Sunday, December 4, 2016

கதை - நவீன சுயம்வரம்ஒரே ஒரு ஊர்ல - நவீன சுயம்வரம்

இரயில் மெதுமெதுவாகப் புறப்பட்டுக் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் சென்றது.ஆனால் கவிதாவின் மனமோ திருநெல்வேலியிலேயே தஞ்சம் கொண்டிருந்தது.இரவுநேரக் குளிர்க் காற்றை இரசிக்க ஏனோ கவிதாவிற்கு மனம் வரவில்லை. வெளியே குளிர் உடலை நடுக்கினாலும் கவிதாவிற்கு உள்ளே மனம் அனலாய் கொதித்தது.திருமணமென்பது மாட்டுச்சந்தையோ என்று மனம் நொந்திருந்தாள்.இதுவரை இரண்டு வரன்கள் பார்த்து விட்டு வேண்டாமென்றுச் சென்றுவிட்டார்கள்.அப்பா இரயில் நிலையத்தில் ஊருக்கு வழிஅனுப்பி வைக்கவந்த பொழுது கைபற்றிக் கண்ணீர் சிந்தியது கண்களுக்குள் அவ்வப்போது வந்துவந்து சென்றது.

நேற்றே சென்னைக்குச் சென்றிருக்க வேண்டியது,வரன் பாக்கும் படலத்திற்காக  அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையிலும் உயரதிகாரியிடம் அனுமதிவாங்கியது மேலும் வெறுப்பைத்தந்தது.அம்மா ஆனந்தின் வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்தே திகைத்துத்தான்  போயிருந்தாள்.அப்பாவிற்கோ பெரிய இடத்துச்சம்பந்தம் என்று பெருமை பிடிபடவில்லை.பரம்பரைப் பணக்காரர்கள் என்பதால் தொழிற்சாலை,வீடு,சொந்தக்காரர்கள் வீடு என்று சிறிய ஊர் போல் இருந்ததாகவும் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு சாதனமெல்லாம் பொருத்தப்பட்டிருந்ததாகவும் உற்சாகத்தோடு கூறினார்.

திருமணத்திற்குப் பின் நம்மகளைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றாலும் நாம் வாடகைக்குச் சொகுசுவண்டியில் தான் செல்ல வேண்டும் என்று அம்மா அங்கலாய்த்தாள்.ஆனந்த் ஆஜானபாகுவான தோற்றம் கொண்டிருந்தான்.வெளிநாட்டில் உயர்படிப்பும் படித்திருந்தான்.பெரும் கும்பலாக அவன் குடும்பத்தினா் வீட்டுக்குப் படையெடுத்து வந்திருந்தார்கள்.கவிதா    தைரியமான திறமைசாலி என்று அவள் கல்லூரி நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்து கொண்டதையும், தன் வியாபார சிந்தனைகளையும் கவிதாவிடம் பேசும் பொழுது பகிர்ந்துக்கொண்டான்.


பிடித்திருக்கிறது என்று பூக்களையும்,இனிப்புவகைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றனர்.எல்லோரும் மகிழ்ந்திருந்த வேளையில் எந்த ஒரு குறிப்பானக் காரணத்தையும் கூறாமல் வரன் வேண்டாம் என்று தரகர் வழி கூறிவிட்டனர். அப்பாவோ என் மகளுக்கு நான் எவ்வளவு வரதட்சனை எதிர்பார்த்தாலும் வற்றாமல் கொட்டிக்கொடுப்பேன் என்று விம்மினார்.அம்மாவோ எல்லாம் நன்மைக்கு என்று நினைத்துக் கொள் என்று ஆறுதல் கூறியிருந்தார்.

பகிரியில் குறுஞ்செய்தியின் சத்தத்தில் நினைவலைகளிலிருந்து மீண்ட கவிதா, பள்ளித் தோழி சித்ரா,புதிதாய் திருமணமாகியிருந்த வந்தனா சென்னையில் குடிபெயர்ந்திருப்பதாகவும்,திருமணத்திற்கு செல்லஇயலாத காரணத்தால் இந்த வாரஇறுதி விடுமுறையில் அவளைப் பார்க்கச் செல்வோமென தகவல் தெரிவித்திருந்தாள்.

சரியென்று பதிலனுப்பிவிட்டு நிமர்ந்திருந்த பொழுது இரயில் திண்டுக்கல்லை அடைந்திருந்தது.பெயர்ப்பலகையைக் கண்டதும் மனது மேலும் இருக்கமானது.இரஞ்சித்தின் பெற்றோர் மட்டுமே கவிதாவை அன்று பெண்பார்க்க வந்திருந்தார்கள்.தங்களின்
குடும்பத்தில் வெளிநாட்டிற்குச் செல்வதெல்லாம் சாதாரணமான விஷயமென்றுக் கூறி தாங்களே தங்களின் அருமைப் பெருமைகளைச் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார்கள்.

