
    சிறப்புடன் கற்றிடப் பாபுனைந்த
    தங்கச்சிக்கு - ஒரு
    அண்ணனின் பாராட்டு!

    வலைவழியே பதிவு செய்கையில்
    பொருத்தமான படம் சேர்த்தால்
    வாசகர்களை அதிகம் ஈர்க்க வைக்கலாம்!

    ReplyDelete
  3. கணையத்தின் வேலையை இவ்வளவு அருமையாக கவிதை நடையில் யாராலும் சொல்ல முடியாது அபி அருமை

    ReplyDelete