Monday, March 13, 2017

எங்கே செல்லும் இந்த பாதை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகத்தையும் பார்த்துவிடவேண்டும் என்று நாங்களும் சுஜி-சதீஷ் தம்பதியனரும் முடிவு செய்திருந்ததால் ஒரு சுபயோக விடுமுறை சுபதினத்தில் ராஸ் அல் கைமாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று அவர்களது பஜேரோ காரில் ஏறிக் கிளம்பினோம். ராஸ் அல் கைமா என்றவுடன் எல்லோருக்கும் ரேக் பேங்க் (RAK bank) என்றழைக்கப்படும் ராஸ் அல் கைமா வங்கி ஞாபகம் வரலாம்.

ஆனால் எனக்கோ “ஆ...” என்றொரு பேய்படத்தில் பேயிருக்கிறதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள பாலைவனத்தில் உள்ள அரண்மனை வீட்டைப் பார்க்க கதாநாயகனான “மானாட மயிலாட“ புகழ் கோகுல் நான்கு சக்கர வண்டியில் இங்கு வருவதும், பின்னர் அமீரகத்தின் தமிழ் பண்பலையில் அடிக்கடி ஒலிக்கும் ராஸ் அல் கைமாவில் இருக்கும் ஒரு உணவகத்தின் விளம்பரமும் தான் ஞாபகம் வந்தது.

ராஸ் அல் கைமாவில் பிரசித்தி பெற்றது ஜெபல்ஜெயிஸ் (jebel jaiz)  மலை என்று சதீஷின் நண்பர் வினோத் கூறியிருந்ததால், புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணியை வழியில் உள்ள ஷார்ஜாவில் ஓர் உணவகத்தில் மதிய சாப்பாட்டுக்கு வாங்கி விட்டு பயணத்தை வாசத்துடன் தொடங்கினோம்.
ராஸல் கைமா நகர்ப்புற எல்லையிலிருந்து, மலை நெடுந்தூரத்தில் இருந்ததால் மலைக்குச் செல்லும் வழியிலோ, மலையின் மேலோ உணவகங்கள் குறைவு, அப்படியே இருந்தாலும் விலையைக் கேட்டவுடன் பசியடங்கி விடும். வழியில் நல்ல தரமான  உணவகங்களைத் தேடி நேரத்தை வீணாக்க வேண்டாமே என்பதற்குத்தான் இந்தச் சிறப்பு ஏற்பாடு.

சுஜி-சதீஷ் தம்பதியனருடன் அவர்கள் வண்டியில் சென்றால் தடங்காட்டி(GPS) உதவியுடன் சென்றாலும் வழிகளை தவறவிட்டு,   பல வழிகளை ஆராய்ச்சி செய்து, புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து சரியான பயண இலக்கைச் சென்றடைவோமா என்றே தெரியாமல் செல்வது சுவாரஸ்யமாய் இருக்கும். சுஜி கணவருக்கு உதவியாக சாலை வழிகளையெல்லாம் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் லட்சியங்களை அடைய மட்டுமல்லாது சாலைப் பயணத்திலும் சரியான இலக்கை அடையவும் கணவருக்கு துணைநிற்பார்.
அமீரகத்தில் வாகன போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக இருப்பதனால், மிகுந்த கவனத்துடன் வண்டியைச் செலுத்தி ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு வேகத்துடன் சென்று அபராதம் பெறாமல் தப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர்களோ மிகவும் அனுபவித்து இரவு நேரங்களில் கூட நீண்டநெடும் பாதை மற்றும் மலைவளைவுகளில் பயணத்தை சாதாரணமாக மேற்கொண்டாலும் எனக்கு திகிலாகத்தான் இருக்கும். நான்கு சக்கரவாகனத்தை ஆண்களுக்கு நிகராக ஒரு தனிபாங்குடன் ஓட்டவேண்டுமென்ற ஆசை மனதில் இருந்தாலும், அமீரகத்தில் பெரும் கட்டணம் செலவழித்து, ஓட்டுநர் உரிமம் வகுப்பு சென்று, பயிற்சி பெற்று, ஓட்டுநர் பரீட்சையில் வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது.

நம் ஊரைப்போன்று ஆங்காங்கே வண்டியை நிறுத்தி “அண்ணே, ஜெபல்ஜெயிஸ் மலைக்கு எப்படி போகனும்?” என்றெல்லாம் கேட்க முடியாது. தடங்காட்டியில் எங்கே செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டால் போதும், அமெரிக்க பெண் மேலதிகாரி போன்று அதட்டலான குரலில் ஒரு பெண் “நேராக இரண்டு மைல் தூரம் போ” , “இரண்டாம் திருப்பத்தில் வண்டியைத் திருப்பு” என்று பல கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பாள். அவள் கூறுவதைக் காது கொடுத்து கேட்காமல் வேறுதவறான வழியில் சென்றாலும் தோழியாய் மாறி மாற்று வழியைக் கூறி வழிநடத்துவாள்.

