Saturday, February 18, 2017

பாய்மரக் கடலோரத்தினிலே

ஜூமைரா (jumeirah) சாலையில் சுற்றிப்பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் இருந்தன. சாலையின் இடதுபக்கம் துபாய் மிருககாட்சிசாலை, ஐரோப்பிய கட்டமைப்பு கொண்ட மெர்கடோ (mercato mall) பேரங்காடி, wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park) ஆகியவை நிறைந்து இருந்தன. 

என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை , குழந்தை அனைவரையும் அழைத்துக் கொண்டு வாடகை வண்டியில் அரபிய வளைகுடாவிலேயே மிகுந்த பழமையான துபாய் மிருககாட்சி சாலைக்குப் பயணமானோம். என் குழந்தையின் இழுபெட்டியை (perambulator)  சரியான முறையில் மடக்கி வண்டியில் ஏற்றி இறக்குவதே எனக்கு பெரிய பொறுப்பாக இருந்தது.

இதற்காகவே எனக்கு பிரத்யேகப் பயிற்சியைக் கணவர் அளித்தார் என்றார் அனைவரும் சிரிப்பார்கள். கணவர்  உடன் வந்திருந்தால் மகிழ்ச்சியாக அக்கறையுடன் அப்பொறுப்பை  ஏற்றிருந்திருப்பார்.
செவ்வாய் கிழமை மிருககாட்சிசாலை விடுமுறை என்பதை அறிந்தே சுற்றுலா அட்டவணையைத் தயார் செய்திருந்தோம். தொழுகை நேரம் மற்றும் ஓட்டுநர்கள் பணி நேரமாற்றம் நடைபெறும் என்பதனால் மதியம் மூன்று மணி அளவில் சாலையில் வாடகை வண்டி கிடைப்பது மிகவும் அரிது.

அப்படி வண்டி தேவையென்றால் ஏற்கனவே பதிவு செய்து கொள்வது நல்லது. என்ன, சில திராம்கள் கூடுதலாகச் செலவானாலும் வண்டிக்காக சாலையோரம் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. பின்னொரு நாளில் என் மாமா,  அத்தையை அழைத்து மிருககாட்சி சாலைக்கு செல்கையில் அன்று செவ்வாய்க் கிழமை என்பதை மறந்து விட்டதால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேர்ந்தது. விலங்குகாட்சி சாலைக்குக் கட்டணம் 2 திராம்கள் தான் என்பதும் ஆச்சர்யமூட்டியது.

மிருககாட்சிசாலையின் தரத்தை உயர்த்தும் வண்ணம் புதிதாக கொண்டுவரப்போகும் பல சொகுசு மற்றும் சாகசத் திட்டங்களை தொலைக்காட்சியில் காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பல கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்து அரிதான மற்றும் அழிவின்விளிம்பில் உள்ள விலங்குகளை கொண்டுவந்து சுதந்திரமாக உலாவவிட்டு , நாம் கூண்டுபோன்ற வண்‌டிகளிலிருந்தோ , திருகு உருளை ஏற்றப்பொறியின் (winch) உதவியுடன் மேலிருந்து கீழே உள்ள விலங்குகளைப் பார்த்து இரசிக்கும் வசதி செய்யப்படும் என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.

பல வண்ணப் பறவைகள் , கிளிகள், ஹெர்ரிங் (herring gull) கடற்பறவைகள், (flamingo) செந்நாறைகள் அனைத்தையும் பார்த்து என் குழந்தையின் மனதோடு எங்கள் மனமும் சிறகடித்து உயரப்பறந்தது.
ஒவ்வொரு விலங்கைப் பார்க்கும் பொழுதும் அதைப் பற்றி  எனக்குத் தெரிந்த சிறுவர் பாடல்களை என் குழந்தைக்குப் பாடி காட்ட அவள் மட்டுமல்லாது நாங்கள் அனைவருமே குழந்தைகளாய் குதூகலித்தோம்.


அப்பா என் மகளுடன் சேர்ந்து  பொது இடமென்றும் பாராது ஆட்டம் போட எங்களுக்குள்ளும் உற்சாகம் பரவியது. அங்கு இருந்தவரை நாங்களனைவருமே பெரியவர்கள் என்பதை மறந்து சிறுவர்களைப் போன்று ஆர்வமாய் எல்லா விலங்குகளையும் கண்டு இரசித்தோம்.

சில காட்டு விலங்குகள் பலவீனமாய் இருப்பதை நான் வருத்தமுடன் விவரிக்க "நீ கொடுக்கும் இரண்டு திராம்களுக்கு அவ்வளவு தான் நிர்வாகத்தினரால் சாப்பாடு போட முடியும்" என்று நக்கலடித்தார் அம்மா. அந்த மிருககாட்சிசாலை சற்று  துர்நாற்றம் வீசுமென்று என் கணினி ஆசிரியைக் குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்ததனால்  நாங்கள் அனைவருமே மிகுதியாக முகம் சுளித்துக் கொள்ளவில்லை.

அங்குள்ள விதவிதமான குரங்குகள் ஊஞ்சல் ஆடியும் , சேட்டைகள் செய்தும் , தண்ணீரைச் சுற்றுலாப் பயணிகளின் மேல் கொப்பளித்தும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அரிய வகையான மனிதக் குரங்கு(chimpanzee), காட்டுப்பூனை உள்ள பெருமை பெற்ற மிருககாட்சிசாலை என்பதை தெரிந்து கொண்டோம்.

