Friday, May 5, 2017

சல்லிக்கட்டுக் காளைகளும் சிவப்புக்கொடிகளும் - புஃஜைரா

உம் அல் குவைனிற்கு நாங்கள், சுஜி - சதீஷ் தம்பதியினர் என இரு குடும்பங்கள் மட்டுமே சென்று வந்திருந்ததால்  ' அதைப்பார்த்தோம், இதைப்பார்த்தோம், அருமையா இருந்தது...நீங்க பார்க்க முடியாமப்போய் விட்டதே ' என்று மற்ற நண்பர்களிடம் பல பெருமை அடித்து அவர்களைக் கடுப்பேற்றி இருந்தோம். அதனால் ஃபுஜைராவிற்குச் செல்லும் பொழுது நண்பர்கள் எல்லோருமே பயணவாய்ப்பைத் தவறவிடாது குடும்பத்தோடு சுற்றிப்பார்க்க வந்தார்கள்.
புஃஜைராவின் எல்லையை அடைந்த உடனேயே பிரம்மாண்ட கருமலைகள் கைகூப்பி வரவேற்றது போல இருந்தது. செடி, கொடிகள் ஏதும் இல்லாத இராட்சத மொட்டை மலையைப்பார்க்க சற்று பயமாகத் தான் இருந்தது. கணவரின் அலுவலக நண்பர் குடும்பத்துடன் இங்கு பயணம் செய்த பொழுது ஒரு கொடூரமான விபத்தில் மாட்டிக்கொண்டது நினைவுக்கு வர சற்று மிரட்சியுடனேயே அந்த சம்பவத்தை அசைபோட்டுப் பாதைகளைக் கடந்தோம்.ஐக்கிய அரபு அமீரகத்தில் சுலபத்தில் விபத்து நடைபெறாது அப்படியே நடைபெற்றால் விளைவு மோசமானதாகவே இருக்கும்.


அதிக வேகத்தில் போனோம் என்றால் அங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் கருவி கண்சிமிட்டி அபராதம் வசூலித்து விடும்.ஒரு சில நேரம் யாரைப்பார்த்து அக்கருவி கண்சிமிட்டியது என்று தெரியாமல் முழிக்கவும் நேரிடும். ஆனால் சிறிது நேரத்திலேயே குறுஞ்செய்தி வந்தால் மனதைத் தளரவிடாமல் அடுத்து இது போல அபராதம் கட்டக்கூடாது என்று நம்மை நாமே சமாதனப்படுத்திக் கொள்ளவேண்டும்.


நம் ஊரில் இருப்பது போல சுங்கச்சாவடியில் நாம் நின்று பணம் கட்டத்தேவையில்லை. வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியிலே ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் அட்டையிலிருந்து குறிப்பிட்ட இடத்தைக் கடந்தாலே பணத்தைக் கழித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு சாலிக் என்றும் பெயர் வைத்திருந்தார்கள்.


அமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சமையல் மட்டும் குடிப்பதற்காக வழங்குவதற்கு என பெரிய ஆலை அமைத்திருந்தார்கள். துபாய் மக்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேவா  DEWA (Dubai Electricity and Water Authority ) என்றொரு அமைப்பை அரசு நிறுவி, மக்களின் உபயோகித்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கும். இது போன்று ஷார்ஜா மக்களுக்காக சேவா  SEWA (Sharjah Electricity & Water Authority ) என்றொரு அமைப்பை நிறுவியிருந்தது.மற்ற அமீரகத்தின் அத்தியாவசிய  தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக FEWA  ஃபேவா (Federal Electricity & Water Authority ) FEWA என்றொரு அமைப்பும் அமைக்கப்பட்டிருந்தது.

மசாஃபி எனும் நீரூற்று அருகிலேயே இருந்ததால் விவசாயத்திற்கு எந்தக் குறையும் இல்லை. மசாஃபி ( masafi) என்ற பெயரில் குடிதண்ணீர் விற்கப்படுவதால் அந்தப் பெயர் எல்லோர் மனதிலும் பதிந்திருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்திலேயே( mineral water ) கனிம நீர் என்ற இந்த  தண்ணீர் புட்டியில் மட்டுமே குறிப்பிட்டிருந்தார்கள் என்பது இதற்கான கூடுதல் சிறப்பு.