1970களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக பைஞ்சுதை (cement சிமெண்ட்)  தொழிற்சாலை இங்கேதான் ஆரம்பித்தார்கள் என்றும் இன்றுவரை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பைஞ்சுதை உற்பத்தியில் ராஸ் அல் கைமா முதலிடமென கேள்விப்பட்டு அதிசயித்தோம்.  


1980 களில் ஆரம்பித்திருந்த ராஸ் அல் கைமா செராமிக்ஸ் (பீங்கான்) என அழைக்கப்படும் மட்பாண்ட தொழிற்சாலை இன்றும் உலக மட்பாண்ட உற்பத்திக்கு பெரும் பங்கு வகிக்கின்றது என்றறிய  இந்தச் சிறிய நிலப்பரப்புக்கு இவ்வளவு பெருமையாயென ஆச்சர்யித்தோம். பிரசித்தி பெற்ற நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகளிலெல்லாம் உணவும், தண்ணீரும் வழங்கப்படும் பீங்கான் தட்டுக்கள், குவளைகளின் பின்னால் ராஸ் அல் கைமாவில் (Made in RAK) செய்யப்பட்டது என்று எழுதியிருப்பதன் அர்த்தம் அப்பொழுது தான்  எங்களுக்கு விளங்கியது.

அதே காலக்கட்டத்தில் பாரசீக வளைகுடாவில் நிறுவப்பட்ட முதல் மருந்து தொழிற்சாலை இங்கு அமைந்திருக்குயெனத் தெரிய வர இன்னும் எத்தனை எத்தனை பெருமையை இந்த  ராஸ் அல் கைமா பெற்றிருக்கிறதோ என இதன் பெருமைகளைத் தெரிந்து கொள்ள அலுத்துக் கொண்டோம். மீன்பிடிப்பதையும், முத்துக்குளிப்பதையும் முதன்மையாய்க் கொண்ட கிராமங்களும் ராஸ் அல் கைமாவில் இருக்கத்தான் செய்தன.    மலையின் உச்சியை நோக்கி போகின்ற வழியிலேயே பல  ஓய்வெடுக்கும் இடங்களில் நிறுத்தி மலையுடன் அழகான ரம்மியமான சூழ்நிலையில் வித்தியாசமான நிலப்பரப்பு கொண்ட கற்கள், மணலுடன், பள்ளத்தாக்குகளும் தெரியுமாறு நிறைய ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தொலைக்கோடியில் அமைந்திருந்த ஓய்வுக் கூடாரங்களிலும் இடம் பெயர்ந்து செல்கிற கழிப்பறைகள் வைத்து சுத்தமாக பணியாளர்கள் கொண்டு பாமரிக்கப்படுவதைக் கண்டு அதிசயத்திருந்தோம்.

மலையினடிவாரத்தில் நிரந்தர குடியுரிமை உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சமைத்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டமென வாரஇறுதி விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த பிரியாணியைப் பார்த்து நுகர்ந்ததும் எங்களுக்கு பசிவயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மலைமேல் சென்றவுடன் சாப்பிடலாம் என்று முடிவு செய்து மலைப்பாதைப் பயணத்திற்கு விரைவாய் தயாரானோம்.

மலையில் உள்ள வளைவுகளுக்கு ஏன் கொண்டை ஊசி வளைவு என்று பெயர் வைத்திருக்கிறார்களென்ற கேள்வியைக் கணவரிடம் கேட்டு விட்டு, “தலையிலிருக்கும் கொண்டையும், சூடும் பூக்களும் கீழே விழாமலிருக்க கொண்டை ஊசி பயன்படுவது போல மலையெனும் மாபெரும் மண்டையில் செடி, கொடி, மரம் போன்றவை கீழேவிழாமல் நிற்பதற்கு கொண்டை ஊசி தேவைப்படுவதாலும், கொண்டை ஊசியாய் வளைவுகள் செயல்படுவதாலும் அப்பெயர் வைத்திருக்கிறார்கள்” என நானே சிந்தித்து ஒரு பதில் கூற “என்  வாழ்க்கைத் துணைக்கு எவ்வளவு அறிவு.....இது போன்ற உன் சிந்தனைகளை காலத்தால் அழியாத கல்வெட்டில் பதிவு செய்து வைக்க வேண்டும்” என்று என் கணவர் கூறி என் தலையருகே அவர் கையைக் கொண்டுவந்து திருஷ்டி கழித்து என்னைக் கிண்டல் செய்து புன்னகைத்தார்.

