Wednesday, May 17, 2017

அந்தரத்திலே அமரலாம்...சாப்பிடலாம்...பறக்கலாம்


துபாயில் தோஃகுரூஸ் ( dhowcruise) என்றழைக்கப்படும் மிதவைக்   கப்பலில் நிச்சயம் பயணித்தே ஆகவேண்டும். இரண்டு இடங்களில் இது போன்று சிறிய உபநதியில் ( creek water) இரண்டு அடுக்குப் பெரிய படகில் பயணித்துக் கொண்டே சாப்பிட்டுச் சுற்றுப்புற அழகை ரசிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இடம் , பர்துபாயில் எங்கள் வீட்டு அருகிலேயே இருந்தது. இரவு நேரத்தில் எங்கள் வீட்டுச் சாளரத்தின் வழி பார்த்தால் அழகாய் அலங்கரித்தப் பெண் அன்னமாய் மாறியதோ என்று எண்ணும் அளவிற்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மெதுவாக ஊர்ந்து செல்லும்.

இரண்டாம் இடம், ஜுமரை விடுதிகள் அருகே இருக்கும் மெரினாவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டின் அருகே இருந்த மிதவைக்கப்பல் சவாரியும் சராசரியாக 100 திராம்களுக்குள்ளேயே இருக்கும். கட்டணத்திற்கு ஏற்றார் போல உணவு வகைகளும், அவற்றின் தரமும் மாறுபடும். டனோரா நடனம் மற்றும் சில பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் மிதவைக்கப்பலிலேயே நடைபெற வாய்ப்புள்ளது.

என்ன ,பர்துபாயில் உள்ள உபநதி அருகே  மெரினாவில் இருப்பது போன்று வானுயரத் தனித்தன்மையுடனான பெரிய பெரிய கட்டிடங்களைப் பார்ப்பது அரிது. பிரியசகி திரைப்படத்தின் சில காதல் காட்சிகள் மற்றும் ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்-விவேக்கின் நகைச்சுவைக்காட்சிகள்  இந்த உபநதிக்கரையோரத்தில் படமாக்கப்பட்டதை இவ்விடத்தைப் பார்த்தபின் அத்திரைப்படக்காட்சிகளைப் பார்த்த பொழுது தான் தெரிந்து கொண்டோம். தேரா ( deira) என்றழைக்கப்படும் இடம் கரையின் அந்தப்பக்கம் இருந்ததால் வணிகம் மற்றும் வியாபாரத்திற்காக மக்கள் சென்று வர என 1 திராம்களுக்குப் படகுச்சவாரியை அரசே ஏற்பாடு செய்திருந்தார்கள்.


கரையின் மறுபக்கம் சந்தை இருந்ததால் நண்பர்களுடன் ஒரு நபருக்கு 1 திராம் என்று கட்டணம் செலுத்தி அப்பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்திருந்தோம். குளிர் நேரங்களில் அந்த உபநதி அருகே சின்ன சின்ன அங்காடிகளூடே குளிர்த் தென்றலை அனுபவித்து நடந்து செல்வது சுகமான ஒன்று தான். இதுவே கோடை காலம் என்றால் இரவு 12 மணிக்கு வெளியேச் சென்றாலும் அனல் காற்றுதான் நம் முகத்தில் அடிக்கும். நானும் கணவரும் நண்பர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டபின் மெரினாவில் உள்ள மிதவைக்கப்பலிலேயே பயணம் செய்யலாம் என முடிவு செய்தோம்.

தமிழ் நண்பரின் சுற்றுலா நிறுவனம் வழி இந்த மிதவைக்கப்பல் சவாரிக்கு தனி நபருக்கு 140 திராம்களுக்கு என ஏற்பாடு செய்திருந்தோம். தனி வண்டியில் நம்மை அழைத்துச் சென்று சவாரி முடிந்தபின் நம்மைத் திரும்பி அழைத்துவருவது வரை அவர்களின் பொறுப்பு. வாடகை வண்டியில் செல்லும் பொழுது நீண்ட வருடங்களாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லுகையில் துபாய்க்கு குறுகிய காலப்பயணம் மேற்க்கொண்டிருந்த வயதான பஞ்சாபி தம்பதியர்களுடன் உரையாட நேரம் கிடைத்தது.பல வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சுற்றுலா வந்திருந்தாலும் தற்பொழுது அமைந்திருந்த துபாயின் தோற்றமும் பொலிவும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. அடுத்த நாள் அதிகாலை( hot air ballon ride ) வெப்பக்காற்று ஊதற்பை என்றழைக்கப்படும் சவாரிக்கு முன்பதிவு செய்திருந்ததால், அவர்களிடம் அதுபற்றி ஆர்வமாய்ப்பேசிய பொழுது தான்     அவர்களும் அச்சவாரியை ஏற்கனவே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

