Friday, February 10, 2017

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா?

சாலையினோரம் அமைந்திருந்த சுற்றுலா அலுவலகம் பெரிய சொகுசு படகு, சிறிய படகு, துள்ளும்  ஓங்கில்களையுடைய 
(dolphin) ஒளிப்படங்களை முசண்டம்  என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.  உடனே என் கணவரிடம் அதைக் காட்டி ”ஏங்க முசண்டம் என்றால் என்ன?” என்று ஆர்வமாய் வினவினேன். உன் கண்ணில் இருந்து எதையும் மறைக்க முடியாதடியம்மா! உடனே விசாரிக்கிறேன் ராணியார் அவர்களே! என்று பணிந்து சிரித்தார்.

அதனைப் பற்றி கணவர் விசாரிக்கும் பொழுது , நண்பர்கள் இருவகையான முசண்டம் சவாரி உள்ளதென்றார்கள். சுற்றுலா வருபவர்கள் என்றால் ஷார்ஜா , ஓமன்  எல்லை அருகே டிப்பாவிலும் (Dibba) , எங்களைப் போன்று தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் கசாபா என்ற ஓமனுக்குள்ளே உள்ள முசண்டம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள்.

இந்தவிவரம் மிகவும் தாமதமாக தெரிந்ததால் என் பெற்றோரையும், மாரீஸ்வரி அத்தையையும் முசண்டம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடியாத வருத்தம், பயணம் செய்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் வந்திருந்த பொழுது தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் முசண்டம் சவாரி செய்யலாம் என்ற அறியாமையில் இருந்தோம்.

என் அத்தைமகன் இராமும், அவனது மனைவி உமாவும் மிகவும் குறைவான நாட்கள் அமீரகச் சுற்றுலாவிற்கு திட்டமிட்டிருந்ததால் அவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்ய முடியாமல் போயிருந்தது.   

எத்தனை வருடங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்தாலும் , தொழில்செய்தாலும் மற்ற நாட்டினவருக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்காது. தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமையை அங்கே பணிபுரிபவர்கள் அலுவலகத்தின் உதவியுடன் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

என் அத்தையும், மாமாவும் சுற்றுலா வந்திருந்த பொழுது இத்தகவல் தெரிந்ததால் உற்சாகத்துடன் அவர்களுடன் , நான்,  என் கணவர் , குழந்தையுடன் அப்பயணத்துக்கு ஆர்வத்துடன் தயாரானோம்.

ஓமன் பக்கத்து நாடு என்பதனால்நாங்கள் அனைவரும் அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa) பெறுவதற்காக  எங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்தோம். 

அதிகபட்சம் 225 திராம்கள் என்பதனால் என் மாமா கண்டிப்பாக இதற்குச் செல்ல வேண்டுமா என்று கடிந்து கொண்டார். நாங்கள் அச்சமயம் அருமையான காலநிலை என்பதாலும் அனைவருமே முதல் தடவை அந்த பயணத்தை அனுபவிக்க போகிறோம் என்பதாலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தோம். 

சுற்றுலா நிறுவனத்திலிருந்து அவ்விடத்திற்குச் செல்லவும் , திரும்பி அழைத்து வரவும் சிற்றுந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தாங்களே  வாகனத்தை ஓட்டிப் பயணத்தை இரசித்தவாறு செல்லும் வாய்ப்பும் இருந்தது.

சுற்றுலா நிறுவனத்தில் அதற்கேற்றார் போல் போக்குவரத்துச் செலவைக் கழித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தனர். தடங்காட்டியின் (GPS) உதவியோடு சரியான பயண இலக்கைக் குறிப்பிட்டால் சேரவேண்டிய இடத்தைச் சரியாகச் சேர்ந்திடலாம்.

அதிகாலையிலேயே வீட்டின் அருகிலே உள்ள பர்ஜுமான் (burjuman) நிறுத்தத்திற்கு முதல் ஆட்களாக வாடகை வண்டியில் சென்றோம். ரொட்டி , பழஊறல் (jam) ஆகியவற்றை காலை உணவாக எடுத்து வைத்திருந்தோம். கேரளாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் எங்களுடன் பயணத்தில் இணைந்தனர்.

அதிகாலை நெடுந்தூரப் பயணம் என்பதனால் அனைவருக்கும் நன்றாக தூக்கம் வந்தது. இடையில் சற்று நேரம் இயற்கை உபாதைக்காக சிற்றுந்தை நிறுத்தினார்கள். நாங்கள் போகும் வழியில் ஷார்ஜா என்ற பெயர் பலகைகளைப் பார்த்து அடைந்த குழப்பத்தை , ஷார்ஜா இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது என்ற விவரம் அறிந்தவுடன் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa), அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு எங்களை ஓமனின் எல்லையான (dibba) டிப்பாவிற்குள் அனுமதித்தனர். உள்ளே நுழையும் பொழுது வரிசைச்சற்று குறைவாக இருந்ததால்  சீக்கிரம் சென்றுவிட்டோம். இதுவே பண்டிகை விடுமுறை நாட்கள் என்றால் வரிசையில் நின்று காத்துக் காத்து அலுத்துவிடுவோம் என்றறிந்தோம்.