 ஐக்கிய அரபு அமீரகத்திலேயே அதிகபட்ச மலைகள் நிறைந்திருந்தது.
 ஃபுஜைரா என்பதனால் மழை பெய்யும் அளவில் குறைச்சல் ஒன்றும் இல்லை.அதனால் விவசாயிகள் வருடத்திற்கு ஒரு பயிரையாவது கண்டிப்பாய் அறுவடை செய்திடுவார்கள்.

ஷார்க்கி என்ற பெயர் கொண்ட குலத்தைச் சேர்ந்தவர்களே இராஜ குடும்பத்தினராக ஃபுஜைராவைத் திறமையாகவே ஆட்சி செய்து வந்தனர். ஃபுஜைரா, பாரசீக வளைகுடாவின் எல்லையைச் சாராது முழுக்க ஓமனின் எல்லையை மட்டுமே கொண்டிருந்தது. ஃபுஜைராபரவில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு எல்லைக்குப் பின் கொஞ்சம் தூரம் சென்றால் நாம் ஓமனுக்குச் சென்று விடலாம் என்றார் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சுஜிசதீஷ் கூறினார்.இவ்வளவு தூரம் வந்துவிட்டோமா என்று அனைவருமே ஆச்சர்யப்பட்டோம். 


எல்லோர் வீட்டிலிருந்தும் மதிய உணவிற்காக விதவிதமான உணவுகளை எடுத்து வந்திருந்தோம். காலைநேரம் மெதுவாகவே கிளம்பியிருந்ததால்  துபாயிலிருந்து பயணம் செய்து ஃபுஜைராவை அடையவே மதிய நேரம் ஆகிவிட்டது. அதனால் புஃஜைராவில் இருந்த ஒரு கட்டணமில்லா திறந்தவெளிப்பூங்காவிலேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை முடித்து விட்டு சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம்.


அமீரகத்திலேயே மிகப்பழமையான மசூதியான பிட்யா ( al bityah) மசூதி ஃபுஜைராவில் தான் இருக்கிறது என்று தெரிய வர அதைப்பார்க்க  எங்கள் ஆர்வமும் அதிகரித்தது. ஈரமண் மற்றும் செங்கல்லை வைத்து 1446 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டிருந்த மசூதி ஏமன், ஓமன் , கத்தார் போன்ற நாடுகளில் உள்ள பழமையான மசூதிகளைப் போலவேதான் காட்சி அளித்தது.


ஆனாலும் எல்லா மசூதிகளிலும் 7 முதல்  12 எண்கள் வரை  இருக்கும் குவிமாடங்கள் இம்மசூதியில் எண்ணிக்கையில் குறைவாக 4 மட்டுமே  இருந்தது. பொதுவாக அனைத்து மசூதிகளிலும் அமைந்திருக்கும் ஸ்தூபி என்றழைக்கப்படும் மெல்லிய உயர்ந்த கோபுரங்கள் இந்த பழமையான மசூதியில் இல்லவே இல்லை என்பது ஆச்சர்யாமன ஒன்று.

ஐக்கிய அரபு அமீரகத்திலே பார்க்கும் இடங்களிலெல்லாம் அல் என்று பெயர்கள் ஆரம்பிக்க  'அல் என்றால் என்ன ?' என்று தெரிந்து கொள்ள மனம் ஆசைக் கொண்டது. பின்பு பல நாட்கள் கழித்து அல் என்றால் ஆங்கிலத்தில் the என்று தெரிந்து கொண்டேன். ஃபுஜைரா விமான நிலையத்திற்குச் செல்லும் வளைவில் ஒரு பிரம்மாண்ட ராஜாளிப் பறவையின் சிலை எங்களை அதன் அழகில் மயக்கியது. அந்த  விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அமீரகத்தினுள் அபுதாபிக்கு மட்டுமே உள்நாட்டு விமானப்போக்குவரத்து இருக்கும் என்றால் அது எவ்வளவு சிறிய விமான நிலையம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