வேறொரு கணவன் மனைவியும் தங்கள் சிறு குழந்தைகளைத் தங்கள்ப் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு தம்பதியராகத்துபாயைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள். நம்மைப் போல் சிலரும் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மனம் சற்று அமைதி அடைந்தது. அவர்களிடம் அமீரகத்தில்  எனக்குத் தெரிந்த சிறந்த சுற்றுலா இடங்களைப் பகிர்ந்து  அவற்றை நிச்சயம் பார்க்குமாறு பரிந்துரைத்தேன். மிதவைக்கப்பல்களில் இத்தனை வகைகளா என்று எண்ணும் அளவுக்கு வெள்ளைத்தோல் மக்களால் சொகுசு கப்பல்கள் நிரம்பி வழிந்தன.


இரவு குளிர்நேரம் என்றாலும் மிதவைக்கப்பலின் மேலடுக்கிலேயே பயணம் செய்யலாம் என்று கணவரை மேலே அழைத்துச்சென்றேன். அதிகக்குளிர் எடுத்து சிறிது நேரம் கழித்துக் கீழே சென்றுவிடலாம் என்று கூறினால் அடிவாங்குவாய் என்று கணவர் செல்லமாக எச்சரிக்கை செய்தார். நல்லவேளை கீழே உட்கார்ந்திருந்தால் அருமையான குளிர்காற்றையும் , அழகு கட்டிடங்களின் அழகையும் உணர முடியாமல் போயிருக்கும்.

வந்திருந்த அனைவரையும் அழகான கடல்நீர் மற்றும் அருமைக்கட்டிடங்களின் பின்புலத்தில் ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தது ஒரு பெண் ஒளிப்படக்காரர்.அவர் தன் முடியை ஆண்கள் போன்று வெட்டியிருந்ததால் கணவர் அவரை ஆண் ஒளிப்படக்காரர் என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.பிலிப்பினோக்களில் ஆண்கள் பெண்கள் அனைவருமே ஒரே நிறத்தில் இருப்பதால் அவர்களை ஆணாபெண்ணா என கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அதிலும் முகவெட்டு, முடிவெட்டு அனைத்துமே நம்மைக் குழப்பிவிட்டுவிடும்.

100 திராம்கள் அதிகம் என்றாலும் வசீகரிக்கும் அட்டைப்படங்கள் கொண்ட பெரிய உரையில் இரண்டு மூன்று  ஒளிப்படங்களை ஒட்டித்தந்தார்கள். கணவரும் ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்று கூறி என்னை ஆச்சர்யப்படுத்தி ஒளிப்படங்களை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். பெரும்பாலும் அனைத்துச் சுற்றுலா இடங்களிலும் அந்த இடத்துக்கான ஒளிப்படக்காரர் நம்மை வளைத்து வளைத்து ஒளிப்படம் எடுப்பார்கள்.பின்பு சுற்றுலா முடித்துவிட்டு கணினியில் நமது ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு பணம் செலுத்தி ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


ஆனால் இங்கோ நாம் என்ன ஒளிப்படங்களை வாங்கவா போகிறோம் என்ற அலட்சியத்தில் உட்கார்ந்து ஒளிபடக்காரர் ஒளிப்படம் எடுக்க ஒத்துழைப்புக் கொடுத்தோம். கணவர் நிறைய தடவை கண்களை மூடினாலும் அப்பெண் திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டி கணவரும் நானும் அழகாய்த் தெரியுமாறு படம்பிடித்துக்கொடுத்தார். சாதாரணமாகவே சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச்சீட்டும் அங்கே எடுத்தப்படங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணமும் சமமாய் இருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைத் தரும்.