ஒமன் எல்லை வந்தவுடன் எனக்கு அங்கு வசித்த மருத்துவர் அமுதா அத்தையின் ஞாபகமும், என் கணவருக்கு அவரது தாசு மாமா ஞாபகமும் வந்து சென்றது. பின்னொரு நாட்களில் ஒமனுக்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டோம்  

பின்பு சிறிது தூரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம்
மலைகளால் சூழப்பட்டு நல்ல தட்பவெப்பத்துடன் வரவேற்றது.
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்பம் என்பதனால் அழகுகடலும் உயரமும் கம்பீரமும் உடைய மலைகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன. திரைப்படப் படப்பிடிப்பு எடுப்பதற்கு நல்ல இடம் என்று நானும் என் அத்தையும் பேசிக்கொண்டோம். 

சிற்றுந்திலிருந்து இறங்கி வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை பதட்டத்துடன் அதிரடியாக தாவி குதித்து நாங்கள் எங்களுக்கான படகை அடைந்தோம். எங்களால் படகுகளை தனியே தாவி குதிக்க இயன்றாலும், நானும் என் அத்தையும் மிகவும் பயந்தது போன்று பாவணை செய்ய, என் கணவரும்,என் மாமாவும் தங்களது கைகளை நீட்டி எங்களை பத்திரமாக படகுகளை கடக்க உதவிசெய்ய நானும் என் அத்தையும் கண்களில் காதல் தெரிய சிரித்துக்கொண்டோம்.

குழந்தையை வைத்திருந்ததால் படகுகளைத்தாவி குதிக்க நான் மிகவும் பயந்துதான் போயிருந்தேன். இரண்டு அடுக்குப் பெரிய படகில் மெத்தை தலையணையெல்லாம் வைத்து பயணத்தை சொகுசாக ஏற்பாடு செய்திருந்தனர். அயல்நாட்டினர் மற்றும் வடநாட்டினருடன் எங்கள் பயணத்தை காற்றின் வரவேற்பு முத்தத்துடன் ஆரம்பித்தோம். ஒரு சிலர் படகு புறப்படுவதற்குத் தாமதமானதால் தங்கள் சுற்றுலா நிர்வாகத்தினருக்கு தொலைபேசியில் அழைத்து திட்டி தாங்கள் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு கத்திக் கொண்டிருந்தார்கள்.

படகிற்குள் இளவெயில் அடித்ததால் வெயிலடிக்காத பக்கத்தில் உட்கோர்ந்தோம். ஆனால் படகு திரும்பி கடலுக்குள் வேறுவேறு திசையில் பயணம் செய்ய இளவெயிலும், நாங்கள் எங்கள் உடைமைகளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக படகில் முதலுதவி பெட்டியில் தேவையானவற்றை வைத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் ஈரட்டிகள் (biscuits) , பழங்கள், தண்ணீர், காபி ,தேநீர் ,
 குளிர்பானம் போன்றவற்றை கட்டுப்பாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் அடுக்கில் கடற்கரைகளில் போடப்பட்டிருக்கும் சாய்வு படுக்கைகளை போட்டிருந்தனர். அதில் நமக்கென தனிபாங்குடன் படுத்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்தவாறு உடலைத் தழுவும் குளிர் காற்றுடன்  பயணம் செய்வது சுகமான ன்றே!

நல்ல சீதோஷ்ணநிலையில் நாங்கள் சென்றிருந்ததால் படகு செல்ல செல்ல குளிர் காற்று வீசியது. அந்த குளிர்ந்த காற்றில் என் தமிழ்செல்வி அத்தையின் கூந்தல் ஒரு தனிபாங்குடன் அழகாகப் பறக்க அதை என் கணவர் தெளிவாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார். கதாநாயகி போல் இருக்கிறீர்கள் அம்மா என்று என் கணவர் கூற வெட்கத்தில் அத்தை சிரித்தார்.


பெரிய படகிலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரித்து சிறு சிறு  படகுகளில் அனைவரையும் பாதுகாப்பு  உடையுடன் அங்கு சற்று தொலைவிலிருந்த வித்தியாசமான பாறைகள் அடியே கூட்டிச் சென்றார்கள். சுண்ணாம்புக் குகைகள் அருகே சென்று பார்த்தபொழுது சிறு பறவைக்கூட்டையும், வெவ்வேறு காலத்தில் தண்ணீரின் அளவுகள் பாறைகளில் பதிந்திருந்ததையும் காணநேர்ந்தது.

மிகுந்த தைரியசாலிகள், நீச்சல் தெரிந்தவர்கள் , சாகச விரும்பிகளை வாழைப்பழம் (banana ride) போன்ற படகில் வேகமாகக் கூட்டிச் சென்றனர். வாழைப்பழம் போன்றிருந்த படகில் பயணம் செய்யும் ஆசையிருந்தாலும் நீச்சல் தெரியாத காரணத்தால் விஷப் பரீட்சையில் ஈடுபடவில்லை.


