Saturday, December 30, 2017

தலைகீழாகப் பார்க்கிறது வானம் - மு.முருகேஷ்

ஹைக்கூக்கள் ...மூன்று வரிகளில் ஏதோ ஒரு வலியை, சிந்தனையை மனதில் மின்னல் வேகத்தில் கடத்தி விடுகிறது. முதல் இரண்டு வரிகளில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின் அதர்வலையை மனதில் பாய்ச்சுகிறது.


அணிந்துரைகளில் இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பழநிபாரதி  குறிப்பிட்டுள்ள  ஹைக்கூக்கள் வானத்தில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திர வகைகள்.பறந்து விரிந்திருக்கும் 
விண்வெளியில் நட்சத்திரங்களை சுட்டிக் காட்டுவது எளிது தான். இந்த புத்தகத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஹைக்கூக்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.புத்தகம் முழுவதும் கடற்கரையில் உள்ள மணல் போல சிறப்பான ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கிறது.

திண்டுக்கல் தமிழ்பித்தனின் ஓவியங்கள், ஹைக்கூ விவரிக்கும் உணர்ச்சிகளுக்கு கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நவீன கலை
ஓவியங்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்துகின்றது.ஒரு உணர்ச்சியை  மக்களுக்குச் சொல்வதில் 
மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூவிற்கும், தமிழ்பித்தன் அவர்களுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியில் கொண்டாட்டம் வாசகர்களுக்குத்தான்.

'பசியை அடக்காமல்
குழந்தையின் அழுகையை நிறுத்தியது
சூம்பிய முலை'
வறுமையின் விளிம்பில் பாலில்லாமல் இருக்கும் தாயின் தவிப்பு.
மேல்தட்டு மக்களாய் இருந்தாலும் தற்பொழுது உணவு முறைகள், வாழ்வியல் முறைகள் வேறு சில காரணங்களால் தாய்ப்பால் இல்லாமல் கலங்கும் தாயின் ஏக்கம். இரண்டு வகையான அம்மாக்களின் உணர்வுகளைக் கடத்துகிறது.

'செத்தான் புத்தன்
இன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்'.
நம் ஈழத்தில் புத்தன் கண்ட தத்துவங்களுடன் நமது உடன் பிறப்புகளும் இறந்ததன் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம் குரல்வளையை அறுக்கும்.குற்ற உணர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.

'வறண்ட குளம்
சட்டென உறிஞ்சிக் கொள்கிறது
ஆடு மாடுகளின் உமிழ்நீரை'
'துவைத்து போட்ட
சட்டையிலிருந்து சொட்டு நீர்
அலகை நீட்டும் குருவி'
அலைபேசிக் கதிர்வீச்சில் சிட்டுக்குருவி இனம் ஏற்கனவே சிறகு முறிந்து சோர்ந்து இருக்கிறது.ஹைக்கூவைப் படித்தவுடன் சாளரத்தின் வழியே குவளையில் தண்ணீர் வைக்கவே மனம் அனிச்சையாய் ஏங்குகிறது.உமிழ்நீரும் உறிஞ்சப்படும் பொழுது தண்ணீர் வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மழலையிடம் உதைவாங்கினால் வலிக்கவே வலிக்காது.வயிற்றுக்குள் எட்டி உதைக்கும் பொழுது மிகப்பெரிய கால்பந்து வீரனாவன் என்று நினைப்பவளே தாய். ஆசையாய் அருகில் வரும் அப்பனை பிஞ்சுக் குழந்தை காலால் எட்டி உதைக்கும்.
அந்த கொலுசுக் கால்களைச் சிரித்து கட்டிக் கொள்வதே அவனது மகிழ்ச்சி.
எட்டி உதைத்த கால்களை
இறுகக்கட்டிக் கொண்டேன்
சிரித்தன கொலுசுகள்.

'இலைகளுக்குள் 
மறையும் பிறைநிலா
அசையவேயில்லை மரக்கிளை'
'சோளக்காட்டுப் பொம்மை
பூப்போட்ட சட்டையெங்கும்
பறவை எச்சம்'
இயற்கை நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை படித்தவுடன் கண்ணாமூச்சி விளையாடத் தோன்றுகிறது.நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதைச் சாரணமாக கடந்துவிடுபவர்கள் மனிதர்கள். அதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கவிஞர்கள். இயற்கையைக் கவிஞர்கள் பார்வையில் பார்க்கும் பொழுது இந்த உலகத்தையே நாம் இரசிக்க ஆரம்பித்து விடுவோம்.

