Sunday, May 7, 2017

கடல் பனைமரத்திலே ஓர் சொர்க்கலோகம்


துபாயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மட்டுமே ஆச்சர்யமூட்டும் படி அமைந்திருக்கவில்லை. கடலின் நடுவே கட்டப்பட்டிருந்த பனைமரத்தீவும் அட்லான்டிஸ் நட்சத்திர விடுதியும் அதன் பிரம்மாண்டத்தினால் ஸ்தம்பிக்கத்தான் வைத்தது. துபாயில் உள்ள அனைத்துப் போக்குவரத்து வசதிகளையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்றால் அட்லான்டிஸ்க்கு பயணப்படலாம்.

விருந்தினர்களை துபாயில் பேருந்து சவாரி, பெருநகர தொடர் ஊர்தி ( metro rail) சவாரி, டிராம் எனப்படும்  அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி  சவாரி  ( tram) , ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தி சவாரி ( mono rail) என எல்லாவற்றிலும் பயணப்பட வைத்து பிரம்மாண்ட நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றிடலாம்.கொஞ்சம் பணம் செலவழித்தார்கள் என்றால் வானூர்தியிலும்( helicopter) கூட்டிச்சென்றி அந்த பனைமரத்தீவு, நட்சத்திர விடுதி , அக்வா வெஞ்சர் தண்ணீர் கேளிக்கைப் பூங்கா என்று எல்லாவற்றையும் வானிலிருந்தே சுற்றிக்காட்டி விடலாம்.

வீட்டிற்கு அருகே இருக்கும் பெருநகர இரயில் நிறுத்தத்திலுருந்து அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி நிலையம் வரை பெருநகர தொடர் ஊர்தி வண்டியிலேயே பயணம் செய்துவிடலாம்.அத்தைமகன் 
ராம்-உமா தம்பதியினர் , என் அத்தை மாமா வந்திருந்த பொழுது என்று இரண்டு தடவை அட்லான்டிஸ்க்கு இத்தகைய வழியில் பயணப்பட்டிருக்கின்றோம். 

பெற்றோரை அந்த உலகப்புகழ் வாய்ந்த நட்சத்திர விடுதிக்கு கூட்டிச் சென்றிருந்த பொழுது தனி வண்டியில் சென்று இருந்ததால்
அமிழ்தண்டவாள தொடர் ஊர்தியிலோ ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தியிலோ கூட்டிச் செல்ல முடியாமல் போய்விட்டது. இன்றும் அப்பா அதனைக்கூறி என்னிடம் செல்லமாகச் சண்டை பிடிப்பார்.இத்தீவில் நம் நாட்டைச் சேர்ந்த பல அரசியல் பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து மனைகள் வாங்கியிருக்கிறார்கள் எனக்கேட்டு அதிசயித்தோம்.

பெருநகர தொடர் ஊர்தியிலிருந்து இருந்து இறங்கியவுடனேயே அமிழ்தண்டவாள தொடர் ஊர்தியைப் பிடித்துவிட்டோமென்றால் சிறிது கட்டணத்தை மிச்சப்படுத்தலாம். இரண்டு ஊர்திகளுக்குமே ஒரே பயண அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பெருநகர தொடர் ஊர்தியில் பயன்படுத்திக்கொள்ள மூன்று வகையான பயண அட்டைகள் உண்டு.சிவப்பு நிற அட்டை தற்காலிக அட்டை. பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். இல்லை ...என்னைப்போல் அட்டையை மறந்து வைத்துவிட்டு வந்தவர்கள் தற்காலிகமாக வாங்கிக்கொள்வார்கள்.




வெள்ளி நிறத்தில் உள்ள அட்டைதான் பெரும்பாலும் அனைத்து குடிமக்களும் வைத்திருப்பார்கள். தங்க நிற அட்டை மற்ற அட்டையை விட சற்று விலை அதிகம். நண்பர் ஒருவர் வெள்ளி, தங்கம் என்று இரண்டு அட்டை வைத்திருப்பார். கூட்டம் மிகுந்த நாட்களில் தங்க அட்டையை உபயோகித்து அதற்கான பிரத்யேக பெட்டியில் பயணம் செய்வார்.என்ன, தங்க அட்டையை உபயோகிப்பவர்களுக்கான பிரத்யேக பெட்டி சற்று கூட்டம் குறைச்சலாக இருக்கும்.கால்கடுக்க நின்று பயணம் மேற்கொள்ள அவசியமில்லை.