பின்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருக்கையில் , ஆமைகளுக்குள் நடந்த காதல் காமச் சேட்டைகளைப் பார்த்து தோழிகளுக்குள் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.

பின்பு விலங்குகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தத்துவங்கள் பேசினோம். அழகான குட்டி நட்சத்திர ஆமைகளுடன்,  பெரிய உருவ ஆமைகளுக்கும் நடந்த ஊடலும் கூடலும் எங்கள் கவனத்தை ஈர்த்தது. காட்டு விலங்குகளான புலி,ஓநாய்,கரடி, முள்ளம்பன்றி, சிங்கத்தைப் பார்க்கையில் திடீரென ஒரு பயம் மனதிற்குள் பரவியது.

ஒட்டகச் சிவிங்கி, நரி , மான் , கொக்கு, நெருப்புக் கோழி, வளைவான கொம்புகளுடைய தாடி வைத்த ஆடுகள் போன்று அனைத்து எண்ணற்ற வகை  உயிரனங்களையும் ஆர்வத்துடன் கண்டு களித்தோம்.பல வண்ண நிறத்தில் பாம்பு, தவளை போன்ற ஊர்வன (reptiles) உயிரனங்களைப் பார்த்தவுடன் அருவருப்பு ஏற்பட்டது.

திருப்தியாக மிருககாட்சிசாலையைப் பார்த்தபின் சிறிது தூரம்  நடந்து மெர்கடோ பேரங்காடியைச் சென்றடைந்தோம். 2002இல் ஆரம்பிக்கப்பட்ட பேரங்காடியாயினும் மற்ற பேரங்காடியைக் காட்டிலும் தனித்து நிற்கும் வகையில் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் இருந்த மத்திய திரைக்கடல் (Mediterranean) கட்டமைப்பு கொண்ட நகரம் போல உருவாக்கியிருந்தார்கள்.

“மெர்கடோ என்றால் என்ன?” என்று அத்தை அர்த்தம் கேட்க, சந்தை என்று பொருள் படும் இத்தாலிய சொல் என்று நான் விளக்கமளிக்க “பரவாயில்லையே! எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே”  என்று பாராட்டினார் அத்தை

அழகிய ஓவியங்கள் பல பேரங்காடிக்குள் உள்ள சுவர்களில் அலங்கரித்து அதன் எழிலைக் கூட்டியது. அதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு பல ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பின்பு அத்தை அப்படங்களை தன் மகளுடன் பகிரியில் (whatsapp)பகிர்ந்து கொள்ள , ஒளிப்படங்களில் அத்தை சற்று பிரகாசம் குறைவாக தெரிவதனால் இனிமேல் அவர்கள் என்னருகிலோ, என் அம்மா அருகிலோ ஒளிப்படம் எடுத்துக்கொள்வதைக் குறைக்குமாறு அத்தை மகள் குறுஞ்செய்தி அனுப்ப, அதை நான் பார்க்க, சூழ்நிலை கேலி கிண்டலுடன் கலாட்டாவானது.
  

முன்னொரு நாளில் மெர்கடோ பேரங்காடிக்கு கணவரின் நண்பர்களின் குடும்பத்துடன் வந்திருந்த பொழுது சிறுவர்களைக் கொண்டு சாகச சர்கஸ் நிகழ்ச்சியும்,(circus) சிறுவர்களுக்கான பயிற்சி சர்கஸ் வகுப்பும் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். அச்சிறுவர்கள் இளம்வயதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அருமையாய் இருந்தது. திரைப்படக் கதாப்பாத்திரங்களை போல மிகச்சிறந்த முகஒப்பணை செய்திருந்த சிறுவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

சிறு குழந்தைகளை கவருவதற்காக சிலர் கோமாளி வேடமிட்டு பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி ஓர் உணவகத்தை விளம்பரப்படுத்தும் தொப்பிகளைப் பரிசளித்தனர்.சிறுவர்களுக்கு வண்ணம்தீட்டும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பலவண்ணங்களில் கரிக்கோல்(pencil), மெழுகுக்கோல்(crayons), படம்வரையப்பட்ட தாள்கள் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.


மிருககாட்சிசாலையில் நடந்து நடந்து களைப்புடன் இருப்பார்கள் என்பதனால் பெற்றோரையும், அத்தையையும் சற்று இளைப்பாறுவதற்காக அருகிலிருந்த மெர்கடோ பேரங்காடிக்கு அழைத்துவந்திருந்தேன். அங்கு 1 திராமிற்கு குளிர்பாலேடு (ice cream) கிடைக்குமென்றவுடன் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டு அதனை ருசிக்கத் தயாரானார்கள்.

பின்னொரு நாளில் என் அத்தையையும், மாமாவையும் மிருககாட்சிசாலைக்கு அழைத்துவந்திருந்த பொழுது கணவர் “மெர்கடோ பேரங்காடியில் என்ன இருக்கிறது?” என்று தன் விருப்பமின்மையை தெரிவித்திருந்தார். ஆயினும் மிருககாட்சி சாலையில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பைப் போக்கக் கட்டாயப்படுத்தி மெர்கடோ பேரங்காடிக்குக் கூட்டிச் சென்றேன்.
பேரங்காடியை முழுவதுமாகச்சுற்றிப் பார்த்தப்பின் “மிகவும் வித்தியாசமாகவும், எழில் கொஞ்சும் அழகுடனும் இருக்கிறது.நல்ல வேளை எங்களைக் கூட்டிவந்தாய். இல்லையென்றால் இந்த வாய்ப்பை இழந்திருப்போம்” என்று பாராட்டினார்கள்.

