Sunday, September 26, 2021

SERB - AV Accelerate Vigyan

 SERB - AV Accelerate Vigyan  

ஆய்வு மாணவர்களுக்கான திட்டம்❤️


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும்,  அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Accelerate Vigyan  திட்டத்தை 2020 ஆண்டு ஜூலை 2 தேதி தொடங்கியது . நாட்டின் ஆராய்ச்சித் தளங்களை விரிவுபடுத்தி, உயர்தர அறிவியல் ஆராய்ச்சிக்கு வழிவகிக்கும் விதமாக அறிவியலில் மேம்பட்ட மனிதவளத்தை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும். அனைத்து அறிவியல் பயிற்சித் திட்டங்களையும் ஒருங்கிணைத்தல், உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளைத் தொடங்குதல் மற்றும் வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


நாட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைக்  கருத்தில் கொண்டு, குறிப்பிட்டத் துறைகளில் முனைவர் பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதே ‘மிஷன் அபயாஸ்’( Mission Abhyaas)

திட்டமாகும். Karyashala கார்யசாலா என்ற உயர்நிலைப் பட்டறைகள் மற்றும் Vritika விருத்திகா என்ற ஆராய்ச்சிக்கான பயிற்சி வகுப்புகள் வழியாகவும் இப்பணி நிறைவேற்றப்பட உள்ளது. Indian Institutes of Technology, Indian Institute of Science, Indian Institutes of Science Education and Research, National Institutes of Technology, Council of Scientific & Industrial Research, Indian Council of Agricultural Research, Indian Council of Medical Research போன்ற இந்திய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இப்பயிற்சிகளை வழங்குகின்றார்கள்.

 

அதிநவீன ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான கருவிகள் குறித்த புரிதல் மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அனுபவத்தை வழங்குவதே Karyashala வின் நோக்கமாகும். தங்களது நிறுவனத்தில் உயர்நிலை வசதிகள் கிடைக்காமல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்குவதற்கான வேட்கையுடன் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் ரெண்டு வாரங்கள் வரை நடைபெறும் உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்களது தங்குமிடம், உணவு, பயணச்செலவு  போன்றவற்றை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான SERB நிதி உதவி அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.

தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் பெறாத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான ஆய்வு  மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருவதே 'விருத்திகா' வின் நோக்கமாகும். தங்குமிடம், உணவு, பயணச்செலவு போன்றவை  மட்டுமே ஏற்கப்பட்டு வேறு எந்த உதவித்தொகையும் தரப்பட மாட்டாது.

 

நாட்டின் அனைத்து அறிவியல் தொடர்புகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே Samoohan என்ற அமைப்பு. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பங்குதாரர்கள், வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைப்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். இவை Sayonjika மற்றும்  Sangoshthi திட்டங்களின் வழி அடையப்படுகின்றது. தேசிய நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நிகழ்வுகள் சயோஞ்சிகா திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்பான நிகழ்வுகள் நிதியுதவிக்கு மட்டுமே தகுதியானவையாகின்றன.

நாட்டின் அனைத்து அறிவியல் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் முக்கிய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பே Sayonjika திட்டமாகும். SERB இன் தற்போதைய குறித்தான கருத்தரங்குத் திட்டங்களே  Sangoshthi  என்றழைக்கப்படுகிறது.  அறிவியல் நிகழ்வுகளை நடத்துவதற்காக கருத்தரங்கு திட்டத்தின் வழி ஐந்து லட்ச ரூபாய் வரை வழங்கிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Sangoshthi திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

https://acceleratevigyan.gov.in/

Tuesday, September 21, 2021

SERB - POWER ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகள்❤️

 SERB - POWER ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகள்❤️

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் 2008ம் வருடம் தொடங்கப்பட்டது. SERB என்றழைக்கப்படும் இவ்வாரியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்றது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) 

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் பாலின வேறுபாடுகளைக் குறைக்கும் வகையில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக SERB – POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) என்ற மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக்கூடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய கல்வி மையங்களில் அங்கீகாரம் பெற்றுள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளும் அளிக்கப்படுகின்றது.


அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் பெண்களை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உதவியை இத்திட்டம் வழங்குகின்றது. ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான இணக்கமான சூழலை இத்திட்டம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


உயர்மட்டக் குழுக்களில் பெண்களை நியமித்து அவர்களது தலைமைப் பண்பை வளர்க்கும்விதமாக செயல்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு  ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஒரு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. SERB – POWER Fellowship , SERB – POWER Research Grants என்ற இரு பிரிவுகளின் கீழ் இத்திட்டத்தின் வழி மாணியங்கள் வழங்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் ஒரே காலக்கட்டத்தில் இவ்விருதிட்டங்களில் இணைந்து பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


SERB – POWER Fellowship


இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிக்கவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அறிவியல் மற்றும் பொறியியல் துறையில்

முனைவர் பட்டம் பெற்று தற்போது  ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 35-55 வயதுக்குட்பட்ட பெண் ஆராய்ச்சியாளர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். சம்பளத்துடனான கூடுதல் ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆராய்ச்சிக்கான மானியமாக வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாயை ஆராய்ச்சி உபகரணங்கள், உணவு, உதவியாளர்களுக்கான ஊதியம், உள்நாட்டுப் பயணங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நிறுவனத்தின் மேல்நிலைப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். மூன்று வருடங்களுக்கு உறுதிப்படுத்தப்படும்

இத்திட்டத்தின் காலத்தை நீட்டிக்க முடியாது.

வெற்றிகரமாக செயல்பட்ட ஆராய்ச்சியாளர்களால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆய்வாளர்கள் வேறு எந்த அரசுமானியங்களையும் அக்காலகட்டத்தில் பெறமுடியாது. www.serbonline.in என்ற இணையதளத்தின் வழி வருடந்தோறும் விண்ணப்பிக்கலாம்.


SERB – POWER Research Grants


இத்திட்டம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு

மூன்று வருடங்களுக்கு முப்பது லட்சம் முதல் அறுபது லட்சம் வரை மாணியமாக வழங்கப்படுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பதவி வகிக்கும் ஆய்வாளர்கள் இந்தியக்குடிமனாக இருக்கும்பட்சத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய திட்டங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை நிச்சயமாக உண்டாக்கித்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.


http://serb.gov.in/home.php

Friday, August 27, 2021

இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்கள்

புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்பது சான்றோர் கூற்று. ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையை அதன் சமகால இலக்கியங்களும் வெளிவரும் புத்தகங்களும் தீர்மானிக்கின்றன. இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகவும், பலவிதமான மாற்றங்களை முன்னெடுத்தவையாகவும் கருதப்படுகின்றன. புவியியல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட நாட்டை வளம் மிக்க தேசமாக ஆக்குவது அந்த புவியியல் எல்லைகளுள் பேணப்படும் பண்பாடும், கலாச்சாரமும், சமூக விழுமியங்களும் தான். அவைதாம் தேசம் எனும் மகத்தான உணர்வை கட்டி எழுப்புபவை.




தலைமுறை, தலைமுறையாக மக்களை , தாம் ஒரு தேசத்தின் புதல்வர் என்ற எண்ணத்தில் திளைக்கச் செய்பவை. தேசம் என்ற ஒன்றை கட்டி எழுப்பும் காரணிகளான பண்பாடு, மொழி, கல்வி, வாழ்க்கை முறை, சிந்தனை , சமூக விழுமியங்கள் ஆகியவற்றில் மிகச் சில வேறுபாடுகளுடன் பெருமளவு ஒற்றுமையானவற்றையே இலக்கியங்கள் கட்டமைத்து வந்திருக்கிறன. இலக்கியத்தின் பணி இந்த தேசத்தின் உணர்வினை எப்போதும் ஊக்கத்தில் வைத்திருந்தது. பக்தி இலக்கியங்கள் என பிற்காலத்தில் வகைப்படுத்தப்பட்ட ராமாயணமும், மகாபாரதமும் பரந்த இத்தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்திருக்கின்றன. காவியங்களின் மரபு இந்தத் தேசத்தின் மொழிகளில் உருவான ஒவ்வொரு படைப்பிலும் ஒரே போலத்தான் எதிரொலித்திருக்கின்றது. கொண்டும், கொடுத்ததும்தான் இந்தத் தேசத்தின் பெரும் அறிவுக் களஞ்சியம் நிரப்பப்பட்டிருக்கிறது. எதிரெதிர் கருத்துகள் கொண்ட நூல்கள் கூட அறிவின் பொற்தட்டில் ஒரே போலதான் அடுக்கப்பட்டிருக்கின்றன.

 சிறுவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கியங்கள், ஒடுக்கப்பட்ட மக்களது வலியைப் பகிரும் படைப்புகள், வரலாற்றின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமன்பாட்டின் அவசியம், மற்ற நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை தெரிந்து கொள்ள மொழிபெயர்ப்புப்படைப்புகள் என இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கங்கள் கணக்கிலடங்காதவை. தொலைக்காட்சி, திரைத்துறை மக்களுடைய பெரும்பாலான நேரங்களை எடுத்துக்கொள்வதாகக் கருதப்பட்டாலும் புத்தக வாசிப்பு இணையம், மின்புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் என பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்கள் குறித்து தங்களது வாசிப்பனுபவம் மற்றும் விமர்சனங்களை பல இளைஞர்கள் காணொளிகளாகவும் கட்டுரை பதிவுகளாகவும் எண்ணற்ற அளவில் பகிர்ந்துகொண்டு வருகின்றார்கள்.

பல முக்கிய இலக்கியப் படைப்புகள் திரைப்படமாகவும் மாற்றம் பெற்ற பல மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்று இந்திய இலக்கியத்துறையில் இளைஞர்களின் பங்கிற்கு வழிகாட்டியானார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அகிலன் தமிழகத்தில் சார்பில் பெற்றிருக்கின்றார்கள்.

 1956ல் படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 'சாகித்ய அகாடமி' துவங்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் 24 மொழிகளில் 7000 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழி வெளியீடும், விற்பனையும் 700 புத்தகங்களுக்கு அதிகமானதாக கருதப்படுகின்றது. 50க்கு மேற்பட்டோர் தமிழ் மொழியில் விருதுகள் வாங்கியுள்ளார்கள். ஆண்டுக்கு 400 இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் வெளியாகின்றன. சாகித்ய அகாடமி குழந்தை இலக்கிய பயிலரங்குகளை ஏற்பாடு செய்கிறது. சில பதிப்பகங்களும், அமைப்புகளும் அவர்களுடன் கைகோர்த்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். படிப்போம்... படைப்போம் என்ற லட்சியக் குரல் இவர்களது செயல்பாடுகளாக இருக்கின்றது. 

மத்திய அரசு இந்திய இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ஆண்டுதோறும் அசாமி, பெங்காலி, போடோ, சண்டாலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மைதிலி, ஒடியா, கொங்கணி, நேபாளி, உருது, மராத்தி, தெலுங்கு, சிந்தி, மணிப்பூரி, பஞ்சாபி, மலையாளம், காஷ்மீரி, டோக்ரி, ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற இருபத்தி நான்கு இந்திய மொழிகளின் படைப்புகளில் 35 வயதிற்குட்பட்ட சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாதமி சார்பில் யுவ புராஸ்கர் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பிக்கின்றது. தமிழ் மொழியில் கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டோமானால் என சுமார் பத்து பேர் யுவபுரஷ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார்கள். 

வலைதள இதழியக்கம் இவர்களுக்கான தளங்களை விரிவுபடுத்தி இருக்கின்றது. இளைஞர்கள் இடையே படைப்பாளிகள், நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இதழாளர்கள், பயணக்கட்டுரையாளர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், பேராசிரியர்கள், இலக்கியஉரையாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பெருகி வருகின்றார்கள்.

 நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் அதிகரித்து வரும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களது எண்ணிக்கை இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு சார்பில் தேசியகல்விக்கொள்கையின் வழிகாட்டுதலின்படி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் அதிக அளவில் எழுத்தாளர்களை உருவாக்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும்பண்பாடு ஆகியவற்றை வெளிக்கொணரவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுத இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர், தமிழ் மொழியில் கி.ராஜநாராயணன், கன்னட மொழியில் வைதேகி, தெலுங்கு மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத், குஜராத்தி எழுத்தாளர் திருபென் கோர்தன்தாஸ், டோக்ரி எழுத்தாளர் பத்மா சச்தேவ், ராஜஸ்தானி எழுத்தாளர் திவ்யா ஜோஷி, கொங்கணி எழுத்தாளர் மீனா காகோட்கர், சிந்தி எழுத்தாளர் போபடி ஹீரானந்தானி , மைதிலி மொழி எழுத்தாளர் ஆஷா மிஷ்ரா, உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய், மராத்தி எழுத்தாளர் சுஜாதா கொதாஸ்கர் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்தியுள்ளார்கள்.