கொண்டை ஊசியைப் போன்று அமைப்பை மலைவளைவு கொண்டுள்ளதால்  அப்பெயர்க்காரணமென அறிந்திருந்த கணவர் , நான் கூறிய விளக்கத்தை வெகுவாக இரசித்தாலும், சுஜி-சதீஷ் தம்பதியினர் கடுப்பாகி என்னை இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டாமென செல்லமாகிக் கெஞ்சிக் கொண்டார்கள்.  
                    
மலையென்றால் செடி, கொடி, மரம் இல்லாமல் பிரம்மாண்ட கருமணல் குவியலாய்க் காட்சி அளித்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் அழகை மலையெங்கும் நிறைத்து வைத்திருந்தது. நாங்கள் பயணம் செய்த வண்டியில் மேல்கதவைத் திறந்து மலையின் கொண்டை ஊசி வளைவில் போய்க்கொண்டிருந்த பேய்க்காற்றுப் பயணத்தை காணொளியாய் அலைபேசியில் சிறைபிடிக்கலாம் என்று முற்பட்டோம்.

அம்முயற்சியை செய்த கணவரும், சுஜியும் காற்று வேகமாக தள்ளுகிறது காணொளியெல்லாம் எடுக்க முடியாது அலைபேசியே பறந்துவிடுமோ என்று பயமாய் இருக்கிறது என்று கூறிவிட்டு வாகன இருக்கையில் அமர்ந்தனர். வாகன இருக்கையில் அமர்ந்திருந்த என்னாலேயே காற்றின் கர்ஜனையை நன்றாகக் கேட்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நீண்டு கொண்டே சென்ற மலைப்பாதை எப்பொழுது முடிவுக்கு வருமென்ற எண்ணம் தோன்றி விட்டது. ஆனால் வண்டியை ஓட்டிய சதீஷ் அந்த நீண்ட மலைப்பாதையில் வாகனத்தை ஓட்டுவதை வெகுவாக இரசித்திருந்தார்.

மலைப்பாதை வழியில் ஓரிடத்தில் சில வாகனங்கள் நிறுத்தப்பட்டு சில சுற்றுபயணிகள் எதையோ வியப்பாய்ப் பார்த்து கொண்டிருந்தார்கள். உடனே நாங்களும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு செங்குத்தான மலையை மேல் நோக்கி பார்க்க சில சாகச விரும்பிகள் பயிற்சியாளர்களுடன் மலையேறிக் கொண்டிருந்தார்கள்.


ஆண்களுடன் பெண்களும் பலஆயிரமடி உயரத்தில் மலையின் உயரத்தைச் சாதாரணமாக கடந்து முன்னேறிக் கொண்டிருக்க கீழிருந்த எங்களுக்கோ கால்கள் கிடுகிடுவென நடுங்கியது. மலைகளைக் குடைந்து துளையிட்டு, சில தூரங்களைக் கடக்கவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும் கம்பிகளின் வழி பாதை அமைத்து, அதன் வழியாக தொங்கிக்கொண்டு சாதாரணமாக அவர்கள் சென்றது சாகச சாதனையாய் எங்களுக்குத் தோன்றியது. பின்னர் நாங்கள் பயணித்து மலைஉச்சியை அடைய குளிர் நடுக்கியது.

ஏற்கனவே இவ்விடத்திற்கு குளிர்காலத்தில் சதீஷின் நண்பர் வினோத் வந்திருந்ததால் கடுங்குளிரைப் பற்றிக் கூறி கம்பளிச் சட்டையை மறக்காமல் எடுத்து செல்லுமாறு சதீஷிடம் எச்சரித்துள்ளார். ஆனால் துபாயின் சீதோஷ்ணநிலையை மனதில் வைத்துக் கொண்டு இந்தக்குளிர் நம்மையென்ன செய்துவிடுமென்ற நம்பிக்கையில் சதீசும் பெரிதாக எந்த ஏற்பாட்டுடனும் வரவில்லை, எங்களிடமும் எச்சரிக்கை செய்யவில்லை.