பெருநகர தொடர் ஊர்தி வண்டியில் பயணம் செய்வதற்குத் தேவையான கட்டணத்தை அட்டையைக்காட்டிக் கதவைத் திறக்கும் பொழுதே கழித்து விடுவார்கள். 


ஆனால்  அமிழ்தண்டவாள தொடர் ஊர்திக்கான கட்டணத்தை அத்தொடர் வண்டியில் ஏறுவதற்கு முன் ஓரமாக ஆங்காங்கே நிற்க வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில் காண்பித்து செலுத்திக் கொள்ளலாம். முதல்தடவை அமிழ்தண்டவாள தொடர் ஊர்தியில் பயணம் செய்யும் பொழுது கட்டணத்தை எங்கே செலுத்த வேண்டும் என்று தெரியாமல் திணறியதை கணவர் விவரத்திருந்தார்.


தண்டவாளம் என்றால் தரையிலிருந்து சற்று உயரமாக இருக்கும் அல்லவா..ஆனால் அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி செல்வதற்கு ஏதுவாக சாலையில் அமுங்கியபடி தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்தது.   சாலையில் ஒரு பக்கம் வாகனங்கள் செல்லும் என்றால் மறு பக்கம் அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி போய்க் கொண்டிருக்கும்.

பெருநகர தொடர் ஊர்தியின் உள்ளிருப்பதைப் போன்றே சொகுசு இருக்கைகள் அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி, ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தி போன்று அனைத்திலுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கட்டணத்தை எங்கே எப்படிச் செலுத்த வேண்டும் என்று தெரியாதவர்கள் வெளியில் எந்திரத்தில் அட்டையைக்காட்டாமல் பயணம் செய்யும் பொழுது பரிசோதகர் வந்து விட்டால் அபராதத்தைக் கட்ட வேண்டியதுதான். அட்டையைத் தான் கொண்டு வந்திருக்கும் எந்திரத்தில் காட்டி நம் கடைசியாக எங்கே எவ்வளவு கட்டணம் செலுத்தினோம் என்று பரிசோதகர் தெரிந்து கொள்வார்.

அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி நிலையம் கணவரின் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தது. கணவரது அலுவலகம் 33 வது மாடியில் இருந்ததால் அங்கு சென்று பனைமரத்தீவைப் பார்க்கும் ஆசையில் ஆர்வமாய்ச் சென்றோம். விருந்தினர்களுக்குக் கணவரின் அலுவலகத்தைச் சுற்றிக்காண்பித்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்தே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிந்த கட்டிடங்கள், பனைமரத்தின் வடிவை விளக்கிக் கூறினோம். 

கடலில் ஒரு தீவருகே பெரிய கப்பல் நின்று கொண்டிருக்க அது மன்னரின் கப்பல் என்று எங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொண்டோம். பனைமரத்தீவின் நேர்கோட்டின் கீழ் விளிம்பில் அலுவலகம் இருந்ததால் கிளைகளில் இருந்த கட்டடங்களையும் சற்று தூரத்தில் அமைந்திருந்த அட்லான்டிசையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.


அமிழ்தண்டவாள தொடர் ஊர்திப்பயணத்தை முடித்து அங்கிருந்து   ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தி நிறுத்தத்திற்குச் சென்று தனிநபருக்கு 25 திராம்கள் கட்டணம் கொடுத்து பிரத்யேகமான பயண அட்டையைப் பெற்று கொள்ளலாம். அட்லான்டிஸ்க்குச் சென்று திரும்பிவரும் பயணத்தையும் சேர்த்துத்தான் இந்த 25 திராம்கள்.

சாதாரணமாக தொடர் வண்டிகள் செல்ல இரு தண்டவாளங்கள் அமைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தியில் ஒரு தண்டவாளம் மட்டுமே இருந்ததைப் பார்க்க அதிசயமாய் இருந்தது.