வந்தவுடன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வண்ணம் பழச்சாறும், சமோசாவும் உபசரிக்கப்பட்டன. பசியில்லை என்று கூறிய கணவர் ஆரம்ப உணவைச்சாப்பிட்டவுடன் சிற்றுண்டி பசியைக்கிளப்பி விட்டது என்று சிரித்தார். சுற்றி இருந்த ரகரகமான கட்டிடங்களைப் பார்வை இடுவதற்காவாவது இரண்டு அடுக்குப் பெரிய படகில் பயணம் செய்தே ஆக வேண்டும். கட்டிடங்களைக்கூட இவ்வளவு கலை இரசனையுடன் கட்ட முடியுமா? அல்ல கட்டிடங்களைக்கூட இரசிக்கும் அளவுக்கும் நாம் சிறந்த இரசனையாளராக மாறி விட்டோமா என்ற கேள்வி மனதுக்குள் நிச்சயமாக எழும். உலகத்தில் உள்ள அனைத்து கட்டிடத் திறமையாளர்களும் இங்கே தான் சங்கமிக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும்.


ஏனென்றால் எந்த ஒரு பயணத்திலும் இது போன்றுவித்தியாசமான அழகிய கட்டிடங்கள், பாலங்கள், இரவில் அவற்றின் அழகையும் மெதுவாக ஊர்ந்துகொண்டே இரசிக்க முடியாது. பெரியபடகில் கொஞ்சம் நெருக்கமான இடம் என்றாலும் டனோரா நடனத்தை சிறப்பாக அரங்கேற்றினார் அந்த திறமையான கலைஞர். ஒளி, ஒலியுடன் அவர் கைகளில் வைத்திருந்த நான்கு பறை போன்ற வட்டத்தட்டுகள் அவரது ஆட்டத்திற்கு மெருகு ஊட்டியதாய் அமைந்தது.படகில் மிதந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் மேலே ஆகாயத்தைப் பார்த்தபொழுதுதான் அந்தரத்தில் அமர்ந்தபடி சாப்பிடலாம் என்று புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பரம் ஞாபகம் வந்தது. ஒரு பெரிய
சாப்பாட்டு மேஜையுடன் இணைந்திருக்கும் இருக்கையில் தேவையான பாதுகாப்புக் கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு அணிவித்து அமர்த்தி விடுவார்கள். உணவு உண்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று அனைவருமே அந்தரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள். அந்தரத்திலே மிதந்து சாப்பிடுவது வித்தியாசமான அனுபவமாய் இருந்தாலும் உயரத்தைப் பார்த்தால் வயிற்றைப் பிறட்டி விடும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாகச் செல்லக்கூடாது.பல் இருப்பவர்கள் பக்கோடா சாப்பிடுவார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பது உண்மைதான் போலும். பணம் இருந்தால் வானிலும் சிறகில்லாமல் பறந்து உணவை உண்டு மகிழ்ந்திடலாம்.
வானத்தில் இருந்து காலுக்கு அடியில் கட்டிடங்களைக் கொண்டு சென்றும் உணவை உண்டு இரசித்திடலாம்.பல நடிகர் நடிகையர் பனைமரத்தீவின் மேலே மிதந்தபடி பயிற்சியாளருடன் ஒளிப்படங்கள் பதிவு செய்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கான தளமும் அலுவலகமும் அங்கே மிதவைக்கப்பலில் மிதந்து செல்கையில் பார்க்க நேரிட்டது.


இருபாலினத்தவருக்குமே ( bmi )உடல் உயரத்திற்கும் எடைக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்கள். பெண்கள் என்றால் எடை / (மீட்டரில் உயரம்)^2  அதிகபட்சமாக 27.5 ஆகவும், ஆண்கள் என்றால் 30 என்றும் வரையருத்திருந்தார்கள். இச்சவாரிக்குப் பெண்கள் அதிகபட்சம் 5.7 அடி இருந்தார்கள் என்றால் 79 கிலோ இருக்கலாம். ஆண்கள் 90 கிலோ வரை இருக்கலாம் என்பது ஒரு தோராயமான கணிப்பு.


இந்த எடைக் கணக்கீட்டில் சில புள்ளிகள் வித்தியாசத்தால் அருமையான வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவள்.எப்படியோ 2000 திராம்கள் செலவு செய்ய கணவர் ஒப்புக்கொண்டாலும், கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போனது. இவ்வளவு தூரம் மேலிருந்து குதிக்கப்போகிறோம் இந்தக்கணக்கீட்டுக்கும் வானில் உள்ள காற்றழுத்தம் போன்றவைக்கெல்லாம் எதாவது சம்மந்தம் இருக்குமென்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இந்த சாகசப் பயணம் செய்த நடிகை ஒருவரின் பேட்டியைப்படித்த பின்னேயே இந்த சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் மேலோங்கியிருந்தது. இந்தச்சவாரியை செய்திருந்த அனைவருமே வாழ்க்கையிலேயே மிக அருமையான ஆசிர்வதிக்கப்பட்ட அழகான தருணம் என்று விவரித்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்று வானில் இருந்து குதித்து செய்யும் சவாரி(sky diving) பல நாடுகளில் நடத்தப்படுகிறது.