டிசம்பர் 2 1971ல் ஃபுஜைராவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்திருந்ததால், தேசிய நாள் அன்றே எல்லா அமீரகத்திலும் கொண்டாடப்படும். தேசியக் கொடிகள் விற்பனையும் அமோகமாக இருக்கும். நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக நான்கு சக்கர வாகனம், துண்டு போன்ற பல பொருட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக்கொடியைப் பொறித்து இருப்பார்கள்

அன்றொரு நாள் வானொலியில் கொடிநாளை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகக் கொடியில் உள்ள வண்ணங்களைப் பற்றி வானொலி அறிவிப்பாளர் மக்களைக் கேள்வி கேட்டு திணறடித்து , பதில்களையும் கூறிக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் வண்ணங்களுக்கான அர்த்தத்தையும் விளக்கத்தைத் தெரிந்துகொண்டேன்.


கருப்பு நிறம் எண்ணை வளத்தைக் குறிக்கும் வகையில் இருந்தாலும், எதிரிகளின்  வீழ்ச்சி,  முன்னோர்கள் எதிர்கொண்ட சவால்களையும் குறிப்பிடுகிறது என்ற விளக்கம் மட்டும் நன்றாக மனதில் பதிந்து கொண்டது. வெள்ளை நிறத்தின் விளக்கம் தான் ஊரறிந்த  ஒன்றானதே. அமைதி, நேர்மை என்று வைத்துக் கொள்ளலாம். சிவப்பு நிறமும் தைரியம் , துணிவு என்று உலகம் அறிந்தது . பச்சை நிறம் மகிழ்ச்சி, தொலைநோக்குப் பார்வை என்று விவரமளித்தது. 

ஒவ்வொரு நேயர்களும் ஒவ்வொரு நிறத்திற்கு ஒவ்வொரு விளக்கத்தை உத்தேசமாகக் கூற கடைசியில் எது சரியான அர்த்தம் என்று கூற வேண்டிய தொகுப்பாளரே குழம்பிவிட்டு கடைசியில் ஒரு வழியாக அனைத்து வண்ணத்திற்கான விளக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.


ஐக்கிய அமீரகத்திற்கு என்று தனியாக ஒரு கொடி இருந்தாலும் அதிலிருந்த அனைத்து நாடுகளுக்கும் பிரத்யேகமான தனிகொடிகளும் இருக்கத்தான் செய்தன. துபாயும் அஜ்மானும் இடது பக்கம் வெள்ளைச்செவ்வகத்துடன் அமைந்திருந்த ஒரே சிவப்பு வண்ணக்கொடியை சண்டைபோடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். 


புஜைரா எதுக்கடா வம்பு என்று தான் முன்னாளில் வைத்திருந்த  தன் பெயர் பொறித்த சிவப்புக்கொடியை விடுத்து ஐக்கிய அமீரகத்திற்கான கொடியையே தனக்கும் வைத்திருந்தது. ஐக்கிய அமீரகத்திலேயே
செல்வச்செழிப்பான அபுதாபியின் கொடியோ சிவப்புத்துண்டில் ஒரு ஓரத்தில் செவ்வகத்துண்டை வெட்டி எடுத்தது போல அமைந்திருந்தது.

உம் அல் குவைனின் கொடி இடது பக்கம்  ஒரு வெள்ளைச் செவ்வகத்துடன் சிவப்பு வண்ணக் கொடியின் நடுவே   வெள்ளைப்பிறை நட்சத்திரத்துடன் காட்சியளித்து. ஒரு சமயம் அமீரகத்தில் அடிக்கடி நடைபெறும் புகழ்பெற்ற குதிரைப்பந்தயத்தை நேரலையில் அமீரக அரசுத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது , கணவர் உம் அல் குவைனின் கொடி துருக்கி நாட்டுக் கொடியைப் போலவே காட்சியளிக்கிறதே என்று குழம்பி இணையத்தில் தன் சந்தேகத்தைத் தெளிவுப்படுத்திக் கொண்டார். பின்பு தான் இரு நாடுகளின் கொடிகளில் காணப்படும் ஒற்றுமையைத் தெரிந்து கொண்டோம்.