கடலுக்கு நடுவே இருந்த அந்த விந்தை உலகிற்கு ஒரு தடைவையாவது ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தியில் சென்று வரலாம். அரண்மணைப் போல இருந்த அந்த நட்சத்திர விடுதியில் ஒருபிரம்மாண்ட   மீன் அருங்காட்சியமும் இருந்தது. ( lost chambers) லாஸ்ட் சாம்பர்ஸ் என்றழைக்கப்படும் அந்த நீர் வாழ் காட்சிசாலையை ஒருதடவையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன்.  

அத்தை மகன் இராம்-உமா தம்பதியினருக்கு அட்லான்டிஸ் சுற்றிக் காண்பிக்கும் பொழுது அவர்களுடன் சேர்ந்து அந்த நீர் வாழ் காட்சிசாலையை பிரமித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரணமாக 100 திராம்கள் கட்டணமாக கொடுக்கத் தேவையில்லாமல் தற்காலிக ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை வைத்து 75 திராம்களுக்குச் சென்றோம். 

எனக்கும் கணவருக்கும் மட்டுமே தற்காலிக ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை இருந்தாலும் மொத்தமாக நால்வருக்குமே 75 திராமிற்கான கட்டணத்தையே வசூலித்துக்கொண்டாள் வரவேற்பறையில் அமர்ந்து இருந்த அழகுப்பெண். உள்ளே நீர்அருங்காட்சி சாலையில் திகில் ஏற்படும் வகையில் சுற்றுப்புறத்தை அமைத்திருந்தனர்.இராம் - உமா தம்பதியினர் ஏற்கனவே சிங்கப்பூர் , மலேசியா, பாலி போன்ற நாடுகளுக்குப் போயிருந்ததால் எங்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு அவர்களுக்கு ஏற்படவில்லை.


பொறுமையாக உட்கார்ந்து இரசிக்க என்று சொகுசு மெத்தை தலையணையெல்லாம் போட்டிருந்தார்கள். இதுவரைத் தொலைக்காட்சி திரைப்படங்களில் பார்க்காத மீனைக்கூட நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு மீனைப்பற்றிய குறிப்புகளையும் பக்கத்திலேயே உயர்தொழில்நுட்பம் பொருந்திய கருவியில் வாசிப்பதற்குக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

அட்லான்டிஸ் நட்சத்திர விடுதிக்குள் சிறிது தூரம் வரை பேரங்காடி போன்று இருந்ததால்  ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல அனுமதித்திருந்தார்கள். ஐரோப்பாவில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர்க்கு துபாய் தான் விடுமுறை வீடு. அதிகமாக வெள்ளைத் தோல் மக்களையே சுற்றுலாப்பயணிகளாய்ப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்குத் தேவையான அயல்நாட்டு நுழைவுச்சான்றுக்கும் பெரிதாக கெடுபிடி இல்லாததால் கூட்டமாய் குவிந்திருந்தார்கள்.


சில நேரங்களில் இந்த ஏழு நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு தள்ளுபடி விலைகூடத்தருவார்கள். 2 பகல் ஓர் இரவு போன்று தங்குவதற்கு குறைந்தபட்சம் 1500 திராம்கள் செலவாகும்.  இலவச இணைப்பாக   புகழ்பெற்ற அக்வாவெஞ்சர் தண்ணீர் பூங்காவிற்கும் செல்ல அனுமதி. கட்டணத்திற்கு ஏற்றார் போல ஓங்கில்களுடன்( dolphin) ஓடிஆடி விளையாடலாம்.ஆழ்கடல் நீச்சல் பயிற்சியையும் செய்து பார்க்கலாம்.

அட்லான்டிஸ் நட்சத்திர விடுதியில் தான் ஷாரூக்கான் நடித்த 'ஹேப்பிநியு யியர்' ( happy new year ) என்ற இந்தி திரைப்படத்தைப் படமாக்கியிருந்தார்கள். முழுக்க முழுக்க துபாயைச் சுற்றிப் படமாக்கியிருந்த அப்படத்தை துபாய்க்கு வருவதற்கு முன்னால் கண்டு இரசித்திருந்தேன். ஷாரூக்கானிற்கு துபாயில் தீவிர இரசிகர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஓர் வாடகை வண்டி ஓட்டுநர் அவரதுப்படத்தை வண்டியில் வைத்திருத்தைப்  பார்த்து நண்பர் ஒருவர் எங்களிடம் அந்த சுவாரசிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.