சவாரி செய்ய தகுதியுடையவர்கள் சில பயிற்சிகளுக்குப்பின்
கீழிருந்து விமானத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். பின்னர் ஒரு பயிற்சியாளரைக் கட்டிக்கொண்டு கீழே குதிப்பதாய் இருக்கும். வான்குடை மிதவை இருப்பதனால் சிறிது நேரம் காற்றில் மிதந்து சில சேட்டைகளை விளையாட்டாகச் செய்யச் சொல்வார்கள்.

நாம், நமது பயிற்சியாளருடன் என்று இருவர் மட்டுமல்லாமல் நமது சாகசத்தையும் படம்பிடித்து, காணொளியாய் பதிவிட இன்னொருவரும் நம்முடன் சேர்ந்து குதிப்பார். ஐரோப்பாவில் இந்தச்சாகத்தை என்னுடைய கல்லூரித் தோழி செய்து காணொளியைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டதில் இருந்து நாமும் இந்த சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.


உலகில் இது போன்று பல இடங்களில் இது போன்ற சாகசம் செய்யும் வாய்ப்பிருந்தாலும் இந்தப்பனைமரத்தீவைப் பின்புலமாய்க் கொண்டு இச்சாகசத்தைப் செயல்படுத்துவது பெருமையான ஒன்று தான். துபாயிலேயே பாலைவனத்தில் இச்சாகசத்தைப் புரியும் வாய்ப்பும் இருந்தது. சாகச அலுவலகத்தைக்கடந்தால் இரவு நேரத்தில் ஜொலிக்கும் ஒற்றைத்தண்டவாள ஊர்தியின் பாதை, அட்லான்டிஸ் நட்சத்திர விடுதியைப்பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். நாங்களும் வகையான உணவுகளை உண்டு முடித்துவிட்டு இனிப்புகளை ருசித்து முடிக்கும் பொழுது அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துத் திரும்பவும் நேரம் சரியாக இருந்தது.


(hot air balloon )வெப்பக்காற்று ஊதற்பை சவாரியையும் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு மனதிலே ஓர் ஓரமாக புதைந்திருந்தது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தயாராய் இருக்கச் சொல்லிவிடுவார்கள்.நாம் இருக்கும் இடத்திற்கு வந்து நம்மைக்கூட்டிச் சென்று திரும்பி அழைத்துவருவதுடன் காலை உணவும் சேர்த்து ஒரு ஆளுக்கு அதிகபட்சம் 800 திராம்கள். ஏற்கனவே அந்த வயதான தம்பதியினர் அதிகாலைச்சூரிய உதயத்தை வானில் இருந்து மிதந்தபடி பார்ப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது காதில் ரீங்காரமிட்டது.


சமீபத்தில் இது போன்று ஊதற்பை ( balloon) சாகசச்சவாரியில் அசம்பாவிதம் ஏற்பட்டுச் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கேள்விபட்டுச் சற்றுக் கலங்கித்தான் போயிருந்தோம். மக்களாட்சி அல்லாமல் அரசர் ஆட்சி நடைபெறுவதால் ஊடகங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.தவறுகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படும் ஆனால் அது பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிடப்படமாட்டாது.

அவ்வளவு நாட்களாக சரியாக இருந்த வானிலை நாங்கள் சவாரி செய்ய முடிவெடுத்திருந்த நாளில் இருந்து தலைகீழாய் மாறியிருந்தது. காற்று பலமாக அடித்தது. மின்னல் வெட்டியது. கணவர் எனதுத் தொல்லைத்தாங்காமல் இணையத்தில் ஊதற்பை 
சவாரியைப்பற்றிய விவரங்களைப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது வங்கிக்கணக்கு இணையத்தில் இணைக்கப்பட்டு இருந்ததால் தவறுதலாக வேறொரு பொத்தானை அமுக்க இரண்டு நபர்களுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு இணையத்தில் நடைபெற்று விட்டது. கணவர் தவறுதலாக முன்பதிவு நடந்து விட்டதே என்று சற்றுக்கவலைப்பட்டாலும் நான் மனதிற்குள் மகிழ்ந்து இருந்தேன்.