மற்ற பேரங்காடியைப் போன்று திரைப்பட அரங்கங்கள், பிரசித்தி பெற்ற உணவு, உடை கடைகள் , சிறுவர்கள் விளையாடும் பொழுதுபோக்கு அரங்கங்கள் இருந்தாலும் ஒருமுறையேனும் இரசித்துவிட்டு வரலாம் மெர்கடோவின் அழகை!

ஜூமைரா  சாலையில் வலது பக்கம், நீண்ட கடற்கரை ,பெரிய சொகுசு பங்களா வீடுகள், தனியார் விடுதிகள் , உலகப் புகழ் பெற்ற முதல் ஏழு நட்சத்திர விடுதியான புர்ஜ் அல் அராப், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஜுமைரா தங்கும் விடுதி  என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திருந்தன.

அந்த நீண்ட நேர் சாலையில் தனி வண்டியில் நெடுதூரப் பயணம் மிகுந்த ஆனந்தத்தை தரவல்லது. சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணம் செய்தவர்களுக்கு நான் கூற வரும் அனுபவம் நன்றாகப் புரியும். பேருந்தில் சென்றாலும் இருபக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றால் நேரம் போவதும் தெரியாது, இறங்க வேண்டிய இடத்தை கோட்டை விடவும் வாய்ப்பு அதிகம். 

தன் சுற்றுலாவில் கடைசி நாளில் ஜூமைரா சாலையில் தன் நண்பனின் மகிழுந்தில் பயணம் செய்த அத்தை மகனும் அவன் மனைவியும் இந்த நீண்ட தூர நெடும் பயணம் தான் எல்லா சுற்றுலாத் தளங்களைக் காட்டிலும் மிகவும் பிடித்தது என்று கூறி என் புருவத்தை உயரச் செய்தனர்.

அதிகபட்சம் இருபக்கமுமே அழகு நிலையங்கள் , உடல் அழகை மெருகேற்றும் மருத்துவமனைகள், உணவு விடுதிகள் , உடை கடைகள் நிறைந்திருந்தன. மெர்கடோ பேரங்காடியை விட்டு வெளியே வந்தவுடனே சாலையின் எதிர்புரத்திற்குச் சென்று புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காகப் பேருந்துக்குக் காத்திருக்கலானோம். குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் உள்ளே ஒரு கருவி பேருந்தின் எண், வந்தடைய வேண்டிய நிமிடங்கள் போன்ற மிக துள்ளியமான தகவல்களுடன் பேருந்தின் வருகையை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது.
முதல் முறை பெற்றோர், அத்தை, குழந்தையை பேருந்தில் கூட்டிச் செல்வதால் ஒரு சிறியபதற்றம் என்னுள் இருந்தது. அனைவரது பயண அட்டையை வாங்கி நானே பேருந்துனுள்ளே இருந்த கருவியின் வழி தேய்த்து ஏறும் இடத்தைப் பதிவுசெய்து கொண்டேன். பின்  குழந்தையின் இழுபெட்டியை பேருந்தில் கட்டிவிட்டு சாளரத்தின் வழியே செயற்கையாய் அமைக்கப்பட்ட தீவிலுள்ள புர்ஜ் அல் அராப் தெரிகிறதா என்ற ஆர்வமாய் பார்க்கலானோம்.

எல்லோரும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எனக்கு மட்டும் இவர்களை எந்த நிறுத்தத்தில் இறக்கிக் கூட்டிச் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. புர்ஜ் அல் அராப் சற்று தெரிந்தவுடனேயே பதட்டத்தில் ‘நிருத்துக’ பொத்தானை அழுத்தி ஓட்டுநருக்கு சமிக்ஞை கொடுத்தேன். பின்பு எல்லாரது பயண அட்டையை அங்கிருந்த கருவியில் காண்பித்து எங்கள் இறங்கும் இடத்தை பதிவுசெய்து கொள்ள பயணம் செய்த தூரத்திற்கு ஏற்றார் போல் அட்டையிலிருந்து பணத்தைக் கழித்துக் கொண்டது.

பல தெருக்களின் வழியே  இருந்த மிரட்டலான ஆள்அரவமற்ற பங்களாக்களை தாண்டிச் சென்று எப்படியோ ஒரு வழியைக் கண்டுபிடித்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே மக்கள் மெல்லோட்டம் (jogging) மேற்கொள்வதற்காக அமைத்திருந்த ரப்பராலான பிரத்யேக மிருதுவான மெதுவோட்ட பாதையில் (jogging track) நாங்கள் நடந்து, குதித்து, ஓடி ஒரு புது அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.