Sunday, July 5, 2020

ஏழு இராஜாக்களின்தேசம் - கவிப்பிரியன் ஜீவா வாசிப்பு அனுபவம்

ஜீன் 29 2020, அன்று புத்தகம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து பகிரப்பட்டிருக்கும் வாசிப்பு அனுபவம்❤️

நன்றி - கவிப்பிரியன் ஜீவா


ஏழு ராஜாக்களின் தேசம் - நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் எனக்கு அறிமுகம். இப்புத்தகத்தை வாசிக்கும்வரை அப்படிதான் நினைத்திருந்தேன். வளைகுடா நாடுகளுக்கும் எனக்குமான தொடர்பை நான் இங்கு சொல்லியாக வேண்டும். அப்பாவின் மறைவு, தங்கையின் கல்யாணதேவை, குடும்ப கடன்சுமை என கந்துவட்டிக்கு கடன்வாங்கி விமானம் ஏறி 6க்கு 3 கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்த சராசரி இளைஞர்களில் நானும் ஒருவன். சவுதி அரேபியாவில் 2 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. அங்கு நான் பார்த்து வியந்த அரபிகளின் வாழ்வியல் முறை, உடைகலாச்சாரம், உணவு கலாச்சாரம் அனைத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய திருமறைகளிலும், படங்கள் வழி பார்த்து படித்து வளர்ந்தவன் என்பதால் ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த புத்தகத்தில் அப்படியான அனைத்தையுமே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அமீரகத்தில் 3 மாதகாலம்தான் பணிபுரியும்படியான வாய்ப்பு கிடைத்தது. அங்கு வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்து பெயரும் அதைபற்றியும் தெரியாமலே வியந்து ரசித்தவன். அபிநயா அவர்கள் அவ்ஒவ்வொன்றின் பெயரையும், கடந்தகால வரலாற்றையும், கட்டிய தொழிற்நுட்பத்தையும் எழுதியிருப்பது பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த மூன்றுமாத காலங்களும் பானைக்குள் தலையை செலுத்திய பூனையைபோல்தான் இருந்திருக்கிறேன் என்பதை புரியவைத்து விட்டார். இரண்டு வருடங்கள் கணவரின் வேலை நிமித்தமாக அமீரகத்தில் இருந்ததாகவும் அந்த கால இடைவெளிக்குள் ஆராய்ந்து எழுதியதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை காரணம் இவ்வளவு அரிய தகவல்களை அந்நாட்டு பூர்வ குடிகளே அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏழு மாகாணங்களையும் அவற்றின் பெயர்காரணங்கள் கடந்த கால வரலாறு நிகழ்கால ஆட்சி எதிர்கால வளர்ச்சி என பார்த்து பார்த்து எழுத்துகளால் செதுக்கியிருக்கிறார். பண்டிகைகள், பாரம்பரிய நடனம், தொன்மையான விளையாட்டுக்கள் என பலவற்றையும் அலசி எழுத மெனக்கெட்டிருக்கிறார். பல எழுத்தாளர்கள் சொல்வது போல இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அட்டவணையில் துபாய் பஸ்ஸ்டாண்ட் என்று படித்ததும் வடிவேலு காமெடிதான் சட்டென்று ஞாபகம் வந்தது உள்ளேபோய் பார்த்தால் அவரும் அதையேதான் குறிப்பிட்டுள்ளார். அல்நூர் மசூதி, அல் எஸ்லா ஸ்கூல் மியூசியம்,மஹாட்டா மியூசியம், ரோலா பார்க், மரிடைம் மியூசியம், துபாய்மால், புர்ஜ் கலிபா என நீளுகிறது பட்டியல். மொத்த புத்தகத்தையும் பற்றி எழுதி முடிக்க வேண்டுமென்றால் விமர்சனத்திற்கென்று தனி புத்தகம்தான் எழுத வேண்டும்