'வாசலோரமாய்த் தொட்டிச்செடி
விடிகாலையிலேயே வாய்க்கிறது
சூரிய முத்தம்' என்ற ஹைக்கூவை
'வாசலோரமாய்
விடிகாலையிலேயே வாய்க்கிறது
தொட்டிச்செடிக்கு சூரிய முத்தம்'  என்று மாற்றி அமைத்திருந்தால்
இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும் என்பது தாழ்மையான கருத்து.
கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு என்று ஏதோ ஒரு உறவை நிச்சயமாய் ஞாபகப்படுத்து விடுகிறது.

நெடுஞ்சாலையில் குட்டி நாய் ஒன்று அடிபட்டுக்கிடந்தது. அதன் தலை மேலேயே பல வாகனங்கள் ஏறி இறங்கிச் சென்றது என்னைப் பாதித்த நிகழ்வு.அந்த துன்பமான சம்பவத்தை ஞாபகப்படுத்தி விட்டது 
அடிபட்டுச் செத்த நாய்
மீண்டும் மீண்டும் அடிபட்டது
நெடுஞ்சாலையில் என்ற இந்தக் கவிதை.


சுருங்கக் கூறவதே அறிவின் ஆன்மா.புத்தகம் சிறியதாக இருக்கிறது. விரைவாய் படித்து முடித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அதில் உள்ள ஒவ்வொரு ஹைக்கூவும் இயற்கையின் அழகையோ, சமுதாய அவலத்தையோ படம்பிடித்துக் காட்டுகிறது. அதனால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களும் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் நல்ல ஒரு தேடலை ஏற்படுத்துகிறது.

Tuesday, December 26, 2017

பஞ்சு மிட்டாய் ( சிறுவர் பாடல்கள்) - ஹாரிங்டன் ஹரிஹரன்

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்காக நாம் எடுக்க வேண்டிய முயற்சியை வெகுச்சுலபமாக்கி விடுவார்கள் நம் குழந்தைகள். புத்தகத்தை மேஜையின் மேல் வைத்தால் போதும் அட்டைப்படத்தில் உள்ள சிறுவர்களும் பஞ்சுமிட்டாய்களும்  உங்கள் குழந்தைகளை ஈர்த்துவிடும். பிள்ளைகள் புத்தகத்தில் உள்ள பாடல்களைப் பாடிக்  காண்பிக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.பெரும்பாலும் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைளுக்கு ஒரு பொருளை அறிமுகம் செய்ய பாடல் பாடினால் ஆர்வமாகி விடுவார்கள்.அது பழகி விட்டால் பார்க்கும்  பொருட்களுக்கு எல்லாம் பாடல் பாடிக் காண்பிக்கச் சொல்வார்கள்.எத்தனைப் பொருட்களுக்குத் தான் நாமே யோசித்து எழுதிப் பாட்டுபாடுவது?சிறுவர் பாடல்கள் நம் தமிழ் மொழியில் அதிகமாய் இருந்தாலும் பல புதுமையான பாடல்களை இக்காலத்திற்கு ஏற்ப நம் குழந்தைகளுக்கு  அறிமுகப்படுத்த இப்பாடல்கள் உதவியாய் இருக்கும். 


magic box, infobells போன்றவற்றின் சிறுவர் பாடல்களை நிறையவே நம் குழந்தைகளுடன் பார்த்தும் கேட்டும் இரசித்திருப்போம். அது போன்ற இனிமையான பாடல்களை மின்கருவிகளில் நம் குழந்தைகளுக்கு அனுதினமும் தான் ஒளிபரப்பிக் காண்பிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக பெற்றோர்களோ வீட்டில் இருக்கும் உறவினர்களோ இந்த புத்தகத்தில் உள்ள சிறுவருக்கான துள்ளலான பாடல்களை தங்களுக்குப் பிடித்த மெட்டுகளில் பாடிக்காட்டினால் குழந்தைகளுடன் நாமும் உற்சாகமாவது நிச்சயம்.