வெப்பக்காற்று ஊதற்பை சவாரி நிறுவனத்திலிருந்து உற்சாகமாய் ஒரு ஓட்டுநர் வந்திருந்தார். ஆறு மாதகாலம் சுற்றுலாப்பயணிகளின் வருகை மற்றும் பதிவைப் பொறுத்தும் வானிலையைக்கருத்தில் கொண்டும் வெப்பக்காற்று  ஊதற்பை இயக்கப்படும் என்று 
ஓட்டுநர் கூறினார். இரண்டு நிறுவனங்கள் வெப்பக்காற்று  
ஊதற்பை சாகசச் சவாரிகளை அமீரகத்தில் நடத்தி வருகின்றனர். 
அதில் தங்களின் நிறுவனத்திலிருந்து பறக்கும் வெப்பக்காற்று  
ஊதற்பை திறமையான அதிகாரிகளால் பிரச்சனையில்லாமல் ஓட்டப்படுகிறது என்று பெருமிதப்பட்டுக் கொண்டார்.


தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஐரோப்பாவைச் சேர்ந்த பொறியாளர்கள் மிகுந்த அறிவுக் கூர்மையுடனும் லாவகத்துடனம் வெப்பக்காற்று  ஊதற்பையைச் செலுத்துவார்கள் என்று கூறி ஓட்டுநர் அவர்களுக்குப் புகழ்மாலைச் சூட்டினார். ஊருக்கு மிகவும் ஓரமாக வெப்பக்காற்று  ஊதற்பைச் சவாரி நிலையம் அமைந்திருந்ததால் அதிகாலையிலேயே ஒருமணிநேரம் பயணம் செய்து தூங்கி வழிந்து நிலையத்தை அடைய வேண்டியதாயிற்று. 

வழியில் இரண்டு நட்சத்திர விடுதிகளிலிருந்து 7 நபர்களை ஏற்றிக்கொண்டு ஆசையாய் நிறுவனத்தின் எல்லையை அடைந்திருந்தோம். எங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்பொழுதே வானிலை எப்பொழுதும் போல் இல்லை என்று ஓட்டுநர் கிலி ஏற்படுத்தியிருந்தார். நீண்ட வாக்கில் வெப்பக்காற்று  
ஊதற்பையைப்படுக்க வைத்து அதற்குத்தேவையான நெருப்பும் பக்கத்தில் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.படங்களில் மட்டுமே பார்த்திருந்த வெப்பக்காற்று  ஊதற்பையை நேரில் பார்க்க அதில் சவாரிச்செய்யப்போகிறோம் என்று 
நினைத்த பொழுதே சிலிர்ப்பாகத்தான் இருந்தது. ஆசையாய் இறங்கக் கதவைத் திறந்தோம்.  வெப்பக்காற்று  ஊதற்பையை செலுத்தும் டச்சு அதிகாரி பரபரப்பாய் வந்து  கதவைத் திறந்து வானிலை மோசமாக இருக்கிறது என்று கூறினார். 

எங்களது சவாரியை வேறு ஒரு நாள் மாற்றிக்கொள்ளவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ அறிவுரைக் கூறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வருத்தமான செய்தியைக் கூறிவிட்டு கதவை அடைக்கும் முன் ஓட்டுநரை எங்களை பத்திரமாக திரும்பி விடுமாறு பணித்தார். கதவை மூடும் நேரத்தில் வானில் மட்டும் மின்னல் வெட்டவில்லை...எங்கள் மனதிலும் மின்னல் அடித்திருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற விபத்து போன்று ஏதேனும் நடக்காமல் காக்கவே இயற்கை இடையூறு செய்திருக்கிறது என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டோம். அமீரகத்திலிருந்து கிளம்பும் கடைசி நாளில் இவ்வாறு நடந்ததால் சவாரியை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கவும் முடியவில்லை.சரி , சவாரிக்காகச் செலுத்தியிருந்த பணமாவது திரும்பக் கிடைத்ததே என்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டோம். அருமையான வெப்பக்காற்று  ஊதற்பைச்சவாரியை என்னால் தான் உணர முடியவில்லை ...நீங்களாவது உணர்ந்து பார்க்கிறீர்களா??

2 comments:

 1. கேரளா ஆலப்புலா House Board போல
  துபாயில்
  தோஃகுரூஸ் (dhowcruise) என்றழைக்கப்படும்
  மிதவைக் கப்பலா?
  அருமையான பதிவு

  ReplyDelete
 2. ஆமாம்...அங்கு சுற்றி இயற்கை மரங்கள்...இங்கு அடுக்குமாடி கட்டிடங்கள்

  ReplyDelete