சற்று அவசரப்பட்டு முன்னாடியே இறங்கிவிட்டதால் பெற்றோருக்கும், அத்தைக்கும் புர்ஜ் அல் அராபை தள்ளியிருந்தே  காட்ட வேண்டியதாயிற்று. அத்தையோ சிறுபிள்ளையைப் போல் சிப்பிப்பொறுக்க ஆரம்பித்தார். புர்ஜ் அல் அராபில் வானூர்தி (helicopter) இறங்கும் தளத்தை பார்த்தவுடன் அப்பா அங்கு நடைபெற்ற  ஆண்ட்ரூ அகஸ்ஸி,ரோஜர் பெடரர்க்கு  இடையிலான புகழ்பெற்ற வலைப்பந்து( tennis)  ஆட்டத்தைப் பற்றியும், டைகர் வுட்ஸ் பங்கேற்ற குழிப்பந்தாட்டம்( golf) பற்றியும் பகிர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.


ஹேப்பி நியு யியர் (happy new year)என்ற ஓர் இந்திப்படத்தைப் பார்த்தால் புர்ஜ் அல் அராபின் அழகுடன் அட்லாண்டிஸெனும் நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தையும் ஷாருக்கானுடன் இரசிக்கும் வாய்ப்பு கிடைக்குமென்றேன். 1999ம் ஆண்டு முதல் உலகத்தில் உள்ள பல ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் பெருமை  வாய்ந்த ஒன்றை வெளியிலிருந்து பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. அந்த விடுதிக்குள்ளே பிரம்மாண்ட நீர்வாழ்காட்சிசாலையும், ஆழ்கடலை இரசித்தவாரு நீருடிக்கடியில் அறைகள் உள்ளதென்பதைத் தெரிந்து அதிசயித்தோம்.

சில வருடங்களுக்கு முன் என் கணினி ஆசிரியை தன் குடும்பத்தினருடன் அந்த உலகப்புகழ் பெற்ற நட்சத்திர விடுதியைப் பார்வையிட வாய்ப்புகிடைத்தது என்று கூறி விவரிக்க எனக்கு உடல்சிலிர்த்தது. அறைகள் எல்லாம் இரண்டு அடுக்கு கொண்டவை என்றவுடன் அசந்துவிட்டேன்.


பின்னொரு நாளில் புது வருடப்பிறப்பை முன்னிட்டு புர்ஜ் அல் அராப் அருகே நடைபெறும் உலகப்பிரசித்திப்பெற்ற வானவேடிக்கையைப் பார்ப்பதற்காக எங்கள் மாரீஸ்வரி அத்தையின் குடும்ப நண்பர்களும்,கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேத்தியுமான சிவகாமி-சிவகுமார் தம்பதியினரின் துணையாடு சென்று கண்கவர் வானவேடிக்கையைப் கண்டுகளித்து புத்தாண்டை வரவேற்றோம். பல நண்பர்கள் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பூங்காவில் பலவகையான இரவு உணவு உண்டதுடன், அரட்டையடித்தது மறக்க முடியாத மலரும் நினைவுகளுள் ஒன்று.

நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரின் (binocular) தொலை நோக்காடி வழியே புர்ஜ் அல் அராபை பார்த்த பொழுது நிஜமாகவே வெகுஅருகில் சென்று அதன் கட்டமைப்பை இரசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், விசேஷ காலங்களிலும் புர்ஜ் அல் அராப் கட்டிடம் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் வண்ணஒளி ஏற்பாடு கண்களைப் பறிக்கும்.

பின்னொரு நாளில் என் மாமா, அத்தையை புர்ஜ் அல் அராபையும் ,
ஜுமைரா விடுதியையும் பார்க்கக் கூட்டிச் சென்ற பொழுது பதட்டத்தில் ஏற்கனவே செய்திருந்த தவறை திருத்திக் கொண்டிருந்தேன். பாய்மரக்கப்பல் போன்று வடிவமைப்பு கொண்ட புர்ஜ் அல் அராபுக்கும், அலைபோன்று வடிவமைக்கப்பட்டிருந்த ஜுமைரா விடுதிக்கும் நடுவே மாமா, அத்தையை நிறத்தி ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தேன். நாங்கள் வந்த சிறிது நேரத்திலேயே எங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள மழையும் வந்து சேர்ந்தது.முன்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக கடற்கரையில் குளித்ததும் ஞாபகம் வந்தது

இவ்விரு நட்சத்திர விடுதிகளுக்குப் பக்கத்தில்தான் wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park)அமைந்திருந்தது. ஜுமைரா விடுதியில் தங்குபவருக்கு எண்ணற்ற முறை அந்த சாகசப் பூங்காவிற்குச் செல்லஅனுமதி கொடுத்து இருந்தார்கள். பாலைவன உலாவிற்கு எங்களுடன் வந்திருந்த நடுத்தர வயது இந்திய தம்பதியினர் அந்த பூங்காவிற்குச் சென்றுவந்து தங்களின் மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் விவரித்த முறை, கேட்ட எல்லோருக்கும் அப்பூங்காவிற்கு செல்லவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.


நீண்ட கடற்கரைக்கு ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு பெயர்வைத்திருந்தனர். பின்னொரு நாளில் (kites beach)பல விதமான பிரமாண்ட பட்டங்கள், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அதிசயக்கும் வண்ணம் பறக்கவிடப்பட்டது. குழந்தைகளைக் கவரும்  பிரபலமான நகைச்சுவை குணச்சித்திரங்கள் பட்டங்களாக பறக்க, எங்கள் அனைவரின் மனமும் சந்தோஷத்தில் மிதந்தன. தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த மிகப்பெரிய இராட்சதப் பட்டங்களை வானில் பார்த்து அதனுடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டது வியப்பைத் தந்தது.


