Tuesday, March 7, 2017

பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்

பாலைவனத்தில் ஒரு சோலைவனத்தை அதிசயக்க வைக்கும் வகையில் கடின உழைப்பில் தயார் செய்திருப்பதால் அற்புதபூங்கா (miracle garden) மிராக்கிள் கார்டன் என்ற பெயர்வைத்திருப்பது பொருத்தமான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஆண்டில் ஆறு மாத குளிர்கால நேரத்தில் அதாவது நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் தான் இப்பூங்கா மக்களின் பார்வைக்குத்  திறந்திருக்கும்.மற்ற ஆறுமாத நேரம் கோடைகாலம் என்பதனால் சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டும், அடுத்த வருடத்திற்காக புதுமையான வகையில் கருப்பொருளை சிந்தித்து செயல்படுத்தும் ஆயத்தப்பணிகள் தொடங்குவதற்காகவும் பூங்காவை மூடிவிடுவார்கள்.

பர்துபாயிலிருந்து பெருநகர தொடர்வண்டி (metro) வழி அமீரகப் பேரங்காடி (mall of emirates) நிறுத்தத்திற்கு அத்தை மாமாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.நல்லவேளை அவர்கள் டிசம்பர் மாதம் வந்திருந்ததால் இந்த பிரம்மாண்ட அதிசய பூங்காவைப்
 பார்க்க வாய்ப்புகிடைத்தது. இதுவே என் பெற்றோர்,மாரீஸ்வரி அத்தை, அத்தை மகன் தம்பதியினர் போல அக்டோபர் மாதம் வந்திருந்தால் உலகத்திலேயே இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய அதிசயப் பூங்காவைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்திருக்காது.

ஒரு நபருக்கு முப்பது திராம்கள் நுழைவுச்சீட்டு என்றவுடன், உடனே மாமா பதினெட்டால் பெருக்கிக் “கண்டிப்பாகச் செல்ல வேண்டுமா ? அவ்வளவு நன்றாக இருக்குமா? என்றார். பூக்களாலான பூங்கா என்றவுடன் அத்தையோ மிகுந்த ஆர்வமானார்.இணையத்தில் இந்த பூங்காவின் அழகிய ஒளிப்படங்களைக் காட்டியவுடன் ஒருவகையாக ஒத்துக்கொண்டார் மாமா. அந்த பூங்காவிற்கு அருகிலேயே பட்டாம்பூச்சி பூங்கா இருக்கிறது 50 திராம்கள் கட்டணம் என்றவுடன் இவ்வளவு செலவழித்து பட்டாம்பூச்சியைப் பார்க்க நாங்களென்ன குழந்தைகளா? என்று மாமா மறுத்துவிட்டார்கள். பெற்றோரும் , மாரீஸ்வரி அத்தையும் வந்திருந்த பொழுது, பூக்களாலான பூங்கா மூடியிருந்ததால் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு மட்டும் கூட்டிச் சென்றேன்.கட்டணம் சிறிது அதிகமென்றாலும் என் குழந்தை, விருந்தினர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கச் செல்கிறேன்  என்று காரணம் கூறி உலகத்திலேயே குளிரூட்டப்பட்டு தட்பவெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய உள்அரங்க பட்டாம்பூச்சி பூங்கா பார்க்க வேண்டுமென்ற என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன்.

அமீரகப் பேரங்காடியின் பெருநகர தொடர்வண்டி (mall of emirates) நிறுத்தத்தில் இருந்து அதிசயப்பூங்காவிற்குச் செல்ல அரசு பேருந்து வசதி செய்து தந்திருந்தார்கள். அமீரகத்தில் அனைத்துப் பேருந்துகளுமே குளிரூட்டப்பட்டவை தான். அமீரகப் பேரங்காடிக்கு அருகிலேயே இருந்த பேருந்து நிருத்தத்திலிருந்து பூங்காவிற்கு அத்தையையும் மாமாவையும் கூட்டிச் சென்றேன். காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை இப்பூங்கா திறந்திருந்தாலும் முதல் தடவை அப்பூங்காவிற்குச் செல்வதாலும் தனியே அவ்விடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதனால் பதட்டத்துடன் ஓர் ஆர்வத்தை உணர்ந்தேன்

பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக 200 திராம் தாளைக் கொடுத்துவிட்டு நுழைவுச் சீட்டை வாங்கையில் பூங்காவைப் பார்க்கும் ஆர்வத்தில் மீதிச் சில்லறையை வாங்காமல் பூங்காவிற்குள் நுழைந்துவிட்டேன். பூங்காவில் காதல் சின்னமாக பல  வண்ணபூக்களைக் கொண்டு இதயவடிவில் பலவளைவுகளை அமைத்திருந்தனர். 2013ம் ஆண்டு காதலர்தினத்தன்று இந்த பூங்காவை திறந்ததற்கானக் காரணம் புரிந்தது. அலுவலக வேலை நிமித்தமாக கணவர் பூங்காவிற்கு வரஇயலவில்லை. அனைவரும் காதலர்களாகவும், தம்பதியர்களாகவும் பூக்களானால் ஆன பலவண்ண இதயவடிவு வளைவுக்குள் தாங்கள் தெரியும்படி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ள , நான் மட்டும் தனியாக ஒளிப்படம் எடுத்துக்கொள்ளும் பொழுது, என்னைவிட என் அத்தை வருத்தம் கொண்டார்.


இவ்வளவு அழகான வித்தியாசமான பூங்காவில் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பதிவு செய்தால் பிரமாதமாக இருக்கும் என்று என் அத்தைக் கூற ஏற்கனவே வித்யாபாலன், முத்த நாயகன் ‘இம்ரான் ஹஸ்மி’ நடித்த இந்திப் படத்தின் ஒரு பாடல்காட்சி இங்கு படமாக்கப்பட்டது என்று இணையத்திலிருந்து படித்த தகவலைப் பகிர்ந்துகொண்டேன். துபாய் என்றாலே வானளாவிய விதவிதமான கட்டிடங்கள், பாலைவனம் என்று கண்முன்னே விரியும் காட்சிகளுக்கு நடுவே அந்த இயக்குனர் சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தார். பலநாடுகளிலிருந்து விதவிதமான செடிகளையும்,பூக்களையும் வரவழைத்து அழகுக்கு அழகு சேர்த்திருந்தார்கள்.

அமீரகத்தில் இப்பூங்கா என்றில்லாமல் அனைத்து பூங்காக்கள், சாலையோரங்கள், ‌சாலைநடுவே என்றனைத்து இடங்களுமே பாலைவனம் என்று தெரியாத வகையில் மண்களையே மாற்றி, வளர்ந்த மரங்களையும், செடி, கொடிகளையும் வேறொரு இடத்திலிருந்து கொண்டு வந்து வைத்து பசுமையாய் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.


சுட்டெரிக்கும் வெயிலென்றாலும் குறிப்பிட்ட காலஅளவைக் கொண்டு வாடிய பூக்கள், செடிகளனைத்தையும் மாற்றி எப்பொழுதுமே கண்ணைப்பறிக்கும் வகையில் பூக்களைக் காட்சிப்படுத்தி நம்மை ஆச்சர்யப்படுத்துவார்கள். சொட்டு நீர் பாசன முறை (drip irrigation) , மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் போன்ற பல வழிகளை உபயோகித்து நம் கண்களுக்குக் குளிர்ச்சி தரும் இயற்கையை இயற்கையான வழியிலேயே செயல்படுத்தி இருப்பார்கள்.

உள்ளே பாதி பூக்களான அமைப்புகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் நுழைவுச்சீட்டு வாங்கையில் மீதி பணத்தை வாங்காதது ஞாபகம் வந்தது. நானே எதற்கெடுத்தாலும் பதட்டமாவேன்...மருமகளுக்கேற்ற மாமனாராக என் மாமாவும்  படபடப்புடன் என்னுடன்  சேர்ந்து நுழைவுச்சீட்டு கொடுத்தவரிடம் எங்கள் நிலைமையை விளக்கமாகக் கூறி மீதி பணத்தை வாங்க முடியுமா என கேட்க வந்தார்.


நுழைவுச்சீட்டு கொடுத்த பணியாளரிடம் நான் எனது கவனக்குறைவால் மீதிச் சில்லறையை வாங்கவில்லையென்றும், அதனை திரும்பப்பெறும் வாய்ப்புள்ளதா? என்று தாழ்மையுடன் கோரிக்கை வைக்க, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்தில் நம்மை ஞாபகம் வைத்திருந்து மீதிபணத்தை தருவாரா என்ற பீதியில் இருந்தேன்.அதிசயமாக அந்தப் பணியாளர் நீங்கள் பூங்காவைச் சுற்றிப் பார்த்தபின் பூங்காவை விட்டு வெளியேறும் பொழுது மீதிபணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

ஊழியர் உறுதியாகக் கூறினாலும் பூங்காவை விட்டு வெளியேறி மீது பணத்தை வாங்கும் வரையில் அனைவரையும் ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது.