வண்டியிலிருந்து இறங்கிய உடனேயே எங்களால் குளிர்தாங்க முடியவில்லை. வெளியிலே போர்வையை விரித்து உட்கார்ந்து  சாப்பிடலாம் என்றெண்ணிய எங்களின் போர்வையில் மட்டுமல்ல எண்ணத்திலும் புழுதிக்காற்றால் மண் விழுந்தது. வெளியிலெடுத்து வந்த பொருட்களை மூட்டைக்கட்டிக் கொண்டு திரும்ப வண்டிக்குள்ளேயே சென்று வண்டியிலுருந்த சூடேற்றும் சாதனத்தின் உதவியுடன் குளிர்காய்ந்து மதிய உணவை சாப்பிட்டு முடித்தோம்.

குழந்தைக்கும் கம்பளிச்சட்டை எடுத்து வராததால், அவளோ “குள்ளுருது” என்று மழலை மொழியில் கூற நான் என் சட்டைக்கு மேலணிந்திருந்த மெல்லிய மேல்சட்டையை அவசரத்திற்காக அவளுக்கு போர்த்திவிட்டேன். நாங்கள் இருந்த மலை உச்சிக்கு மேலேயும் சிலர் ஆர்வத்துடன் செங்குத்தான வழியில் தங்கள் வண்டியை லாவகவாகவும், எச்சரிக்கையுடனும் ஓட்டிச் சென்றார்கள்.

இதுவே குளிரென்று தாங்க முடியாமல் நாங்கள் நடுங்க -5 (deg Celsius) டிகிரி செல்சியஸ் குளிர் இங்கு அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது என்ற செய்திகேட்டு மேலும் குளிரில் நடுங்கினோம். பின்னொரு நாளில் பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களும், குழந்தைகளும் பனியில் விளையாடிய காணொளியைக் கண்டு அகம் மகிழ்ந்தாலும் நாம் அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்ற சிறு வறுத்தம் மனதில் தோன்றி மறைந்தது.   

சமீபத்தில் நடைபெற்றிருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற தேர்வில் வெற்றிபெற்றதன் பயனாய் பரிசாய் கிடைத்த மென்பொருள் நிறுவனத்தின் சின்னம் பதித்த கம்பளிச்சட்டையை சதீஷ் பெருமையுடன் எடுத்து வந்திருக்க நாங்கள் அனைவரும் அந்தத்  தேர்வை வெற்றிப்பெற்ற மென்பொறியாளர்கள் போல காட்டிக் கொள்ள அக்கம்பளிச் சட்டையை வாங்கி அணிந்து பெருமை பொங்க ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். பெருமை ஒருபுறம் இருந்தாலும் எல்லோருக்கும் குளிரிலிருந்து காத்துக் கொள்ள அக்கம்பளிச் சட்டை உதவியாயிருந்தது. 

ஐக்கிய அரபு அமீரகத்திலேயே உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து ஹஜ்ஜார் மலைத் தொடரில் வழியே துறைமுகம், கடல், எண்ணை சுத்திகரிக்கும் நிலையங்களை பார்க்கும் வாய்ப்பு கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. நாங்கள் ஒருகல்லில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டிருந்தாலும் அருகே சுடசுட தேநீரும், திண்பண்டங்களையும் இரசித்து கொண்டிருந்த நான்கு அரபிய இளைஞர்களை ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தோம். தேநீரை சுடவைக்க அவர்கள் வைத்திருந்த சிறிய மின்அடுப்பும், தேநீர் வைத்திருந்த அழகு கொதிகெண்டியும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆர்வமாய் பார்க்கத் தோன்றியது.   

திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை எனக்கும் எனது கணவருக்கும் இருகுவளையில் சூடான தேநீரைப் பருகத்தந்து, எனது குழந்தைக்கும் பிரசித்திபெற்ற சில உருளை வருவல் அடைத்த பைகளை தந்து புன்னகை செய்தார்கள். நாங்கள் பரவாயில்லை என்று ஒரு நாகரிகத்திற்காக சொன்னாலும் அந்தக் குளிரில் தேநீரைக் குடிப்பதற்கு ஆவலாய்தான் இருந்தோம்.