பேருந்தில் பயணம் செய்து அல்குபைபா(al gubaiba) பேருந்து நிலையம் அடைந்த பிறகு, மீனா பஜார் அங்காடித் தெரு வழியாக பெற்றோரையும், அத்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன். நடந்து செல்லும் வழியில் அவர்களது களைப்பைப் போக்குவதற்காக பிரசித்தி பெற்ற (shawarma) சவர்மா என்கிற கோழி இறைச்சியால் செய்யப்பட்ட சிற்றிடை உணவு (snacks)வாங்கித்தர   அப்பா வெகுவாக  இரசித்து ருசித்தார்.

ஆமை (பருப்பு) வடை என்றால் அலாதி இன்பத்துடன் ருசிக்கும் அப்பா வடை போன்றிருக்கும் (falafel) பிலாபில்லை ஏனோ ருசித்து சாப்பிடவில்லை. சைவ உணவைமட்டும் சாப்பிடும் அம்மா எனது கெஞ்சலுக்காக பிலாபில்லை ருசித்தார். சுற்றிப்பார்த்த இடங்கள் மனதை நிரப்ப சிற்றுண்டியே வயிரை நிரப்ப நிறைவாக வீடு திரும்பினோம்.

Friday, February 10, 2017

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா?

சாலையினோரம் அமைந்திருந்த சுற்றுலா அலுவலகம் பெரிய சொகுசு படகு, சிறிய படகு, துள்ளும்  ஓங்கில்களையுடைய 
(dolphin) ஒளிப்படங்களை முசண்டம்  என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.  உடனே என் கணவரிடம் அதைக் காட்டி ”ஏங்க முசண்டம் என்றால் என்ன?” என்று ஆர்வமாய் வினவினேன். உன் கண்ணில் இருந்து எதையும் மறைக்க முடியாதடியம்மா! உடனே விசாரிக்கிறேன் ராணியார் அவர்களே! என்று பணிந்து சிரித்தார்.

அதனைப் பற்றி கணவர் விசாரிக்கும் பொழுது , நண்பர்கள் இருவகையான முசண்டம் சவாரி உள்ளதென்றார்கள். சுற்றுலா வருபவர்கள் என்றால் ஷார்ஜா , ஓமன்  எல்லை அருகே டிப்பாவிலும் (Dibba) , எங்களைப் போன்று தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் கசாபா என்ற ஓமனுக்குள்ளே உள்ள முசண்டம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள்.

இந்தவிவரம் மிகவும் தாமதமாக தெரிந்ததால் என் பெற்றோரையும், மாரீஸ்வரி அத்தையையும் முசண்டம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடியாத வருத்தம், பயணம் செய்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் வந்திருந்த பொழுது தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் முசண்டம் சவாரி செய்யலாம் என்ற அறியாமையில் இருந்தோம்.

என் அத்தைமகன் இராமும், அவனது மனைவி உமாவும் மிகவும் குறைவான நாட்கள் அமீரகச் சுற்றுலாவிற்கு திட்டமிட்டிருந்ததால் அவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்ய முடியாமல் போயிருந்தது.   

எத்தனை வருடங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்தாலும் , தொழில்செய்தாலும் மற்ற நாட்டினவருக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்காது. தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமையை அங்கே பணிபுரிபவர்கள் அலுவலகத்தின் உதவியுடன் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

என் அத்தையும், மாமாவும் சுற்றுலா வந்திருந்த பொழுது இத்தகவல் தெரிந்ததால் உற்சாகத்துடன் அவர்களுடன் , நான்,  என் கணவர் , குழந்தையுடன் அப்பயணத்துக்கு ஆர்வத்துடன் தயாரானோம்.

ஓமன் பக்கத்து நாடு என்பதனால்நாங்கள் அனைவரும் அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa) பெறுவதற்காக  எங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்தோம். 

அதிகபட்சம் 225 திராம்கள் என்பதனால் என் மாமா கண்டிப்பாக இதற்குச் செல்ல வேண்டுமா என்று கடிந்து கொண்டார். நாங்கள் அச்சமயம் அருமையான காலநிலை என்பதாலும் அனைவருமே முதல் தடவை அந்த பயணத்தை அனுபவிக்க போகிறோம் என்பதாலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தோம். 

சுற்றுலா நிறுவனத்திலிருந்து அவ்விடத்திற்குச் செல்லவும் , திரும்பி அழைத்து வரவும் சிற்றுந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தாங்களே  வாகனத்தை ஓட்டிப் பயணத்தை இரசித்தவாறு செல்லும் வாய்ப்பும் இருந்தது.

சுற்றுலா நிறுவனத்தில் அதற்கேற்றார் போல் போக்குவரத்துச் செலவைக் கழித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தனர். தடங்காட்டியின் (GPS) உதவியோடு சரியான பயண இலக்கைக் குறிப்பிட்டால் சேரவேண்டிய இடத்தைச் சரியாகச் சேர்ந்திடலாம்.

