Tuesday, March 7, 2017

பெண்ணின் பெருந்தக்க யாவுள

பொம்மையைக் கட்டிக்கொண்டு 
அம்மையின் சமையலில்
கமகமக்கும் காலையுணவில் 
கனவுகளோடு கண்விழித்தவளோ
அதிகாலையிலேயே அதிவிரைவாய் 
அடுப்படியை அடைந்தாள்

உவகைகொண்ட உணவுகளை
உண்டு வயிறுநிறைத்தவளோ
உற்றார்உறவினருக்கு உளமாற 
உபசரித்தே உள்ளம்நிறைந்தாள்

சிறிதுநேரம் தவறினாலும்
பசிபொறுக்காதவளோ அனைவரும் 
புசித்தபின் நேரம் தவறிய
பின்னேயே  பசியாறினாள்

நவநாகரிகப் பைகளுடன்
நகர்வலம் வந்தவளோ
காய்கறிப் பைகளுடன் 
பேரங்காடியைக் கடந்தாள்

சிகையலங்காரச் சிந்தனைகளோ
சுவையாய் சமைக்க
வகைவகையான சமையல்களாயின

சிறுவலியும் பொறுக்காதவளோ
பிரசவவலியில் பரவசப்பட்டாள்

துணிவுடன் தேர்வில் 
முதல்வகுப்பில் தேர்ச்சிபெற்றவளோ
பரிகாசப்படும் சமையலறை 
பரீட்சைகளுக்கு பயந்தாள்

பளபளக்கும் மேனியழகுக்கு 
தேடிதேடிப்
பலவழிகள் மேற்கொண்டவளோ
பாத்திரமும் வீடும்
பளபளக்கவே 
தேய்த்துதேய்த்து
சிரத்தைக் கொண்டாள்

சிறுபல்லியைக் கண்டு பதறியவளோ
சுடுசொல்லைக்கூட அசட்டை செய்தாள்

ஆசைகொண்ட ஆடையடைய 
ஆயிரங்கடை அலைந்தவளோ
சுட்டிக்குழந்தையின் சுறுசுறுப்பைச்
சமாளிக்கமுடியாமல் சோர்வானாள்.

அலுவலகத்திற்குச்  சென்று
விடுமுறைகளில் தோழர்களுடன் 
துள்ளித்  திரிந்தவளோ
வீட்டுவேலைக்குள் மூழ்கிக்கிடந்து
விடுமுறைகளையே மறந்தாள்

உலகத்தையே வெல்ல
வேண்டுமென்ற பெற்றோர் 
குடும்பந்தான் உலகமென்றார்கள்
கனவுகளை நிறைவேற்றவே
நானென்றார் கணவர்

திருமணம் திருப்பம்தர
மணவாழ்க்கையும் மாற்றம்தர
ஏமாற்றங்களை ஏளனம் செய்து
மாற்றங்களை மனதாரயேற்று
ஏற்றங்களை எட்டிப்பிடிப்பவள்தான் 
பெண்ணோ!

5 comments:

  1. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அபிநயா....

    ReplyDelete
  2. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அபிநயா....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  3. திருமணம் திருப்பம்தர
    மணவாழ்க்கையும் மாற்றம்தர
    ஏமாற்றங்களை ஏளனம் செய்து
    மாற்றங்களை மனதார ஏற்று
    ஏற்றங்களை எட்டிப்பிடிப்பவள் தான்
    புரட்சிப் பெண் என்பேன்...
    பெண் முயன்றால்
    ஆகாதது ஏதுமில்லை!

    மகளிர் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete