Tuesday, August 29, 2017

சமுதாய முன்னேற்றங்கள்

https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0WFVOVE4ydFFmMGM/view?usp=drivesdk





தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  என்று அன்றே சொன்னான் முண்டாசுக்கவிஞன் பாரதியார். நான், என் குடும்பம் , எங்களது முன்னேற்றம் என்று சுயநலமாக இருக்கக் கூடாது. தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்காகவும், சமூக மக்களுக்காகவும்  குரல் கொடுக்க அன்றே சொல்லிக்கொடுத்தான் எங்கள் எட்டயபுரத்துக் கவிஞன்.

சமுதாயம் என்றால் அன்னியர்கள் அல்ல....நாம், நம் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் , தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற அனைவரும் தான். ஆண்கள், பெண்கள் என்று அனைவருமே பல தடைகளைத் தாண்டி  இந்த சமுதாயத்தில் முன்னேற முயற்சி செய்கிறார்கள். அதே போன்று பல மடங்கு போராடி தங்களது திறமையை நிரூபிக்க போராடுபவர்கள் தான்  மூன்றாம் பாலினத்தவர்கள்.

அரசாங்கம் அவர்களுக்குப் பல சலுகைகள் தருகிறது. ஆனால் அவர்களைச் சுற்றி இருக்கும் நாம் அவர்களை ஒரு மனிதராக மதித்து மரியாதை செலுத்த வேண்டும். அவர்களைப் பார்த்தவுடன் முகம் சுளித்துக்கொள்ளாமல் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.  பசித்திருப்பவனுக்கு மீன்துண்டைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுத்தருவது சிறந்தது. அவர்கள் கைநீட்டும் பொழுது பணம் கொடுப்பதைவிட பணம் சம்பாதிப்பதற்கான வேலை வாய்ப்பைப் பகிர்ந்து கொண்டோமானால் அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உதவி.இந்தக் கண்ணோட்டம் நம் கண் முன்னே வறுமையின் பிடியில் வாடும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு மனிதருக்கு அடிப்படைத்தேவை உடை, உணவு, இருப்பிடம். இந்த அடிப்படைத் தேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க நம்மால் ஆன முயற்சியை செய்ய வேண்டும்.மனித நேயத்துடன் மற்றவரின் பிரச்சனைகளை அணுக நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.ஒரு பிரிவினர்களால் ஒதுக்கபட்டவருக்கு நம்மால் முடிந்த  வகையில் துணை நிற்க வேண்டும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களை எப்பொழுதும் நம்மைவிட தாழ்வாக நினைக்கக் கூடாது.அவர்களது முன்னேற்றங்களில் நம்மால் ஆன உதவிகளைச் செய்திட வேண்டும். விளிம்பு நிலை மனிதர்கள் என்று அழைக்கப்படும் அனைத்து துறையைச் சேர்ந்த சாமானிய மனிதர்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயர்ந்திட வேண்டும்.மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் அவலநிலை மாற நம்மால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

விஞ்ஞான வளர்ச்சிகளை மட்டும் முன்னேற்றம் என்ற மாயையிலிருந்து மீள வேண்டும். 
இயற்கை வளத்தைப்பாதுகாத்து நம் வருங்கால சந்ததியினருக்கு வளமான ஆரோக்யமான சூழலை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கனியன் பூங்குன்றனாரின் கருத்துக்களை நினைவில் நிறுத்துவோம். நம்மைச் சுற்றி உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நமக்கு நெருக்கமானவர்களாக கருதி அவர்களது நிலையிலிருந்து முன்னேறத் தோள் கொடுப்போம்.

No comments:

Post a Comment