சில இடங்களில் தண்ணீர் கண்ணாடியைப் போன்று இருந்ததால் கீழே உள்ள மணல்,  மீன்கள், கல்,  பவளப்பாறைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. நீரடி காற்றுவழங்கி (snorkelling) வழி சுவாச நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மூச்சுவிடுவதை திறமையாய்க் கற்றுக் கொண்டோமானால் கடலினுள்ளே உள்ள  உயிரனங்களையும்,  பாறைகளையும் இரசித்தவாறு வேறு உலகிற்குச் செல்லும் வாய்ப்புகிடைக்கும்.

நீச்சலும் தெரிந்துவிட்டால் பிரமாதம்.யாருடைய உதவியில்லாமல் கடலுக்கு அடியில் உள்ள உலகத்தை உணரலாம். அந்த அனுபவத்தை அந்தமானில் அனுபவத்திருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாததால் வழிகாட்டி ஒருவரின் துணையுடன் நானும் என் கணவரும் கடலுக்கடியில் உள்ள அற்பத உலகைப் பார்த்திருக்கிறோம்.

கடலில் ஓரிடத்தைக் காட்டி இங்கேதான் ஓங்கில்கள் ( dolphin) வர வாய்ப்பு அதிகம் என்றார்கள். ஓங்கில்களின் வருகை மிகவும் அரிதானது என்றும் கூறியிருந்தார்கள். நாங்கள் ஒரு ஓங்கிலைக் கூட பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்திருந்தோம்.

அதுவே ஓமனுள்ளே அமைந்திருந்த கசாபா முசண்டம் என்றால் நிறைய ஓங்கில்கள் வரவாய்ப்புள்ளது என்றும் அவைக்கு உணவளிக்க அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
பின்னொரு நாள் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஓமனுள்ளே அமைந்திருக்கும் கசாபா முசண்டத்திற்கு வண்டியில் செல்ல வேண்டுமென்று நானும் என் கணவரும் பேசிக்கொண்டோம்.

வயதான பாட்டிகளாயினும் பலர் குடும்பத்துடன் சுற்றுலா வந்தது ஆச்சர்யத்தை தந்தது. நம் நாட்டில் பாட்டிகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வந்தபின் இவையெல்லாம்  என்னால் முடியாது என்று கூறி சுற்றுலாவைத் தவிர்த்துவிடுவார்கள். வயதான பாட்டிகளாயினும் படகில் ஏறி, இறங்க, மகிழ்ச்சியாய் தன் வயதை ஒத்தவர்களுடன் பேசிச்சிரித்து குடும்பத்துடன் களிப்பிலிருந்தனர்.

பெண்கள் உடலை மூடிக் கொள்ள புர்கா என்னும் கருப்பு உடையைத்தான் உடுத்துவார்கள் என்றெண்ணிய எனக்கு பல வண்ண வண்ண நிறத்தில் பல பல வடிவமைப்புகளுடன் உடலை மறைக்கும் பாவாடை சட்டை போன்று அணிந்திருக்கும் பெண்களைப் பார்க்கையில் விந்தையாய் இருந்தது.

சுகமான காற்றை இரசித்து என் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய படகில் என் மாமாவை துணைக்கு அமர்த்திவிட்டு நான், என் கணவர், அத்தை ஆகியோர் பெரிய
படகிலிருந்து சிறுபடகு வழி சிறுதூரம் வந்து ஒரு தீவுபோலிருந்த மலையடிவாரம் அருகே சிறுசிறு குழுக்களுடன் இறங்கினோம்.

மக்கள் நடமாட்டமில்லா அந்தத்தீவில் ஒரு குடிசையும் சில ஆட்டுக்குட்டியும் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. ஒரு பகுதிக்கு வந்தவுடன் நீந்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வர நீச்சல் தெரிந்தவர்கள் ஆர்வமாய் நீந்த ஆரம்பித்தார்கள். நாங்களோ நீச்சல் தெரியாததால் தீவின் கரையிலே கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம். கல்யாணமான புதுமணத் தம்பதிகள் பலர் அச்சுற்றுலாவிற்கு வந்திருந்ததனால் அத்தனித்தீவில் மிகவும் தள்ளிச் சென்று செங்குத்தான மலைகளில் எல்லாம் ஏறி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களுக்கு முன்னால் கடலில் குளித்தனர். அக்குடும்பத்தில் தந்தை தன் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிக்கொண்டிருந்தார். அக்குழந்தை பயந்தாலும் நிதானமாக்க் கோபப்படாமல் கற்றுத்தந்தது எல்லா தந்தையர்களின் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மதிய நேரம் வந்தவுடன் சுடச்சுட சுவையான இந்திய சைவ அசைவ உணவை நம் தேவைக்கேற்றார் போல பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்கள். சுவையான உணவினால் அனைவரும் உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



பின் மீன்பிடிப்பதற்குத் தேவையான தூண்டில், இரை மற்ற தேவையான பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தனர்.
நானும் என் கணவரும் முதல்முறையாக மீன்பிடிக்க ஆயத்தமானோம்.