அதிகாலையிலேயே வீட்டின் அருகிலே உள்ள பர்ஜுமான் (burjuman) நிறுத்தத்திற்கு முதல் ஆட்களாக வாடகை வண்டியில் சென்றோம். ரொட்டி , பழஊறல் (jam) ஆகியவற்றை காலை உணவாக எடுத்து வைத்திருந்தோம். கேரளாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் எங்களுடன் பயணத்தில் இணைந்தனர்.

அதிகாலை நெடுந்தூரப் பயணம் என்பதனால் அனைவருக்கும் நன்றாக தூக்கம் வந்தது. இடையில் சற்று நேரம் இயற்கை உபாதைக்காக சிற்றுந்தை நிறுத்தினார்கள். நாங்கள் போகும் வழியில் ஷார்ஜா என்ற பெயர் பலகைகளைப் பார்த்து அடைந்த குழப்பத்தை , ஷார்ஜா இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது என்ற விவரம் அறிந்தவுடன் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa), அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு எங்களை ஓமனின் எல்லையான (dibba) டிப்பாவிற்குள் அனுமதித்தனர். உள்ளே நுழையும் பொழுது வரிசைச்சற்று குறைவாக இருந்ததால்  சீக்கிரம் சென்றுவிட்டோம். இதுவே பண்டிகை விடுமுறை நாட்கள் என்றால் வரிசையில் நின்று காத்துக் காத்து அலுத்துவிடுவோம் என்றறிந்தோம்.

ஒமன் எல்லை வந்தவுடன் எனக்கு அங்கு வசித்த மருத்துவர் அமுதா அத்தையின் ஞாபகமும், என் கணவருக்கு அவரது தாசு மாமா ஞாபகமும் வந்து சென்றது. பின்னொரு நாட்களில் ஒமனுக்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டோம்  

பின்பு சிறிது தூரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம்
மலைகளால் சூழப்பட்டு நல்ல தட்பவெப்பத்துடன் வரவேற்றது.
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்பம் என்பதனால் அழகுகடலும் உயரமும் கம்பீரமும் உடைய மலைகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன. திரைப்படப் படப்பிடிப்பு எடுப்பதற்கு நல்ல இடம் என்று நானும் என் அத்தையும் பேசிக்கொண்டோம். 

சிற்றுந்திலிருந்து இறங்கி வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை பதட்டத்துடன் அதிரடியாக தாவி குதித்து நாங்கள் எங்களுக்கான படகை அடைந்தோம். எங்களால் படகுகளை தனியே தாவி குதிக்க இயன்றாலும், நானும் என் அத்தையும் மிகவும் பயந்தது போன்று பாவணை செய்ய, என் கணவரும்,என் மாமாவும் தங்களது கைகளை நீட்டி எங்களை பத்திரமாக படகுகளை கடக்க உதவிசெய்ய நானும் என் அத்தையும் கண்களில் காதல் தெரிய சிரித்துக்கொண்டோம்.

குழந்தையை வைத்திருந்ததால் படகுகளைத்தாவி குதிக்க நான் மிகவும் பயந்துதான் போயிருந்தேன். இரண்டு அடுக்குப் பெரிய படகில் மெத்தை தலையணையெல்லாம் வைத்து பயணத்தை சொகுசாக ஏற்பாடு செய்திருந்தனர். அயல்நாட்டினர் மற்றும் வடநாட்டினருடன் எங்கள் பயணத்தை காற்றின் வரவேற்பு முத்தத்துடன் ஆரம்பித்தோம். ஒரு சிலர் படகு புறப்படுவதற்குத் தாமதமானதால் தங்கள் சுற்றுலா நிர்வாகத்தினருக்கு தொலைபேசியில் அழைத்து திட்டி தாங்கள் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு கத்திக் கொண்டிருந்தார்கள்.

படகிற்குள் இளவெயில் அடித்ததால் வெயிலடிக்காத பக்கத்தில் உட்கோர்ந்தோம். ஆனால் படகு திரும்பி கடலுக்குள் வேறுவேறு திசையில் பயணம் செய்ய இளவெயிலும், நாங்கள் எங்கள் உடைமைகளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக படகில் முதலுதவி பெட்டியில் தேவையானவற்றை வைத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் ஈரட்டிகள் (biscuits) , பழங்கள், தண்ணீர், காபி ,தேநீர் ,
 குளிர்பானம் போன்றவற்றை கட்டுப்பாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் அடுக்கில் கடற்கரைகளில் போடப்பட்டிருக்கும் சாய்வு படுக்கைகளை போட்டிருந்தனர். அதில் நமக்கென தனிபாங்குடன் படுத்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்தவாறு உடலைத் தழுவும் குளிர் காற்றுடன்  பயணம் செய்வது சுகமான ன்றே!

நல்ல சீதோஷ்ணநிலையில் நாங்கள் சென்றிருந்ததால் படகு செல்ல செல்ல குளிர் காற்று வீசியது. அந்த குளிர்ந்த காற்றில் என் தமிழ்செல்வி அத்தையின் கூந்தல் ஒரு தனிபாங்குடன் அழகாகப் பறக்க அதை என் கணவர் தெளிவாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார். கதாநாயகி போல் இருக்கிறீர்கள் அம்மா என்று என் கணவர் கூற வெட்கத்தில் அத்தை சிரித்தார்.


