Saturday, April 22, 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

' வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்! '


உலகின் முதல் மொழி மனிதனின் உயிர் ஓசையில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். உலகத்திலேயே ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ள மொழி நம்  தமிழ் மொழி தான். 63 ஓரெழுத்துச் சொற்கள் தனியாகவே இயங்கும் ஆற்றல் உடையது. நமது உயிரெழுத்துக்கள் அனைத்துமே வேறு எழுத்துக்களின் துணையைத் தேடாது தனித்துப் பொருள் தரும் பெருமை கொண்டதால் தான் அதனை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம்.  தமிழ் மொழி பல பரிணாம வளர்ச்சி அடைந்தே தற்பொழுதுள்ள எழுத்து வடிவை அடைந்துள்ளது.

தமிழ் மொழிக்கென்று தனி எண்கள் உள்ளது என்பதே மற்ற மொழிகளுக்கு தமிழ் முன்னோடியாய் விளங்கியதை குறிக்கின்றது.
தமிழர்கள் சிலருக்கு மட்டுமே தமிழுக்கென்று தனி எண்கள் இருப்பது தெரியும். ஒரு கட்டடம் கட்டுவதற்குத் தேவையான அடிப்படை கணிக்கீடிற்குக் கூட எவரையும் சாராது தன்நிறைவைக் கொண்டது தமிழ் மொழி. தமிழ் எண்களும் பரிணாம வளர்ச்சி கொண்டு ஒவ்வொரு காலங்களிலும் மாற்றம் கொண்டிருக்கிறது. தமிழ் எண்களே  கணிதத்தின் கண்களாய் மாறியிருப்பது  நாம் அனைவரும் பெருமை கொள்வதற்கான தகவல்.

உலகெங்கும் பல கண்டங்களிலும், நாடுகளிலும் தொல்லியல் துறையினர் அகல்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கண்டெடுக்கும் பெரும்பாலான கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களைக் காண முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்திருந்த குமரிக்கண்டம் ( லெமூரிய கண்டம்)  ஆப்ரிக்க மடகாஸ்கர் தீவு, இந்திய தேசம், ஆஸ்திரேலிய கண்டம், இன்னும் பல தீவுகளை இணைப்பதாகவே அமைந்திருந்தது.


இயற்கைச் சீற்றத்தால் அக்கண்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிப் போயின. அந்த கண்டத்தின் வழியே தமிழர்கள் எகிப்து, கம்போடியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று கட்டடக்கலையிலும், வாழ்வியல் முறையிலும் பல சாதனைகளையும் புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.

முதன் முதலில் மனிதர்கள் நீர்நிலைகளின் அருகிலேயே தங்கள் குடியிருப்புகளை அமைத்திருந்தார்கள். நாகரிகம் வளர்ந்த இடம் என்றழைக்கப்படும் நைல் நதிக்கரை ஓரம், மொகஞ்சுதாரோ , ஹராபா போன்ற இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்கள், காலச்சுவடுகள் அனைத்திலும் தமிழ் எழுத்துக்களைக் காணலாம்.
நீல நதி என்னும் பெயரே நைல் நதி என்று திரிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்.தமிழ் மொழியின் தோன்றலைப் பற்றி அறிய விரும்பும் பொழுது தமிழர்களின் பெருமைகளையும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.