குழந்தைகளுக்கானப் பாடல்களை பாடவும், இசையமைக்கவும் 
முற்படுவோர் இந்த பாடல்களுக்கு இனிமையாக இசையமைத்துப் பாடித்தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புக் கொடுக்கிறது இந்த எளிமையான பாடல் வரிகள்.பொங்கல், போகிப்பண்டிகை, தீபாவளி போன்ற பண்டிகைகளின் சிறப்பு ஆகியவை பாடல் வழியே சொல்லிக்கொடுக்கப்படும் பொழுது சிறுவர்கள் மறக்கவே மாட்டார்கள்.நெகிழிப்பையைத் தவிர்ப்போம், இரத்ததானம், யோகா செய்வோம், விரைவு உணவு வேண்டாம், செய்தித்தாள் படிப்போம், மரம் வளர்ப்போம்,நூலகம் செல்வோம்  போன்ற பல  நல்ல பழக்க வழக்கங்கள் பாடாலாய்ப் பாடப்படும் பொழுது பசுமரத்து ஆணிப்போல அவர்களின் மனதில் பதியும் வாய்ப்பு அதிகம்.


பாடப்புத்தகங்களில் உள்ள பழைய பாடல்களையே பாடி கற்பிப்பது சலிப்பாய் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த கருத்தான புதுப் பாடல்களை பாடிக் கற்பிக்க முயற்சி செய்யலாம்.குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பூனை, அணில், தென்னை மரம்,ஆதவன், அலைபேசி, பப்பி போன்றவைகளுக்கு எல்லாம் இந்தப் புத்தகத்தில் பிரத்யேகமாய் பாடல் இருக்கின்றது. அதைப் பாடும்பொழுது சிறுவர்கள் அந்த விலங்குகள் மற்றும் பொருட்களின் பெயர்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதுடன் அதன் பெருமை மற்றும் உபயோகத்தையும் அறிந்து கொள்வார்கள்.


உண்ணும் உணவுப்பொருட்களான மாம்பழம்,காளான், காய், கனி,
தோசை, கூட்டாஞ்சோறு போன்றவற்றைப் பற்றி இப்புத்தகத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதனால் சிறுவர்களைச் சாப்பிட வைக்கும் இமாலய வேலை இலகுவாகி விடும்.பாட்டுப்பாடி கொஞ்சம் முகபாவங்கள் செய்து ஆட்டம் ஆடி காட்டினால் ஆவென்று வாயைத் திறக்கும் பொழுது அதே உணவு வகைகளை ஊட்டி விட்டு விடலாம்.மறந்து போன  விளையாட்டுக்களான நொண்டி ஆட்டம், ராட்டினம், பலூன், பம்பரம்,விழுது ஊஞ்சல், தஞ்சாவூர் பொம்மை விளையாட்டு போன்றவைகளுக்கான  பாடலை நாம்பாடும் பொழுது நமக்கே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்.குழந்தைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும். அவர்களும் அதையெல்லாம் பார்க்கவாவது வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.அதைச் சாக்காக வைத்து நமக்குப்பிடித்த விளையாட்டை நாமும் விளையாடிக் கொள்ளலாம்.


இது போன்று 99 பாடல்கள் உள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு பாட்டு என்று பாடினால் கூட 3  மாதத்திற்கு மேலாகப் பாடலாம்.ஒரு தடவைக் குழந்தைகயுடன் உட்கார்ந்து ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தால் போதும், நாம் மறந்தால் கூட தினமும் பாடல் பாடலாம் என்று புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் வீட்டு வாண்டுகள்.தொடர்ச்சியாக மின் எந்திரங்களைப் பார்த்துக் கண்வலித்துக் கிடக்கும் குழந்தைகளின் கண்களுக்குமட்டுமல்லாமல் காதுகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்த பாடல்களைப்பாடி ஆடலாம். அதை அவர்களுக்கு இனிமையாக்க, நாம் பாடல் பாட கற்றுக் கொண்டால் மிகச்சிறப்பு. இல்லையென்றால் கொடூரமாய் பாடாதீர்கள் என்று கேட்டு நம்மை அவமானப்படுத்தி விடுவார்கள் நம் வீட்டு சுட்டீஸ்கள்.

Sunday, December 10, 2017

ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம் - புகழேந்தி தங்கராஜ்

அறியப்படாத புதைக்கப்பட்ட வரலாற்றையும்,  மறைக்கப்பட்ட உண்மையையும் நம்  நாளையத்தலைமுறைக்கு  சொல்லவில்லை என்றால் நிச்சயம்  நாமும் குற்றவாளிதான். 