பெரிய படகிலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரித்து சிறு சிறு  படகுகளில் அனைவரையும் பாதுகாப்பு  உடையுடன் அங்கு சற்று தொலைவிலிருந்த வித்தியாசமான பாறைகள் அடியே கூட்டிச் சென்றார்கள். சுண்ணாம்புக் குகைகள் அருகே சென்று பார்த்தபொழுது சிறு பறவைக்கூட்டையும், வெவ்வேறு காலத்தில் தண்ணீரின் அளவுகள் பாறைகளில் பதிந்திருந்ததையும் காணநேர்ந்தது.

மிகுந்த தைரியசாலிகள், நீச்சல் தெரிந்தவர்கள் , சாகச விரும்பிகளை வாழைப்பழம் (banana ride) போன்ற படகில் வேகமாகக் கூட்டிச் சென்றனர். வாழைப்பழம் போன்றிருந்த படகில் பயணம் செய்யும் ஆசையிருந்தாலும் நீச்சல் தெரியாத காரணத்தால் விஷப் பரீட்சையில் ஈடுபடவில்லை.


சில இடங்களில் தண்ணீர் கண்ணாடியைப் போன்று இருந்ததால் கீழே உள்ள மணல்,  மீன்கள், கல்,  பவளப்பாறைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. நீரடி காற்றுவழங்கி (snorkelling) வழி சுவாச நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மூச்சுவிடுவதை திறமையாய்க் கற்றுக் கொண்டோமானால் கடலினுள்ளே உள்ள  உயிரனங்களையும்,  பாறைகளையும் இரசித்தவாறு வேறு உலகிற்குச் செல்லும் வாய்ப்புகிடைக்கும்.

நீச்சலும் தெரிந்துவிட்டால் பிரமாதம்.யாருடைய உதவியில்லாமல் கடலுக்கு அடியில் உள்ள உலகத்தை உணரலாம். அந்த அனுபவத்தை அந்தமானில் அனுபவத்திருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாததால் வழிகாட்டி ஒருவரின் துணையுடன் நானும் என் கணவரும் கடலுக்கடியில் உள்ள அற்பத உலகைப் பார்த்திருக்கிறோம்.

கடலில் ஓரிடத்தைக் காட்டி இங்கேதான் ஓங்கில்கள் ( dolphin) வர வாய்ப்பு அதிகம் என்றார்கள். ஓங்கில்களின் வருகை மிகவும் அரிதானது என்றும் கூறியிருந்தார்கள். நாங்கள் ஒரு ஓங்கிலைக் கூட பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்திருந்தோம்.

அதுவே ஓமனுள்ளே அமைந்திருந்த கசாபா முசண்டம் என்றால் நிறைய ஓங்கில்கள் வரவாய்ப்புள்ளது என்றும் அவைக்கு உணவளிக்க அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
பின்னொரு நாள் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஓமனுள்ளே அமைந்திருக்கும் கசாபா முசண்டத்திற்கு வண்டியில் செல்ல வேண்டுமென்று நானும் என் கணவரும் பேசிக்கொண்டோம்.

வயதான பாட்டிகளாயினும் பலர் குடும்பத்துடன் சுற்றுலா வந்தது ஆச்சர்யத்தை தந்தது. நம் நாட்டில் பாட்டிகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வந்தபின் இவையெல்லாம்  என்னால் முடியாது என்று கூறி சுற்றுலாவைத் தவிர்த்துவிடுவார்கள். வயதான பாட்டிகளாயினும் படகில் ஏறி, இறங்க, மகிழ்ச்சியாய் தன் வயதை ஒத்தவர்களுடன் பேசிச்சிரித்து குடும்பத்துடன் களிப்பிலிருந்தனர்.

பெண்கள் உடலை மூடிக் கொள்ள புர்கா என்னும் கருப்பு உடையைத்தான் உடுத்துவார்கள் என்றெண்ணிய எனக்கு பல வண்ண வண்ண நிறத்தில் பல பல வடிவமைப்புகளுடன் உடலை மறைக்கும் பாவாடை சட்டை போன்று அணிந்திருக்கும் பெண்களைப் பார்க்கையில் விந்தையாய் இருந்தது.

சுகமான காற்றை இரசித்து என் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய படகில் என் மாமாவை துணைக்கு அமர்த்திவிட்டு நான், என் கணவர், அத்தை ஆகியோர் பெரிய
படகிலிருந்து சிறுபடகு வழி சிறுதூரம் வந்து ஒரு தீவுபோலிருந்த மலையடிவாரம் அருகே சிறுசிறு குழுக்களுடன் இறங்கினோம்.

மக்கள் நடமாட்டமில்லா அந்தத்தீவில் ஒரு குடிசையும் சில ஆட்டுக்குட்டியும் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. ஒரு பகுதிக்கு வந்தவுடன் நீந்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வர நீச்சல் தெரிந்தவர்கள் ஆர்வமாய் நீந்த ஆரம்பித்தார்கள். நாங்களோ நீச்சல் தெரியாததால் தீவின் கரையிலே கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம். கல்யாணமான புதுமணத் தம்பதிகள் பலர் அச்சுற்றுலாவிற்கு வந்திருந்ததனால் அத்தனித்தீவில் மிகவும் தள்ளிச் சென்று செங்குத்தான மலைகளில் எல்லாம் ஏறி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களுக்கு முன்னால் கடலில் குளித்தனர். அக்குடும்பத்தில் தந்தை தன் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிக்கொண்டிருந்தார். அக்குழந்தை பயந்தாலும் நிதானமாக்க் கோபப்படாமல் கற்றுத்தந்தது எல்லா தந்தையர்களின் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மதிய நேரம் வந்தவுடன் சுடச்சுட சுவையான இந்திய சைவ அசைவ உணவை நம் தேவைக்கேற்றார் போல பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்கள். சுவையான உணவினால் அனைவரும் உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



பின் மீன்பிடிப்பதற்குத் தேவையான தூண்டில், இரை மற்ற தேவையான பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தனர்.
நானும் என் கணவரும் முதல்முறையாக மீன்பிடிக்க ஆயத்தமானோம்.