தஞ்சை பெரிய கோவில், உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் போன்று உலகில் உள்ள பல தொன்மையான பெருமை பெற்ற பல கோவில்களின் சுவற்றில் தமிழ் எழுத்துக்களைக் காணும் பொழுது தமிழர் என்ற பெருமை நிச்சயமாகத் நம்மைத் தழுவிக்கொள்ளும். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் தங்கள் வீரத்தால் தமிழை உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். கம்போடியாவில் உள்ள கோவிலை கட்டியது நம் தமிழர்கள் என்று சில தமிழர்களுக்கே தெரியும்.
கலைநயமிக்க கம்போடியாவில் உள்ள பெரிய கோவிலை அக்காலத்தில் 40 வருடத்திலேயே கட்டி முடித்தார்கள்.இன்றோ தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இது போன்ற கோவிலைக் கட்ட குறைந்தது 300 வருடம் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கலைநயமிக்க தஞ்சை பெரிய கோவிலைக்கட்ட நம் முன்னோர்கள் வெறும்  ஆறு வருடம் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிட மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி விளங்கியிருக்கிறது. உலகத்தில் 
முதல் தோன்றிய தாய்மொழியால் தானே பல குழந்தை மொழிகளை ஈன்று எடுக்க முடியும். பல மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ்ச் சொற்களை கடனாகப் பெற்றுள்ளதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்ச் சொற்கள் திரிந்து வேறுவிதமாக வேற்றுமொழிகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்று தொன்மையான மொழிகளில் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் அதிகமான மக்களால் உபயோகப்படுத்தப்படுவது தமிழ் மொழியே!

உயர்தனிச் செம்மொழி என பெருமை பெறுவதற்கு ஒரு மொழி பல அடிப்படை கட்டளை விதி வரையருக்குள் உட்பட்டிருக்க வேண்டும். நம் தமிழ் மொழிக்கு அதற்குத் தேவையான தகுதிகளும் சிறப்புகளும் நிறையவே உள்ளது. அரசியல்  காரணங்களுக்காக சில மக்கள் தங்கள் மொழிகளை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று துடிக்கின்றார்கள். தொன்மையான தமிழ் மொழியில் உள்ள பழமையான இலக்கண, இலக்கியங்கள், நூல்கள் , சுவடிகள், கல்வெட்டுக்கள் எண்ணில் அடங்காதவை. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் பல்லாயிரம் வருடத்திற்கு முன்பு இயற்றப்பட்டவை என்று அறிகின்றோம். 


ஒரு மொழி பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பலநூறு வருடங்கள் இருந்தால் மட்டுமே அதனை நெறிமுறைபடுத்த அறிஞர்கள் இலக்கணங்களை வகுத்திருக்க முடியும். நம் மொழியில்  உள்ள பல சிறப்பான நூல்கள் தரணி போற்றும் படியாக அமைந்துள்ளன. அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாழ்க்கை முறை, தொழில் போன்றவை தமிழர்களின் பல்லாயிர வருட பாரம்பர்யம், மொழிப்புலமை, கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.அறிவியல், ஆன்மிகச் சிறப்புகள்  தமிழ் மொழியில் பொதிந்து கிடப்பதை பல நூல்கள் நன்றாக எடுத்துரைத்தாலும் கண்முன்னே காணும்  பல கட்டட அமைப்புகள்,  கோவில்கள் தமிழர்களின் அறிவுநுட்பத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ் என்று நம் நாட்டு ஆராச்சியாளர்கள் கூறுவதைக் காட்டிலும் வேற்று நாட்டு ஆய்வாளர்கள் கூறினாலே ஏற்றுக் கொள்ளும் நிலமைக்கு  நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழ் மொழி தோன்றி 20000 முதல் 50000 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது என்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வை ஏற்று உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வோம்.

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

27 comments:

 1. தமிழ் மொழிச் சிறப்பை தொன்மையையும் அழகாக சான்றுகளுடன் விளக்கி நம் மொழியின் தனிதன்மைகளையும் கூறி நம்மை அதுதானே என வியப்பில் ஆழ்த்துகிறார் ஆசிரியர்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள்

   Delete
 2. Abinaya superb!!! Very informative and deep insight into the details.

  ReplyDelete
 3. Abinaya superb!!! Very informative and deep insight into the details.