இரவுநேரம் என்றால் பூங்கா பலவண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டாலும் நாம் தெளிவான நிழற்படம் எடுத்துக்கொள்வது கடினம். எகிப்திய பிரமிடுகள், தோகை விரித்த மயில், புர்ஜ்கலிஃபா , அமீரகத்தின் சின்னமான கழுகு, வண்ணத்துபூச்சி, அமீரகத்திற்குச் சொந்தமான சொகுசுவிமானம், ஓங்கில்கள், பதின்ம வயது தொப்பி வைத்த பெண், பிரான்ஸ் நாட்டின் ஈஃப்பில் கோபுரம்,வீடு, தொடர் வண்டி, மிதிவண்டி, கவிழ்ந்த நிலையிலிருந்த மகழுந்து , குழாயிலிருந்து தண்ணீருக்கு பதிலாக பூக்கள் கொட்டுவது போன்று எண்ணற்ற எதிர்பார்க்காத பல வடிவமைப்புகளில் ஆச்சர்யமூட்டும் வண்ணங்களில் பூச்செடிகளை வாரிக்குவித்து அழகாய் அலங்கரித்திருந்தார்கள்.


பூக்களிலேயே இவ்வளவு அழகாக காட்சிப்படுத்த முடியுமா என்று அதிசயித்திருந்த வேளையில் ஆரஞ்சு பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்த புர்ஜ்கலிஃபா கட்டிடம் இன்னும் வியப்பை ஏற்படுத்தியது. வண்ண குடைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு வானில் வர்ணஜாலம் காட்டினார்கள். அங்கு விற்கப்படும் சிற்றிடை உணவுகள் அனைத்துமே விலை அதிகமாகவே இருந்தது. குழந்தை வைத்திருந்ததால் அதிகமாகப் பைகளை சோதனையிடாமல் குழந்தைக்கான உணவா? என்று கேட்டுவிட்டு பூங்காவினுள்ளே அனுமதித்து விடுவார்கள்.


என்னதான் இயற்கை அழகில் நடந்து நடந்து தொலைந்திருந்தாலும், நிழற்படங்கள் எடுப்பதற்கென ஆங்காங்கே விதவிதமாக நிற்பதாலும் மக்கள் ஓய்வெடுப்பதற்கென்று பூங்காவினுள்ளே ஆங்காங்கே அமர்ந்து கொள்ள சொகுசான மெத்தையுடைய இருக்கைகளுடனான கூடாரங்கள் அமைத்திருந்தார்கள்.


இரவு நேரத்தில் அந்த அழகிய பூங்காவை ஒளிவெளிச்சத்தில் இரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே “நேரமாகிவிட்டது! குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தானே பேருந்து வசதியுள்ளது” என்று என் மாமா எங்களை கிளப்பிவிட்டார். இங்கு எங்கு சென்றாலும், எவ்வளவு நேரமானாலும் பாதுகாப்பு உண்டு என்று கூறியும் “நீங்கள் பூங்காவை இரசித்தது போதும்” என்று எங்களைப் பத்திரமாக வீட்டுக்குக்கூட்டிச் செல்வதிலேயே கர்மமே கண்ணாயினார்.

முன்னொருநாளில் இப்பூங்காவிற்கு அருகிலேயே 26 வகையான 15,000 பட்டாம்பூச்சிகள் நிறைந்திருந்த பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பெற்றோர், மாரீஸ்வரி அத்தையை அமீரகப் பேரங்காடியின் பெருநகர தொடர்வண்டி (mall of emirates) நிறுத்தத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் வாடகைவண்டிவழி கூட்டிவந்திருந்தேன். சிலசமயம் அதிசயபூங்காவிற்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டைவழி நுழைவுச் சீட்டு வாங்கினால் நிறைய சலுகைகளும், இணையத்தில் தள்ளுபடி விலையில் நுழைவுச் சீட்டு  வாங்க பரிசுச்சீட்டுகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

இவ்விரண்டு பூங்காக்களும் சற்று தொலைவில் ஆள்அரவமற்ற இடத்திலிருந்ததாலும், அதிசயபூங்கா மூடியிருக்கும் சமயம் சுற்றுலாப்பயணிகள் வரவு சற்று குறைவு என்பதனாலும் பெற்றோர், மாரீஸ்வரி அத்தையைக்கூட்டிச் சென்ற பொழுது அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வாசலிலேயே நம்மை வரவேற்கும் விதமாக இராட்சத உருவில் பெரியபெரிய வண்ணத்துப்பூச்சி உருவங்களை நிருவியிருந்தார்கள்.