ஏழுராஜாக்களின் தேசம்
பிரமிப்பின் உச்சம்

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, April 1, 2020

ஏழு இராஜாக்களின் தேசம் - தம்பிதுரை வாசிப்புஅனுபவம்


கொரானோ ஊரடங்கு நாட்களில் பொழுது போக்க மிகவும் கடினமாக இருந்தது . என்ன செய்யலாம் ? சரி.‌‌... என் மகள் அபிநயா எழுதிய 'ஏழு ராஜாக்களின் தேசம்' புத்தகம் படிப்போம் என்று படிக்க ஆரம்பித்தேன். 140 பக்கம் படிக்கும் வரை ஆர்வம் அதிகம் இருந்தது. பிறகு சிறு தொய்வு ஏற்பட்டது. காரணம் ...அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தகவல்கள் தான். ஆனால் அதில் அவள் உழைப்பும் அர்ப்பணிப்பு தெரியவும் மீண்டும் ஆவலாக படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் வரலாறு மிகவும் பிடிக்கும் என்பதால், ரசித்து புத்தகத்தில் பயணம் செய்தேன்.



அபி துபாய்க்கு அழைத்த போது மிகவும் தயக்கமாக இருந்தது.. காரணம்.. விமான அனுபவம் கிடையாது... மனைவியுடன் போகிறோம் அக்காவையும் அழைத்து செல்கிறோம் . சரியாக அவளிடம் போய் சேர்வோமா என்ற பயம் வேறு…துபாய் பயணத்தின் போது மதுரை விமான நிலையத்தில் என்னை அழுத்திய ஒரு வித பதட்டத்தை வெளிகாட்டவில்லை . விமானம் இயங்க ஆரம்பித்த உடன் நானும் பறக்க ஆரம்பித்தேன். நான் துபாய்க்கு போகிறேன் என விமான கழிவறையில்
கத்தினேன்😃. பணிப்பெண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மகள், மாப்பிள்ளையை, அமிர்தவாணியுடன் வரவேற்பில் கண்ட பிறகு தான் மனம் நிம்மதி அடைந்தது. துபாய் விமான நிலையம் அடைந்தவுடன் பிரமித்து போனேன். அப்போது தான் எங்களை எந்த இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை
அவளிடம் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. புர்ஜ் கலீபா, டெஸர்ட் சபாரி , டால்பின் ஷோ, மிருகக்காட்சி சாலை, அவள் ஆசிரியர் ஜெயசித்ரா குடும்பம், ரேவதி சண்முகம் அண்ணி மகள் சிவகாமி குடும்பத்தினர் வெளிப்படுத்திய விருந்தோம்பல், டி.வி யில் மட்டுமே பார்த்திருந்த ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் பஸ் நிலையம், மால் அனைத்தும்
துபாய் பயணத்தில் மறக்க முடியாதது.
👏🏻👏🏻👌🙏.

இதனை பயணக்கட்டுரையாக தொகுப்பு செய்வேன் என அவள் கூறிய போது ஆச்சரியமாக இருந்தது. பயணம் நிறைவு ஆகி அவர்கள் சென்னை வந்தவிட்ட போதும் அவள் ஆர்வம் குறையவில்லை. புத்தகம் முதல் வடிவம் எடுக்க அவள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகமாகவே தோன்றியது. அழைத்துச் சென்ற அனைத்து இடங்களையும், சாப்பிட்ட உணவு மற்றும் பயண அனுபவத்தை அழகாக புத்தகத்தில் இடம் பெற வைத்திருக்கின்றாள். அருமை..

எல்லோரும் புத்தகத்தை விமர்சிக்கும் போது, பிறகு படித்து பார்த்து நானும் விமர்சிக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்கு இப்போது தான் காலம் கிடைத்தது. ஏகப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதனை மேம்படுத்த அவள் நினைத்தது என அத்தனை உழைப்பும் புத்தகத்தில் தெரிந்தது. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌
அய்யா உண்டு.

- தம்பிதுரை

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, February 12, 2020

பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?