  ReplyDelete
 4. நாளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய உண்மைகளை அழகாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள். தமிழ் மொழி வளம் சிறக்கத் தங்கள் பதிவு ஊக்கமளிக்கும் எனின், அதுவே தங்கள் பதிவின் வெற்றி என்பேன். தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சார்ந்த நன்றிகள்

   Delete
 5. தமிழன் என ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும். அருமையான பதிவு என் தந்தை தமிழ் எண்களை தான் பயன்படுத்தினார் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்களுக்கு நன்றி அத்தை

   Delete
 6. தமிழின் தொன்மையைச் சான்றுகளுடன் பகிர்ந்ததற்கு என் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சார்ந்த நன்றிகள்

   Delete
 7. மிக்க மகிழ்ச்சி தமிழின் சிறப்பு பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள்

   Delete
 8. Very interesting...read panitu irukum bothe mudinchuruchu...நன்று...

  ReplyDelete
 9. வணக்கம்.

  நண்பர் ஒருவர் தங்கள் தளத்திற்குச் சுட்டி கொடுத்ததால் வந்தேன்.

  ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்னும் தங்களுடைய இந்தக் கட்டுரையைப் படித்தேன்.

  உலகில் முதல் தோன்றிய மொழி தமிழாக இருப்பின் எனக்கும் பெருமிதமே. ஏனெனில் என் தாய்மொழியை நான் அவ்வளவு விரும்புகிறேன்.

  தங்களுடைய கட்டுரையை முன்வைத்து என்னுடைய சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்குத் தோன்றும் கருத்துக்கள் அல்லது ஐயங்கள் என் அறியாமையால் இருக்கலாம். அருள்கூர்ந்து இவற்றைத் தெளிவுபடுத்துவீர்களாயின், இந்தக் கட்டுரையின் தலைப்பினோடு நான் முற்றிலும் உடன்பட்டவனாவேன்.

  ///உலகத்திலேயே ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ள மொழி நம் தமிழ் மொழி தான். 63 ஓரெழுத்துச் சொற்கள் தனியாகவே இயங்கும் ஆற்றல் உடையது./// எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

  அதற்கு ஆதாரமாக ஒரு பட்டியலையும் கொடுத்துள்ளீர்கள்.

  முதலில் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் முப்பதே என்கிறது தொல்காப்பியம்.

  “எழுத்தெனப் படுப
  அகர முதலாய் னகர இறுவாய்
  முப்பஃ தென்ப
  சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே ”

  எனத் தமிழ் எழுத்துக்களை முதற்சூத்திரத்திலேயே வரையறை செய்கிறது அது.


  தமிழெழுத்துக்கள் என்பன, உயிரெழுத்தும் (12) மெய்யெழுத்தும் (18) ஆகிய முப்பது எழுத்துக்கள் மட்டும்தான்.
  பிற சார்பெழுத்துகள். அதாவது அவை தனியாக இயங்க முடியாதவை. நாம் ஆள்கின்ற உயிர்மெய்ச் சொற்கள் கூடச் சார்பெழுத்துகள்தாம். அதாவது உயிரும் மெய்யும் இணைவதனால் தோன்றுபவை. எனவே அவை எழுத்துக்களின் கூட்டமாகுமேத் தவிரத் தனியே எழுத்தென்றழைக்கப்படப் பெறுமதியில்லாதவை. எனவே தாங்கள் மேற்குறிப்பிட்டதுபோல், 63 ஓரெழுத்துச் சொற்கள் தமிழில் உண்டென்பது எவ்வாறென்னும் ஐயம் எழுகிறது.

  நமக்குக் கிடைக்கும் முந்தைத்தமிழ் நூலான தொல்காப்பியம், இவ்வோரெழுத்து ஒருமொழி பற்றிப் பேசுமிடத்து,

  “நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி”

  என வரையறை செய்கிறது. இங்கு ஏழே எனச் சூத்திரத்தில் வரும் ஏகாரத்தை இலக்கணவியலார் தேற்றேகாரம் என்பர். அதாவது,
  தமிழில் ஓரெழுத்தொருமொழி என்பது, ஏழு மட்டும்தான். அவை உயிரெழுத்தின் நெட்டெழுத்துகளான ஏழும்தான் என வலியுறுத்த வருவது அது.

  அன்றி,

  ஒருவேளை வாதத்திற்காக, தமிழில் 63 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன என வைத்துக் கொண்டாலும், வேறெந்த மொழியிலும் இத்தனை ஓரெழுத்து மொழிச் சொற்கள் இல்லை என நாம் பெருமிதப்பட்டுக்கொள்ள முடியாது. ஏனெனில், பாரம்பரிய சீனமொழியில் எழுத்துகள் குறியீடாகப் பாவிக்கப்பட்டு அவ்வெழுத்தே பெயரையும் வினையையும் நுதலுவனவாய் அமைந்தன.

  .............................தொடர்கிறேன்......................

  ReplyDelete
 10. அம்மொழியில், ஒவ்வொரு எழுத்தும் ஒரு பெயரையோ வினையையோ குறித்து ஆளப்பட்டன. எனவே சீன மொழியில், ஒரு சொல்லைக் குறிக்க ஓர் எழுத்து என்பதாய், எழுத்துகளின் வரையறை ஆயிரக்கணக்கில் பெருகுவதாயிற்று.

  தங்களின் கூற்றுப்படி, ஓரெழுத்து ஒரு மொழியை அதிகம் உடைய மொழி, முதலில் தோன்றிய மொழியாகக் கருதப்பட வேண்டுமானால், ஆயிரக்கணக்கில் ஓரெழுத்து ஒருமொழிகளை உடைய சீனமொழி அந்தப் பெருமையை எளிதில் தட்டிச் சென்றுவிடும். எனவே ஒருபோதும் அப்பெருமை தமிழுக்கு உரியதாகாது.

  அடுத்துத் தங்களின் கருத்தில் உயிரெழுத்துக்களை ஓரெழுத்து ஒருமொழிகளாய்க் குறிப்பிடுமிடத்து,

  // உயிரெழுத்துக்கள் அனைத்துமே வேறு எழுத்துக்களின் துணையைத் தேடாது தனித்துப் பொருள் தரும் பெருமை கொண்டதால் தான் அதனை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். // என்பதனோடும் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.

  நீங்கள் காட்டிய அட்டவணையிலேயே, உயிரெழுத்துப் பன்னிரண்டும் காட்டப்படாமை காண்க.
  ஒ என்ற குறிலுக்குப் பொருள் அங்குக் காட்டப்படவில்லை.

  அன்றியும், அட்டவணையில் காட்டப்பட்டுள்ள,
  க – வியங்கோள்விகுதி
  எனுமாறமைந்த சான்றுகளும்கூட ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களுக்கு எடுகோளாகக் காட்டப்படும் தகுதியற்றவை.

  ஏனெனில், தமிழிலக்கணத்தில் தாங்கள் சுட்டிய, வியங்கோள் விகுதி போன்றன இடைசொற்களின் வகைமையின் கீழ் வருவன.

  இடைச்சொற்களாவன, தமக்கெனத் தனித்து எப்பொருளுமற்றுப் பெயரையோ வினையோ சார்ந்து மட்டுமே பொருள்தரக்கூடியன. தனித்துச் சுட்டப்படும்போது இவை பொருளற்றவை. எனவே இவற்றையும் நாம் ஓரெழுத்து ஒருமொழி என்னும் தகுதிப்பாட்டில் கொள்ள இயலாது.

  “இடை எனப்படுவ
  பெயரொடும் வினையொடும் நடைபெற்று இயலும்
  தமக்கு இயல்பு இலவே ”
  என இதனைத் தொல்காப்பிம் சுட்டும்.
  .........................தொடர்கிறேன்............................

  ReplyDelete
 11. அடுத்து,

  // தமிழ் மொழிக்கென்று தனி எண்கள் உள்ளது என்பதே மற்ற மொழிகளுக்கு தமிழ் முன்னோடியாய் விளங்கியதை குறிக்கின்றது.//

  என்னும் உங்கள் கூற்றின் ஒருபாதியோடு எனக்கு உடன்பாடுதான்.

  தமிழ்மொழிக்கென்று தனி எண்கள் உள்ளன.