என் அத்தை பின்னாலிருந்து நாங்கள் செய்யும் கலாட்டாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் கணவர் தூண்டிலை ஆழமாக இறக்க மீன் நிதானமாக இரையை தின்றுவிட்டு போய்விடும் என்று நான் கூறியது போலவே நடந்தது. இறக்கிய தூண்டிலை மேலே கொண்டுவரவே வெகுநேரமானது.

பெரிய படகை வங்காள மொழி பேசும் இளைஞர்கள் கடலிலே செலுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் பேசியது இந்தி மொழிதானா என்று ஐயம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் பேசியது வங்காள மொழி என்று தெளிவுபடுத்தினார் கணவர்.

படகின் கீழ்தட்டில் முழுக்கட்டுப்பாடு இருந்தாலும் மேலடுக்கில் படகின் திசையை தீர்மானிப்பது போன்று கருவியும் சில எந்திரங்களும் இருந்தன. பெரிய படகையையே ஓட்டுவது போன்று தோற்றமளிப்பதற்காக அக்கருவியை இயக்குவது போன்று பலரும் ஒளிப்படமெடுத்துக் கொண்டனர்.

வங்காள இளைஞர்கள் அடிக்கடி மேல்அடுக்கில் வந்து எந்திரங்களை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த எந்திரங்களின் அருகே நாங்கள் அமர்ந்திருந்ததால் மொழி வேறானாலும் என் குழந்தையுடன் சைகை மொழியிலும் புன்னகையிலும் அன்பை வெளிப்படுத்தினர்.

சில வடநாட்டுக் குடும்பங்கள் தங்களுக்குள் நிறைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அதிகமாக செலவாகிவிட்டது என்று அங்கலாய்த்த மாமா பயணத்தின் முடிவில் பயணத்திற்கேற்ற கட்டணமென்று சிரித்த முகத்துடன் கூறினார்.
அத்தையும் சுற்றிப்பார்த்த எல்லா இடங்களில் இந்த இடம்தான் மிகவும் மனம் கவர்ந்தது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

சில சுற்றுலா நிறுவனங்கள்  சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இரவு தங்குவதற்கான கூடார வசதி, உணவு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் அறிந்தேன். அருமையான இயற்கைச் சூழலில் இத்தகைய வசதிகளுடன் குடும்பத்தினர் , நண்பர்களுடன் கொண்டாடுவது நிச்சயம் சிறந்த அனுபவமாகத் தான் இருக்கும்.

படகிலிருந்து இறங்கி சிற்றுந்து பயணத்திற்கு தயாரானோம். பல சுற்றுலா சிற்றுந்துக்கள் அணிவகுத்து நின்றாலும், அந்நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் வாகனத்தை லாவகமாக ஓட்டிச்சென்று சிறுசிறு தெருக்களின் வழியே புகுந்து வந்து பொதுச்சாலையில் இணைந்து முந்திச் சென்றது நம் நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை நினைவூட்டியது. தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் வண்டிகள் சுற்றுலா சிற்றுந்துக்களை முந்திச் சென்றதால் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேர காத்திருப்பு எரிச்சலைத் தந்து   , ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் துபாயை நோக்கிப் பயணமானோம். தினமும் வீட்டு வேலையிலும், குழந்தையைக் கவனிப்பதிலும் ,வெளிஇடங்களுக்கு கூட்டி செல்வதிலும் களைப்பாகி குடும்பத்துடன் மனம் விட்டுப் பேச நேரமில்லாமல் இருந்த வருத்தத்தை இந்த நீண்ட நேர சிற்றுந்துப்பயணம் போக்கியது.

கணவரைப்பற்றி நான் புகார் கடிதம் வாசிக்க என் மாமாவும் , அத்தையும் எனக்கு சாதகமாகப் பேசி என் பக்கம் தீர்ப்பு கூற சற்று அதிர்ந்து போனார் என் கணவர். இது போன்று நெடும்பயணங்களில்
தானே மனம் விட்டுப்பேசிக் கொண்டு நம் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

ஈடுபாடில்லை என்றாலும் மற்றவர் எழுந்து எங்கும் ஓட முடியாது அல்லவா??  வழியெங்கும் கார்இருள் சூழ்ந்து இருந்தாலும், தெரு விளக்கின் வெளிச்சம் பரவாத இடங்களிலும் ஓட்டுநர் சாதாரணமாக வழியைக் கண்டுபிடித்து ஓட்டினார். எங்களுக்குத் தான் இரவு நேரத்தில் மிகவும் திகிலாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லா சாலைவழி ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது.
மனம் மயக்கும் ஒரு நாள் பொழுதை அசைபோட்டுக்  கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.