நகர்வலம் - பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளிகளிலும் பொதுத்தேர்வு என்றால் ஒருவருடத்திற்கு முன்பே அந்த பாடத்திட்டங்களை நடத்தி, பயிற்சி என்ற பெயரில் அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான பாடங்கள் புறக்கணிப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவாகவே பின்பற்றப்படுவதாக சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள பொதுத்தேர்வுகள் சிறந்த அளவுகோல் அல்ல என்பதை பல சாதனையாளர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள பல வெற்றியாளர்களும் பல சூழ்நிலைகளில் நிரூபித்து இருக்கின்றார்கள். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்க சமூகத்தில் எத்தனையோ வெளிப்புறச்சூழல் அமைந்திருக்கும் பொழுது, பொதுத்தேர்வுகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பொதுத்தேர்வுகளால் நடுத்தர, உயர்தர மக்களைவிட அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை கிராமப்புற மக்களும், மலைவாழ் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களே. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். சிறிய வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் திணறுவார்கள். அதை தேர்வுமுறை ஒழுங்குபடுத்தும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. பள்ளி காலத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இன்று அந்தப்பாடப்பிரிவிலேயே சிறந்த ஆசிரியராக பல குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

பொதுத் தேர்வுகளினால் ஏற்படும் தோல்வி, மாணவர்களின் கல்விபாதையில் இடைநிற்றலை அதிகமாக்கும். இதனால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கும் என்னும் அவலம் அனைவரையும் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்கள் எதிர்கொள்வது கடினம். அடுத்த ஆண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து படிக்க சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சிறு வயதுக் குழந்தைகள் பொதுத் தேர்வுக்கான அழுத்தத்தை சுமக்கத்தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்? என்று பற்பல கேள்விகள் ஏற்படுகின்றன.



பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகவே சிதைக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே சொல்லப்படுகின்றது. பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படுகின்றது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது என்ற பள்ளிக்கல்வித் துறையும் அரசுத்தரப்பில் சில அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க முனைந்தாலும் பொதுத்தேர்வுகளினால் ஏற்படும் விளைவுகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பதுடன் தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி அலைபேசி பயன்பாட்டை குறைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.



ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கப்போகும் சிறுவனை, வேறொரு துறையில் அவன் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு அனுமானிப்பது அவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும் என்பதை நாம் உணர வேண்டும். தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களும், குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே அல்லாமல் இவ்வுலகில் அனைத்து மக்களும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்கள் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் கற்றுத்தர கடமைப்பட்டிருக்கின்றோம்.

Tuesday, February 11, 2020

அதிகரித்திருக்கும் இரயில்வே நிலைய வாகன நிறுத்தக் கட்டணம்

நகர்வலம் - மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம்


சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன் சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் கடற்கரை - வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் 75க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் மின்சார இரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இவற்றில் பெரும்பாலான இரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனங்களிலோ இரயில்வே நிலையங்களை அடைந்தபின் இரயில்வே நிலைய வாகனநிறுத்தங்களில் நிறுத்தி வைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில வாகன நிறுத்த இடங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமானதாகவும், சில இடங்கள் அவ்வப்போது ஏல முறையில் தனியாருக்கும் குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்விடங்களில் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி , சைக்கிள்களுக்கு தினகட்டணம் ஐந்து ரூபாய் எனவும், மாதந்தோறும் 100 ரூபாய் எனவும் , பைக்குகளுக்கு தின கட்டணம் பத்து ரூபாய் எனவும் மாதந்தோறும் 250 ரூபாய் எனவும் வசூலிக்கபப்படுகின்றது.



சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் புதியவாகன நிறுத்த கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலாகும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி இரயில் நிலையத்தில் கார்களுக்கு முதல் 2 மணி நேரத்திற்கு 35 ரூபாயும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாய் எனவும், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் உயர்தர நிறுத்தத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பர இருசக்கர வாகன நிறுத்தத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ 25 எனவும் , 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயாகவும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை கடற்கரை, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அரக்கோணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் எனவும், மாதக்கட்டணம் ரூ 200எனவும் , இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூபாய் 15 எனவும், மாதக்கட்டணம் ரூபாய் 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன. இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

இரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் தலைக்கவசங்களை தங்கள் வண்டியுடன் பிணைத்துச் செல்ல வேண்டும். முக்கியமான பொருட்களை வண்டியிலேயே மறந்து விடாமல் எடுத்துச்செல்ல வேண்டும். வாகனங்களை உரிய இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.


பல நூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களிடம் இரயில்வே நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.சில இரு சக்கர வாகன நிறுத்தங்களில் முழுமையாக மேல்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் விட்டுச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலை தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களால் மாற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு சில வாகன நிறுத்தங்களில் வாகன திருட்டு, வாகன சேதங்கள், எரிபொருள் திருட்டு போன்ற புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.