  ஆனால், இந்தியத் தொல்மொழிகளான, பிராகிருதத்திலும் பாலியிலும், சமஸ்கிருதத்திலும் எண்கள் உள்ளன. பிற செம்மொழிக்குடும்பங்களிலும் அவ்வம்மொழிகள் எண்களைப் பயன்படுத்தித்தான் வந்துள்ளன. எண் பயன்பாடு என்பது நாகரிகம் அடையத்துடிக்கும் எச்சமுதாயத்திற்கும் அடிப்படையாக அமைவது. இதை மட்டும் வைத்துப் பிற மொழிகளுக்குத் தமிழ் முன்னோடியாய் விளங்கியது என எப்படிச் சொல்ல முடியும்?

  நீங்கள் காட்டிய பழைய தமிழ் எண் அட்டவணையின் தசமத்தானங்கள் அனைத்தும் தவறானவை. பழந்தமிழ் எண்களில், பத்தைக் குறிக்க க0 என எழுதும் வழக்கமின்று
  அது ய எனும் எழுத்தின் இறுதியை மேல்நோக்கி வளைத்தாற்போல்வது.

  அடுத்துத் தாங்கள் காட்டியுள்ள,

  //உலகெங்கும் பல கண்டங்களிலும், நாடுகளிலும் தொல்லியல் துறையினர் அகல்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கண்டெடுக்கும் பெரும்பாலான கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களைக் காண முடியும்.//

  என்னும் கூற்றிற்குரிய தரவுகளைப் பெறவிரும்புகிறேன்.

  இக்கூற்று எதன் அடிப்படையில் எழுப்பப்பட்டது.
  உலகெங்கும் எவ்வெக்கண்டங்களில், எவ்வெந்நாடுகளில், தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் தமிழ்க்கல்வெட்டுக் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அளிப்பின், அது என் போன்றோர்க்குப் பேருதவியாக, அமையும். நானறிந்தவறை பிற்காலச் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த, இலங்கை, பர்மா, மலேசியா, போன்ற ஆசிய நாடுகளில் சோழர் கல்வெட்டுகள் காணப்படலாம். அதுவும் பத்தாம் நூற்றாண்டின் பின்பு வெட்டப்பட்டவை.

  சிந்து சமவெளி அகழ்வாய்வில், படியெழுக்கப்பட்ட எழுத்துக்கள், பழந்திராவிட மொழியோடு ஒப்புமையுடையன என ஹிராஸ் பாதிரியார் போன்றோர் குறிப்பிட்டாலும் அதை இன்றுவரை ஆதாரத்தோடு நிறுவ இயலவில்லை. அதனோடு, அதற்கெதிரான வலுவான மாற்றுக்கருத்துக்கள் ஆய்வுலகில் உள்ளன.
  ...................................தொடர்கிறேன்................

  ReplyDelete
  Replies
  1. நான் பதிவிட்டிருந்த தமிழ் எண்களில் சில எண்கள் தவறாக இருந்ததைச் சுட்டிகாட்டியதற்கு நன்றி.சரியான எண்களைப் பதிவிட்டிருக்கிறேன்.

   Delete
 12. அடுத்து, லெமூரியாக்கண்டம் குறித்த தங்களின் கருத்து,

  // குமரிக்கண்டம் ( லெமூரிய கண்டம்) ஆப்ரிக்க மடகாஸ்கர் தீவு, இந்திய தேசம், ஆஸ்திரேலிய கண்டம், இன்னும் பல தீவுகளை இணைப்பதாகவே அமைந்திருந்தது. இயற்கைச் சீற்றத்தால் அக்கண்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிப் போயின. அந்த கண்டத்தின் வழியே தமிழர்கள் எகிப்து, கம்போடியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று கட்டடக்கலையிலும், வாழ்வியல் முறையிலும் பல சாதனைகளையும் புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.//

  லெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் இருந்தது உண்மைதான். அது கடல் கொள்ளப்பட்டு, நிலத்துண்டுகளாக உடைந்ததும் உண்மைதான். ஆனால், அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அப்போது மனித இனமே புவியில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் மண்ணியல் அறிஞர்கள்.