ராஸ் அல் கைமாவும் , ஷார்ஜாவும் ஒரே குடும்பத்தில் உள்ள இரு பிரிவினர்களால் ஆட்சி செய்யப்பட்டதால் வெள்ளை பின்புலத்தில் ஒரு நீண்ட செவ்வகச் சிவப்புக் கொடியை ஒற்றுமையாய் பகிர்ந்து கொண்டிருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் வெள்ளி  சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாய் பின்பற்றப் பட்டன.


ஃபுஜைராவில் மஃசாபி வெள்ளிக் கிழமை  சந்தை பிரசித்தம் என்பதால் என்னென்னப் பொருட்கள் வைத்திருப்பார்கள் என்று பார்க்க ஆர்வமாய் இருந்தோம். விதவிதமான பழங்களை அழகாக அடுக்கி வைத்திருக்க அங்கு இல்லாத பழங்களே இல்லையோ என்று எண்ணத் தோன்றியது. குட்டி குட்டி ஆரஞ்சுப் பழங்கள் ஆசையைத் தூண்ட வாங்கி சுவைக்க ஆரம்பித்தோம். 


என் மகளுக்கு அதன் சுவை பிடித்துவிட 'ருசியா இருக்கு ' என்று எங்களை ஆச்சர்யப்படுத்துமாறு கூறி அதன்  சுழைகளை வாங்கிச்சுவைக்க ஆரம்பித்தாள். அதன் சுழைகளை இதழ்கள் போன்று மேலொன்றும் கீழொன்றுமாக அடுக்கி வைத்து கணவரிடம் காண்பித்து இதனால் தான் கவிஞர்கள் பெண்ணின் உதடுகள்  ஆரஞ்சு சுழைபோல இருக்கிறது என்று வருணிக்கின்றார்களோ என்று அறிவாய் ஒரு கேள்விகேட்டேன். 'ஆமாம் என் மகளின் உதடுகளைப்பார் அவள் உதடுகளுக்கும் இந்த ஆரஞ்சு பழச்சுழைக்கும் எவ்வளவு ஒற்றுமை' என்று கூறி கடுப்பேற்றினார்.


அதிக நாட்களுக்குப் பின் இளநீரைக் கண்டவுடன் நான் ஆசையாய் இளநீரை வாங்கிக் குடிக்க எங்கள் குடும்பத்தைப் பார்த்து அனைத்துக் குடும்பமும் இளநீர் வாங்கிக் குடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஆளுயர பெரிய பெரிய உருவங்களும் , அழகு வண்ணங்களுடன் இருந்த கம்பளங்களைப் பார்க்க ஆசையாய் இருந்தது. ஆனால் அதனை வாங்கி வீட்டினுள் எங்கே போடுவது என்று நினைக்கையில் குழப்பமே மிஞ்சியது.


பக்கத்திலேயே ஒரு பெரிய நாற்றுப்பண்ணையை ( nursery) பார்த்து உள்ளே சென்றதும் உடல் மட்டுமல்லாது மனமும் குளிர்ச்சியானது.
எல்லா வகையான பூக்கள், செடிகளை வளர்க்க ஏதுவாக பராமரிக்கும் விதம், உரம் போன்றவற்றில் ஆலோசனை வழங்கி விற்றுக் கொண்டிருந்தார்கள்.2015 ல் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பகுதி சந்தை சிதலமடைந்திருந்தது.


நம் ஊரில் பேருந்து நிற்கும் பொழுதோ அல்லது மெதுவாகச் செல்லும் போதோ வெள்ளரிக்காய் , திண்பண்டங்கள் விற்பது வழக்கம். அது போலவே சாலைகளில் இருக்கும் வேகத்தடைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் காய்கறி கனிகளை வாகனங்களில் வருவோர்க்கு விற்பார்கள். அதுவே சில காலங்களில் பொம்மைகள், சமையல் பாத்திரங்கள், நினைவுச் சின்னங்கள் விற்பதற்கும் ஏற்றார் போல வளர்ந்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சொந்தமாக நிலங்களை வாங்க முடியாது. அப்படி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர் 99 வருடங்களுக்கு மட்டுமே குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடியும். அதுபோல எத்தனை வருடங்கள் தங்கியிருந்தாலும் , தொழிலுக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தாலும்  நிரந்தரக்குடியுரிமையும் கிடைக்காது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக நிரந்தரக் குடியுரிமை பெற்ற அரபியர்களை தொழிலில் சேர்த்திருக்க வேண்டும்.