Friday, February 3, 2017

இடுப்பாட்டும் இடுப்பாட்டம் (desert saffari)

பாலைவன உலாவைப்பற்றி ஏற்கனவே இரண்டு முறை நண்பர்களுடன் சென்றிருந்த கணவரிடம்  நான்  கேட்டறிந்ததை பெற்றோரிடமும் , அத்தையிடமும் பல பீடிகை புரிந்து கூறியிருந்ததால் என்னுடன் சேர்ந்து அனைவருமே முதன்முறை பாலைவன உலாசெல்வதற்கு ஆர்வமாய் மதியம் மூன்று மணிக்காகக் காத்திருந்தோம்.

இதே போன்று ஆர்வத்தை சிலமாதங்களுக்குப்பின் வந்திருந்த என் மாமாவிற்கும், அத்தைக்கும் ஏற்படுத்தியிருந்ததால், முதல் தடவை வாகன இருக்கை வசதி காரணமாக அவர்களின் பயணம் தடைபெற்றதால், அத்தை சிறிது ஏமாற்றமடைந்தாலும் அடுத்த நாளே அச்சவாரியை முழுவதுமாக இரசித்த அனுபவத்தை என்னுடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

அங்கு ஒட்டகச்சவாரி செய்யும் வாய்ப்பிருப்பதால் அத்தைக்கும், அம்மாவுக்கும் என்னுடைய உடைகளில் அவர்களுக்கான வசதியான உடையை தேர்வுசெய்யச் சொல்லியிருந்தேன். முதன் முறையாக பாவாடை, சட்டை, சேலை என்ற இருக்கமான மற்றும் பாரமான உடையிலிருந்து விடுபட்டு மிருதுவான காற்றோட்டமான சுடிதாருக்கு மாறியிருந்த மாரீஸ்வரி அத்தை , ஆடையே உடுத்தாது போல் உள்ளதென்று வெட்கப்பட்டுக்கொண்டார். இதே வார்த்தைகளை சில மாதத்திற்கு பின் வந்திருந்த என் தமிழ்செல்வி அத்தையும் கூறியது ஆச்சரியத்தைத் தந்தது.

அம்மா ஏற்கனவே யோகா வகுப்புக்கு என்று சுடிதார் உடித்தியிருந்ததால் சாதாரணமாக இருந்தார். 
என்னதான் கண்ணியமான ஆடை என்றாலும் ஒருபெண் தான் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ள தந்தை, கணவன், உடன்பிறந்தவன், மகனென்று அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து 90% முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளித்தது.

பாலைவனத்தில் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமான வண்டியில் எங்களுடன் ஒரு நடுத்தர வயது இந்திய தம்பதியையும் ஓட்டுநர் அழைத்துச் சென்றார். அப்பா உற்சாகமாக தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தன் மருமகன் தனக்கு மகன் போல என பெருமைபொங்கக் கூறி அந்த தம்பதிகளுடன் உறையாடிக் கொண்டு வந்தார்.

போகும் வழியிலேயே ஒட்டக பண்ணையையும், வெப்பக் காற்று பலூன் சவாரி (hot air ballon ride) முகாமையும், ஒரு பயிற்சியாளரின் உதவியோடு  வானில் இருந்து குதித்து (sky diving) வான்குடை மிதவை (parachute) வழியாக தரையிரங்கும் முகாமையும் பார்த்தவாரே சென்றோம்.

முதலில் இதற்காக ஆகப்படும் செலவை சுற்றுலா நிறுவனம் நடத்தி வரும் தமிழ் நண்பர் நடராஜன் வழி தெரிந்து கொண்டு கணவரிடம் கெஞ்சலாகக் கோரிக்கை வைத்தேன். வெப்பக் காற்று பலூன் சவாரி, பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து மாறுபடும், குறைந்த பட்சம் 600 திராம்கள் என்றும் , (sky diving) 2000 திராம்கள் என்றும் குறிப்பிட்டார்.

செலவு கொஞ்சம் அதிகமென்பதுடன்,  பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு தன் பயத்தை வெளிப்படுத்தினார் என் காதல் கணவர்.  சாகசப் பயணத்திற்கு செலவழிப்பது எனக்கு வருத்தமில்லை, ஆனால் நீ எந்த விபரீதமும் ஏற்படாமல் சாகசப் பயணம் செய்து திரும்பவேண்டும் என்பதே என் கவலை என்று உருகினார். ஏற்கனவே சாகசப் பயணங்களில் ஏற்பட்ட விபத்து காணொளிகளைப் பார்த்து மிரண்டு போயிருந்தார் ஆருயிர் கணவர்.

(sky diving) செய்வதற்கு ஏற்றார் போல் உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டுமென்று தெரிந்தவுடன் அதற்கான வழியை மனதிற்குள் சிந்தித்துக் கொண்டேன். இந்த இரு சாகச பயணமும் வாழ்வில் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதில் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.