தமிழில் முதன் முதலாய் வரலாற்று ஓவியப் பதிவு, எழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  1987 களில் நடந்த தமிழினத்தின் மீதான வஞ்சத்தையும் துரோகத்தையும் விவரிக்கிறது. சிங்களர்களின் சூழ்ச்சியாலும், இந்தியாவின் அறியாமையாலும் இந்திய இராணுவமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் எப்படி பிரிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது என்பதை உணர்ச்சிகளோடு உணர்த்துகிறது புகழேந்தி தங்கராஜின் புத்தகம்.

வன்னிக்கலைஞனின் ஓவியங்களை வெறும் வரைபடமாகக் கடந்து செல்ல இயலவில்லை.எழுத்துக்களால் நம் மனதிலே ஏற்படும் தாக்கங்களை விட ஓவியங்கள் அதிவிரைவாக வலியையும் எழுச்சியையும் கடத்துகின்றது.மருத்துவமாணவரான திலீபன் படித்த யாழ்ப் பல்கலைக்கழகக் கல்லூரியிலேயே அவர் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கிடத்தப்பட்டிருந்ததை படிக்கும் பொழுது , அவரின் உடலைப் பார்த்து கலங்கிய அந்த கல்லூரி மாணவர்களின் துயரத்தை நம்மாலும் உணரமுடிகிறது.


சிறு வயதிலேயே தன் மக்களுக்காகவும்  லட்சியத்திற்காகவும் திலீபன் கொண்டிருந்த துணிச்சல், நம் தலைமுறையினர் அவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடம். 17 புலிகளைக் கைது செய்து விளம்பரம் தேடிக் கொள்ள நினைத்தவர்களை பழிவாங்குவதற்கு புலேந்திரன், குமரப்பா போன்று 12 வீரர்கள் சயனைடு குப்பிகளின் உதவியை நாடியதே இனவிடுதலையின் எழுச்சிப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்ததை தெரிந்து கொண்ட பொழுது இதயம் இரணமானது. 

இந்திய அமைதிப்படை அவர்களைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்லவிடாமல் உதவி செய்ய முயற்சி செய்த போதிலும் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என்.தீட்சித் போன்று, இரட்டை வேடம் போடும் அதிகாரிகள், பிரதமர் இராஜீவ் காந்தி போன்ற மனிதர்களின் அலட்சியம் ஒரு இனத்தை அழிப்பதற்குக் காரணமாய் அமைந்தது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையான தலைவனுக்குத் தேவையான பண்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கற்கலாம்.தலைசிறந்த அதிகாரியாய் விளங்குவதற்கான நல்ல எண்ணங்களை இந்திய அமைதிகாப்புப் படை அதிகாரி ஹர்கிரட் சிங்கிடம் தெரிந்து கொள்ளலாம்.


 1200 வீரர்களைப் பறிகொடுக்க வைத்த பின் 1990 ஆம் ஆண்டு  
பாரம்பரியமிக்க இந்திய இராணுவத்தை அவமானத்துடனும் தோல்வியுடனும் இலங்கையைவிட்டு வெளியேறச் செய்த இலங்கை அதிபர் ஜயவர்தனாவின் சூழ்ச்சியை இந்தியா அறிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, December 6, 2017

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா

34 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் ஒரு பிராமண சமூகத்தைப் பற்றிய வாழ்வியலை மட்டும் தெரிந்து கொண்டோம் என்று தளர்வாய் இருந்து விட முடியவில்லை.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டு விவரிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒரு சமுதாயத்தைப் பற்றிய வெளிப்பாடாய் மட்டும் இல்லாமல் பல வகையான மனிதர்களின் இயல்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது.

கதைகள் அனைத்தும் புதினமாய் உண்மையும் கற்பனையும் கலந்திருந்தாலும் சுவாரசியத்திற்கு கொஞ்சமும்  குறைச்சல் இல்லை.குண்டு ரமணி போன்று மந்தமான வித்தியாசமான மனிதர்களை நம் வீட்டுத் தெருக்களில் நாமும்  நிச்சயம் பார்த்திருப்போம். அவளுக்குள் மறைந்திருக்கும் சோகக்கதை தெரிந்தவுடன் நாம் கேலி பேசி கடந்து சென்ற மனிதருக்குப் பின்னும்
எவ்வளவு சோகம் ஒளிந்திருக்கும் என்றே மனம் எண்ணுகிறது.