அவர்கள் கிளம்பிச்செல்லுமுன் சில உருளை வருவல் பைகளை என் குழந்தையிடம் ஒரு அரபிய இளைஞர் நீட்ட நான் வாங்கிக்கொள்ள முற்பட, அவர் உன்னிடம் தரமாட்டேன் உனது குழந்தையிடம் தான் தருவேனென்பது போல் பாவனை செய்ய என் முகத்திலோ ஈயாடவில்லை. பத்து திராம்கள் கொடுத்து வாங்கிய காபி கசப்பாக இருக்கிறது, சுவையாயில்லையென்று சுஜி அங்கலாய்த்து கொள்ள எங்களுக்கோ அன்பாய் அந்த இளைஞர் கொடுத்த தேநீரின் சுவை நாவிலேயே நின்றது.     ராஸல் கைமாவில் பல நட்சத்திர உல்லாச ஓய்வுவிடுதிகள் அருமையாக இருக்குமென்றும், நான்கைந்து குடும்பங்களாய் சேர்ந்து விடுமுறை நாட்களில் ஓய்வெடுத்து கொண்டாட சிறந்த இடமென நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்திருந்தோம். இங்குதான் ஓமானிய மலைகளிலிருந்து மசாஃபி நீரூற்று வருவதனால் மீன்பிடித் தொழிலுடன், ராஸ் அல் கைமாவின் செழிப்பான மண் விவசாயத்திற்கும் உதவி செய்து தனக்குமட்டுமல்லாமல் மொத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கே உணவு வழங்கும் ஆற்றல் பெற்றிருந்தது என தெரிந்து வியந்தோம்.
நாங்கள் கடைகளில் பார்த்திருக்கும் மசாஃபி கனிமநீர் புட்டிக்கு (masafi mineral water)  பெயர்காரணம் இந்த நீரூற்றினால் வந்ததுயென அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.எண்ணை மட்டுமல்லாது , கருங்குன்றுகளிலிருந்து இரும்புதாது உற்பத்தி செய்யப்படுவதை அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்க வேலையின் வழி  தெரிந்துகொண்டோம். ராஸல் கைமாவின் நகரத்திற்குள்ளேயும் எல்லா நகரத்திலும் இருப்பது போல அருங்காட்சியங்கள் இருந்தாலும் மன்னர்கள் முன்னர் குடியிருந்த அரண்மனையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருந்ததால் அது தனிபெருமை பெற்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மலைஉச்சியில் தற்பொழுது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோட்டை தாயா கோட்டைதான்(dhayah fort) என்பதனால் அதன் புகழும் ஓங்கியே இருந்தது. 
                                        
ராஸல் கைமாவின் கரையோரங்களில் பயணம் செய்த பொழுது பாப் அல் பாஹர் (bab al bhar ) பகுதியில் எகிப்திய கூர்ங்கோபுரத்தின் தாக்கத்தில் பல சொகுசு விடுதி கட்டிடங்களைப் பார்த்து அதன் அழகில் அதிசயித்திருந்தோம். வருடந்தோரும் ஐக்கிய அரபு அமீரக ஆவாஃபி திருவிழா (awafi) டிசம்பர் அல்லது சனவரி மாதத்தில் அங்குள்ள உள்ளூர் மக்களுக்காக மூன்று வாரங்கள் பாலைவனத்தில் பாரம்பர்ய உணவு நடனத்துடன் இலவசமாக நுழைவுக் கட்டணமின்றி  கோலாகலத்துடன் நடைபெறுமென்று அறிந்திருந்தோம்.

ஐக்கிய அரபு அமீரகத்திலேயே திறமை வாய்ந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் போட்டிகளை மணல்மேடுகளில் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாய் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு வருவது போல் வருவார்கள் என படித்திருந்தேன்.

2007ல் உலகப்புகழ் பெற்ற வீரர்களை இங்கு நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்கச் செய்து (marathon) உலக விளையாட்டு ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை “சிறுகுடிசைகளைக் கொண்டு கடலை ஊடுறுவிச் செல்லும் நிலம்” என்ற அர்த்தத்தைக் கொண்ட ராஸல் கைமாவிற்கு உண்டு. நிறைவான நினைவுகளுடன் பல குடும்பக்கதைகளைப் பேசிக் கொண்டு உற்சாகமாய் வீடு திரும்பினோம்.        


9 comments:

 1. Super Lady Thiruvalluvar award koduthirulam....

  ReplyDelete
 2. well written, though i couldnt follow everything

  ReplyDelete
 3. ராஸ் அல் கைமா என்ற இடம் பற்றி உன் அருமையான நடையில் தெரிந்து கொண்டேன் சூப்பர் அபி

  ReplyDelete
 4. ராஸ் அல் கைமா என்ற இடம் பற்றி உன் அருமையான நடையில் தெரிந்து கொண்டேன் சூப்பர் அபி

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சார்ந்த நன்றி

   Delete
 5. மலைப் பயணம் பற்றிய
  தங்கள் பதிவே - ஓர்
  ஒளிஒலி (Video) பார்த்தது போல
  அமைந்திருக்கிறதே!
  தங்கள் கைவண்ணம் சிறக்க
  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமூட்டுவதற்கு மிக்க நன்றி

   Delete