பாலைவனப் பயணத்தின் வருகைக்கு சற்று  முன்னே ஒரு உணவுவிடுதியருகே வண்டிச் சக்கரத்தின் காற்றைப் பாலைவன பயணத்திற்கு ஏற்றார் போல் குறைத்துக் கொண்டார்கள். அந்த விடுதியில் ஒரு கடையில் கண்ணாடிக் குடுவையினுள் சலித்த மண்ணை நிரப்பி பல வகை வண்ணங்களுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுத்துக்களையும் , படங்களையும் ஒரு குச்சியினால் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.பாலைவனத்தில் மண்தானே பிரசித்திப் பெற்றது என்று பேசிக் கொண்டோம்.

மணல்மேடு சவாரி (dune bashing) செய்வதற்கு ஆயத்தமாக இருக்கைப்பட்டைகளை எல்லோரும் போட்டுக்கொண்டோம். வண்டியின் ஓரத்தில் இருந்த பிடிப்பிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சிறு குழந்தை வைத்திருந்ததால் ஓட்டுநர் சிறிது அக்கறையுடனேயே மிதமான வேகத்துடன் வண்டியை ஓட்டினார்.


உயரமான மணல்மேடுகளில் இருந்து பாய்ந்து கீழே செல்கையில் எங்கே விபத்து ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயம்மனதுக்குள் இருந்தாலும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. தாழ்வான பகுதியிலிருந்து மேடான மணல் பகுதிகளுக்கு செல்லும் பொழுது எங்கே குப்புற விழுந்து விடுவோமோ என்ற திகிலுடன் பயணம் செய்தோம்.

சவாரிக்கு பயப்படாத குழந்தை, உற்சாக மிகுதியில் நாங்களனைவரும் கூச்சல்போட ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று அழ ஆரம்பித்ததால் நாங்கள் அனைவரும் கத்துவதை நிறுத்தி அமைதியாய் பயணத்தை இரசிக்கலானோம். கண்ணிற்கு எட்டியதூரம் வரை மணல்மேடுகளே தெரிந்தாலும் ஓட்டுநருக்கு மட்டும் எப்படித்தான் வழி தெரியுமோ?

என் காதல் கணவர் இந்த திக்குத்தெரியாத பாலைவனத்தில் உன்னைத் தனியாக விட்டுவிட்டால் என்ன செய்வாயென்று என்னைக் கேட்க, மரியான் படத்தில் வரும் தனுஷ் தன் காதலியை நினைத்து தப்பித்து வருவது போன்று உங்களை நினைத்து வருவேனென்று கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.

பயணத்தின் நடுவே ஒரு மணல்குன்றின்மேல் வண்டியை  நிறுத்தி அந்தப் பாலைவனத்தின் அழகை இரசிக்கவும்,  ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் ஓட்டுநர் சிறிது அவகாசம் கொடுத்தார்.
அச்சமயம் ஒரு திறந்தமாதிரியுள்ள சிறிய நான்குச் சக்கர வண்டியில் ஆந்தையுடன் வந்த அரபியர் ஆந்தையைக் கையில் வைத்துக் கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொள்ள 10 திராம்கள் என்றார். நான் என் முட்டைக் கண்களை உருட்டினாலே ஆந்தை போன்று இருப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ அனைவரும் என்னுடனேயே ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.


திரைப்படங்களில் வருவது போன்று சாகசங்கள் பல முடித்த பின் வண்டி மணல்புழுதியுடன் காட்சியளித்தது. பாலைவன உலா 100 முதல் 120 திராம்களில் பதிவுசெய்தோமானால் அதற்கேற்ப  தரத்துடன் சற்று ீண்ட நேர மணல்மேடு சவாரி , தரமான உணவு, சற்று அதிக எண்ணிக்கையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றமைந்து நிறைவான நினைவுகளையும், அனுபவத்தையும் தரவல்லது.

சில நேரங்களில் சிலமாதங்களுக்கு பின் தேனிலவுக்கு வந்திருந்த என் அத்தை மகன் இராமுக்கும் அவன் மனைவி உமாவிற்கும்  ஏற்பட்டதுபோல மற்ற பயணிகளை ஏற்றுவதில் நேரம் செலவாகி இருட்டி விட்டது என்று மணல்மேடு சவாரி சரியாக நடைபெறாமலும் , பொழுது போக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டதென்று  மத்த ஏற்பாடுகளை இரசிக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது.

குறைவான கட்டணத்தில் பாலைவன உலா பதிவு செய்கையில் ஒரு சிறிய பேருந்தில் அனைவரையும் கூட்டிக் கொண்டு வருவதனால் சிறிது தூரமே மணல்மேடு சவாரி செய்யும் சந்தர்ப்பம் உள்ளது.