பால்ய கால நட்பு, சேட்டை, பகை , துரோகம் என்று அவர் கூறும் அனைத்துக் கதைகளும் நம் மனதில் அழுத்தமாய் பதிவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் அவர் கூறும் சேட்டைகளை ஏதோஒரு வகையில் நாமும் செய்திருப்பதுதான். வீட்டு வேலை 
செய்தவரின் சம்பளப் பணத்தை செலவழித்துவிட்டு , பணம் எங்காவது தொலைந்திருக்கும் என்று கூறிச் சமாளித்ததை விவரிக்கையில் நம் வாழ்வில் நாம் செய்த சிறிய அல்ல பெரிய திருட்டுதான் ஞாபகம் வருகிறது.


கல்லூரியில் தன் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரின் மகனின் குறைப்பாட்டிற்கான காரணத்தையும் மருந்தையும் தன் ஆராய்ச்சியால் கண்டுபிடித்திருப்பது புனைவாய் இருந்திருந்தாலும் நெகிழ்ச்சியைத்தான் தருகிறது.தற்பொழுது ஸ்ரீரங்கமும் அதன் சுற்றமும் வெகுவாய் மாறி  இருந்தாலும், எழுத்தாளர் தன் காலத்தில் இருந்த கதை மாந்தர்களையும் , வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருப்பது பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.

தன்னைவிட பத்துவயது மூத்த பம்பாய் மாலினி மேல் ஏற்படும்  இனம் புரியா ஈர்ப்பு,  நம்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஈர்த்த எதிர்பாலினத்தின் மேல் நாம் கொண்ட போதையையே ஞாபகப்படுத்துகிறது. ஓலைப்பட்டாசு, வீட்டிலேயே சினிமா பார்க்க வாங்கி பொசுங்கிப்போன  சினிமா ப்ரொஜக்டர், இளவயது ஆட்டங்களை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள்.
சாவித்திரி போன்ற முகஜாடை உடைய பெண்ணை சாவித்திரி என்று நம்பவைத்து நடத்தப்பட்ட நாடகம் , பால்காரரின் மாட்டையே அதிர்ஷ்ட குலுக்கல் பரிசாக பால்காரருக்கு அளிக்க முயற்சி செய்த லாவகம் என்று பரபரப்பை ஏற்படுத்தி நகைக்க வைக்கும் கதைகளை  ஆர்வமாய் எழுதச்செய்யும் கலையை எழுத்தாளரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.



ஶ்ரீரங்கத்துத் தேவதைகளின் மீது காதல் கொள்ள இந்த ஶ்ரீரங்கத்துக் கதைகள் தூதுவிடுகின்றன.

Thursday, November 23, 2017

குறை தீர்க்கும் கோயில்கள் கவிதை வடிவில் - கவிநெஞ்சன் இராஜகோபால்

சிறுவயதிலிருந்து குடும்பத்தினர் வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்காகவே தமிழ்நாட்டில் பலக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்,கல்சிற்பங்கள், கட்டிடக்கலைகளை இரசித்து பிரமிக்க முடியும். நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைபட முடியும்.ருசியான பிரசாதங்களை உண்ண முடியும். நிறைய வேண்டுதல்களால் கேட்டது கிடைக்கும். இது போன்ற பல காரணங்களுக்காகத் தான் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். 


பெரும்பாலும் கோவில்கள் பெரியதாக இருப்பதால் நடந்து நடந்து கால்கள் நன்றாகவே வலிக்கும்.அதுவும் நல்ல கற்களால் அமைந்த பாதைகளில் நடக்கும் பொழுது, பாதங்களில் குத்துவது போன்றவே இருக்கும்.அதிலும் கற்பாதைகளில் பல சுற்றுக்கள் சுற்றி வரச் சொல்வார்கள்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் நம் முன்னோர்கள் அக்குப்பஞ்சர் முறை போன்று நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்று. நம் பாதங்களில் தானே பல உறுப்புகளை இயக்குவதற்கு உண்டான புள்ளிகள் உள்ளன.இப்படி ஒரு கோவிலினாலும் அந்தக் கோவிலில் வழிபாடு செய்வதாலும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் நன்மைகள் பல.

இந்த புத்தகத்தில் முதலில் நான் எனக்குத் தெரிந்த, நான் சென்று வந்த கோயில்களைத் தான் முதலில் ஆர்வமாய்ப் படித்தேன்.எனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அருகே இருக்கும் கழுகுமலைக் கோவிலுக்குப் பல முறைச் சென்றிருக்கிறேன்.குடவறைக்கோயிலான கழுகுமலையில்  முருகன் ஆறுகரத்துடன் வெற்றிவேல் கொண்டு வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பார். 

