Thursday, November 23, 2017

குறை தீர்க்கும் கோயில்கள் கவிதை வடிவில் - கவிநெஞ்சன் இராஜகோபால்

சிறுவயதிலிருந்து குடும்பத்தினர் வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்காகவே தமிழ்நாட்டில் பலக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்,கல்சிற்பங்கள், கட்டிடக்கலைகளை இரசித்து பிரமிக்க முடியும். நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைபட முடியும்.ருசியான பிரசாதங்களை உண்ண முடியும். நிறைய வேண்டுதல்களால் கேட்டது கிடைக்கும். இது போன்ற பல காரணங்களுக்காகத் தான் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். 


பெரும்பாலும் கோவில்கள் பெரியதாக இருப்பதால் நடந்து நடந்து கால்கள் நன்றாகவே வலிக்கும்.அதுவும் நல்ல கற்களால் அமைந்த பாதைகளில் நடக்கும் பொழுது, பாதங்களில் குத்துவது போன்றவே இருக்கும்.அதிலும் கற்பாதைகளில் பல சுற்றுக்கள் சுற்றி வரச் சொல்வார்கள்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் நம் முன்னோர்கள் அக்குப்பஞ்சர் முறை போன்று நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்று. நம் பாதங்களில் தானே பல உறுப்புகளை இயக்குவதற்கு உண்டான புள்ளிகள் உள்ளன.இப்படி ஒரு கோவிலினாலும் அந்தக் கோவிலில் வழிபாடு செய்வதாலும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் நன்மைகள் பல.

இந்த புத்தகத்தில் முதலில் நான் எனக்குத் தெரிந்த, நான் சென்று வந்த கோயில்களைத் தான் முதலில் ஆர்வமாய்ப் படித்தேன்.எனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அருகே இருக்கும் கழுகுமலைக் கோவிலுக்குப் பல முறைச் சென்றிருக்கிறேன்.குடவறைக்கோயிலான கழுகுமலையில்  முருகன் ஆறுகரத்துடன் வெற்றிவேல் கொண்டு வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பார். 

ஜடாயு சீதையைக் காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் இறக்க , ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு இறுதிக்கிரியை செய்து வைத்திருப்பார். ஜடாயுவின் தம்பி சம்பாதி ஈமக்கிரியை செய்யாத பாவத்தைப் போக்குவதற்காகவே ஸ்ரீராமர் சொன்னது போல கஜமுகபர்வதத்தில்  சம்பு பூஜை செய்து வந்திருப்பார்.அவனது பக்தியை சிறப்புக்கும் வகையில் கஜமுகபர்வதம் கழுகுமலை ஆனதென்றும் கூறுகின்றனர்.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று இந்த ஸ்தலத்திற்கான சிறப்பையும் , வரலாற்றுக் கதையையும் இந்தப் புத்தகத்தின் வழியாய் தெரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.



கோவில்பட்டி- சங்கரன்கோவில் சாலையில் 30 கி.மீ தூரம் என்றும் இக்கோவிலுக்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.இப்படி 99 கோவிலின் சிறப்புகள், அதற்குப் பின் இருக்கும் பல வரவலாற்றுக் கதைகள், அமைந்திருக்கும் இடம் என்று பல தகவல்களை இரத்தினச்  சுருக்கமாகக் கவிதை நடையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிநெஞ்சன் இராஜகோபால். புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது இதன் அடுத்த பகுதியாக இன்னும் பல அறியப்படாத கோவில்களைப் பற்றி எழுதி அவர் அதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையே மனதிற்குள் ஏற்பட்டது.

பாகற்காய் சனிபகவான் போன்று பல வித்தியாசமான வழிபாடுகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. தெரிந்த கோவில்கள் ஆனால் தெரியாத வரலாற்றுக் கதைகள், இறைவனின் பெயர்க்காரணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்கையில் ஒவ்வொரு கோயிலுக்குப் போகும் முன்னே இந்த வரலாறுகளை நிச்சயம் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உலோகக்கலவையைக் கொண்டு அழகான சிற்பம் செய்ய முடியாமல் வருந்திய சிற்பிகளுக்காக பசியென்று பாசாங்கு செய்து உலோகக் கலவையைக்குடித்து சிலைவடிவமாய் காட்சி தந்த சிவபெருமானும், சிவகாமியும் போன்று உருக வைக்கும் கதைகள் ஏராளம்.பச்சைமால் தம்பதியினர் கதைகளைத் தன்னுள் கொண்ட சதுரிகிரி மலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.திருப்புல்லானியில் பாயாசத்தைப் பற்றிக் குறிப்பிடாததுதான் எனக்குச் சின்ன வருத்தம்.

பெரிய புகழ்பெற்றக் கோவில்களைப் பற்றிய பதிவுகள் பல இடங்களில் பல புத்தகங்களில் காணப்படும். ஆனால் சக்தி வாய்ந்த தொன்மையான சிறிய கோவில்களைப் பற்றிய பதிவுகள் வரவேற்கத்தக்கதுதான்.


நம் மாநிலத்தில் மட்டுமல்லாது வேறு மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கும் சென்று பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் கதைகளும் நம்மை ஈர்க்கவே செய்கின்றன.சென்றுவந்தக் கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளாத பல சிறப்புகளை  தாமதமாக தெரிந்து கொண்டாலும் நமக்குக் கிடைப்பது நன்மையும் பெருமையும் தான் .பெரும்பாலும் எல்லா மாவட்டத்தின் கோவில்களின் புராணங்கள் சொல்லப்பட்டிருப்பதால் எல்லா ஊர்க்காரர்களும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது புரட்டிப் படிப்பார்கள்.அவர்களை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றலும் இந்த கவிதைகளுக்குள் ஒளிந்துகிடக்கிறது.

3 comments:

  1. இப் புத்தகத்தை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அருமை. பல கோயில்களின் பெருமையை கவிநெஞ்சன் இராஜகோபால் கவிதை நடையில் கூறியிருப்பது மிகவும் அருமை அபிநயாவின் நடை அருமை.

    ReplyDelete