வண்ணவண்ண பூக்களான வண்ணத்துப்பூச்சி அமைப்புகள் மற்றொருபுறம் எங்களை வரவேற்றன. காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை இப்பூங்கா திறந்திருந்தாலும் மதியம்தான் வீட்டிலிருந்து கிளம்பியதால் மாலைக்குள் இப்பட்டாம்பூச்சி பூங்காவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு அமீரகப் பேரங்காடிக்கு (mall of emirates) அழைத்துச்செல்ல வேண்டுமென்று முடிவுசெய்திருந்தேன்.  

நுழைவுவாயிலில் பாடம் செய்யப்பட்ட பட்டாம்பூச்சிகளை வைத்து மன்னர்களின் திருவுருவங்களை மட்டுமல்லாது பல வடிவமைப்புகளில் நுட்பமாய் காட்சிப் படித்தியிருந்தார்கள். கட்டிடத்தினுள்ளே ஒவ்வொரு வேலைப்பாடும் ஏதோவொரு வகையில் வண்ணத்துப்பூச்சியைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. குளிரூட்டப்பட்ட உள்ளரங்கினுள் மரம்,செடி , கொடி,பூக்கள் போன்றவற்றை அமைத்து பட்டாம்பூச்சிகளை சுதந்திரமாக உலாவவிட்டிருந்தார்கள். உண்மையிலேயே ஒரு காட்டில் வலம்வருவது போன்று சுற்றுலாப்பயணிகள் உணர வேண்டும் என்பதற்காக மாதிரி பறவைகளை அமைத்திருந்தனர்.


சிறுசிறு இயற்கைக்கூடாரங்கள் அமைத்து நாம் அமர்ந்து வண்ணத்துப்பூச்சிகளையும், அவை உணவுண்ணும் அழகையும் இரசிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். பட்டாம்பூச்சிகள் பழங்களைச் சுவைப்பதற்கென்று பலவிதமான வண்ண வண்ணத் தட்டுகளில் விதவிதமான பழங்களான ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவற்றையும், அவை இயற்கையாகவே தேன் குடிப்பதற்காக பல பூக்களையும், தேனடைகளையும் வைத்திருந்தார்கள். பழங்களையும், தேனையும் பார்க்கும் பொழுது நமக்கே அதை ருசிக்கவேண்டும் என்றொரு ஆசைக் கண்டிப்பாகத் தோன்றும்.


அங்கிருக்கும் பணியாளர் ஒரு குடுவையிலிருந்து வண்ணத்துப்பூச்சிகளை எங்கள் மீது பறக்கவிட்டார். மனிதர்களின் வியர்வைமீது பட்டாம்பூச்சிகளுக்கு ஈர்ப்பிருக்கும் என்பதனால் அவைகள் எங்கள்மீது ஒட்டிக்கொண்டன. என் குழந்தையோ பயந்து அலர ஆரம்பித்தாள். சிறிது அதிக நேரம் கழுத்திலும் தலையிலும்  பட்டாம்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்க நான் அதன் உணர்ச்சிமிக்க   சிறகுகளைப் பிடித்துத் தள்ளிவிட முயற்சிக்க அதன் மென்மையான சிறகுகள் என்விரல்களால் சேதமடைந்துவிட்டது. பணியாளர் வண்ணத்துப்பூச்சிகளை அதன் உடம்பில் கைவைத்துத் தூக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். 


பின்னர் நாங்களனைவருமே பட்டாம்பூச்சிகளைப் பத்திரமாக விடுவித்து அதனைக் கையாளக் கற்றுக் கொண்டோம். வண்ணத்துப்பூச்சிகளைப் போன்று வண்ண வண்ண நிறங்களில் அமைத்திருந்த இருக்கைகளில் நாங்கள் அனைவருமே தனித்தனியாக அமர்ந்து கொண்டு நிழற்படம் எடுத்துக்கொண்டோம்.
நிழற்படம் எடுத்துக் கொள்ளும்பொழுது நமக்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்று சிறகுகளும் கொண்டைகளும் உள்ளது போன்று காட்சியளிப்பது அனைவரின் மனதையும் கவரும்.