என் அத்தை பின்னாலிருந்து நாங்கள் செய்யும் கலாட்டாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் கணவர் தூண்டிலை ஆழமாக இறக்க மீன் நிதானமாக இரையை தின்றுவிட்டு போய்விடும் என்று நான் கூறியது போலவே நடந்தது. இறக்கிய தூண்டிலை மேலே கொண்டுவரவே வெகுநேரமானது.

பெரிய படகை வங்காள மொழி பேசும் இளைஞர்கள் கடலிலே செலுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் பேசியது இந்தி மொழிதானா என்று ஐயம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் பேசியது வங்காள மொழி என்று தெளிவுபடுத்தினார் கணவர்.

படகின் கீழ்தட்டில் முழுக்கட்டுப்பாடு இருந்தாலும் மேலடுக்கில் படகின் திசையை தீர்மானிப்பது போன்று கருவியும் சில எந்திரங்களும் இருந்தன. பெரிய படகையையே ஓட்டுவது போன்று தோற்றமளிப்பதற்காக அக்கருவியை இயக்குவது போன்று பலரும் ஒளிப்படமெடுத்துக் கொண்டனர்.

வங்காள இளைஞர்கள் அடிக்கடி மேல்அடுக்கில் வந்து எந்திரங்களை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த எந்திரங்களின் அருகே நாங்கள் அமர்ந்திருந்ததால் மொழி வேறானாலும் என் குழந்தையுடன் சைகை மொழியிலும் புன்னகையிலும் அன்பை வெளிப்படுத்தினர்.

சில வடநாட்டுக் குடும்பங்கள் தங்களுக்குள் நிறைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அதிகமாக செலவாகிவிட்டது என்று அங்கலாய்த்த மாமா பயணத்தின் முடிவில் பயணத்திற்கேற்ற கட்டணமென்று சிரித்த முகத்துடன் கூறினார்.
அத்தையும் சுற்றிப்பார்த்த எல்லா இடங்களில் இந்த இடம்தான் மிகவும் மனம் கவர்ந்தது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

சில சுற்றுலா நிறுவனங்கள்  சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இரவு தங்குவதற்கான கூடார வசதி, உணவு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் அறிந்தேன். அருமையான இயற்கைச் சூழலில் இத்தகைய வசதிகளுடன் குடும்பத்தினர் , நண்பர்களுடன் கொண்டாடுவது நிச்சயம் சிறந்த அனுபவமாகத் தான் இருக்கும்.

படகிலிருந்து இறங்கி சிற்றுந்து பயணத்திற்கு தயாரானோம். பல சுற்றுலா சிற்றுந்துக்கள் அணிவகுத்து நின்றாலும், அந்நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் வாகனத்தை லாவகமாக ஓட்டிச்சென்று சிறுசிறு தெருக்களின் வழியே புகுந்து வந்து பொதுச்சாலையில் இணைந்து முந்திச் சென்றது நம் நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை நினைவூட்டியது. தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் வண்டிகள் சுற்றுலா சிற்றுந்துக்களை முந்திச் சென்றதால் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேர காத்திருப்பு எரிச்சலைத் தந்து   , ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் துபாயை நோக்கிப் பயணமானோம். தினமும் வீட்டு வேலையிலும், குழந்தையைக் கவனிப்பதிலும் ,வெளிஇடங்களுக்கு கூட்டி செல்வதிலும் களைப்பாகி குடும்பத்துடன் மனம் விட்டுப் பேச நேரமில்லாமல் இருந்த வருத்தத்தை இந்த நீண்ட நேர சிற்றுந்துப்பயணம் போக்கியது.

கணவரைப்பற்றி நான் புகார் கடிதம் வாசிக்க என் மாமாவும் , அத்தையும் எனக்கு சாதகமாகப் பேசி என் பக்கம் தீர்ப்பு கூற சற்று அதிர்ந்து போனார் என் கணவர். இது போன்று நெடும்பயணங்களில்
தானே மனம் விட்டுப்பேசிக் கொண்டு நம் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

ஈடுபாடில்லை என்றாலும் மற்றவர் எழுந்து எங்கும் ஓட முடியாது அல்லவா??  வழியெங்கும் கார்இருள் சூழ்ந்து இருந்தாலும், தெரு விளக்கின் வெளிச்சம் பரவாத இடங்களிலும் ஓட்டுநர் சாதாரணமாக வழியைக் கண்டுபிடித்து ஓட்டினார். எங்களுக்குத் தான் இரவு நேரத்தில் மிகவும் திகிலாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லா சாலைவழி ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது.
மனம் மயக்கும் ஒரு நாள் பொழுதை அசைபோட்டுக்  கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.