மணல் சவாரிக்குப்பின் முகாமின் வாசலிலேயே ஒட்டகச் சவாரிக்கு மக்களுடன் வரிசையாய் இரண்டு இரண்டு பேராக  நிற்க ஆரம்பித்தோம். ஒருவிதமான பதட்டத்துடன் நானும் மாரீஸ்வரி அத்தையும் முயற்சி செய்து ஏறி,  ஒட்டகம் எழும் போது  எங்கே கீழே விழுந்துவிடுவோமோ  என்ற பயத்தோடு சவாரியைத் தொடங்கினோம்.

சிறிது தூரம் ஒரு வட்டமடித்து விட்டு கீழே அமர்வதற்கு முன்பு ஒரே மூச்சில் ஆட்டம் கொடுத்து அமர்ந்தது. முதன் முறை ஒட்டகச் சவாரியென்பதால் ஏறும் பொழுதும் , இறங்கும் பொழுதும் அந்த ஒட்டகம் கொடுத்த எதிர்பாராத ஆட்டத்தை நாங்கள் இருவருமே வெகுவாக இரசித்தோம். பின்பு என் பெற்றோரும் ஒட்டகச் சவாரி செய்து முடிக்க ஒளிப்படமும் காணொளியும் பதிவு செய்து கொண்டோம். ஏற்கனவே இருமுறை பாலைவன உலா வந்திருந்ததால் கணவர் சிறந்த சுற்றுவழிகாட்டியாக செயல்பட்டார்.

அந்தப் பாலைவன மணலில் நான்கு சக்கர பந்தய வண்டி போன்று இருந்த வாகனத்திற்கு  கட்டணத்தின் படி சவாரிக்கு அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். அதை நாமே ஓட்டும் வாய்ப்பும், ஆசையும் இருந்தாலும் ஒரு நபருக்கு 100 திராம்கள் என்பதனால் பேசாமல் முகாமுக்குள் நுழைந்தோம்.

நுழைவு வாசலிலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு சிறு ஊஞ்சல்களும், ஏற்றப்பலகைகளும் அமைத்திருந்தார்கள்.
அருகிலேயே பாரம்பர்ய அரபிய ஆண்கள் மற்றும் பெண்களின் உடையை அணிந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்ள கூடாரங்கள் அமைத்திருந்தனர். கட்டணம் கொடுத்தால் நமக்கு உடையை அழகாகவும், கச்சிதமாகவும் உடுத்திவிட்டு அலங்காரம் செய்யவும் , தெளிவான ஒளிப்படங்கள் எடுத்துத்தரவும் ஆட்கள் தயாராக இருந்தனர்.

அரபி உடையில் அப்பா கிருத்துவ பாதிரியார் போன்று இருப்பதாகக் கூறிச் சிரித்தோம். நாங்கள் பெண்கள் அனைவரும் கருப்பு புர்கா அணிந்து கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். 

மற்றொரு கூடாரத்தில், எளிமையான வடிவம் கொண்ட மருதாணியென்றால்  இலவசமாகவும்,  சிரத்தையுடன் போடப்பட வேண்டிய நுட்பமான வேலைகொண்ட மருதாணி வடிவங்கள் என்றால் கட்டணங்கள் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். கட்டணமென்றாலும் அமெரிக்க, இங்கிலாந்து பெண்கள் ஆர்வமுடன் கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சுலபமான வடிவங்களைப் போட்டுக் கொண்டாலும் இதைவிட பிரமாதமான வடிவங்களை நான் உங்களுக்குக் கடையில் மருதாணிக்கூம்பு வாங்கி வரைந்து விடுகிறேன் என்றவுடன் அத்தையின் முகம் மலர்ந்தது.

வந்திருந்த அனைவருக்கும் தேநீர், காபி, தண்ணீர், குளிர் பானம் , திண்பண்டம்  போன்றவற்றை கட்டுபாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். குளிர் பானத்தின் மூடியை மட்டும் திறந்து கொடுத்து அதை நாம் மூட்டைக்கட்டி எடுத்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். வட்டமான அரங்கத்தைச் சுற்றி சொகுசாக அமர்ந்து கொள்ள தலையணைகள், மெத்தைகள், மேசைகள் போடப்பட்டிருந்தன. முக்கியமான பிரமுகர்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க  சற்று உயரமான அரங்குகளை அமைத்திருந்தனர்.

அரபு நாடுகளில் உள்ள மக்கள் ஹுக்கா அல்லது ஷுஷாவை புகைப்பதை தங்களின் சமூக கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யத்தின் ஒரு பகுதியாக கருதியிருந்தனர். அதில் பலவகையான நறுமணைச் சுவையிருந்தாலும் ஆரஞ்சு நறுமணைச் சுவையை  நுகரும் வாய்ப்பு எனக்கும் என் கணவருக்கும் கிடைத்தது. சுகாதார காரணத்திற்காக உறிஞ்சும் குழாயை மட்டும் மாற்றும் படியாக வடிவமைத்திருந்தனர்.
பழைய திரைப்படங்களில் துபாய் ஷேக்குகள் புகைப்பதை பார்த்திருப்பீர்கள் அல்லவா ? அதேதான்.