அப்பா அதிக நிழற்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார் என்பதனால் முதலில் அவ்வளவாக நிழற்படம் எடுக்க  ஆசையில்லாத அம்மாவை அந்தப் பட்டாம்பூச்சி இருக்கையில் அமரச்சொல்ல, ஒளிப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாய் வந்த அப்பா குழந்தையைப் போல் கோபித்துக்கொண்டார். முதலில் அப்பாவின் செய்கை ஆச்சர்யத்தைத் தந்தாலும், என் பெற்றோர்கள் வயதானவுடன் குழந்தைப் பருவத்தை அடைகிறார்கள் என்றெண்ணி எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். பின்பு அப்பாவை ஒருவழியாக சமாதானம் செய்து எல்லோருமே நிறைய ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். மாரீஸ்வரி அத்தை அப்பாவைப் பற்றிய சில பால்யகால சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு என்னை ஆச்சர்யப்படுத்தினார்.

நீரோடைகள், குழந்தைகளைக் கவரும் பொம்மைக்கதாப்பாத்திரங்கள்  
கொண்டு ஒன்பது குவிமாடத்துடன் பூங்காவை அலங்கரித் திருந்தார்கள். ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தனக்கென்று ஒரு தனிபாங்குடன் அழகாகக் காட்சியளித்தது. இயற்கை அன்னை ஒவ்வொரு பட்டாம்பூச்சியையும் சிரத்தையெடுத்து பல வண்ணங்களைக் கலந்து சிறந்த படைப்பாற்றலுடன் உருவாக்கி இருப்பதாய் சிலிர்த்தார் மாரீஸ்வரி அத்தை. பட்டாம்பூச்சியைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று எல்லோரும் கூறினாலும், சாதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாலே என்னைப் போன்று குதூகலிப்போருக்கு பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளுடன் இருந்து அதனை இரசிக்கும் வாய்ப்பு பிரமாதமான ஒன்றுதான்.  

பூங்காக்கள் ஆள்அரவமற்ற இடத்திலிருந்ததால் திரும்பிச் செல்ல வாடகை வண்டியில் செல்வதே ஒரே வழியாக இருந்தது. பூக்களாலான அதிசயப்பூங்கா மூடியிருந்ததால் பேருந்து வசதி இருந்ததாய்த் தெரியவில்லை. அரசாங்கத்துக்குச் சொந்தமான வாடகை வண்டிகள் கிடைக்காததால் சில சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கிய ஒரு நட்சத்திர விடுதியின் வண்டியில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.கணவர் ஏற்கனவே RTA என்று குறிப்பிட்டிருக்கும்  அரசு வாடகை வண்டியில் மட்டுமே பயணம் செய்யலாம் என்று கூறியிருந்தாலும், குழந்தை அழுததாலும், வேறு அரசு வாடகை வண்டி கிடைக்குமோ என்ற ஐயத்தில் அந்த நட்சத்திர விடுதியின் வண்டியில் பயணம் செய்தோம்.
சாதாரணமாக வாடகை வண்டியில் தூரத்திற்கு ஏற்ப கட்டணத்தை கணக்கிட்டுக் காட்டும் கருவியில் காட்டும் குறைந்தபட்ச கட்டணமே அந்த நட்சத்திர விடுதியின் வண்டியில் கூடுதலாக இருந்தது. வண்டி  சிறிது தூரமே கடந்து, போக்குவரத்து நெரிசலில் இருக்க அந்தக் கருவியில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்க எனக்கு கட்டணம் அதிகசெலுத்த வேண்டுமே என்ற படபடப்பில் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

ஓட்டுநர் ஒரு வழியாக அமீரகப்பேரங்காடி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு 50 திராம்களைக் கட்டணமாகப் பெற்று அவசரமாகத் திரும்பிச் சென்றார். சுற்றுலாப் பயணிகளை பூங்காவில் இறக்கிவிட்டு அவர்கள் திரும்பி வருவதற்குள் இதுபோன்று சவாரிகளை ஒத்துக்கொண்டு நட்சத்திர விடுதிகளின் வண்டியின் ஓட்டுநர்கள் பணம் சம்பாதிப்பார்கள் என பின்பு தான் தெரிந்து கொண்டோம். வண்ண வண்ண பூக்கள் மனதில் நிறைந்திருக்க, பட்டாம்பூச்சியாய் மனது சிறகடிக்க அமீரகப்பேரங்காடியைச் சுற்றிப்பார்க்க ஆர்வமாய் தயாரானோம்.    

5 comments:

  1. திரைப் படக் குழுவினர்
    கண் வைத்த பூங்காவில்
    தங்கள் கண்களால் கண்ணுற்றவை
    தங்கள் கைவண்ணத்தில்
    பார்க்க முடிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

      Delete
  2. அற்புத பூங்கா அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் அத்தை

      Delete
  3. அருமையிலும் அருமை அபி.., தங்கள் பயணக் கட்டுரை.

    ReplyDelete