புஃஜைராவில் பிரசித்தி பெற்ற எருது சண்டையைப் பற்றி படித்திருந்ததால் எல்லோருமே அதனைப் பார்க்க ஆவலாய் இருந்தோம். நமது நாட்டில் சில வருடங்களாய் பல காரணங்களால் சல்லிக்கட்டு தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் வருத்தமும் ஏக்கமும் கலந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் காளைச் சண்டையையாவதுப் பார்க்க முடியுமா என்று ஆர்வமாய் இருந்தோம்.

சாலையில் போய்க்கொண்டிருந்த பொழுது எதிர்பாராத வகையில் சாலையின் ஓரம் எருதுச்சண்டை நடத்த ஏதுவாக களத்தையும் பல வகையான எருதுகளையும் தயார் படுத்தி வைத்திருந்ததைப் பார்வையிட நேரிட்டது. உடனே வண்டிகளை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு நின்றிருந்த கூட்டத்துடன் கூட்டமாய் ஐக்கியமானோம்.

 அன்று நான் சிவப்பு நிற உடை அணிந்திருந்ததால் எங்கே எதாவது காளை மிரண்டு வந்து முட்டிவிடுமோ என்ற பயத்திலேயே காளைச்சண்டையை களையபர மனநிலையில் கண்டு இரசித்தேன்.சீற்றம் கொண்ட காளைகள் காலால் மண்ணைத் தோண்டி பெரிய குழியை ஏற்படுத்தி தாங்களே அக்குழியில் நின்று இருந்தன.


சில எருதுகள் கொடுத்த உணவுகளை நல்ல பிள்ளைகளாக அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வேறு சில காளைகளோ ' இங்க வாடா ...
ஒத்தைக்கு ஒத்த வாரியா என்பதற்கேற்ப' மூர்க்கமாக சண்டையிடவும் எவரையேனும் குத்திக் கிழிக்கவும் ஆர்வமாய் இருந்தன. அவைகளின் பலத்த மூச்சுக்காற்றும் சத்தமும் கூட எங்களுக்கு கிலியை ஏற்படுத்தின.

இரு எருதுகளையும் அவற்றின் உரிமையாளர் கயிற்றின் உதவியால் நடுத்திடலுக்கு இழுத்துச் சென்றார்கள். பின்னர் அவற்றை மோதவிட்டு விட்டு சற்று தள்ளி நின்று அவற்றின் ஆட்டத்தைப் பார்த்தனர். ஒரு சில எருதுகள் கடைசிவரை மனம் தளராத விக்கிரமாதித்தன் போல முயற்சி செய்ய மற்ற சில காளைகள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நீயே வென்று கொள் என்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து அலட்சியமாய் நடந்து போய்விட்டன.


அங்கு அவர்கள் அரபியில் கொடுத்த வர்ணனை, மொழி புரியாது சிரிக்க வைத்தாலும்  நமது ஊரில் திருவிழாவில் கேட்கும் வர்ணனையை ஞாபகப் படுத்தி மனதை ஏங்க வைத்தது. அரபிய சிறுவர்கள் சிலர் பயப்படாமல் எருதுகளை அழைத்துச் செல்லவும், அருகில் இருந்து போட்டியைப் பார்க்கவும் தைரியமாய் முற்பட்டது வியப்பைத் தந்தது.


கல்பா மலையூடு பாதை  கருமலைகளைக் குடைந்து எழிலோவியமாக அமைக்கப்பட்டிருந்தது. ஷார்ஜா - ஃபுஜைரா பாதையில் வாகனத்தில் செல்லும் பொழுது இந்த மலையூடு பாதைப் பயணத்தை மனதார இரசிக்கலாம். இரவு நேரம் என்றால் மலையூடுக் குகைப்பாதையில் ஒளி விளக்குகளின் ஏற்பாடுகளில் சற்று நேரம் மெய் மறந்து இருக்கலாம்.