ஜடாயு சீதையைக் காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் இறக்க , ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு இறுதிக்கிரியை செய்து வைத்திருப்பார். ஜடாயுவின் தம்பி சம்பாதி ஈமக்கிரியை செய்யாத பாவத்தைப் போக்குவதற்காகவே ஸ்ரீராமர் சொன்னது போல கஜமுகபர்வதத்தில்  சம்பு பூஜை செய்து வந்திருப்பார்.அவனது பக்தியை சிறப்புக்கும் வகையில் கஜமுகபர்வதம் கழுகுமலை ஆனதென்றும் கூறுகின்றனர்.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று இந்த ஸ்தலத்திற்கான சிறப்பையும் , வரலாற்றுக் கதையையும் இந்தப் புத்தகத்தின் வழியாய் தெரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.



கோவில்பட்டி- சங்கரன்கோவில் சாலையில் 30 கி.மீ தூரம் என்றும் இக்கோவிலுக்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.இப்படி 99 கோவிலின் சிறப்புகள், அதற்குப் பின் இருக்கும் பல வரவலாற்றுக் கதைகள், அமைந்திருக்கும் இடம் என்று பல தகவல்களை இரத்தினச்  சுருக்கமாகக் கவிதை நடையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிநெஞ்சன் இராஜகோபால். புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது இதன் அடுத்த பகுதியாக இன்னும் பல அறியப்படாத கோவில்களைப் பற்றி எழுதி அவர் அதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையே மனதிற்குள் ஏற்பட்டது.

பாகற்காய் சனிபகவான் போன்று பல வித்தியாசமான வழிபாடுகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. தெரிந்த கோவில்கள் ஆனால் தெரியாத வரலாற்றுக் கதைகள், இறைவனின் பெயர்க்காரணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்கையில் ஒவ்வொரு கோயிலுக்குப் போகும் முன்னே இந்த வரலாறுகளை நிச்சயம் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உலோகக்கலவையைக் கொண்டு அழகான சிற்பம் செய்ய முடியாமல் வருந்திய சிற்பிகளுக்காக பசியென்று பாசாங்கு செய்து உலோகக் கலவையைக்குடித்து சிலைவடிவமாய் காட்சி தந்த சிவபெருமானும், சிவகாமியும் போன்று உருக வைக்கும் கதைகள் ஏராளம்.பச்சைமால் தம்பதியினர் கதைகளைத் தன்னுள் கொண்ட சதுரிகிரி மலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.திருப்புல்லானியில் பாயாசத்தைப் பற்றிக் குறிப்பிடாததுதான் எனக்குச் சின்ன வருத்தம்.

பெரிய புகழ்பெற்றக் கோவில்களைப் பற்றிய பதிவுகள் பல இடங்களில் பல புத்தகங்களில் காணப்படும். ஆனால் சக்தி வாய்ந்த தொன்மையான சிறிய கோவில்களைப் பற்றிய பதிவுகள் வரவேற்கத்தக்கதுதான்.


நம் மாநிலத்தில் மட்டுமல்லாது வேறு மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கும் சென்று பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் கதைகளும் நம்மை ஈர்க்கவே செய்கின்றன.சென்றுவந்தக் கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளாத பல சிறப்புகளை  தாமதமாக தெரிந்து கொண்டாலும் நமக்குக் கிடைப்பது நன்மையும் பெருமையும் தான் .பெரும்பாலும் எல்லா மாவட்டத்தின் கோவில்களின் புராணங்கள் சொல்லப்பட்டிருப்பதால் எல்லா ஊர்க்காரர்களும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது புரட்டிப் படிப்பார்கள்.அவர்களை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றலும் இந்த கவிதைகளுக்குள் ஒளிந்துகிடக்கிறது.

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினம் - நவம்பர் 14... அகில இந்திய வானொலியில்


https://drive.google.com/file/d/1rjgGEc-uIvtJKwv_WZ1h8UkHBEhfdmHI/view?usp=drivesdk

காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜவர்ஹலால் நேரு குழந்தைகளின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டதனாலேயே ,நம் நாட்டில் எல்லா குழந்தைகளும் அடிப்படைத் தேவைகளையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக, அவரது பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.