துபாய் மக்களுக்கு அவரின் மேல் இருந்த அபிமானத்தைக் கொண்டுதான் அவரைச் சுற்றுலாத்துறையை முன்னேற்றும
 வண்ணம் தூதுவராய் நியமித்திருந்தார்கள். அதை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு காணொளியையும் தயாரித்திருந்தார்கள். கடற்கரையில் சீரான ஓட்டம் மேற்கொள்பவர்களுக்கு அருகிலேயே ஓடி திடீரென அவர்களை ஆச்சர்யப்படுத்துவது போன்று பல வகையில் மக்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தைத் தந்திருந்தார் அந்த நடிகர்.


உணவகத்தில் கேட்ட உணவைப் பரிமாறும் மனிதர் நமக்கு பிரியமான நடிகராய் இருந்தால் ஆனந்த அதிர்ச்சியில் உறையத்தானே செய்வார்கள். துபாயில் மிகவும் பிரசித்துப்பெற்றது , பல்லாயிரமடி விமானத்தில் உயரேச் சென்று அந்த பனைமரத்தீவு தெரியும்படி மேலிருந்து வான்குடை (parachute) மிதவையோடு ஒரு பயிற்சியாளருடன் குதிப்பது. அப்படி சாகசம் செய்யச் செல்பவர்கள் ஏற்கனவே கிளர்வுற்று இருப்பார்கள். அந்த நேரத்தில் நமக்குப்பிடித்த நடிகரும் உடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.



இப்படிப்பல சூவாரசிய நிகழ்ச்சிகளைக் கொண்டது தான் அந்த துபாய் சுற்றுலா வருவாயை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்ட காணொளி. அட்லான்டிஸ் அருகே அமைந்திருந்த தண்ணீர் பூங்காவுக்குச் செல்ல யோசித்திருந்த பொழுதுதான் பராமரிப்புக்காரணத்திற்காக அந்த பூங்காவில் சில சவாரிகளை நிறுத்தி வைத்திருப்பதைக் கேட்டு சிறிது வருத்தம் கொண்டிருந்தேன்.தோழி ஒருத்தி அப்பூங்காவிற்குச் சென்று பகிர்ந்திருந்த அனுபவம் அங்கே போக முடியாத வருத்தத்தைச் சற்று அதிகப்படுத்தியிருந்தது.


சாதாரணமாக தண்ணீரில் சறுக்கி வரும் பொழுது இருட்டுக்குகைமட்டும் தானே கண்களுக்குத் தெரியும். இங்கே பயத்தை மீறிக்கண்களைத்திறந்தீர்கள் என்றால் கடலுக்குள்ளே செல்லும் மீன்களும் தெரியும் . இந்தக் கண்ணாடி உடைந்தால் என்னாகும் என்ற பயமும் பிறக்கும். சறுக்கிவரும் சவாரி நேரத்தில் கூட பயந்து விடக்கூடாது என்பதற்காக  சிறு சிறு மின்விளக்குகளை அமைத்திருந்தார்கள்.

புர்ஜ் அல் அராப் அருகில் இருந்த வொய்ல்ட் வாடி பூங்காவில் இருந்த சவாரி போலவே இங்கேயும் ஒன்று இருக்கிறது.கையை மடக்கித் தோள்களிலே வைத்துக்கொள்ள வேண்டும்.செங்குத்தாக நிற்கவைத்து கூண்டை மூடி விடுவார்கள். நின்று கொண்டிருக்கும் வட்ட தகடு நடுவிலே பிளந்து செங்குத்தாக கீழே போவீர்கள்.சறுக்கி வந்த வேகத்தில் தூரமாய்ப்போய்ப் படுத்திக்கிடப்போம். உயரத்தைக்கண்டு பயந்து மயக்கமாகிவிட்டோம் என்றால் பணியாளர்கள் தேவையான முதலுதவியைச் செய்து விடுவார்கள்.