சமீபத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவிலிருந்து நன்றாக கவிதா குணமாகியிருந்தாலும், ஒருமாதக் காலமாக நடக்க முடியாமல் படுக்கையிலிருந்ததன் விளைவுத் தேவையற்றச் சதைகளாக பற்களைக் காட்டியது.வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூக்களை வலுக்கட்டாயகமாக இரஞ்சித்தின் தாயாரைக் கொடுக்கச் செய்தார் இரஞ்சித்தின் அப்பா. இரஞ்சித்தின் தாயாரோ கவிதாவின் உடல்வாகையேக் கவனித்துக்கொண்டிருந்தார்.இரண்டு நாட்களுக்குப் பின் உடலமைப்பு உருத்தலாய் உள்ளது என்று தட்டிக்கழித்தார்கள்.

அம்மா உனக்கென்னடா தங்கக்கட்டி, அவர்களின் பார்வையில் குறைபாடு என்று கவிதாவைத் தேற்றினாள்.கவிதாவிற்குத் தன்மேலேயே கோபமாக வந்தது.இந்தத் திருமணமெனும் தலைவலியிலிருந்துத் தப்பிப்பதற்காகவாவது வேலையில் வெளிநாட்டு வாய்ப்பைத் தேடவேண்டும் என்று உள்ளம் பொருமியது.சிறுவயதிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவுகள் கூட திருமணத்தால் கலைந்து தான் போய்க்கொண்டிருந்தது.வெளிநாடு செல்வதற்குத் தேவையான தகுதித் தேர்வுகளில் முதல் முயற்சியில் சிறு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் வருத்தத்தையே வாரி இறைத்தது.

இதயம் கனமானதால் வலிதாங்க முடியாமல் கண்கள் பனித்தது.
கண்கள் தூக்கத்தை தழுவியது.இருள் மறைந்து,பொழுது புலர்ந்த போது மனதிலிருந்த துக்க மூடுபனியும் மெதுவாக விலகியிருந்தது.
எப்படியாவது வெளிநாடு செல்வதற்கானத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து கனவுகளை நினைவாக்கி விட வேண்டுமென்ற
எண்ணம் மனதில் பரவிக்கிடந்தது.அதற்குத் தேவையான பயிற்சிகளையும்,ஆவணங்களையும் இணையதளத்தில் தேடி பதிவிறக்கம் செய்து கொண்டாள்.ஏற்கனவே அத்தேர்வில் வெற்றிப்பெற்றவர்களின் வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டாள்.

அலுவலகநேரம் போக கிடைத்த நேரத்தில் அலுவலகத்திலேயே நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பிற்கும் சென்று அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டாள்.அந்தவார இறுதி விடுமுறையில் தோழிகள் சித்ராவையும்,வந்தனாவையும் சந்தித்துப் பேசியது உற்சாகத்தைப் பலமடங்காக்கியது.

வந்தனாவின் கணவரிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுதுதான் ஆனந்த் அவரின் சகோதரரின் நெருங்கிய நண்பரென்ற விவரம் தெரிந்தது.வரன்களைப் பற்றி வெறுப்புடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் எதேச்சையாக விவரங்கள் அறிந்து கொண்டு நல்லவேளை உங்களுக்கு அவனோடு நிச்சியதார்த்தம் நடக்கவில்லை என்று நகைத்தார்,உங்களை ஆறுதல் படுத்துவதற்காகக் கூறவில்லை அவனைவிட நல்லவாழ்க்கைத் துணைஉங்களைக் கரம்பற்றுவார் என்று மனமாரக் கூறினார்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற கீதாஉபசாரம் காதில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.வெளிநாட்டுக்குச் செல்வதற்குத் தேர்ச்சிப்பெற வேண்டிய எழுத்துத் தேர்வும்,நடைமுறைத் தகுதித் தேர்வும் மிகுந்த கடின உழைப்பிற்குப் பின் கவிதா வெற்றிகரமாக எழுதிமுடித்து விட்டாள்.மனமெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருந்த வேளையில் நெருங்கியக் கல்லூரித்தோழி காயத்ரியிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.இரஞ்சித்தும் காயத்ரியும் பக்கத்து வீடு என்பதால் இரஞ்சித்பெற்றோர் வீட்டுக்கு வருவதற்கு முன்பு அப்பா அவர்கள் குடும்பத்தைப்பற்றி காயத்ரியிடம் விசாரித்தது ஞாபகம் வந்தது.