சிறிது நேரம் அவற்றை புகைப்பதனால் தீங்கோ போதையோ ஏற்படாது என்பதனால் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து உரிய ஆரம்பித்தோம். ஒரு திரைப்படத்தில் விவேக் வட்டவட்டமாக புகைவிடுவது என்னை கவர்ந்திருந்ததால் அதை முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன். என் பெற்றோரும் அத்தையும் வித்தியாசமாக இருந்த ஷுஷா கூடாரத்தை பார்வையிட்டார்கள் ஆனால் அதனை முயற்சி செய்ய ஏனோ அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை.


இருட்ட ஆரம்பித்ததும் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஆரம்பமாயின. விசுவரூபம்  படத்தில் 'சிங்கில் கிஸ்கே லவ்வா' என்ற பாடலில் பிண்ணனியில்  நடனம் ஆடும் டனோரா நடனக்காரர்கள் இரண்டு பேர் பெரிய பாவாடையுடன் நடனமாட ஆரம்பித்தார்கள். அதில் ஒருவர் ஆடிக்கொண்டே பாவாடையை லாவகமாக கழட்டி சுழற்றி குழந்தையைப் போல் பாவிக்க தன்தலைமுடியை விரித்து தாய் குழந்தையை அரவணைப்பது போன்று செய்தார். அவர்கள் வேகமாய் சுற்றுவதைப் பார்த்தால் நமக்கே தலை சுற்றிவிடும் போல இருந்தது. அவர்கள் நடனமாடுகையில் இரவு நேரத்தில் பாவாடைத் துணிகளிலிருந்து வெளிவந்த ஒளிவெளிச்சம் மிகவும் அழகாக இருந்தது.

மனிதன் ஒருவர் உயர்ந்த கட்டைக்கால்களுடன் உள்ளே வந்து தன்திறமைகளைக் காட்ட அவரை நிமிர்ந்து பார்ப்பதற்கே கழுத்து வலித்தது. தீயை லாவகமாகவும், மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு ஒருவர் ஆச்சரிய மூட்டினார்.



ஒவ்வொரு முகாமிற்கு ஏற்ப பொழுதுபோக்கு கலை நடன நிகழ்ச்சிகள் மாறும் என்று பலமுறை பாலைவன உலா வந்த கணவர் கூறினார். இன்னும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் தொடர்ந்தபின் உணவு இடைவேளை அளித்தார்கள். எல்லா நாட்டினருக்கும் ஏற்றார்போன்று உணவு வகைகள், பழங்கள் காய்கறிகள்,  சைவ, அசைவ உணவுகளையும் தயார் செய்திருந்தனர்.  நமக்கு நாமே உணவைப் பரிமாறிக்கொள்ளும் முறையை நடைமுறை படுத்தியிருந்தார்கள்.


உணவு உண்டபின் எல்லோரும் உலகப்புகழ் பெற்ற இடுப்பு நடனத்தைக் காண ஆவல் கொண்டார்கள். பெரும்பாலான ஆண்மகன்கள் அந்த இசை, நடனமாடும்  பெண்ணின் உடல்அசைவுகளால் உந்தப்பட்டு எழுந்து ஆட ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் என் அப்பா இளைஞன் போன்று விசிலடித்தும், எழுந்து ஆடியும் அவரது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மருமகனின் முன் மானத்தை வாங்காதீர்கள் அப்பா என்று கூறி அவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பெரும்பாடானது.

உடலின் ஒவ்வொரு பகுதியையும் தனிதனியே இசைக்கேற்றார் போல நடனமாடிய பெண்  எவ்வளவு கடினமான உணவுக்  கட்டுப்பாட்டையும், தீவிர உடற்பயிற்சியும் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னுள் நிரம்பியது. நடனம் கவர்ச்சியாய் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குபின் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை.

பூங்காக்களில் மட்டுமல்லாது பாலைவனங்களிலும் மக்கள் மசாலா தடவிய சைவ அசைவ உணவுகளை எடுத்து வந்து தீயில் வாட்டி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒலிப்பெருக்கியின் மூலம் இசையை இரசித்து சந்தோஷமாக ஆடிபாடி தேநீர் அருந்தி வாரஇறுதி விடுமுறையை கழிப்பார்கள்.

பாலைவன பயணத்தைத் தாண்டியபின் வாகனத்தின் வண்டிச்சக்கரத்திற்குத் தேவையான காற்றை அடைத்துக் கொண்டு சாலையில் வண்டியை செலுத்தினார் ஓட்டுநர். வீடு திரும்பும் பயணத்தின் போது அந்த நடுத்தர வயது தம்பதியருக்கு எங்களுக்குத் தெரிந்த சுற்றுலா இடங்களைக் கூறி வழிகாட்டினோம். வீடு திரும்பிய பின்னும் அப்பா இடுப்பாட்டத்தில் தொலைத்த மனதை தேடிக் கொண்டிருந்ததை கேலி பேசி இனிமையான நினைவுகளுடன் கண் உறங்கினோம்.