தண்ணீர் பூங்காவில்  உலகப்புகழ்பெற்ற சவாரிகள் வித்தியாசமான ஆங்கிலப்பெயர்களில் அணிவகுத்திருந்தன. பனைமரத்தின் சுற்று வளைவில் தான் அந்த பிரம்மாண்ட நட்சத்திர விடுதி அமைந்திருந்தது. அது அருகிலேயே வானூர்தி ஏறி இறங்குவதற்கான தளமும் அமைக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் பயணம் செய்தாகி விட்டது, வானூர்தியில்(helicopter) எப்பொழுது பறப்போம் என்ற என் கனவு ஒரு நாள் அட்லாண்டிஸ் அருகே நிறைவேறியது. தமிழ் நண்பர் ஒருவர் தனது சுற்றுலா நிறுவனம் வழி ஒரு தனி நபருக்கு 700 திராம்கள் என்ற கட்டணத்தில் வானூர்தி பிராயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்தார். அதிக மக்கள் வந்தால் தள்ளுபடி விலைக்கு பயணத்தை ஏற்பாடு செய்து தரவும் தயாராய் இருந்தார். துபாயில் வானூர்தி தளம் இங்கு மட்டுமல்லாது துபாய் பெஃஸ்டிவள் சிட்டி பேராங்காடி ( festival city mall) அருகிலேயும் அமைந்திருந்தது.


இரண்டு வானூர்திகளைக் கொண்டு ஒரு சவாரிக்கு 4 பேர் என ஏற்றிக் கொண்டு வரிசையாய் அமர்ந்திருந்த மக்களுக்கு வானிலிருந்து துபாய் அழகைச் சுற்றிக்காண்பித்தார்கள். எல்லாரது எடை உயரத்தைக்குறித்துக் கொண்டு வானூர்தியில் பின்பற்ற வேண்டியவை வேண்டாதவையை ஆர்வமூட்டும் காணொளியாக ஒளிபரப்பினர்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் உபயோகமாய் இருக்கக் காப்புச்சட்டையை அணிவிக்கத்தந்தார்கள். அதை ஒரு மஞ்சள் வண்ணப்பையாக ஒய்யாரமாக இடுப்பில் கட்டிக்கொண்டோம்.
நாம் நடந்து வானூர்தி ஏறி இறங்கிய நேரங்களில் பல ஒளிப்படங்களை எடுத்து தள்ளியிருந்தார்கள். என்ன, எல்லா படத்தையும் ஒரு தகவல் சேமிப்பானில் ( flash drive)போட்டு தருவதற்கு அவர்கள் சொல்லிய கட்டணத்தைக்கேட்டு விட்டு வானூர்திப் பயணம் செய்து விட்டபின் வந்த லேசான தலைசுற்றல் கொஞ்சம் அதிகமானது.

வானூர்தியின் இறக்கைகள் இடைவிடாது சுற்றிக்கொண்டிருந்ததால் சத்தம் காதைப் பிளந்தது. வேகமாக குனிந்து ஓடி வானூர்திக்குள் ஏறிக்கொண்டோம். உள்ளே ஓட்டுநருக்கு மட்டுமல்லாது எல்லாருக்குமே காதுகளில் மாட்டும் கருவியையும், பேசும் கருவியையும் கொடுத்திருந்தார்கள். வானூர்தியின் இறக்கைகளால் அதிகம் சத்தம் ஏற்படுவதனால் உள்ளே ஒருவருக்கு ஒருவர்கூட அந்த கருவியால் மட்டுமே பேசிக் கருத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்படி இருந்தது.

மேலே பறந்தபடி உலகத்தைப் பார்க்கும் பொழுது உலகமே காலுக்கு அடியில் என்ற கர்வம் தோன்றியது. உலக நாடுகள் போன்று அமைக்கப்பட்டிருந்த தீவுகள் சற்று தூரத்தில் இருக்க அதைச் சரியாகப் பார்க்க முடியாததால் கணவர் ஓட்டுநரிடம் சற்றுத்தள்ளிப் போகமுடியுமா என்று கேட்டார். ஒரு சவாரிக்கு அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தான் என்பதால் அவ்வளவு தூரம் போக முடியாது என்று சிரித்த முகத்துடன் மறுத்துவிட்டார். கடல் குதிரையைப் போன்றும் ஒரு அழகிய தீவைக் கடலிலே உருவாக்கியிருந்தார்கள்.