இப்பொழுது குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்றஎல்லா துறைகளிலும்  தங்கள் திறமைகளை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். சிறுவயதிலேயே மேடைபயங்களையெல்லாம் காலடியில் மிதித்து வானொலி,தொலைக்காட்சி, பத்திரிக்கைத்துறை, இணைய ஊடகங்கள் என்று வெற்றிக் கொடி பறக்கவிடும் ஆயிரக்கணக்கான  குழந்தைகளை நாம் அறிவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை விட அவர்களது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமை வெளிப்படுவதில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெற்றோர்கள் ஈடுபாடு கொண்டிருப்பது ஒருவகையில் குழந்தைகளுக்கு  வழிகாட்டுதலாகவும் , ஊக்கம் தருவதாக இருந்தாலும் மற்றொரு வகையில் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது  என்பது நமக்கு கவலை தரும் செய்தி.  

பொரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் குழந்தைகளின் மேல்  ஆர்வக்கோளாறாய் திணித்துவிடுகின்றனர். அது அவர்களது குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியையும் பறித்துவிடுகின்றது. 


பாலியல் குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்க குழந்தைகளுக்கான இந்த நல்ல நாளிலேயே ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய புரிதல்களையும்,  விழிப்புணர்வையும் நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நம்கடமையாகும்.

கதை சொல்லக் கேட்டு நச்சரித்தக் குழந்தைகள் இப்பொழுது மின்னனு எந்திரங்கள் போதுமென்று திருப்திப்பட்டுக் கொள்வதற்குப் பெற்றோர்களே காரணமாக இருப்பது வேதனையான விஷயம்.நல்ல பழக்க வழக்கங்களையும், சகமனிதர்களை அன்போடு அரவணைக்கும் பாங்கையும் நாம் தானே நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் 

குழந்தைகளைத் தொழிலாளர்களாய்ப் பணியில் அமர்த்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்றாலும் வறுமை அந்த பிஞ்சுக் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடச்செய்வதோடு  , சமூக விரோதிகளுடன் சேர வைத்து சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடவைத்துவிடுகிறது.

ஒரு பக்கம் குழந்தைகள் உணவில்லாமல் வறுமையில் வாடுகின்றார்கள் என்றால் மறுபக்கம் சமநிலையற்ற நச்சுத்தன்மை நிறைந்த உணவு போன்றவற்றால்  அதிக எடை கொண்டு குழந்தைகள் பல வகையான நோய்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

உணவு,உடை,இருக்க இடம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ குழந்தைகளை நாம் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பார்க்க நேர்கிறது. இன்று ஒருநாள் மட்டும் குழந்தைகளிடையே போட்டிகள் நடத்தியோ, தலைவர்களைப் போல் வேடம் அணிவித்தோ இந்தநாளைச் சிறப்பாய் கொண்டாடிவிட்டோம் என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.


எல்லா குழந்தைகளும் அடிப்படைக் கல்வியாவது பெற்றிட நம்மாளான உதவிகளைச்  செய்வோம் என்று உறுதி ஏற்போம். அவர்கள் வருங்கால இந்தியாவை வேர்களாகத் தாங்கி உலகநாடுகள் மத்தியில் ஒளிரச் செய்துவிடுவார்கள் என்று நம் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்போம்.

Monday, November 6, 2017

தமிழனின் தத்துவம் - திருக்குறள் அறம் - விஸ்வேஸ்வரன்

திருக்குறளுக்கு கலைஞர் கருணாநிதி, பரிமேலழகர், மு.வரதராசனார், தேவநேயப்பாவணர்னு பல பேர் பல தெளிவுரைகள் எழுதியிருக்கும் போது , இந்தத் தெளிவுரை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு நீங்க நினைக்கிறதயேத்தான் நானும் யோசிச்சேன்.


'இன்னை'க்குங்கிற சொல் மருவி 'இம்மை'க்குன்னு சொல்லா ஆனது.
ஆகமம் என்பது பாவ புண்ணியங்களைக் கூறும் ஆரியவேத மரபு நூல். அதற்கு உட்பட்டு பரிமேலழகர் இம்மை என்ற சொல்லுக்கு இப்பிறவி என்று பொருள் தருவது,  திணிக்கப்பட்ட பொருளாத்தான்  தோன்றுகிறது. இப்படிப்பல அறிஞர்கள் பல  வகையான அர்த்தங்களை வலிந்து புகுத்துகின்றமாதிரியே திருக்குறளோட பல உரைகள் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த உரை தமிழ்பண்பு மாறாமல் மதச்சார்பில்லாமல் இயற்றப்பட்டிருக்கிறது.