  மேலதிகத் தெளிவிற்கு, இது குறித்து அறிவியல் அடிப்படையில் ஆதாரங்களோடு எழுதப்பட்ட, நிலவியல் அறிஞர், சுகி ஜெயகரன் அவர்களின் “ குமரிநில நீட்சி ” என்னும் புத்தகத்தைப் பார்க்க வேண்டுகிறேன்.

  குமரிக் கண்டம் கொடுங்கடல் கொண்டதனோடு லெமூரியக்கண்டத்திட்டின் பெருநகர்வை ஒப்பிடுதல் குறித்த மேலதித் தெளிவை இந்நூல் ஏற்படுத்தக் கூடும்.

  அடுத்துத் தமிழகக் கோயில்கள் பற்றிய தங்களின் கூற்று,

  // தஞ்சை பெரிய கோவில், உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் போன்று உலகில் உள்ள பல தொன்மையான பெருமை பெற்ற பல கோவில்களின் சுவற்றில் தமிழ் எழுத்துக்களைக் காணும் பொழுது தமிழர் என்ற பெருமை நிச்சயமாகத் நம்மைத் தழுவிக்கொள்ளும். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள், பல்லவர்கள் தங்கள் வீரத்தால் தமிழை உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். கம்போடியாவில் உள்ள கோவிலை கட்டியது நம் தமிழர்கள் என்று சில தமிழர்களுக்கே தெரியும்.//

  இங்குக், கம்போடியாவில் உள்ள கோவிலைக் கட்டியது நம் தமிழர்கள் என்று சில தமிழர்களுக்கே தெரியும் என்பதனோடு நான் உடன்படுகிறேன். ஏனெனில், தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போலவே இது குறித்து அறியாத பெரும்பான்மையருள் நானும் ஒருவன்.

  ஆனால், இராசராசப் பெருவுடையார் கோயிலுக்கு, (பெரிய கோயில் ) முன்மாதிரியானது, காஞ்சிக் கைலாசநாதர் கோயில் என்பதும், அஃது பல்லவரால் கட்டப்பட்டது என்பதும் பல்லவர் வருகைக்குமுன் கற்றளிகள் தமிழார் கட்டப்பட்டதில்லை என்பதும் பல்லவர்களே முதன்முதலில் தமிழ்நாட்டில் கல்லும் மண்ணும் மரமும் சுதையுமில்லைாக் கற்றளிகளை எடுப்பித்தவர் என்பதும் பல்லவர்கள் என்போர் தமிழர் அல்லர் என்பதும் பல்லவர் வரலாறு நமக்குணர்த்துவது.

  அடுத்துத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்ட ஆன காலம் குறித்தத் தங்களின் கருத்து,

  // கலைநயமிக்க பெரிய கோவிலை அக்காலத்தில் 40 வருடத்திலேயே கட்டி முடித்தார்கள்.இன்றோ தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இது போன்ற கோவிலைக் கட்ட குறைந்தது 300 வருடம் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.//

  இராஜராஜனின் கல்வெட்டுச் சான்றின்படி, அவன் ஆட்சியாண்டு கி.பி 985 முதல் கி.பி 1014. அரியணை ஏறி ஏறக்குறைய 29 ஆண்டுகளில் அவன் இறந்துபோகிறான். பிறகெப்படி 40 ஆண்டுகளில் கோவிலைக்கட்டிக் குடமுழுக்குச் செய்திருக்க முடியும்?

  எனவே, இக்கோயிலைக் கட்ட 7 ஆண்டு காலம் ஆயிருக்கிறது.

  குடவாயில் பாலசுப்ரமணியனார் அவர்கள் எழுதிய இராஜராஜேச்சுரம் என்னும் நூல் சோழர் கட்டடக்கலை, பெரிய கோயில் குறித்த மேலதிகத் தகவல்களைத் தரும் சிறந்த ஆய்வு நூல் இது குறித்து விளக்கும்.


  ...................................தொடர்கிறேன்...............