பனைமரத்தீவின் ஒவ்வொரு கிளையிலும் கட்டிடங்களும் வீட்டுமனைகளும் அழகிய முறையில் அடுக்கிவைத்தது போலக் கட்டப்பட்டிருந்தது.தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல ஏற்கனவே திட்டமிட்டு வரையருக்கப்பட்ட கடலினூடே அமைக்கப்பட்ட செயற்கைத்தீவைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.நேரில் சென்ற இடங்களை வானில் இருந்து பார்ப்பது வித்தியாசமான அனுபவம் தான். ஓட்டுநர் தனக்குத் தெரிந்த இடங்களை ஒலிபெருக்கியினூடே எல்லா பயணிகளுக்கும் விளக்கினார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது அந்த பனைமரத்தீவின் மொத்தநிலப்பரப்பிலிருந்தும் வானவேடிக்கை மிகச்சிறப்பாய் நடைபெறும்.


அட்லான்டிஸ் எனப்படும் தீவு கற்பனையாய் கிரேக்கப் புராணங்களில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கோ உண்மையாகவே தீவும் ஒரு அரண்மனையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடலில் இத்தீவை உருவாக்க பணியாளர்கள் மேற்கொண்டிருந்த நவீன வழிகளும் கடின உழைப்பும் பிரம்மிக்க வைத்தது. அட்லான்டிஸ் விடுதியினுள் தண்ணீருக்கடியில் கடல்வாழ் உயிரனங்களையும் இரசிக்கும்படி தங்கும் விடுதிகளை அமைத்திருந்தது சிறப்பான அம்சம். ஆனால் அப்படி தங்கும் அறையில் ஏதேனும் கண்ணாடிக்கீறல் விட்டு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று நினைத்தால் எனக்கெல்லாம் தூக்கமே வராது.....உங்களுக்கு???

7 comments:

  1. கண்கொள்ளாக் காட்சி - தங்கள்
    கைவண்ணத்தில் - எங்கள்
    உள்ளத்தை ஈர்க்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் அய்யா

      Delete
  2. வணக்கம்.

    பயணத்தொடர் முழுவதும், காட்சிகளைப் படிப்பவர்கள் கண்முன் கொண்டுவருகின்ற நுணுக்கமான எழுத்தாற்றல் கைவரப்பெற்றிருக்கிறீர்கள்.

    நல்ல தமிழில் இது போன்று எழுதுபவர்கள் குறைவு.

    நான் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புவது, பெருநகர தொடர் ஊர்தி, அமிழ்தண்டவாள தொடர் ஊர்தி , ஒற்றைத்தண்டவாளத் தொடர் ஊர்தி , ஓங்கில், வான்குடை, பேரங்காடி, தகவல் சேமிப்பான், என தங்களின் பயணப்பதிவெங்கும் விரவியுள்ள தமிழாக்கச் சொற்களைத்தான். பாதிக்கு மேல் நான் அறியாதன. குறித்துக் கொண்டேன். முக்கியமாய், ஓங்கில். எனப் பதிவெங்கும் பரந்து விரிந்த நற்றமிழ்ச் சொற்கள். கலைச்சொற்களை நீங்கள் உருவாக்கினீர்களா, அல்லது ஏற்கனவே ஆக்கம் பெற்றதைத் தழுவி எழுதியுள்ளீர்களா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதற்கான தங்களின் முயற்சி பெரிது. இதுபோன்ற பதிவுகள் போதும். நிச்சயம் நம் தமிழ் வளரும்.

    Helicopter என்பதை உலங்கூர்தி எனவும் Pen drive என்பதை விரலி என்வும் தமிழில் வழங்கும் மரபுண்டு.

    தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் தேடித் தமிழ்ச்சொற்களைக் கற்றேன்..நீங்கள் குறிப்பிட்டத்தமிழ்ச் சொற்களையும் குறித்துக்கொண்டேன் ...ஊக்கத்திற்கு தலை வணங்குகிறேன் அய்யா

      Delete