கோர்ஃபக்கான் கடற்கரை( korfakhan beach) அங்குள்ள மக்களுக்கு சிறந்த  பொழுதுபோக்கு இடமாக அமைந்திருந்தது.திரும்பி வரும் வேளை ஹலீம் என்றழைக்கப்படும் ஆட்டிறைச்சியால் ஆன ஓர் உணவை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரமலான் போன்ற நோன்புக்காலங்களில் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கும் . மற்ற காலத்தில் குறிப்பிட்ட உணவகங்களில் வியாழக்கிழமை போன்று குறிப்பிட்ட தினத்தில் மட்டும் கிடைப்பதாய் கேள்விப்பட்டிருந்தோம். அதிர்ஷடவசமாக எல்லா நாட்களும் ஹலீம் கிடைக்கும் கடையையும் கண்டுபிடித்திருந்தோம்.

ஹைதராபாத்தில் தான் இந்த ஹலீம் மிகவும் பிரபலம் என்று கணவர்  கூற  கேள்விப்பட்டிருந்தேன். கோழி இறைச்சியை வைத்தும் இந்த ஹலீம் சில இடங்களில் செய்யப்பட்டுதான் வந்தது. ஆனால் ஆட்டுக்கறியை வைத்துச்செய்யப்படும் ஹலீம் சுவையில் சிறந்ததாகவும், எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருந்தது. நோன்பு காலங்களில் அரசு குடும்பத்தனர் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஹைதராபாத்தில் இருந்து சுடச்சுட ஹலீம் தயாரிக்கப்பட்டு விமானத்தில் கொண்டுவரப்படும் என கேள்விபட்டு வாய்பிளந்திருந்தேன்.


பத்து திராம்களுக்கு திகட்ட திகட்ட ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஆட்டு இறைச்சியால் ஆன ஹலீமின் மேல் நீட்டமாக நறுக்கப்பட்ட இஞ்சி , பொடிப்பொடியாய் நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், வறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை வைத்து அலங்கரித்துத் தந்தார்கள். வாயில் வைத்தால் கரைந்து கொண்டிருந்த ஹலீமிற்கு
தனியே வறுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த வெங்காயம் அதன் சுவையை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு அமீரகமான ஃபுஜைராவையும் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியில் வீடு திரும்பி இனிமையான நினைவுகளுடன் துயில் கொண்டேன்.

10 comments:

 1. நிகழ்வுகளை நேரிலே பார்க்கத் தூண்டும்
  தங்கள் கைவண்ணத்திற்குப் பாராட்டுகள்!

  ReplyDelete
 2. மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 3. அபிநயா
  உங்கள் வரிகளின் அபிநயத்தில் அழகாக நடனிக்கிறது பயணம்
  இது கட்டுரையா இல்லை நம்மை கட்டும் உரையா?
  அருமையான தொகுப்பு ஒரு கைதேர்ந்த சுற்றுலா வழிகாட்டியை விஞ்சுகிறது உங்கள் நுணுக்கத்தின் பிரம்மாண்டம்

  இதை புத்தகமாக வெளியிடலாமே ?
  போவோமா அமீரக சுற்றுலா... என்ற தலைப்பில்
  இது அமீரக சுற்றுலாத்துறையின் கையேடாகும் எல்லா தகுதியும் கொண்டது....
  வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பயணம் உலகமெங்கும் நாங்களும் வருவோம் உங்களுடன்
  உங்கள் தமிழுடன்....


  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கும் உற்சாகமூட்டுவதற்கும் நெஞ்சார்ந்த நன்றி

   Delete
 4. மிகப் பிரமாதம்..,அபி .சுற்றுலா கட்டுரைக்கு இது மிகவும் ஏற்ற ஒன்று தான்... அருமை, வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள்

   Delete
  2. Nice history interesting to read and given effect of personal visit.

   Delete