கவிதா காயத்ரியிடம் அந்த சம்பந்தம் கைகூடவில்லை என்றவுடன் காயத்ரி உற்சாகமாய் நல்லவேளையென்றது கவிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அது மிகவும் குழப்பமான குடும்பம் அவர்களைப் பற்றி அருகே வசிப்பவர்களுக்குக் கூட நல்ல அபிப்பிராயம் கிடையாதென்ற உண்மையைப் போட்டுடைத்தாள்.அவர்கள் மகனுக்குத் திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கூடத்தெரியாமல்,எல்லாவரன்களையும் நேரில் பார்த்தபின்பு ஏதேனும் காரணம்கூறி நிராகரித்துவருவதால் எல்லா தரகர்ளும் அவர்களுக்கு இனிமேல் எந்த வரனும் அறிமுகப்படுத்தக்கூடாது என்ற முடிவுசெய்திருப்பதாக அவள் தந்தை கூறியதைத் தெரிவித்தாள்.

மாமியார் கொடுமையிலுருந்து தப்பித்துவிட்டாயென்று கேலி செய்து தேற்றினாள்.உன்னை வேண்டாமென்றுச் சொல்லியதற்கு அவர்கள் தான் வருத்தப்பட வேண்டும் நீ வருத்தம் கொள்ளத்தேவையில்லை என்று உற்சாகமூட்டினாள்.அலுவலக நண்பன் கணேஷ், வேலைபழுவின் அழுத்தத்திலிருந்தும்,உடல் ஆரோக்யத்தைக் கவனித்து கொள்ளவும் உடற்பயிற்சி மற்றும் யோக கலையின் முக்கியத்தை உணவு இடைவெளியின் போது பகிர்ந்து கொண்டது மனதிற்கு உத்வேகத்தை ஊட்டியது. இன்றைய வாழ்க்கை முறையில் தாமதமாக நாம் உட்கொள்ளும் உணவும்,தீமைகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்பதாலேயே உடல் பருமனுக்குக் காரணமென்று உணர்ந்துக் கொண்டாள். அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும்,நம் உடலை நாம் ஆரோக்யமாகவும்,அழகாகவும் பராமரித்துக் கொள்ள எண்ணம் கொண்டாள்.

அலுவலகத்தில் மின்தூக்கிக்குப் பதிலாகப் படிக்கட்டுக்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தாள்.ஒத்த சிந்தனையுடைய நண்பர்களுடன் அலுவலகத்திலேயே உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டாள்.இயற்கையானச் சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவுகளில் நாட்டம் கொண்டுத் துரித உணவுகள் உட்கொள்வதைக் குறைத்துக்கொண்டாள்.

வாழ்வுமுறையில் மாற்றம் செய்துகொண்டதின் பலன்களை நன்றாக அனுபவிக்கலானாள்.வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புப் பிரகாசமாய் இருப்பதை மின்னஞ்சல் உறுதி செய்திருந்த வேளையில் அப்பாவிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.சென்னையிலேயே ஒரு வரன் வந்திருப்பதாகவும்,புகைப்படத்தைப் பார்த்தே விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.ஜாதகம் நன்றாக பொருந்தியுள்ளதாகவும்,மகனுக்கு சம்மதமென்றாள் பெற்றோருக்கும் மனப்பூர்வமான சம்மதமென்றும் தெரிவித்திருப்பதாக கவிதாவின் அப்பா தெரிவித்தார்.

ஏற்கனவே இருவரன்கள் வீட்டிற்கு வந்து வேண்டாமென்று கூறியதாலும்,கவிதாவின் அலுவலகத்திலேயே அந்தப் பையனும் வேலைசெய்துக் கொண்டிருப்பதால் தகவல்களைக் கொடுத்து அவர்களையே சந்தித்துக்கொண்டு விருப்பம் தெரிவிக்குமாறுக் கூறினார்.

புகைப்படத்தைவிட நேரில் வசீகரத்தார் விஜய்.தன் மனைவிக்குயென தனி அடையாளம் வேண்டுமென்றும்,அவள் கனவுகளை நினைவுகளாக மாற்றும் கணவனாக இருப்பேனென்று விஜய் கூறியபொழுது  கவிதாவின் கண்ணில் ஆனந்தக்கண்ணீரும் விஜயை வியைந்து பார்த்தது.

4 comments:

  1. அருமையாக இருக்கிறது அபி கதை உண்மை கதை போல் இருக்கிறது

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது அபி கதை உண்மை கதை போல் இருக்கிறது

    ReplyDelete