  ReplyDelete
  Replies
  1. அய்யா, இங்கே உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலைக் கட்ட 40 வருடங்கள் ஆனது என குறிப்பிட்டுள்ளேன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்ட ஆறு வருடம் ஆனது என படித்திருக்கிறேன். குழப்பம் ஏற்படுவது போல் குறிப்பிட்டதற்காக வருந்துகிறேன்.

   Delete
  2. பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை தெரிந்து பதிவை திருத்திக்கொண்டேன்.

   Delete
 13. அடுத்ததாய்,

  // மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிட மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி விளங்கியிருக்கிறது. உலகத்தில் முதல் தோன்றிய தாய்மொழியால் தானே பல குழந்தை மொழிகளை ஈன்று எடுக்க முடியும். //

  எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

  மலையாளம் தெலுங்கு கன்னடம் மட்டுமல்ல தமிழும் திராவிட மொழிதான். திராவிட மொழிக்குடும்பத்தின் மூலமொழிச் சொற்களை அதிகமாகக் கொண்டு இன்றும் வழக்கில் இருக்கும் மொழி தமிழ் என்பதைத்தான் கால்டுவெல் முதலிய ஒப்பிலக்கணிகள் குறிப்பிடுகிறார்கள்.

  இந்தியாவில் மட்டும் உள்ள மொழிகளை நீங்கள் எடுத்துக் கொண்டாலுமே கூட
  , இங்குள்ள இந்தோ ஆரிய, இந்தோ ஐரோப்பிய, திபெத்திய மொழிக்குடும்பங்களுக்குச் சொந்தமாக 300க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. பல குழந்தைகளை ஈன்றெடுக்கும் மொழி உலகின் முதல் மொழியாகக் கருதப்படுமானால், சீன எபிரேய கிரேக்க லத்தீனிய மொழிகள் எல்லாமே உலக முதன்மொழியெனப்படும் தகுதிக்குரியவைதான். ஏனெனில் இவற்றின் வேர்ச்சொற்களைத் தம்முள் கொண்டு தனித்த மொழியாகப் பரிணமித்த மொழிகள் உலகில் இன்று ஆயிரத்திற்கும் மேல்.

  அடுத்து,

  // பல மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ்ச் சொற்களை கடனாகப் பெற்றுள்ளதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்ச் சொற்கள் திரிந்து வேறுவிதமாக வேற்றுமொழிகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது.// என்னுந் தங்கள் கூற்று.

  உலகத்தின் எந்த மொழியும், மக்களின் வழக்கில் இருக்கும்போது தன் தூய்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு தூய்மையைப் பேணவேண்டும் என்ற நோக்கில்தான் சமஸ்கிருதம் மக்களின் பேச்சு வழக்கில் இருந்து விலக்கிவைக்கப்பட்டு அழியும் நிலையெய்திற்று என்பதையும் நாம் காணல் வேண்டும்.

  தமிழில் இருந்து பிறமொழிகள் கடன்பெற்றிருப்பது போலவே தமிழும் ( நமக்குக் கிடைக்கும் பழம் இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் காலத்தில் இருந்து ) பிற மொழிச் சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது.

  இன்னும் சொல்லப்போனால், வடசொற்கள் தமிழில் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு முந்தைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்,

  “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
  என வடசொல் ஆட்சிக்கு இலக்கணம் சொல்லும் அளவிற்கு இக்கலப்பு அக்காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது.

  இன்னும் நீட்டிக் கொண்டிருப்பேனோ…?!

  இறுதியாகத் தங்கள் இந்தப் பதிவைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது,
  “ எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
  தலைமுறைகள் பலகடந்தோம் குறைகளைந்தோ மில்லை”
  என்னும் கவி வாக்குத்தான்.

  நன்றி.

  ReplyDelete
 14. ஊமைக்கனவுகள் வலைப்பூ ஆசிரியரின் கருத்துகளை ஏற்கிறேன். தோழி அபினையா வழங்கிய பதிலுக்கும் மகிழ்சி.
  குறை களைந்து நிறைவைக் காண்போம்; தமிழ் வாழ வழியமைப்போம்.

  ReplyDelete