அதிகாரம் (1-4)    அடிப்படைக் கல்வி,அதைக் கற்றுத் தரும் ஆசிரியர்,
அதிகாரம்(5-7) இல்லறம், குடும்பம் ,
அதிகாரம்( 8-21)அன்புடையார் ,
அதிகாரம்(22-33) அருளாளர்,இப்படி மனிதவாழ்வினைப்பிரித்து வாழ்க்கையிள் விளக்கம் கூறுவது திருக்குறள்.
அதிகாரம் (34-38) உபநிடத, கீதையின் கருத்துகளை மறுக்கின்ற பகுதி.

பிரம்ச்சரியம், கிரஹஸ்தம், வனப்ரஸ்தம், சந்யாசம்ங்கிற நான்கு ஆசிரமங்களைக் கொண்ட நூல் மநுதர்மம். இந்நூல் திருக்குறளின் மேற்கூறிய பிரிவினைகளை  ஏற்று ஆரிய வேதக்கருத்துகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு இயற்றப்பட்டிருக்கிறது.

'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தா னிடை'. என்னும் குறளில் சிவிகையில்(பல்லக்கில்)  செல்பவர்கள் அறச்செயல் செய்தவர்கள். சிவிகையைச் சுமப்பவர்கள் பாவம் செய்தவர்கள் என்று அறத்தின் பெருமையை விளக்குகின்றார் பரிமேலழகர்.
ஆனால் சிவிகையைச் சுமப்பவனுக்கும், சுமந்து செல்பவனுக்கும் அறம் ஒன்று என்று இந்த நூலின் உரை ஆசிரியர் குறிப்பிடுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஒருவன் அவனது முந்தையப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் காரணமாய் சிவிகையைச் சுமந்தும் , பயணம் செய்வதும் என்று சொல்வது ஏற்புடையதாய் இல்லை.எந்தத் தொழிலும் தாழ்வில்லை தானே.

மக்கட்பேறு அதிகாரத்தில் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் ' என்ற குறளில்  சிறுகுழந்தை பிஞ்சுக் கரங்களால் கலக்கி விளையாடிய கூழ் அமிழ்தத்தை விட உயர்ந்தது என்று பதிவிடும் பொழுது வள்ளுவர்  தேவர்களுடைய பானமான அமிர்தம் உயர்வானதல்ல என்று கூறுவதையே  ஆசிரியர் தன்னோட கருத்தாய்த் தெரிவிக்கின்றார்.தேவரன்ன கயவர், ஒழுக்கமற்ற தேவர்னு திருக்குறள்ல இருக்கிற பதிவுகளையும் எடுத்துக்காட்டா கூறி விளக்குகின்றார்.

திருக்குறள்-கீதை பற்றிய ஒரு ஒப்புநோக்கு SACP2014 ( society for Asian comparative philosophy conference) என்ற மாநாட்டில் philosophy of peninsular India  என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஏற்கப்பட்டு, திருக்குறளோட புகழை உலகறியச் செய்திருக்கிறார் ஆசிரியர். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தநூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறளோட அறத்துப்பால் உள்ள 38 அதிகாரங்களுக்கு இந்ந நூலில் தெளிவுரை விளக்கப்பட்டிருக்கிறது.


இந்தநூலின் இன்றைய தேவை : உலகளவில் இந்திய சிந்தனையியல் (INDOLOGY) பற்றிய நூல்கள் பெரும்பாலும் உபநிடதங்கள், கீதை, இராமாயணம், மகாபாரதம் என்ற வேதமரபிலான சிந்தனைகளே ஆகும். தமிழ் தொன்மொழி, அதன் நூல்களை தாங்கள் மொழியில் மாற்றி, பின்னர் மூலநூல்களை வேதமரபினர்அழித்து விட்டனர் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சரியானதே. இந்த நூல் கீதை, மநுதர்மம் ஆகியநூல்கள் திருக்குறள் கருத்துகளை ஏற்று திரிபு செய்யப்பட்டது என்பதை விளக்கும். மேலும் இந்திய சிந்தனையியல் வளர்ச்சியில் தமிழின் தனித்துவம் ஓரளவு விளங்கும்.வடமொழி மட்டுமே தனித்துவம் பெற்றது என்ற தவறான வாதத்தை இந்நூல் முறியடிக்கிறது.